வேலையில்லா பட்டதாரி படத்தின் அதிரிபுதிரி வெற்றிக்கு பிறகு அதே டீம் தங்கமகனாக களமிறங்கியிருக்கிறது. கண்ணுக்கு குளிர்ச்சி தரும் இணைப்பாக தகதக எமியும், சமந்தாவும்.
இயக்குனரின் பலமே காட்சிக்கு காட்சி அலுக்காமல் இணைப்பது தான் அதுவும் முதல் பாதி செம ரகளை. ஒரு நொடி கூட சலிக்கவில்லை. ரொமான்ஸ், காமெடி, செண்ட்டிமெண்ட் என்று பிரமாதமாக போகிறது.
கேஎஸ் ரவிக்குமார், ராதிகாவுக்கு ஒரே மகனாக தனுஷ். காலேஜில் படிக்கும் காலத்தில் எமியுடன் காதல் வந்து ஒரு சண்டையில் இருவரும் பிரிந்து விடுகிறார்கள்.
இன்கம்டாக்ஸ் அலுவலகத்தில் வேலை பார்க்கும் கேஎஸ் ரவிக்குமார் அவரது அலுவலகத்திலேயே தனுஷை வேலைக்கு சேர்த்து விட்டு சமந்தாவை திருமணமும் செய்து வைக்கிறார். இயல்பாக செல்லும் வாழ்க்கையில் திடீரென ஒரு நாள் கேஎஸ் ரவிக்குமார் வீட்டிலேயே தற்கொலை செய்து கொள்கிறார்.
அப்பா ஒரு முக்கிய பைலை தொலைத்ததால் தனுஷ்க்கு வேலை போய் விடுகிறது. வீட்டையும் காலி செய்து ஒரு குடிசை மாதிரியான வீட்டு வருகிறார்கள். தனுஷ் பிரியாணி கடைக்கு வேலைக்கு போகிறார்.
என்ன நடந்தது, அப்பாவின் சாவுக்கு காரணம் யார். அப்பாவின் மீது விழுந்த பழியை எப்படி துடைத்து பழையபடி வேலைக்கு போகிறார் தனுஷ் என்பது தான் தங்கமகன் படத்தின் கதை.
தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தில் வந்த மாதிரியே அசால்ட்டு பையன். எதற்கும் கவலைப்படாத இளைஞன் கதாபாத்திரம். அல்வா மாதிரி விழுங்கித் தள்ளுகிறார். எமியுடனான ஈர்ப்பும், சமந்தாவுடனான தாம்பத்யமும் இயல்பாக செய்து அசத்தியிருக்கிறார்.
ஒரே குறை முகத்தில் முத்தல் தெரிய ஆரம்பித்து இருக்கிறது. இனிமேல் ஸ்கூல் பையன் பாத்திரத்திற்காக மீசையை வழித்து விட்டு வந்து நின்றால் யாரும் நம்ப மாட்டார்கள். வாலிபன் பாத்திரத்தை மெயின்டெயின் பண்ணுங்கள் போதும். 3 படத்துடன் அந்த பால்ய வயதுக்கான முகவெட்டு போய் விட்டது.
படத்தின் ஆகச் சிறந்த ஒரு விஷயம் என்னவென்றால் அது சமந்தாவின் பாத்திரப் படைப்பு. எல்லா தமிழ் ஆண்களுக்கும் பெண் என்றால் அச்சம், மடம், நாணத்துடன் இருக்க வேண்டும். வேலைக்கு போகும் போது அவசர அவசரமாக டிபன் பாக்ஸ் வாசலில் கொடுத்து ரொமான்ஸாக வழியனுப்ப வேண்டும்.
மாலை நேரம் வேலை முடிந்து கணவன் வீட்டுக்கு வரும் நேரம் வாசலில் சென்று டிபன் பாக்ஸை வாங்கி அன்புடன் வரவேற்க வேண்டும், பெற்றவர்களை விட கணவன் முக்கியம் என இருக்க வேண்டும். இன்னும் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று தமிழ்நாட்டு ஆண்கள் எதிர்பார்க்கிறார்களோ அப்படியெல்லாம் சமந்தா படத்தில் இருக்கிறார்.
அதனால் நம்மால் கூடுதல் ரொமான்ஸ் உடன் படத்தை ரசிக்க முடிகிறது. இது அழகு ரீதியிலான ஈர்ப்பு கேரக்டரைசேசன் பலம். இந்த திறமையை வில்லன் பாத்திரப்படைப்பிலும் செலுத்தியிருந்தால் இன்னும் கலக்கியிருக்கும்.
எமி ஜாக்சன் சிங் ஈஸ் ப்ளிங் படத்தில் செமத்தியாக இருப்பார். நமக்கே காதலிக்கனும் போல ஆசையாக இருக்கும். காஸ்ட்யூம் எல்லாம் அள்ளும். இந்த படத்தில் தமிழ்நாட்டு பொண்ணாக்குகிறேன் என்று அவருக்கு சுரிதார். நெற்றிப் பொட்டு கையில் வளையல் என்று கொடுத்து படுத்தி எடுத்து இருக்கிறார்கள். நமக்கு தான் கடுப்பாகிறது.
முதல் பாதி முழுக்க தனுஷ் உடன் சேர்ந்து கலகலப்பை குத்தகைக்கு எடுத்து இருப்பவர் சதீஷ். அவ்வப்போது ஒன்லைனில் கலகலக்க வைக்கிறார்.
காதலும் ஆரவாரமுமாக போகும் முதல் பாதி இரண்டாம் பாதியில் தொடர்கிறதா என்றால் இல்லை என்று தான் சொல்லனும். காட்சிகள் சலசலக்கின்றன. சில இடங்களில் கொட்டாவி வருகிறது. ஒரு வழியாக இழுத்துப் பிடித்து படத்தை முடித்து வைக்கிறார்கள்.
படத்தின் இன்னொரு மைனஸ் வில்லன். படு சொத்தையான கேரக்டரைசேசன். தீடீர் வில்லன் ஜெயப்பிரகாசம் கதாபாத்திரமும் சொத்தையாக தான் இருக்கிறது. வில்லன் எடுபடாததால் ஹீரோயிசமும் எடுபடவில்லை.
படத்தில் சிங்கிள் பெட்ரூம் வீட்டில் அறைக்குள் மகனும் மருமகளும் இருக்க ஹாலில் அப்பாவும் அம்மாவும் காதில் பஞ்சு வைத்துக் கொண்டு படுப்பதும். ரூமுக்குள் கட்டிலில் படுத்தால் சத்தம் வரும் என்பதற்காக தனுஷும் சமந்தாவும் தரையில் ரகசியமாக படுத்து ரொமான்ஸ் பண்ணும் காட்சி செம க்ளாஸ். சென்னையில் ஒன்டு குடித்தன வீடுகளில் இந்த காட்சியை நேரில் கண்டு இருக்கிறேன்.
விஐபி படத்தில் அம்மா செண்ட்டிமெண்ட் என்றால் இந்த படத்தில் அப்பா செண்ட்டிமெண்ட். ஆனால் முதல் பாதியில் அப்பாவுக்கும் மகனுக்குமான பாசப்பிணைப்பை குறிப்பிடும் படியான காட்சிகள் இல்லாததால் நமக்கு விஐபி படத்தில் வந்த பீல் இதில் வரவில்லை.
பாடல்கள் செமத்தியாக இருக்கிறது. பாடல்களுக்காக எடுக்கப்பட்டு இருக்கும் மாண்ட்டேஜ் சீன்ஸ் கூட ரசிக்கும்படி தான் இருக்கிறது.
இரண்டாம் பாதியில் சுவாரஸ்ய குறைவு இருந்தாலும் படத்தை தாராளமாக பார்க்கலாம் படத்தின் சுவாரஸ்யமான காதல் காட்சிகளுக்காக.
ஆரூர் மூனா
Anna Appo antha beep thambi muhick pathi sollave yillaye
ReplyDelete"சென்னையில் ஒன்டு குடித்தன வீடுகளில் இந்த காட்சியை நேரில் கண்டு இருக்கிறேன்" y this veri nanba thappu!
ReplyDeleteworst movie. eppadi itha recomment panniga. i believed u lot.
ReplyDeletei bought axe oil for my headache