படத்தின் ட்ரெய்லரை பார்த்ததுமே இந்த படம் பார்த்தே தீர வேண்டிய படத்தின் பட்டியலில் சேர்ந்து விட்டது. காலையில் அரங்க வளாத்தினுள் வண்டியை நுழைத்தால் பகீரென்று இருந்தது. அரண்மனை 2 படத்திற்கு கூட்டம் பம்மியது. வண்டி போடவே இடமில்லை. தப்பான படத்தை தேர்வு செய்து விட்டோமே என்று நினைத்தேன். ஆனால் நடந்தது வேறு.
வெறும் கதைன்னு பார்த்தால் சக் தே இந்தியா படத்தின் அதே டெம்ப்ளேட் தான். வீரராக தோற்ற ஒருவன் சில வருடங்களுக்கு பிறகு பயிற்சியாளராகி சாதாரண ஒருத்தரை பயிற்சி கொடுத்து உலக சாம்பியன் ஷிப் ஆக்குதே கதை, இரண்டு படத்திற்கு ஒரு வித்தியாசமும் இல்லை.
ஆனாலும் இறுதிசுற்று படம் சக்தே இந்தியாவை விட நாலு அடி முன்னே நிற்கிறது. காரணம் மிக மிக எதர்த்தமான திரைக்கதை. சினிமாத்தனம் இல்லாத சினிமாவாக பிரம்மாண்டமாக நிற்கிறது படம்.
மாதவன் மேன்லினஸ்ஸில் அடித்து தூள் பறத்துகிறார். வயசானாலும் அந்த ஆண்மையின் வசீகரத்தில் எந்த குறைவும் ஏற்படவில்லை. என்னா ஹேர்ஸ்டைல். அதை விட பெரிய விஷயம். பெர்பார்மன்ஸில் பின்னுகிறார்.
இந்த மனிதனுக்குள் இருந்த ஆக்டிங் சென்ஸ் குறைந்து விட்டதோ என்று எண்ணினேன். காரணம் மன்மதன் அம்பு. ஆனால் மின்னலேயில் பார்த்த மாதவன் எந்த சேதாரமும் ஏற்படாமல் கண் முன்னே நிற்கிறார்.
க்ளைமாக்ஸில் ஜாகீர் உசேனிடம் எல்லா திமிரையும் விட்டு ரித்திகாவுக்காக கெஞ்சும் போது பெர்பார்மன்ஸில் பின்னியிருக்கிறார். அதே போல் இறுதியாக தூரத்தில் இருந்தபடி எப்படி அடிப்பது என்று ரித்திகாவுக்கு ஹிண்ட் கொடுப்பது வரை பின்னி பெடலெடுக்கிறார் மனுசன்.
அடுத்த ரவுண்டுக்கு தயாராகுங்கள் மாதவன். ரசிகர்கள் கொண்டாட காத்திருக்கிறோம்.
ரித்திகா சிங் முதல் காட்சி முதலே ஆச்சரியப்பட வைக்கிறார். படத்திற்கான ப்ரோமோவில் பார்த்தேன், ஒரு வார்த்தை கூட அவருக்கு தமிழ் பேச வரவில்லை. ஆனால் படத்தில் ப்ராம்ப்ட்டில் வசனம் சொல்லாமல் அட்சர சுத்தமாக பேசுகிறார். அதுவே படத்தின் ஆகச் சிறந்த ப்ளஸ்.
மீன் விற்கும் காட்சியில் ஆரம்பித்து படிப்படியாக ஸ்கோர் செய்து கொண்டே போகிறார். முதல் ரவுண்ட்டில் வேண்டும் என்றே பவுல் செய்ய அம்பயரை முகத்தை பேர்க்கும் போது அப்ளாஸ் அள்ளுகிறார்.
திருட்டுப் பட்டம் சுமந்து வெறுமையுடன் ஆட்டோவில் மாதவனுடன் வரும் போது நடிக்க தெரிந்த நடிகை என்பதை நிரூபிக்கிறார். இன்னும் என்ன சொல்ல, முழுசா சொல்லனும்னா சொல்லிக்கிட்டே போகலாம். இந்த ஒரு பதிவு பத்தாது.
நாசர் லோக்கல் பாக்சர் எப்படி இருப்பார்கள் என்பதை கண்முன்னே நிறுத்துகிறார். முதலில் அலட்சியமாக மாதவனை அணுகும் போது பிறகு அவரைப் பற்றி படிப்படியாக புரிந்து கொண்டு அவருக்கு துணை நிற்கும் போதும் செம செம.
இந்த மாதிரி படங்களில் ஒரு சின்ன அபாயம் இருக்கிறது. நாம் படம் துவங்கிய சில நிமிடங்களிலேயே இணைந்து பயணிக்க வேண்டும். அப்படி நடக்கவில்லை என்றால் சொதப்பி விடும். அப்படி நம்மை படத்துடன் பயணிக்க வைக்க வேண்டியது இயக்குனர் கடமை. அதை சரியாக செய்து வெற்றிக் கனியை பறித்து இருக்கிறார் இயக்குனர்.
படத்திற்கு தேவையில்லாத ஒரு சீன் ஒரு ப்ரேம் கிடையாது. அவ்வளவு நறுக் எடிட்டிங். அந்த செங்கிஸ்கான் பற்றிய விவாதம் சம்பந்தமில்லாமல் இருக்கும் போதே நினைத்தேன். அது க்ளைமாக்ஸ்க்கான லீட் என்று. அதை சரியாக ப்ளேஸ் பண்ணியிருக்கிறார் இயக்குனர்.
எல்லாம் முடிந்து வெற்றி பெற்ற பிறகு மாதவன் ஒதுங்கியிருக்க ஜாகீர் உசேன் முன்னின்று பெருமை பட்டுக் கொள்ளும் போதே தியேட்டரே எதிர்பார்க்கிறது அந்த காட்சியில் ரித்திகா அவரை அடித்து பொளக்க வேண்டுமென. அது நடந்ததும் அரங்கில் அனைவரும் எழுந்து நின்று கைதட்டினர். இது தான் இந்த படத்தின் வெற்றிக்கு சான்று.
நாயகி வட இந்திய முகமாக தெரிகிறதே, அன்னியமாக இருக்கிறதே என்று யோசிக்கும் போது அதற்கு சரியான காரண காரியம் அமைத்து நம்ப வைத்து இருக்கிறார் இயக்குனர்.
பாடல்கள் எல்லாம் ஏஒன். எல்லாமே மான்டேஜ் சாங்ஸ். அதற்கேற்ற சரியான காட்சிகள்.
சினிமா ரசிகர்கள் கண்டு களிக்க ஏற்ற வகையில் ஒரு சிறந்த படம் இறுதிச்சுற்று.
படம் பார்த்து முடித்ததும் மனமெல்லாம் நிறைந்து விமர்சனம் எழுத வீட்டுக்கு வரும் போது ஒரு போன் வந்தது. யூனியன் ஆபீஸில் வெள்ள நிவாரண பொருட்கள் கொடுக்கிறார்கள், வந்து பெற்றுக் கொள்ளவும் என. இப்ப அது அவசியமில்லை கூட. ஆனால் யூனியன் காரர்கள் தயவு வேண்டுமே. அதனால் எதுவும் சொல்ல முடியாமல் நேரே யூனியன் ஆபீசுக்கு போய் விட்டேன்.
எல்லாம் முடியும் நேரம் வேலைக்கு செல்ல வேண்டிய நேரமாகிடுச்சி. அதனால் தான் விமர்சனம் லேட்டு.
ஆரூர் மூனா