Monday, 11 January 2016

லோயர் பெர்த்தும் மிலிட்டரி ரம்மும்

கிறிஸ்துமஸ் சமயத்திலேயே குடும்பத்துடன் போய் திருவாரூரில் உட்கார்ந்தாச்சி. பொங்கல் வரை வீட்டம்மாவும் முல்லையும் திருவாரூர் வாசத்தில். புத்தாண்டுக்கு பிறகு நான் மட்டும் சென்னை வந்து வேலைக்கு போய்க் கொண்டு இருக்கிறேன். 


முல்லையை விட்டு இருக்க மனமில்லாததால் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை திருவாரூர் விஜயம் நடந்துக் கொண்டு இருக்கிறது. நேற்றிரவு சென்னைக்கு பயணமானேன். 

எப்போதுமே அரிசி, உளுந்து, புளி போன்ற பொருட்கள் திருவாரூரில் இருந்து தான் எடுத்து வந்துக் கொண்டு இருக்கிறேன். அப்படியே பழகிப் போச்சி. நேற்றும் நாற்பது கிலோவுக்கு மேல் வெயிட்டுகளை சுமந்து கொண்டு ரயிலேறுவதால் சைடு லோயர் பெர்த் புக் பண்ணியிருந்தேன். 

எப்பொழுமே எனக்கான லோயர் பெர்த்தை கடன் கொடுத்தே பழகிப் போன நான் இந்த முறை யாருக்கும் கொடுக்க கூடாது என்று கடுகடுப்பான முகமூடி அணிந்து பெட்டியில் ஏறினேன். 

முகமூடியை கழற்றி எறியும் நிலையை உறுதிப்படுத்த வழக்கம் போல ஒரு பெண்மணி வந்து பெர்த்தை மாற்றிக் கொண்டு அப்பர் பெர்த்துக்கு  செல்லும்படி கேட்டார். கையில் நிறைய பொருட்கள் இருப்பதால் யோசித்து மறுத்தேன். "செங்கல்பட்டுல இறங்கிடுவோம் தம்பி. வயதானவள், அப்பர் பெர்த்தில் ஏறமுடியாது" என்று கெஞ்சினார். 

சில நிமிடங்களில் மனசு கேட்காமல் அவரிடம் பெர்த்தை கொடுத்து விட்டு சைடு அப்பருக்கு மாறினேன். கடுகடுப்பான முகமூடி என்னைப் பார்த்து சிரித்தது. தூக்கம் வரவில்லை. மனசு முழுக்க பொருட்களின் மீது தான் இருந்தது. 

அந்த அம்மா செங்கல்பட்டில் இறங்க பெர்த்தை விட்டு அகன்ற சமயம் அப்பர்பெர்த்தில் இருந்து இறங்கினேன். லோயர் பெர்த்தில் அடுத்த கூபேயில் இருந்து வந்து வேறொரு பெண்மணி அமர்ந்தார். கடுப்பாகி அம்மா நகருங்க, இது என் பெர்த்து என்று சொல்ல முனங்கிக் கொண்டே எழுந்து சென்றார்.

5 நிமிடம் கழித்து ஒன்னுக்கு போய்விட்டு வந்தால் மிடில்பெர்த்தில் படுத்திருந்த பெண்மணி வந்து சைடு லோயரில் படுத்து இருந்தார். மண்டை காயும் அளவுக்கு சூடாகிப் போனேன். அவரிடமும் சத்தம் போட்டு எழுப்பி விட்டு பெர்த்தில் படுத்தேன். 

போராளி சட்டை போட்டு லோயர் பெர்த் கேட்கும் வயதான ஆட்களையெல்லாம் டிஸ்சும் டிஸ்சும்னு சுட்டு விடும் அளவுக்கு கோவத்தில் பொங்கிப் போனேன். என் அம்மாவுக்கு கூட என்றாவது இந்த நிலை வந்தால் அவரும் லோயர் பெர்த் கேட்பாரே என்று சமாதானமானேன்

படக்கென போராளி சட்டையை கழட்டி விட்டு சமூக ஆர்வலர்சட்டையை மாட்டிக் கொண்டு இனி வயதானவர்கள் கேட்டால் எப்போதும் போல் லோயர் பெர்த் கொடுப்போம் என்று உறுதி எடுத்துக் கொண்டேன். 

எழும்பூரில் இறங்கிய போது செம குளிர், நடுக்க ஆரம்பித்தது. ரெண்டு நாளைக்கு முன் நள்ளிரவிலும் வேர்த்துக் கொட்டிய சென்னையா இது என்று ஆச்சரியமானது. 

சமூக ஆர்வலர் சட்டையை கழட்டி கடாசி விட்டு மகாதியான பிரபுவாகிப் போனேன். இன்னும் இருக்கும் இரண்டு நாட்களும் மிலிட்டரி ரம் இருந்தால் தான் குளிரும் சென்னையை சமாளிக்க முடியும் போல.

ஆரூர் மூனா

3 comments:

  1. அது என்ன மிலிட்டரி ரம் ! ! (நானும் மிலிட்டரிகாரந்தான்)..... வேற சரக்கு பற்றி எனக்கு தெரியாதுங்கறேன் !!

    ReplyDelete
  2. நீங்க ஒரு முன்னால் பாக்ஸர் என்பது மறந்து போச்சா ? பேசாமா பாக்ஸர் சட்டை போட்டுகிட்டா யாரும் கிட்டவந்து பேசா மாட்டாங்க :)

    ReplyDelete
  3. புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துக்கள் நண்பரே! என்னதான் முகமூடி அணிந்தாலும் இயல்பான இரக்க குணம் நம்மை கவிழ்த்துவிடுகிறது!

    ReplyDelete