Wednesday 20 June 2018

ரோஸ்மில்க்

மெர்சல் படத்துலயே எனக்கு புடிச்ச சீன், தம்பி ரோஸ்மில்க் வாங்கித் தர்றேண்டா என்பது தான். மத்தவன்லாம் சமந்தாவை ரசிச்சிக்கிட்டு இருந்தா நான் விஜய் ரோஸ்மில்க் குடிக்கும் அழகை ரசிச்சிட்டு இருப்பேன்.


ரோஸ்மில்க் பெருமையப் பத்தி நாளெல்லாம் சொல்லிக்கிட்டே போகலாம். கடைல வாங்கி குடிக்கிற ரோஸ்மில்க்கை விட அபூர்வமாக வீட்டு விஷேசங்களில் கிடைக்கும் ரோஸ்மில்க் அலாதி சுவையா இருக்கும்.
மைலாப்பூர் காளத்தி பேப்பர்ல கிடைக்கும் ரோஸ்மில்க் நல்ல டேஸ்ட்டா தான் இருக்கும், ஆனால் நான் சாப்பிட்ட ரோஸ்மில்க்குகளில் அது சிறந்ததுனுலாம் சொல்லமாட்டேன்.
திருவாரூர்ல ராம்ஜி மாமா னு ஒரு சமையற்காரர் இருந்தார். வடக்கு வீதி குடும்ப விழாக்களுக்கு அவர் தான் சமையல். எங்க ஊர் கல்யாணங்களில் முதல் நாள் மாலை கண்டிப்பாக ரோஸ்மில்க் இருக்கும்.
அதன் சுவையே அலாதி. கடையில் சிரப் வாங்கி பாலில் கலக்காமல் ரோஜா இதழ்கள், பன்னீர் சிரப், சர்க்கரை கலந்து அவரே தயாரிப்பார். அதுவும் கறந்த பாலை காய்ச்சி குளிர வைத்து அதில் செய்யப்படும் ரோஸ்மில்க்கின் சுவை மறக்கவே மறக்காது.
தரமான ரோஸ்மில்க் சுவைக்க ஒரு விதி இருக்கிறது.
நல்லா சில்லுனு இருக்கும் ரோஸ்மில்க்கை முகத்தருகே எடுத்து வரும் போது அதன் மணம் நாசியை துளைத்து, மயிர்கால்கள் சிலிர்க்கனும். பிறகு சுவைக்கும் போது பக்குவமாக கலக்கப்பட்ட எசன்ஸ் மற்றும் பாலின் கலவை வாயெல்லாம் பரவி ஒரு திருப்தி தரும் பாருங்க. எத்தனை டம்ளர் குடித்தாலும் அலுக்காது. மனமும் வயிறும் கேட்டுக்கிட்டே இருக்கும்.
சென்னையில் கொஞ்சம் வெயிலடித்தாலும் உடன் தேடும்பானம் ரோஸ்மில்க் தான். இப்பலாம் காலை மாலை வேளைகளில் காபி, டீயெல்லாம் குடிப்பதில்லை. ரோஸ்மில்க் தான்.
காதி பவனிலிருந்து சிரப் வாங்கி கொடுத்து விடுவேன். ரெண்டு ஐஸ் க்யூப்கள் டம்ளரில் போட்டு திக்கா பாலை ஊற்றி எனக்கு எந்தளவுக்கு புடிக்குமோ அந்தளவுக்கு மட்டும் எசன்ஸை ஊற்றி தருவார் வீட்டம்மா,
எவ்வளவு கொஞ்சமா இருந்தாலும் பரவாயில்லை, ஆனால் தரமான ரோஸ்மில்க் குடித்த திருப்தியை தரனும் அது. சந்தானம் கூட ஒரு படத்தில் சொல்வாரே, குடிச்சிட்டு வச்ச மாதிரி இருக்கனும்னு. அது தான் நம்ம பதம்.
இப்ப சில இடங்களில் ரோஸ்மில்க்கை அப்டேட் பண்றேன்னு சப்ஜா விதைகள் அல்லது பாதாம் பிசின் சேர்த்து தர்றாங்க. ரோஸ்மில்க் டேஸ்ட்டையே கெடுத்து விட்டுது அது. ரோஸ்மில்க் பாரம்பரியம் மாறாமல் இருந்தால் தான் அந்த சுவை கிடைக்கும்.
ஆரூரான் திருமண மண்டபத்தில் பெரும்பாலும் தெரிந்தவர்கள் திருமணம் தான் நடக்கும். வெங்கடேஸ்வரா பள்ளிக்கு பக்கத்தில் வேறு மண்டபம் இருக்குமா, பள்ளி முடிந்து வரும்போது நோட்டம் விட்டே வருவோம். சமையற்கூடத்தில் ராம்ஜி மாமா இருந்தால் சட்டு சட்டுனு பசங்களுக்கு தகவல் பரவி விடும்.
வீட்டுக்கு போய் டவுசர் மாற்றி, பேட்டும் பாலும் எடுத்துக்கிட்டு மண்டபத்துல பூந்துடுவோம். எங்களை பார்த்தவுடன் "வந்துட்டானுங்க, பிரம்மஹத்திங்க"னு திட்டுவார்.
ஆனால் கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல் ரோஸ்மில்க் ஊத்திக் கொடுத்துக்கிட்டே இருப்பார். "போதும் மாமா" ன்னு சொன்னாலும் "இன்னும் குடிடா படுவா" ன்னு கொடுப்பார்.
இப்பலாம் திருமணங்களில் நுழைந்தவுடன் வெல்கம் ட்ரிங்க் னு ஒன்னு கொடுக்குறானுங்க. நல்லா கெமிக்கல் கலந்த க்ரேப் ஜுஸ் தான் பெரும்பாலும் இருக்கும். கொமட்டிக்கிட்டு வரும் நமக்கு.
இப்ப ஆரூரான் மண்டபத்துக்குள்ள போய் 20 வருசத்துக்கு மேல ஆயிடுச்சி, ராம்ஜி மாமாவையும் பார்த்து 15 வருசத்துக்கு மேல ஆச்சி. இப்ப எங்க இருந்தாலும் ரோஸ்மில்க்கை தயார் செய்து கொடுத்துக்கிட்டு தான் இருப்பார். இந்த பக்குவமெல்லாம் அதுவா அமையனும்.

ஆரூர் மூனா

1 comment:

  1. ரசித்தேன்...

    ரோஸ்மில்க்யோடு பதிவுகள் இங்கும் தொடர வேண்டும்...

    ReplyDelete