Thursday, 31 December 2015

வெறி கொண்ட புத்தாண்டு சபதம்

பொதுவா எந்த புத்தாண்டு சபதமும் எடுப்பதில்லை. ஏன்னா ஒரு நல்ல பழக்கமும் நமக்கு இருந்ததில்லை. எந்த கெட்டப் பழக்கத்தையும் விடனும்னு நினைச்சதில்லை. எந்த கெட்டப் பழக்கத்தையும் நாமளா தான் விடனும். கட்டாயப்படுத்தினா அது இன்னும் அதிகரிக்கும். தம்மை விடுறேன், தண்ணியை விடுறேன்னு எந்த வில்லங்க சபதமும் எடுத்ததில்லை. 


2014 என் வாழ்வில் மறக்கவே முடியாத ஆண்டு. என் வாழ்க்கையையே புரட்டிப் போட்டு போன ஆண்டு. ஒரு துர்சம்பவத்தால் ஏற்பட்ட பொருளாதார இழப்பையும், கேரியர் வீழ்ச்சியையும், உருவாக்கி விட்ட கெட்டப் பெயரையும் கடந்து சமநிலைக்கு வரவே 10 வருடங்களாவது ஆகும் என்று நினைத்தேன். ஏனென்றால் எனக்கு ஏற்பட்ட பாதிப்பின் அளவு அவ்வளவு. அதன் பிறகு தானே உயரத்தைப் பற்றி யோசிக்க முடியும்.

கூடவே இருந்த உடன்பிறப்பும் கிடைத்தவரை லாபம் என பொது சொத்தில் இருந்து அளவுக்கு அதிகமாக அள்ளிக் கொண்டு போக எல்லா சொத்துக்களையும் இழந்து கிட்டத்தட்ட காலாவதியான நிலை தான். மற்ற இழப்பை விட உடன்பிறப்பின் துரோகம் ரொம்பவே வலித்தது. 

2015ல் இவற்றை குறைக்க பெரும் பாடுபட்டேன் என்றே சொல்லலாம். கெட்டப் பெயரை நீக்குவது என்பது எல்லாம் சாத்தியமே இல்லை. அதுவும் திரும்பிய பக்கமெல்லாம் உறவினர்களையும், நண்பர்களையும் பெற்ற நான் வருட ஆரம்பத்தில் எந்த நிகழ்வுக்கு போனாலும் கூனிக்குறுகி தான் இருந்தேன். 

ஆண்டின் இறுதியில் இதன் மாற்றத்தை உணரத் தொடங்கினேன். உறவினர்களும், நண்பர்களும் பாசத்தையும், நட்பையும் பலப்படுத்தி என் இறுக்கத்தை குறைத்தனர். அவர்களுக்கு பெருமளவில் நன்றிகள்.

கேரியரில் துவங்கிய இடத்தில் இருந்தே திரும்ப ஆரம்பிக்க வேண்டிய சூழ்நிலை. பரவாயில்லை. கலங்காமல் துவக்கி ஆண்டின் இறுதியில் முன்னேற்றப் பாதையில் கேரியரை செலுத்தியாச்சி. 2016ல் இளநிலை பொறியாளராக பதவி உயர்வு கிடைக்க 99.99 சதவீத வாய்ப்பு வந்து விட்டது. இயல்புநிலையில் கேரியரும். உடன்பணிபுரிந்தோருக்கும் உயரதிகாரிகளுக்கும் நன்றிகள்.

பொருளாதார இழப்பு கடுமையான வலியை கொடுத்தது. நிம்மதியின்றி உறக்கமில்லாமல் எல்லா இரவுகளும் கழிந்தன. கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன் என்ற வார்த்தையின் அர்த்தத்தை இந்த ஆண்டு நன்றாகவே உணர்ந்தேன். ஆண்டின் துவக்கத்தில் 30 லட்சம் கடன் இருந்தது. 

அம்மாவின் பூர்வீக நிலம் விற்று கிடைத்த என் பங்கு பணம், பொது சொத்தில் உடன்பிறப்பின் துரோகத்தால் ஏற்பட்ட இழப்பு போக கிடைத்த மிச்ச பணம், வங்கி லோன், வீட்டமணியின் நகை விற்ற பணம் எல்லாம் சேர்த்து முக்கால்வாசி கடன்களை அடைத்தாகி விட்டது. ஆண்டின் இறுதியில் இரண்டரை லட்சம் மட்டுமே கடன் என்ற நிலையை அடைந்தாகி விட்டது. 

2016 முதல் பே கமிஷனின் சம்பள உயர்வு அமலுக்கு வருவதால் மே அல்லது ஜுனில் இன்னொரு லோனை போட்டு மிச்ச கடனையும் முடித்து விட்டால் அவ்வளவு தான். கடனின்றி நிம்மதியாக உறங்கலாம். மாத சம்பளக்காரனுக்கு அது தானே வேண்டும்.

 திருவாரூரில் ஒரு ப்ளாட் வாங்கி லோன் போட்டு வீடு கட்டி குடியேறியாச்சி. உடன்பிறப்பின் தொல்லையில்லாமல் பங்கு கேட்க ஆள் வைத்துக் கொள்ளாமல் நானே நான் மட்டுமே அப்பாவின் உதவியுடன் கட்டிக் கொண்ட வீடு. சற்று கவுரவமாக இருக்கிறது.

ஆக 2014ல் ஏற்பட்ட இழப்புகள் எல்லாம் நீங்கி  இயல்புநிலையை அடைய எப்படியும் பத்து வருடம் ஆகும் என்ற நிலையில் இரண்டே வருடத்தில் சாதித்தது மகிழ்ச்சியே.

இந்த விஷயங்களையெல்லாம் ஏன் பதிவில் போட வேண்டும் நாசூக்காக தவிர்த்து விடலாமே என்று கூட தோணியது. இதை பதிவு செய்து வைத்திருப்பது அவசியம். மறுபடியும் ஆணவத்தில் ஆடத் தொடங்கினால் என் தலையைத் தட்டி நிலையை உணர்த்த இந்த பதிவு அவசியம் என மூளை சொன்னது. அதனால் பதிவிட்டு விட்டேன். 

இந்த ஆண்டு இறுதியில் நண்பர்களுடன் நேரம் செலவிட்டது மிகுந்த மகிழ்ச்சியையும் மனவலிமையையும் தந்திருக்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை நேரத்தில் என்னைப் போல் பெங்களூருவில் இருந்து ஒரு நண்பனும், ஜப்பானில் இருந்து ஒரு நண்பனும், சிங்கப்பூரில் இருந்து ஒரு நண்பனும் வந்திருந்தார்கள். கடந்த ஆறு நாட்களும் மகிழ்வுடனும், கும்மாளத்துடனும் கழிந்து விட்டது. 

இந்த மகிழ்வை ஆண்டு முழுவதும் நான் தக்க வைத்திருந்தால் பாக்கியசாலி தான். 

வரும் ஆண்டு லட்சியம் என்ன, 

கடன்களை அடைத்த பின்பு, எனக்கென வீட்டின் உள்ளேயே ஒரு ஸ்டுடியோ அமைத்து, யூடியுப் சேனல் துவக்கி, நல்ல கேமிரா வாங்கி, சினிமா விமர்சனங்களை வீடியோக்களாக போட்டுத் தள்ளி, முதல் நாள் முதல் விமர்சனம் நம்மளுதா இருக்கனும் என்ற கொள்கையை விட்டுத்தராமல் இருக்கனும். இதுக்கு எந்த சிக்கலையும் என் வீட்டம்மணி ஏற்படுத்தாமல் இருக்கனும்.

என் பொண்ணு செய்யும் சேட்டைகளை கட்டுக்குள் கொண்டு வரும் திறமையை கத்துக்கனும், வாரம் ஒரு நாள் மட்டும் மகாதியானத்தில் கலந்துக்கனும், வலைப்பூவில் எழுதுவதை விட்டு விடாமல் இருக்கனும், நக்கீரன் வாயை கட்டனும், பட்ஜெட் போட்டு செலவு செய்ய பழகிக்கனும், ரஜினி படம் முதல் காட்சியை எப்பாடு பட்டாவது பார்க்கனும். அவ்வளவு தான்.

வாசகர்களுக்கும், வாசக நண்பர்களும், நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும், உடன்பணிபுரிபவர்களுக்கும், துரோகத்தால் முதுகில் குத்திய உடன்பிறப்புக்கும், கடன் கொடுத்தவர்களுக்கும், இவனிடம் இருந்து எப்படிடா பணத்தை திரும்ப வாங்குவது என்று தவிப்பவர்களுக்கும், கடவுள் நம்பிக்கையில்லாத என்னிடம் சிக்கலை பயன்படுத்தி மதமாற்றம் ஏற்படுத்த முனைந்தவர்களுக்கும், கடவுள் நம்பிக்கை ஏற்படுத்த முயன்ற உறவினர்களுக்கும், பெயர் விட்டுப் போன அன்பு உள்ளங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

ஆரூர் மூனா

Wednesday, 23 December 2015

பசங்க 2 - சினிமா விமர்சனம்

படத்தின் ட்ரெய்லரை பார்த்த போதே தெரிந்து விட்டது. இது தாரே ஜமீன் பர் படத்தின் மறுஉருவாக்கமாக தான் இருக்கும் என்று. படமும் அந்த அளவுக்கு இருந்தால் கூட போதும் என்ற மனநிலையில் தான் படத்துக்கு போனேன். 


இப்பவும் தாரே ஜமீன் பர் படம் பார்த்தால் இறுதிக்காட்சியில் தேம்பித் தேம்பி அழுவேன். அந்த அளவுக்கு அந்த பையனின் இயலாமையை நமக்குள் கடத்தி அவனுடனே பயணிக்க வைத்திருப்பார்கள். 

நான் எதிர்பார்த்த மாதிரியே தாரே ஜமீன் பர் படத்தை கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்த்து பசங்க 2 வாக நமக்கு அளித்திருக்கிறார்கள். 

முனிஸ்காந்த் தம்பதிக்கு ஒரு பையனும் கார்த்திக் குமார் - பிந்து மாதவி தம்பதிக்கு ஒரு பொண்ணும் பிறக்கிறார்கள். அந்த பசங்க ஒன்னாம் நம்பர் வாலுவாக இருக்கிறார்கள். நன்றாக படித்தாலும் மார்க் எடுப்பதில்லை. அதனால் வருடத்திற்கு ஒரு ஸ்கூல் என மாறிக் கொண்டே இருக்கிறார்கள். 


ஒரு கட்டத்தில் ஒரு போர்டிங் பள்ளியில் சேர்ப்பதற்காக வெவ்வேறு இடங்களில் இருந்து தாம்பரத்திற்கு குடி வருகிறார்கள். அதே அப்பார்ட்மெண்ட்டில் இருக்கும் சைல்ட் சைக்காலஜிஸ்ட் டாக்டர் சூர்யா - பள்ளி ஆசிரியை அமலா பால் தம்பதிகள் இவர்கள் சிக்கலை அறிந்து பசங்களின் திறமையை  மெருகேற்றி அவர்களின் பிரச்சனைக்கு தீர்வு தருகிறார்கள். அவ்வளவு தான். 

படத்தின் கதையே இது தான் என்பதால் சொல்லலாமா என்று  யோசித்தேன். தாரே ஜமீன் பர் கதை தான் என்று சொல்லி விட்டதால் அதில் என்ன ரகசியம் வைப்பது என்று சொல்லிவிட்டேன். 

முனிஸ்காந்த்தின் மகனாக வரும் நிசேஷ் பிரமாதமாக நடித்து இருக்கிறார். அவனது எக்ஸ்பிரசன்கள் பிரமாதம். பாத்ரூமில் பேய் இருப்பதாக சொல்லி பசங்களை பயமுறுத்தும் காட்சியிலும், அதிகாலையில் பாத்ரூமில் கொட்டமடிக்கும் காட்சியிலும் அசத்தி இருக்கிறான். 


கார்த்திக் குமாரின் மகளாக வரும் வைஷ்ணவி கூட நன்றாக நடித்து இருக்கிறார். 

சூர்யா கதையை கேட்டு தயாரித்து சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பதே படத்திற்கு கூடுதல் பலம். அஷ்ட கோணல் சேட்டைகள் வித்தியாசமான சூர்யாவை நமக்கு காட்டுகிறது. 

படத்தின் கலகலப்புக்கு ஆகச்சிறந்த உத்திரவாதமாக இருப்பது முனீஸ்காந்த். வாய்ப்புகள் கிடைக்காமல் சொற்ப கேரக்டர்களில் நடித்து வந்து முண்டாசுபட்டியில் கலக்கி எடுத்து லைம்லைட்டுக்கு வந்தவருக்கு இந்த படம் போனஸ். 

எல்லா பசங்க மனதிலும் இடம் பிடித்து விடுவார். க்ளெப்டோமேனியா பிரச்சனை இருப்பதால் போகும் இடங்களில் எல்லாம் சிறு பொருட்களை திருடி வந்து பிரச்சனையாவதால் மனநல மருத்துவரிடம் சிகிச்சைக்காக போய் அவரது ஸ்டெதஸ்கோப்பையே ஆட்டைய போட்டு வருவது செம ரகளை. 


இவ்வளவு சிறப்பு சொன்னாலும் படம் கொஞ்சம் டல்லடிக்கிறது. இதற்கு முக்கியமான காரணம் பசங்களின் குறையை நம்முள் கடத்தவில்லை. அவர்கள் பிரச்சனையை வெகு ஜாலியாக சொல்வதால், யாராவது வந்து இந்த பிரச்சனையை தீர்த்து வைங்கோ என்று நாம் எதிர்பார்க்கவே இல்லை. அதனால் சூர்யா வந்து அவர்களின் குறைகளை சரிசெய்வது நமக்குள் எந்த பாதிப்பும் ஏற்படுத்தவில்லை. 

இந்த பிரச்சனை தாரே ஜமீன் பர் படத்தில் சரியாக பார்வையாளனுக்குள் கடத்தப்பட்டு இருக்கும். அப்புறம் அமீர்கான் வந்து சரி செய்து அந்த பையன் சாதிக்கும் போது நாமும் ஆனந்த கண்ணீர் விடுவோம். 

பசங்க 2 படத்தின் காட்சிகள் ஜாலியாக வந்து ஜாலியாகவே செல்வதால் நமக்குள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இதுவும் ஒரு படம் என்றே கடந்து செல்கிறது. இடைவேளைக்கு பிறகு சில காட்சிகள் லேக் ஆகி கடுப்பேத்துகிறது. 

அரசு பள்ளி ஆசிரியரே தன் மகனை தனியார் பள்ளியில் சேர்க்க வரிசையில் நிற்பதும் அதனை சமுத்திரக்கனி வந்து கண்டிப்பதும் சரியான சவுக்கடி. 

ஒரு டிஸ்லெக்சியா மாதிரி குறைபாடுகள் இருந்து சரி செய்தால் ஒகே. ஆனால் சூப்பர் ஆக்டிவ் அதாவது வாலுத்தனமாக இருக்கும் பிள்ளைகள் ஒரு குறை என்பது ஏற்றுக் கொள்ள சிரமமாக இருக்கிறது. 

தனியார் பள்ளிகளின் கண்டிப்பு, தேர்வுக்கான ஸ்ட்ரெஸ் போன்றவற்றை குறை சொல்லியிருப்பதற்கு வாழ்த்துகள். பசங்களை குறை சொல்லும் பெற்றோர்கள் அவசியம் பார்க்க வேண்டிய சினிமா பசங்க 2. 

ஆரூர் மூனா

Thursday, 17 December 2015

தங்கமகன் - சினிமா விமர்சனம்

வேலையில்லா பட்டதாரி படத்தின் அதிரிபுதிரி வெற்றிக்கு பிறகு அதே டீம் தங்கமகனாக களமிறங்கியிருக்கிறது. கண்ணுக்கு குளிர்ச்சி தரும் இணைப்பாக தகதக எமியும், சமந்தாவும்.


இயக்குனரின் பலமே காட்சிக்கு காட்சி அலுக்காமல் இணைப்பது தான் அதுவும் முதல் பாதி செம ரகளை. ஒரு நொடி கூட சலிக்கவில்லை. ரொமான்ஸ், காமெடி, செண்ட்டிமெண்ட் என்று பிரமாதமாக போகிறது. 

கேஎஸ் ரவிக்குமார், ராதிகாவுக்கு ஒரே மகனாக தனுஷ். காலேஜில் படிக்கும் காலத்தில் எமியுடன் காதல் வந்து ஒரு சண்டையில் இருவரும் பிரிந்து விடுகிறார்கள். 

இன்கம்டாக்ஸ் அலுவலகத்தில் வேலை பார்க்கும் கேஎஸ் ரவிக்குமார் அவரது அலுவலகத்திலேயே தனுஷை வேலைக்கு சேர்த்து விட்டு சமந்தாவை திருமணமும் செய்து வைக்கிறார். இயல்பாக  செல்லும் வாழ்க்கையில் திடீரென ஒரு நாள் கேஎஸ் ரவிக்குமார் வீட்டிலேயே தற்கொலை செய்து கொள்கிறார். 


அப்பா ஒரு முக்கிய பைலை தொலைத்ததால் தனுஷ்க்கு வேலை போய் விடுகிறது. வீட்டையும் காலி செய்து ஒரு குடிசை மாதிரியான வீட்டு வருகிறார்கள். தனுஷ் பிரியாணி கடைக்கு வேலைக்கு போகிறார். 

என்ன நடந்தது, அப்பாவின் சாவுக்கு காரணம் யார். அப்பாவின் மீது விழுந்த பழியை எப்படி துடைத்து பழையபடி வேலைக்கு போகிறார் தனுஷ் என்பது தான் தங்கமகன் படத்தின் கதை.

தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தில் வந்த மாதிரியே அசால்ட்டு பையன். எதற்கும் கவலைப்படாத இளைஞன் கதாபாத்திரம். அல்வா மாதிரி விழுங்கித் தள்ளுகிறார். எமியுடனான ஈர்ப்பும், சமந்தாவுடனான தாம்பத்யமும் இயல்பாக செய்து அசத்தியிருக்கிறார்.


ஒரே குறை முகத்தில் முத்தல் தெரிய ஆரம்பித்து இருக்கிறது. இனிமேல் ஸ்கூல் பையன் பாத்திரத்திற்காக மீசையை வழித்து விட்டு வந்து நின்றால் யாரும் நம்ப மாட்டார்கள். வாலிபன் பாத்திரத்தை மெயின்டெயின் பண்ணுங்கள் போதும். 3 படத்துடன் அந்த பால்ய வயதுக்கான முகவெட்டு போய் விட்டது.

படத்தின் ஆகச் சிறந்த ஒரு விஷயம் என்னவென்றால் அது சமந்தாவின் பாத்திரப் படைப்பு. எல்லா தமிழ் ஆண்களுக்கும் பெண் என்றால் அச்சம், மடம், நாணத்துடன் இருக்க வேண்டும். வேலைக்கு போகும் போது அவசர அவசரமாக டிபன் பாக்ஸ் வாசலில் கொடுத்து ரொமான்ஸாக வழியனுப்ப வேண்டும். 


மாலை நேரம் வேலை முடிந்து கணவன் வீட்டுக்கு வரும் நேரம் வாசலில் சென்று டிபன் பாக்ஸை வாங்கி அன்புடன் வரவேற்க வேண்டும், பெற்றவர்களை விட கணவன் முக்கியம் என இருக்க வேண்டும். இன்னும் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று தமிழ்நாட்டு ஆண்கள் எதிர்பார்க்கிறார்களோ அப்படியெல்லாம் சமந்தா படத்தில் இருக்கிறார். 

அதனால் நம்மால் கூடுதல் ரொமான்ஸ் உடன் படத்தை ரசிக்க முடிகிறது. இது அழகு ரீதியிலான ஈர்ப்பு கேரக்டரைசேசன் பலம். இந்த திறமையை வில்லன் பாத்திரப்படைப்பிலும் செலுத்தியிருந்தால் இன்னும் கலக்கியிருக்கும்.

எமி ஜாக்சன் சிங் ஈஸ் ப்ளிங் படத்தில் செமத்தியாக இருப்பார். நமக்கே காதலிக்கனும் போல ஆசையாக இருக்கும். காஸ்ட்யூம் எல்லாம் அள்ளும். இந்த படத்தில் தமிழ்நாட்டு பொண்ணாக்குகிறேன் என்று அவருக்கு சுரிதார். நெற்றிப் பொட்டு கையில் வளையல் என்று கொடுத்து படுத்தி எடுத்து இருக்கிறார்கள். நமக்கு தான் கடுப்பாகிறது.

முதல் பாதி முழுக்க தனுஷ் உடன் சேர்ந்து கலகலப்பை குத்தகைக்கு எடுத்து இருப்பவர் சதீஷ். அவ்வப்போது ஒன்லைனில் கலகலக்க வைக்கிறார். 

காதலும் ஆரவாரமுமாக போகும் முதல் பாதி இரண்டாம் பாதியில் தொடர்கிறதா என்றால் இல்லை என்று தான் சொல்லனும். காட்சிகள் சலசலக்கின்றன. சில இடங்களில் கொட்டாவி வருகிறது. ஒரு வழியாக இழுத்துப் பிடித்து படத்தை முடித்து வைக்கிறார்கள். 

படத்தின் இன்னொரு மைனஸ் வில்லன். படு சொத்தையான கேரக்டரைசேசன். தீடீர் வில்லன் ஜெயப்பிரகாசம் கதாபாத்திரமும் சொத்தையாக தான் இருக்கிறது. வில்லன் எடுபடாததால் ஹீரோயிசமும் எடுபடவில்லை. 

படத்தில் சிங்கிள் பெட்ரூம் வீட்டில் அறைக்குள் மகனும் மருமகளும் இருக்க ஹாலில் அப்பாவும் அம்மாவும் காதில் பஞ்சு வைத்துக் கொண்டு படுப்பதும். ரூமுக்குள் கட்டிலில் படுத்தால் சத்தம் வரும் என்பதற்காக தனுஷும் சமந்தாவும் தரையில் ரகசியமாக படுத்து ரொமான்ஸ் பண்ணும் காட்சி செம க்ளாஸ். சென்னையில் ஒன்டு குடித்தன வீடுகளில் இந்த காட்சியை நேரில் கண்டு இருக்கிறேன்.

விஐபி படத்தில் அம்மா செண்ட்டிமெண்ட் என்றால் இந்த படத்தில் அப்பா செண்ட்டிமெண்ட். ஆனால் முதல் பாதியில் அப்பாவுக்கும் மகனுக்குமான பாசப்பிணைப்பை குறிப்பிடும் படியான காட்சிகள் இல்லாததால் நமக்கு விஐபி படத்தில் வந்த பீல் இதில் வரவில்லை.

பாடல்கள் செமத்தியாக இருக்கிறது. பாடல்களுக்காக எடுக்கப்பட்டு இருக்கும் மாண்ட்டேஜ் சீன்ஸ் கூட ரசிக்கும்படி தான் இருக்கிறது. 

இரண்டாம் பாதியில் சுவாரஸ்ய குறைவு இருந்தாலும் படத்தை தாராளமாக பார்க்கலாம் படத்தின் சுவாரஸ்யமான காதல் காட்சிகளுக்காக.

ஆரூர் மூனா

Saturday, 12 December 2015

*****டை என்பது பீப் வார்த்தையா

கெட்ட வார்த்தையெல்லாம் இருக்கும். படிக்கனுமான்னு யோசிச்சிங்கனாக்கா அப்படி ஸ்கிப் பண்ணிட்டு எஸ்கேப்பாகிடுங்க.

நமக்குன்னு ஒரு வட்டம் போட்டுக்கிட்டு நாம தான் அதுல ராஜாவா இருப்போம். அது மாதிரி வேலை செய்யிற இடத்துல சக பணியாளர்கள், உயரதிகாரிகள் ஆகியோர் என்னை சுத்தி ஒரு வட்டம் போட்டு அதில் என்னை கருத்து கந்தசாமியாக்கி வைத்து இருக்கிறார்கள். 


நாட்டில் நடக்கும் எல்லா நிகழ்வுக்கும் என்னிடம் கருத்து கேட்பார்கள். நான் என் கருத்தை சொல்லனும். அதை செத்தவன் கையில வெத்தலப் பாக்கு கொடுத்தவன் மாதிரி சொல்லக் கூடாது. உணர்ச்சிகரமா ஏத்த இறக்கத்துடன் சீமான் மாதிரி கை முஷ்டியை உயர்த்தி தான் சொல்லனும்.

சில நிகழ்வுகளுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது. எனக்கு அதைப் பற்றிய அறிவும் கிடையாது. என்ன விஷயம்னு கூட தெரியாது.ஆனாலும் என் ரசிக வட்டத்தினர் என் கருத்து தான் உறுதியானது, இறுதியானது என்று நம்பி கேட்பார்கள், நான் சொல்லி தான் ஆகனும். இல்லைனா என்னை சரக்கில்லாதவன் என்று நம்பி விடுவார்கள் என்று நானே நினைத்துக் கொள்வதால் தெரியாத விஷயத்தில் கூட எதையாவது  சொல்லி வைப்பது வழக்கம்.

சிம்பு அனிருத் பீப் பாடல் மேட்டரில் கருத்து சொல்ல எனக்கு விருப்பமும் கிடையாது. சொல்வதற்கு கருத்தும் கிடையாது. அது அவன் வார்த்தை, அவன் துட்டு, அவன் கொழுப்பு பாடிட்டு போயிட்டான். அதை கண்டுக்காம விட்டாலே அதுவா குப்பைத் தொட்டிக்கு போயிருக்கும். எதிர்ப்பு தெரிவிக்கிறேன் பேர்வழின்னு ஆளாளுக்கு பார்வேர்ட் பண்ணப் போக செம வைரலாகிடுச்சி.


நேத்து என் ரசிக வட்டம் என்னை சுற்றிக் கொண்டு கருத்து கேட்டது, என்ன சொல்றதுன்னு தெரியலை. ஏன்னா என்கிட்ட கருத்தே இல்லை. ஆனாலும் அந்த குரூப்பை உக்கார வச்சி அரைமணிநேரம் பிரசங்கம் பண்ணினேன். கிரேட்ப்பா என்று பாராட்டி கூட்டம் கலைந்தது. 

வீட்டுக்கு வந்து யோசிச்சி பார்த்தேன். வார்த்தைகள் ஏரியாவுக்கு ஏரியா வித்தியாசப்படும். நாம அதற்குள் அடாப்ட் ஆகிக்கனும். இல்லைனா அது பெரிய பிரச்சனையாகிடும். 

ஒக்காலஓழி என்று ஒரு வார்த்தை எங்கள் தஞ்சாவூர் பக்கத்தில் இயல்பாக புழங்கப்படும் வார்த்தை எனக்கு 5 வயசு இருக்கும் போது என் தாத்தாவின் செட்டு நண்பர்களுக்கு நாங்கள் பட்டப் பெயர் வைத்திருப்போம். 

ஒருத்தர் பெயர் வெத்தல டப்பா, ஒருத்தர் களத்துபம்புசெட்டு தாத்தா. அது போல் ஒருத்தரின் பெயர் ஒக்காலஓழி தாத்தா. வாயத்தொறந்தா யாரை வேண்டுமானாலும் அப்படி தான் வசவுவார். பாசத்திலும் சரி, கோவத்திலும் சரி. 

அந்த வயசுல எனக்கு அந்த வார்த்தை தப்பாவும் தெரிஞ்சதில்லை. ஆனா ஒரு சமயம் திருநெல்வேலி போயிருந்தப்போ என் மாமா யாரையோ அப்படி திட்ட அவன் எங்க மாமாவை தெருவில் பொரட்டிப் போட்டு அடித்தான். அவருக்கு செம காயம். அப்புறம் விசாரித்த போது தான் தெரிந்தது .அந்த பகுதிகளில் அந்த வார்த்தையை சொன்னால் கொலை விழுமாம்.

பள்ளிப் படிப்பு முடிக்கும் வரை ஓத்தா என்று யாராவது சொன்னால் அவனை அப்படியே புறந்தள்ளி விடுவேன். நட்பும் கிடையாது. மயிறும் கிடையாது. அப்படி ஊருக்குள்ள இருந்தாச்சு. ஊர்ல கெட்ட வார்த்தை என்பது முட்டாப்*** , ஒ***க்ககு***க்கி, பேப்பு*** அவ்வளவு தான். 

சென்னைக்கு படிக்க வந்த புதிதில் இந்த வார்த்தையை தவிர்க்கவே முடியாமல் சங்கடப் பட்டேன். ஒம்மால என்பது இன்னும் நாராசமா இருந்தது. ஆனால் இரண்டாவது வருடம் ஒத்தா, ஒம்மால என்பது சர்வசாதாரணமாக என் வாயில் ஒட்டிக் கொண்டது. 

எந்த சொற்றொடருக்கும் முன்னால் இந்த இரண்டும் தான் முன் பின் நிற்கும். ஓத்தா என்று ஒருத்தன் என்னைப் பார்த்து சொன்னதற்காக முதல் வருடத்தில் அவனை தொரத்தி  தொரத்தி அடித்தது தான் நினைவுக்கு வந்தது.

தெவிடியாப் பையா என்பது இருப்பதிலேயே மோசமான கெட்ட வார்த்தை. ஊர்ப்பக்கம் ஒருத்தன் இந்த வார்த்தையை பிரயோகித்தால் மவனே அருவா வெட்டு தான். வீட்டை எரிச்சதும் என் கண்முன் நடந்திருக்கு. 

ஆனால் தெவிடியாப் பையா என்ற வார்த்தை என்னுடன் வேலை பார்ப்பவர்களுக்கு இடையே சர்வ சாதாரணமாக புழங்குகிறது. கூட வேலை செய்பவன் ஒரு சின்ன தவறு செய்தால் கூட தெவிடியாப் பையா என்ற ஆசீர்வாதம் தான் கிடைக்கும். குடிக்கும் போது தண்ணியை கொஞ்சம் குறைத்து ஊத்துனா தெவிடியாப் பையா இத்தனை நாளா சரக்கடிக்கிற இன்னும் தண்ணி ஊத்தத் தெரியலையா என்பார்கள்.

அய்யா என்பது நல்ல மரியாதையான தமிழ் வார்த்தை. சார் என்பதை விட அய்யா என்று பழகுவது தான் மரியாதை என்று என் தமிழ் வாத்தியார் சொல்லிக் கொடுத்தார். ஆனால் சென்னையில் ஒரு ஆட்டோக்காரனை பார்த்து  அந்த இடத்துக்கு வர்றியாய்யா என்று சொல்லிப் பாருங்கள். அவன் கெட்ட வார்த்தைகளின் உச்சத்தில் ஏறி தலையில் நிற்பான். 

இப்படியே வார்த்தைகள் புழங்கி புழங்கி எது நல்ல வார்த்தை எது கெட்ட வார்த்தை என்பது புரியாமல் போயிடுச்சி. இந்த லட்சணத்துல சிம்பு பாட்டைப் பத்தி நான் எங்கேயிருந்து கருத்து சொல்றது. 

நீங்களே மானே தேனே பொன்மானே எல்லாம் போட்டுக்கங்க.

ஆரூர் மூனா

Friday, 11 December 2015

ஈட்டி - சினிமா விமர்சனம்

சில ஆக்சன் படங்களின் ட்ரெய்லரை பார்த்தவுடன் படத்தை முதல் காட்சி பார்த்தே ஆக வேண்டும் என்ற ஆவல் ஏற்படும். அது மாதிரி கொம்பன் படத்தின் ட்ரெய்லருக்கு பிறகு இந்த படத்தின் ட்ரெய்லர் தான் அந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

ஆனால் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா என்பதை விமர்சனத்தின் இறுதியில் பார்க்கலாம்.


தஞ்சாவூரில் ரத்தம் உறையாமை குறைபாடு இருக்கும் அத்லெட் அதர்வா நேஷனல் லெவல் போட்டியில் பங்குபெற சென்னை செல்கிறார், அவருக்கு சென்னைப் பெண் ஸ்ரீதிவ்யாவுடன் காதல் இருக்கிறது. சென்னையில் கள்ள நோட்டு அடிக்கும் கும்பலுடன் ஸ்ரீதிவ்யா குடும்பத்தால் உரசல் ஏற்பட்டு பிரச்சனையாகிறது.

பிரச்சனைகள் முற்ற தன் உயிரை காப்பாற்றிக் கொண்டு போட்டியில் வென்றும் ஆக வேண்டிய கட்டாயம். ஸ்ரீதிவ்யா அண்ணன் கொல்லப்படுகிறார். அதர்வாவுக்கும் சுத்துப் போடுகிறார்கள்.

வில்லன்களை வீழ்த்தினாரா, போட்டியில் வென்றாரா என்பது தான் ஈட்டி படத்தின் கதை.


கேட்கும் போது நன்றாக இருக்கும் கதையை ப்ரெசண்ட் பண்ணிய விதம் கொஞ்சம் சுமார் தான். மெயின் கதைக்கு முந்தைய பார்ட்டான தஞ்சாவூர் காலேஜ் பசங்க செய்யும் காமடி செம மொக்கை. படத்தின் ஆர்வத்தையே அந்த பகுதி செமயா குறைத்து விடுகிறது. ஆடுகளம் முருகதாஸ், அஸ்வின் ராஜா எல்லாம் செட் பிராப்பர்ட்டி தான். சில இடங்களில் மொக்கை காமெடி செய்து கடுப்பேற்றுகிறார் முருகதாஸ். 

குறிப்பிட்ட தஞ்சாவூர் காட்சிகளுக்கு இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு இருந்தா, படத்தின் ஆரம்பத்தில் இருந்தே நாம் கதையுடன் ஒன்றி இருப்போம். ஆனால் அந்த இடம் சொதப்பி விட்டதால் கொஞ்சம் இழுவையாகிப் போகிறது முதல் பாதி.


நாயகன் அதர்வா படத்திற்காக நிறைய உழைத்து இருக்கிறார் என்பது கண்கூடாக தெரிகிறது. சிக்ஸ்பேக், ஹர்டில் ரன்னிங் போன்றவற்றில் சிறப்பாகவே செய்து இருக்கிறார். தன் உடம்பில் கீறல் விழக் கூடாது என்று மிக கவனமாக இருப்பது, ஸ்ரீதிவ்யாவை டீஸ் செய்து படிப்படியாக காதலில் விழுவது, க்ளைமாக்ஸ் சண்டை போன்றவற்றை திறம்பட செய்து இருக்கிறார்.

ஸ்ரீதிவ்யா நாயகியாக வந்து அதர்வாவை மட்டுமல்ல படம் பார்ப்பவர்களையெல்லாம் ஜொள்ளு விட வைக்கிறார். என்னா அழகு, என்னா அழகு. சொக்கா எனக்கில்லை எனக்கில்லை. தாவணியில் செம அழகு என்றால் சுடிதாரில் பேரழகு.


வில்லனாக இயக்குனர் ஆர் என் ஆர் மனோகர். அந்த முட்டை கண்ணில் ரௌடி என்பதை நிஜமாக நம்ப வைக்கிறார். உடல் மொழி கூட கச்சிதம். செல்வா அசிஸ்டெண்ட் கமிஷனர் போஸ்ட்டில் வந்து கொடுத்ததை செய்து போகிறார்.

ட்ரெய்னராக வரும் நரேன் பிரமாதமான நடிப்பு. முகபாவங்களிலேயே அந்த தாக்கத்தை கொண்டு வந்து விடுகிறார். மகன் மீது பாசம் கொண்ட இயல்பான தந்தையாக ஜெயப்பிரகாஷ் ஆசம்.

இரண்டாவது வில்லனாக வரும் நடிகர் கொஞ்சம் வெயிட் குறைச்சலாக தெரிகிறார். இந்த மாதிரி படங்களில் எல்லாம் வில்லன் மிரட்டனும். இவனை எப்படி நாயகன் சமாளிப்பான் என்று நாம் கவலைப்படனும். ஆனால் அந்த வில்லன் தேமே என்று இருக்கிறார். முரட்டுத்தனமும் இல்லை. நடிப்பும் இல்லை.

அந்த ப்ளட் ப்ளீடிங் நல்ல மேட்டர், எந்த நிமிடமும் அதர்வாவுக்கு என்ன ஆகுமோ, சின்ன கீறலாவது விழுந்து விடுமோ என்று நாமும் பயப்படுகிறோம் அவருடன் சேர்த்து. அதற்கேற்றாற் போல் படம் நெடுக கன்டினியுட்டியாக அவர் உடலை கொஞ்சமாவது கிழிக்க வாய்ப்பு இருக்கும் இடங்களில் கவனமாக இருப்பது போன்று காட்சியமைத்து இருப்பது சிறப்பு.

படத்தில் இரண்டு க்ளைமாக்ஸ் இருப்பது ஒகே, ஆனால் ஆர்டர் மாற்றி வைத்திருப்பது பார்வையாளர்களை தக்க வைக்கவில்லை. வில்லன் இறந்தவுடன் படம் முடிந்து விட்டது. அதுக்கு அப்புறம் ரன்னிங் ரேஸ் வைத்திருப்பது எடுபடவில்லை. 

ரன்னிங் ரேஸ், அப்புறம் வில்லனுடன் சண்டை கடைசியாக சுபம் என்று இருந்தால் தான் சரியாக இருந்திருக்கும். வில்லன்கள் செத்தவுடன் பாதி தியேட்டர் காலியாகி விட்டது. 

இருந்தாலும் முன்பாதி காமெடி மொக்கைகளை சகித்துக் கொண்டால் பார்க்கும்படியான ஒரு பொழுதுபோக்கு ஆக்சன் படம் தான் இந்த ஈட்டி.

ஆரூர் மூனா

Thursday, 26 November 2015

இஞ்சி இடுப்பழகி - சினிமா விமர்சனம்

சோறுன்னா சட்டி திம்போம், சொன்ன பேச்சை கேக்க மாட்டோம்னு ஒரு பாட்டு கன்னிராசி படத்துல இருக்கும். சின்ன வயசுல அந்த பாட்டு தான் எங்களுக்கு தேசிய கீதம். அந்த பாட்டின் இலக்கணப்படி நொறுக்கிக் கொண்டே இருக்கிறார் அனுஷ்கா. குண்டாக இருப்பதாலேயே வரன்களால் தட்டிக் கழிக்கப்பட்ட அவரது வாழ்க்கையில் விரும்பியவரை எப்படி திருமணம் செய்தார் என்பதே இஞ்சி இடுப்பழகி.


இந்த உலகமகா காவியத்தை அரங்கில் ஆர்வமுடன்(!!!) பார்க்க விரும்புபவர்கள் இத்துடன் ஸ்கிப் செய்து விடவும். விமர்சனத்தில் ஸ்பாய்லர்கள் இருக்கலாம். (நன்றி விக்கி நண்பா). இந்த ஸ்பாய்லர் மேட்டர் ஒரு விவாதப் பொருளாகி பெரும் சச்சரவை கிளப்பியதால் இனி வரும் விமர்சனங்களில் இந்த பாரா தவறாமல் இடம் பெறும்.

எனக்குன்னு ஒரு ராசி இருக்கு. நான் பார்க்க நினைக்கும் படங்களின் முதல் காட்சி எதாவது ஒரு காரணத்தால் தடைபடும். இல்லாவிடில் என்னால் போக முடியாமல் போகும். காட்சி ரத்தாகும். சில சமயம் படமே வெளிவராது. சிக்கலில்லாமல் டிக்கெட் கிடைக்கும் படங்கள் சூரமொக்கையாக இருக்கும். 


இன்றும் அது தான் நடந்தது. நான் போக விரும்பியது உப்புகருவாடு அல்லது 144 படத்துக்கு தான். 9 மணிக்கு கவுண்ட்டரில் போய் டிக்கெட் கேட்டால் 144 காட்சி ரத்து. வாலிபராஜா படம் வெளிவருமா என தெரியாது, உப்புகருவாடு 9.45க்கு தான் காட்சி என்றார்கள். 

9.45க்கு படம் பார்த்து விமர்சனம் எழுதி விட்டு வேலைக்கு போக முடியாது என்பதால் வேறு வழியில்லாமல் 9.10 காட்சிக்கு டிக்கெட் எடுத்தேன். அது. . . . நான் போகவே கூடாது என்று முடிவெடுத்திருந்த இஞ்சி இடுப்பழகிக்கு. 

இந்த படம் பார்க்க வேண்டாம் என்று முடிவு செய்ய சில காரணங்கள் இருந்தன. ஒன்று சில வருடங்களுக்கு முன்பு கீதகீதலு என்று ஒரு தெலுகு படம் வந்திருந்தது. அல்லரி நரேஷ் ஹீரோ. ஒரு குண்டு பொண்ணை கல்யாணம் பண்ணி விட்டு சிரமப்பட்டு கடைசியில் குணம் தான் முக்கியம் என்று ஏற்றுக் கொள்ளும் படம். கிட்டத்தட்ட பாக்யராஜின் சின்ன வீடு மாதிரியான கதை. ஆனால் பக்கா ஆந்திரா மசாலா படம்.


இந்த படத்தின் போஸ்டர்கள் அந்த படத்தை தான் நினைவு படுத்தின. அந்த படமே கடுப்பா இருக்கும், அதே போல் இருக்கும் படத்தை ஏன் பார்ப்பானேன் என்று முடிவு செய்திருந்தேன். போதாக்குறைக்கு ட்ரெய்லர் செம மொக்கையாக இருந்தது. விதி எப்படியாவது சதி பண்ணி என்னை இந்த படத்தை பார்க்க வைத்த விந்தையை எண்ணி வியக்கிறேன். 

படத்தில் நாயகி குண்டாக இருப்பதால் கிண்டலடிக்கப்படுவது ஒரு காட்சிக்கு ஓகே ஆனால் முன் பாதி முழுக்கவே தொடர்வதால் கடுப்பாகிறது. எந்த குண்டு பொண்ணுய்யா உங்களுக்கு தின்னுக்கிட்டே இருக்கு. அதை குறைத்திருந்தால் கூட பார்க்கிறவனுக்கு கொஞ்சம் ஆசுவாசம் கிடைச்சிருக்கும். கேப் விடாம அடிச்சி கொல்லுறானுங்க படம் பாக்குறவங்களை.


படத்தின் நாயகனாக ஆர்யா. கச்சிதமாக மிக்சர் மட்டும் சாப்பிடும் கதாபாத்திரம். வரிசையான ப்ளாப்புகளால் இந்த லெவலுக்கு இறங்கிப் போன ஆர்யாவை நினைத்தால் பாவமாக இருக்கிறது. 

படம் தமிழ் தெலுகில் சேர்த்து எடுக்கப்பட்ட படம் என்று சொல்வதை விட தெலுகு டப்பிங் என்று சொல்வது தான் சாலப் பொருத்தமாக இருக்கும். க்ளோசப்புகளுக்கு மட்டும் தான் தமிழ் வெர்சன் வருகிறது. மிட்ஷாட், லாங் ஷாட் எல்லாமே தெலுகில் இருந்து தமிழுக்கு டப் தான் பண்ணியிருக்கிறார்கள்.

அனுஷ்காவுக்கு நல்ல ஸ்கோப் உள்ள பாத்திரம் என்று சொல்லி தான் புக் செய்திருப்பார்கள் போல. அவரும் பாவம் சிரமப்பட்டு உடல் எடையை ஏற்றி இறக்கியிருக்கிறார். ஆனால் எல்லாம் வீணாப் போச்சே.

படத்தின் நாட் மட்டும் எடுத்துக் கொண்டால் கேட்க நல்லாயிருக்கு. சமூகத்திற்கு தேவையானதும் கூட. ஆனால் அதனை படமாக்க பொட்டு வைத்து பூச்சூடியிருப்பது தான் சகிக்கலை. 

உடல் எடையை குறைக்கனும் என்று ஆசைப்பட்டால் வாயைக் கட்டி உடற்பயிற்சி மூலம் படிப்படியாக குறையுங்கள். ஒரு வாரத்தில் பத்து கிலோ எடையை குறைக்கிறேன் என்று விளம்பரப்படுத்தும் நிறுவனங்களை நம்பி ஏமாறாதீர்கள். இவ்வளவு தான் படம். ஆனால் சொன்ன விதம் பார்ப்பவனை சாவடிக்கிறது. 

படத்தில் காமெடிக்கு நிறைய முயற்சிக்கிறார்கள். நமக்கு சிரிப்பு வரமாட்டேன் என்கிறது. 

படத்தில் பெர்பார்மென்ஸில் பின்னி பெடலெடுப்பவர் ஊர்வசி தான். மகளுக்கு குண்டாக இருப்பதால் திருமணம் தட்டிக் கொண்டே போவதை நினைத்து கடவுளிடமும், காலஞ்சென்ற கணவனின் போட்டோவிடமும் புலம்பும் காட்சிகளில் நடிப்பில் சீனியர் என்பதை நிருபிக்கிறார். 

பிரகாஷ் பாத்திரப்படைப்பு எரிச்சலுட்டுகிறது. 

இந்த படம் முழுக்க முழுக்க ஏ சென்ட்டர் ஆடியன்ஸை குறிவைத்தே எடுத்திருக்கிறார்கள். ஆனால் அங்கேயும் பப்படமாவது தான் கொடுமை. தெலுகில் படம் வெற்றியடையும் அபாயமிருக்கிறது. 

பொங்கலுக்கோ காதலர் தினத்துக்கோ சின்னத்திரையில் முதன்முறையாக போடும் போது பார்த்துக் கொள்ளுங்கள்.

ஆரூர் மூனா

Monday, 16 November 2015

டாஸ்மாக்கு சைட்டிஸ்கள்

டாஸ்மாக்குகளில் கிடைக்கும் சைட்டிஷ்கள் எப்போதுமே சுமாராகவும் சுவையிலும் தரத்திலும் குறைந்ததாகவும் தான் இருக்கும் என்று நம் அனைவருக்கும் ஒரு எண்ணமுண்டு.


ஆனால் விதிவிலக்காக சில பார்களில் நாம் யோசித்து கூட பார்க்க முடியாத சுவையில் சைட்டிஷ்கள் பறிமாறப்படுவதுண்டு. அவற்றைப் பற்றி நான் அறிந்தவை உங்களுக்காக.

இந்த கட்டுரையில் பப்புகளும் ஏசி பார்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது. எல்லாம் லோக்கல் டாஸ்மாக் பார்களில் கிடைக்கும் சைட்டிஷ்கள் மட்டும் தான்.

காசி தியேட்டர் எதிர்ப்புறம் பாலத்தின் அடியில் கார்டன் ஒயின்ஸ் என்று ஒரு ஒயின்ஷாப் இருந்தது. 2002 காலக்கட்டத்தில் செம கூட்டம் அம்மும் அங்கே, அப்போது ஒயின்ஷாப்புகள் தனியார் வசம் இருந்தன. அங்கே வெங்காய பஜ்ஜி செம டேஸ்ட்டாக இருக்கும். 


அதிக ஆயில் இல்லாமல் டிஷ்யு பேப்பரின் மேல் அடுக்கப்பட்ட சூடான வெங்காய பஜ்ஜி தொட்டுக்கொள்ள கார வெங்காய சட்னி கொடுப்பார்கள். சரக்குக்கு ஆன செலவை விட சைட்டிஷ்க்கு தான் அதிக செலவாகும் எனக்கு. நடுராத்திரி வரைக்கும் பஜ்ஜிக்காக சண்டைப் போட்டுக் கொண்டு இருப்போம்.

கழுத்தைப் புடிச்சி  வெளிய தள்ளி தான் பாரை மூடுவார்கள். அந்த அளவுக்கு பழக்கமான பார் அது. டாஸ்மாக்காக மாற்றப்பட்டு பார் மட்டும் வேறொருவரிடம் சென்ற பிறகு நல்ல சைட்டிஷ் கிடைக்காததால் அங்கே செல்வதை கைவிட்டேன். காலம் செய்த கோலம்  அந்த கட்டிடம் இடிக்கப்பட்டு விட்டது. 

டிஸ்கவரி புக் பேலஸ் அருகில் ஒரு டாஸ்மாக் பாரில் மினி மசால் வடை நல்லாயிருக்கும். நல்லா மொறுமொறுன்று இருக்கும். பாதி கடித்து மிச்சம் வைப்பது எல்லாம் அதில் ஆகாது. ஒரு சிப் சரக்கு, ஒரு வடை என்பது தான் இதன் கான்செப்ட்.


ஆர்டர் செய்து விட்டு அரைமணிநேரமாவது காத்திருந்தால் தான் வடை வரும். மற்ற இடங்களில்  சொல்வது போல் இப்ப பத்து வடை அப்புறம் பத்து வடை என்றெல்லாம் ஆர்டர் செய்தால் ஒன்னும் வேலைக்காகாது. 

டிஸ்கவரியில் மீட்டிங் முடித்து விட்டு பதிவர்கள் குழு கடைக்கு போனதுமே ஐம்பது வடை என்று ஆர்டர் செய்து வடை வரும் வரை சரக்கு வாங்காமல் காத்திருப்போம். வடை வந்தால் தான் என்ன ப்ராண்ட் சொல்வது என்றே முடிவாகும்.

பார்ட்டி முடியும் தருணத்தில் ஒரு வடைக்காக உலகப் போர் மூளும் அபாயம் கூட ஏற்படுவதுண்டு. ஒரு முறை இப்படி தான் நம்ம அரசப் பதிவர் கடைசி வடையை எடுக்கப் போக அஞ்சா சிங்கம் வடையை எடுத்த வெட்டிபுடுவேன் என்று மிரட்ட, மிரட்சியுடன் வடையை பார்த்துக் கொண்டே குடித்த கதையும், டீடோட்லர் சென்னைப் பதிவர் வடையை சாப்பிட மட்டுமே எங்களுடன் அந்த கடைக்கு வருவதும் அந்த வடையின் சுவைக்கு சான்று.

கேகேநகர் டபுள் வாட்டர் டேங்க் அருகே உள்ள டாஸ்மாக் பாரில் பணியாரம் செம டேஸ்ட்டாக இருக்கும். மாலை வேளையில் மட்டும் தான் கிடைக்கும். இதே பதிவர்கள் குழு இங்கும் அடிக்கடி செல்வதுண்டு. 

பணியாரமும் அதற்கு என்றே ஸ்பெசலாக வைக்கப்பட்டு தரப்படும் காரக்குழம்பும் எங்குமே கிடைக்காது. சுவையும் அடிச்சிக்க முடியாது. ஆர்டர் செய்து கொண்டே இருப்போம் வந்து கொண்டே இருக்கும். நல்லா மெத்து மெத்துன்னு பணியாரம் குழம்பில் முக்கி எடுத்து சுவைக்கும் போது காரம் கபாலத்தில் தெரியும். அடடா இது போன்ற சுவையை எங்குமே கண்டதில்லை.

கேரளாவில் இருந்த சமயம் அதாவது 2005ல் எப்பவுமே ரெகுலர் சைட்டிஷ் கப்பாவும் பீப் கறியும் தான். சில நாட்கள் மட்டும் மத்தி மீன். அங்கே ஒயின்ஷாப்பில் பார் இருக்காது. நாங்க பேச்சிலர்கள் ஒரு வீடாக எடுத்து தங்கியிருந்ததால் அங்கே தான் சங்கமம் அரங்கேறும். 

அங்கு உள்ள கள்ளுக்கடையில் நமக்கு தெரிந்தவர் வேலை பார்த்து வந்ததால் ரெகுலராக கப்பாவும் பீப் கறியும் கொண்டு வந்து கொடுத்து விடுவார். பலா இலையில் வேயப்பட்ட தொன்னையில் கப்பாவை வைத்து அதன் மீது கறியை ஊற்றி பனை மர ஓலையை மடக்கி ஸ்பூனாக்கி சாப்பிடும் சுவை இனி எங்கும் கிடைக்காது. மனதில் பசுமையாக நினைவுகளை அடக்கி வைத்து இருக்கிறேன். 

ஒரு நண்பர் வீட்டு கல்யாணத்திற்காக தூத்துக்குடிக்கு போயிருந்தோம். திருமணம் முடிந்து பார்ட்டிக்காக மதிய உணவுக்கு முன் ஒரு மொட்டக் காட்டுக்குள்ள அழைச்சிக்கிட்டு போனாங்க. பக்கு பக்குன்னு தான் இருந்தது. ஒரு இடம் வந்தது. உள்ளே நுழைந்தால் அழகான மூங்கில் காடு. அதில் சாராயம் சமைக்க ஒரு  பெண்மணி என செட்டப்பே அமர்க்களம்.

கயித்துக் கட்டில்ல உட்கார்ந்து ஒரு பாட்டிலை கையில் கொடுத்தார்கள், மடக்கென கவிழ்த்து காலி செய்ததும் வயிறு பகபகவென எரிந்தது. பனை ஓலையை குழிவாக முடிந்து அதில் சுடுசோத்தைப் போட்டு அதில் திக்கான மட்டன் குழம்பு, சோத்துக்கு நிகரான அளவுக்கு மட்டனையும் போட்டு சடுதியில் பிசைந்து உள்ளே தள்ளினால் கிடைத்த கிளர்ச்சியை எதனுடனும் ஒப்பிட முடியாது. செம காரம். எரிச்சலை காரம் அடக்கும் என்பதை அங்கே தான் தெரிந்து கொண்டேன். 

அகரம் காமராஜர் சிலையில் இருந்து ரெட்டேரி செல்லும் பேப்பர் மில்ஸ் சாலையில் கொளத்தூரில் முதல் பெட்ரோல் பங்கிற்கு முன்னால் இருக்கும் பாரில் தந்தூரி சிக்கன் லெக் பீஸ் மட்டும் ஒரு பிளேட் கிடைக்கும். நல்லா முறுகலாக தந்தூர் செய்யப்பட்ட சிக்கன் மேல் மசாலாப் பொடி தூவப்பட்டு, புதினா கொத்தமல்லி தேங்காய் சேர்த்து அரைக்கப்பட்ட சட்னியுடன் கொடுப்பார்கள். 

சிக்கனை எடுத்து நன்றாக சட்னியில் தோய்த்து சூட்டுனே சுவைக்கும் போது கிடைப்பது ஆனந்தம் பேரானந்தம். கிச்சன்லயே போய் விசாரித்தேன். தந்தூரி சிக்கன் மேல் தூவப்படும் மசாலாவில் என்னென்ன சேர்க்கிறீர்கள் என. கம்பெனி சீக்ரெட் என்று கடைசி வரை சொல்ல மறுத்து விட்டார்கள். எப்ப இந்த கடைக்கு போனாலும் ரெண்டு மூணு லெக் பீஸ் ஆர்டர் செய்து மொக்கினால் தான் திருப்தி கிடைக்கும்.

ஓடம் ஒரு நாள் வண்டியில் ஏறும், வண்டியும் ஒரு நாள் ஒடத்தில் ஏறும் என்ற பழமொழிக்கேற்ப ஒரு விடாத மழைப் பொழுதில் மிலிட்டரி சரக்குக்கு துணையாக எதுவும் கிடைக்காமல் திடீரென ஐடியா செய்து ஒரு கிளாஸில் சரக்கும், மற்றொரு டம்ளரில் பக்கத்து வீட்டில் கடன் வாங்கிய ரசத்தையும் வைத்துக் கொண்டு மாற்றி மாற்றி குடித்தது எல்லாம் நம்ம வரலாற்றுல வரும். 

ஆரூர் மூனா

Tuesday, 10 November 2015

தூங்காவனம்

படத்தின் ஒரு காட்சியை பார்த்து நான் மிகவும் வருந்தினேன். மனசு வலித்தது. ஆம் நம்புங்கள் கமலுக்கு வயதாகி விட்டது. இன்டர்வெல் காட்சியில் கமல் கதவை தட்டும் போது கையின் தசைகள் தளர்ந்து கமலுக்கு 60க்கும் வயதாகி விட்டது என்பதை உறுதி படுத்துகிறது. ஆனால் அந்த காட்சியை தவிர வேறெங்கும் கமலுக்கு நாற்பதுக்கு மேல் மதிப்பிடவே முடியாது. அந்தளவுக்கு ஆக்சனில் பின்னியிருக்கிறார்.


இப்பல்லாம் சினிமாவுக்கு விமர்சனம் எழுதும் போது தன்னிலை விளக்கம் கொடுப்பது மிகவும் முக்கியமாக படுகிறது. வேதாளத்திற்கு மனதில் பட்டதை எழுதப் போக காலையில் இருந்து ட்விட்டர், வாட்ஸ் அப், பேஸ்புக் எல்லாத்திலும் என் தலை கிடந்து உருள்கிறது. நான் அஜித்தின் எதிர்ப்பாளனாம். அவர் படத்திற்கு எதிர்மறை விமர்சனம் எழுதி அவர் மதிப்பை குறைக்க பார்க்கிறேனாம்.

நான் ரஜினி ரசிகன், அதி தீவிர ரசிகன். ரஜினியை பூஜிக்கும் ரசிகன், ஆராதிக்கும் ரசிகன். அதனால் கமல் படத்தை பாராட்டினால் நான் கமல் ரசிகன் என்று சொல்லக் கூடாது. புரிஞ்சதா.

நான் ஸ்லீப்லெஸ் நைட் படம் பார்க்கவில்லை. பொதுவாக ஆங்கிலம் தவிர மற்ற வெளிநாட்டு மொழிப்படங்கள் பார்ப்பதில்லை. ஆங்கிலம் கூட விமர்சனத்தை படித்து பார்க்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டா தான். அதன் கதையையும் தெரிந்து கொள்ள முயற்சிக்கவில்லை.


காலையில் எழுதிய வேதாளம் விமர்சனம் ஏகப்பட்ட இடங்களில் சர்ச்சையை உண்டாக்கி அதன் வேலையை காட்டிக் கொண்டு இருந்தது. முதல் பாதி முழுக்க போன் கால்கள் வந்து என்னை தொந்தரவு பண்ணிக் கொண்டே இருந்தது. அதனால் உன்னிப்பாக படத்தில் கவனம் செலுத்த முடியவில்லை. பிறகு போனை ம்யூட்டில் போட்டு விட்டேன். அதற்கப்புறம் படம் குதிரைப் பாய்ச்சலில் சென்று படக் கென்று முடிந்து விட்டது. ஆச்சரியம் தான், கமல் படத்தில் நான் இந்த அளவுக்கு இறங்கி கவனம் செலுத்தியது.

ஒரு இடத்தில் கொக்கையினை வழிப்பறி செய்கிறார் கமல் யூகிசேது உதவியுடன். மறுநாள் அந்த சரக்கை பறி கொடுத்த பிரகாஷ்ராஜ் கமல் மகனை கடத்தி வைத்து சரக்கை திரும்ப கேட்க காவல் அதிகாரியான கமல் அந்த சரக்கை திரும்ப கொடுக்க போக அவரை பின்தொடர்ந்து காவல் அதிகாரியான த்ரிஷா போக சரக்கை பெற கடத்தல்காரர் சம்பத் வர சரக்கை பிடுங்க கெட்ட காவல் அதிகாரி கிஷோர் வர அனைவரும் ஒரு பப்பில் சந்திக்கிறார்கள். முடிவு என்ன என்பது தான் படத்தின் கதை. 

படத்தில் கமல் எந்தளவுக்கு ஆதிக்கம் செலுத்தியிருக்கிறார் என்பதற்கு உதாரணம் ஜெகன் ஒரு இடத்தில் கூட அவரது அதிகபிரசங்கித்தனத்தை காட்ட வில்லை. தேவையை விட அதிகமாக ஒரு வார்த்தை கூட பேசவில்லை. என்ன படத்துக்கு தேவையோ அதை மட்டும் பேசியிருக்கிறார்.

பப்பிற்குள் கொஞ்சம் கூட அலுக்காமல் ஒரு படம் முழுக்க எடுப்பது பெரிய கலை. அதை சரியாக கையாண்டு இருக்கிறார் இயக்குனர். எனக்கு ஒரு இடத்தில் கூட அயர்ச்சி ஏற்படவே இல்லை. 

நடிப்பு ராட்சசன்களான பிரகாஷ்ராஜ், சம்பத், கிஷோர் ஆகியோர்களை படத்தில் பயன்படுத்தியிருப்பதே படத்தின் சிறந்த ப்ளஸ். பிரகாஷ்ராஜ், கிஷோர் ஆகியோருக்கு நல்ல ஸ்கோப் உள்ள காட்சிகள் இருக்கிறது. சம்பத் மட்டும் வீணடிக்கப்பட்டு இருக்கிறார். 

கண்டிப்பாக கொடுத்த காசுக்கு ஒர்த் உள்ள படம். பார்த்து மகிழுங்கள். 

ஆரூர் மூனா

Monday, 9 November 2015

வேதாளம் - சினிமா விமர்சனம்

எல்லா விஷயத்திலும் திருவாரூர் மட்டும் விதிவிலக்கு. ரஜினிக்கு எல்லா ஊர்களிலும் தலைமை ரசிகர் மன்றத்தின் அங்கீகாரம் பெற்ற மன்றங்கள் தான் மாவட்ட தலைமை, நகர தலைமை என்று இருப்பார்கள். எங்கள் ஊரில் மட்டும் ரெண்டு மாவட்ட தலைமை ரசிகர் மன்றங்கள் இருக்கு. புதுசா வந்து பார்ப்பவனுக்கு எது ஒரிஜினல் எது நியு ஒரிஜினல் என்று வித்தியாசம் தெரிஞ்சிக்க முடியாது.


அது மாதிரி தான் அஜித் ரசிகர்கள் நிலைமையும். அவரே அதிகாரப்பூர்வமாக மன்றங்களை கலைத்து விட்டார். இவனுங்களோ சொரணையே இல்லாம நகர தலைமை, மாவட்ட தலைமை ரசிகர் மன்றங்கள் என்று ப்ளெக்ஸ் வைத்துக் கொள்கிறார்கள். ஏண்டா கொஞ்சமாவது மானம் ரோசம் வேணாம். சோத்துல உப்பு தான போட்டு துன்றீங்க. 

இது எதுக்கு இப்பவா, நான் பார்த்த காட்சிக்கான டிக்கெட் மாவட்ட தலைமை அஜித் ரசிகர் மன்றத்தின் சார்பாக அச்சிடப்பட்டு இருந்தது. 

சரி படத்துக்கு வருவோம். 

நான் ஒரு படத்தின் கதையை சொல்றேன். கவனமா படிங்க. பத்து வருடத்துக்கு முன்பு சரத்குமார் நமீதா (ஸ்ஸ்ஸ்ஆஆஆஆ) நடித்த ஏய்ன்னு ஒரு படம். வடிவேலு காமெடி கூட செமயா இருக்கும்.


பழனியில் சரத் டியுப் லைட் விற்பவராக வருவார். அவருடன் இணைந்து வடிவேலு தொழில் பண்ணுவார். அவருக்கு ஒரு தங்கச்சி, தங்கச்சிக்காக உயிரையே கொடுப்பார். தங்கச்சி கலெக்டருக்கு படிக்க வைக்க வேண்டுமென்பதற்காக சிரமப்பட்டு படிக்க வைப்பார். கோவமே படாமல் சிரித்த முகத்துடன் வடிவேலுவை இணையாக வைத்து காமெடி செய்து வருவார்.

தங்கச்சிக்கு பிரச்சனை கொடுப்பதால் வின்சென்ட் அசோகனை போட்டு பெரட்டி எடுத்து தான் பயங்கர பலசாலி என்பதை பார்வையாளர்களுக்கு நிரூபிப்பார். இடைவேளையில் நமீதா ஒரு உண்மையை கண்டுபிடிக்க சரத்துக்கு தங்கச்சியே கிடையாது, அவர் வளர்ப்பு தங்கச்சி என்று ட்விஸ்ட் வைப்பார்கள்.


இப்போ வேதாளம் படத்தின் கதை. அஜித் கொல்கத்தாவில் டாக்ஸி ஓட்டும் அப்பாவி, சூரி டாக்ஸியின் ஓனர். கோவமே வராத சாது, அப்பாவி, தங்கையான லட்சுமிமேனனை படிக்க வைக்க சிரமப்படும், தங்கை மேல் உயிரையே வைத்து இருக்கும் ஒரு அன்பு அண்ணன். 

ஒரு கெட்டவனை போலீஸில் காட்டி கொடுத்து விட்டு அதற்காக வில்லன்களிடம் சாக இருக்கும் போது எல்லாரையும் போட்டு பெரட்டி எடுத்து தான் பயங்கர பலசாலி என்பதை பார்வையாளர்களுக்கு நிரூபிப்பார். ஸ்ருதி அஜித் பயங்கர கொலைகாரன் என்பதை கண்டு பிடிக்க அஜித்துக்கு தங்கச்சியே கிடையாது, அவர் வளர்ப்பு தங்கச்சி என்று ட்விஸ்ட் வைப்பார்கள்.


ஏய் படத்தில் இடைவேளைக்கு பிறகு பெர்பார்மன்ஸில் பின்னி எடுத்து வில்லன்கள் கையால் சாவார் கலாபவன் மணி. அவரது தங்கையை  தான் பழனியில் சரத் தன் தங்கையாக தத்தெடுத்து வளர்த்து வருவார்.

இந்த படத்தில் இடைவேளைக்கு பிறகு பெர்பார்மன்ஸில் பின்னி எடுத்து வில்லன்கள் கையால் சாவார் தம்பி ராமையா. அவரது மகளை  தான் கொல்கத்தாவில் அஜித் தன் தங்கையாக தத்தெடுத்து வளர்த்து வருவார்.

இறுதியில் வில்லன்களை கொன்று படத்தை சுபமாக முடிக்கிறார்கள் சரத்தும் அஜித்தும்.

சாரி. கம்பேரிசன் கூடாதுல்ல. ஆனா அந்த படத்தை அப்பட்டமாக காப்பி அடித்தால் என்ன செய்வது. 

படத்தின் ஆகச் சிறந்த எரிச்சல் சூரி. அவருக்கு ஒரு பர்சென்ட் கூட காமெடி வரவில்லை. மொத்த படத்தின் காமெடியை அவருக்கு கொடுத்து நம்மையும் சாகடிச்சியிருக்கிறார்கள்.

முதல் பாதி செம அறுவை. உக்காரவே முடியலை. இரண்டாம் பாதி கொஞ்சம் தேவலாம் முன்பாதியுடன் ஒப்பிடுகையில்.

ஒரே ஒரு காட்சி விளக்குகிறேன், இந்த இயக்குனர்கள் ரசிகர்களை எவ்வளவு மடையன் என்று நினைத்து காட்சிகளை அமைக்கிறார்கள் என தெரிந்து கொள்ளுங்கள்.

தம்பியை கொன்றவன் யாரென தெரியாத வில்லன், 3 ஐடி வல்லுனர்களை வைத்து ரெண்டு ஆப்பிள் மேக் கம்ப்யுட்டர்கள் , ஒரு புரொஜக்டர். ஒரு ஜிபிஆர்எஸ் ட்ராக்கர், ஒரு கம்ப்யுட்டர் ஆபீஸ் வைத்து சிரமப்பட்டு ஜப்பானுக்கெல்லாம் போன் செய்து அது அஜித் தான் என கண்டு பிடிக்கும் ஒரு தருணத்தில் வெறும் பட்டன் உள்ள செல்போனை வைத்துக் கொண்டு அதை கூட யூஸ் செய்யாமல் வில்லன் இடத்தை கண்டு பிடித்து வந்து அவர்களை கூண்டோடு கொலை செய்வார். . . . த்தா எங்களையெல்லாம் பார்த்தா எப்படிடா தெரியுது உங்களுக்கு. 

அதை விட கொடுமை பத்து கிமீ தள்ளி யிருந்த ஸ்ருதி அடுத்த வினாடி அந்த கட்டிடத்தின் பதினைந்தாவது மாடியில் அஜித் செய்யும் கொலையை நேரில் பார்ப்பது.

ரெட்னு ஒரு சூர மொக்கை பார்த்து விட்டு வரும்போது எப்படி ஒரு எரிச்சல் தோன்றியதோ, அதை விட ஒரு மடங்கு அதிகமாகவே இப்போ எரிகிறது.

ஆரூர் மூனா

Sunday, 8 November 2015

குடும்பத்துடன் கொண்டாடும் தீபாவளி

பதிவு போடுவது எதாவது ஒரு காரணத்தினால் தடைபட்டால் அந்த இடைவெளியை கடந்து அடுத்த பதிவு போடுவதென்பது சாமானியமான காரியமன்று. கண்டென்ட்டும் சிக்காது. வலுக்கட்டாயமாக போட்டு இழுத்தாலும் வெறும் காத்து தான் வரும்.


அந்த கேப்பை உடைப்பதற்காக செய்யப்பட்ட பகீரபிரயத்தனம் தான் இது.

தீபாவளிக்கு சிரமப்பட்டு சொந்தஊருக்கு வருவதை விட சுலபமானதும், வசதியானதும் சென்னையில் இருந்து விடுவதே. முதல் நாள் முதல் காட்சி படம் பார்த்து விடலாம். அதுவும் அதிகாலை காட்சிகள் சென்னையில் பிரத்யேகமாக திரையிடப்படும். எல்லாருக்கும் முன்னர் விமர்சனம் போடலாம். ஹிட்ஸ் அள்ளலாம்.

விடியற்காலை எழுந்து எண்ணெய் தேய்த்து சாமி கும்பிட்டு குளிக்க வேண்டிய அவசியமும் இருக்காது. முன்னிரவு மகா தியானத்தில் மூழ்கி விட்டு காலையில் சாவகாசமாக எழலாம். பலகாரங்கள் கூட கடையில் வாங்கி தீபாவளியை நடத்திக் கொள்ளலாம். 

ஆனால் சொந்த ஊருக்கு போய் கொண்டாட நினைப்பவர்கள் அனுபவிக்கும் அவஸ்தைகள், சிக்கல்கள் உண்மையிலேயே கொடுமையானது. 


இப்பொழுதாவது முன்பதிவு, சிறப்பு பேருந்துகள் போன்ற வசதிகள் இருக்கிறது. 1998 தீபாவளிக்கு முதல் நாள் பாரிமுனை பேருந்து நிலையத்திற்கு வந்தேன். அப்பொழுது எல்லாம் கணினி முன்பதிவு கிடையாது. நேரில் பாரிமுனை வந்து தான் டிக்கெட் புக் செய்ய வேண்டும். 

அதனால் இரவு ஒன்பது மணிக்கு பேருந்தை எதிர்நோக்கி நின்றேன். தீபாவளி ஒரு நாள் மட்டுமே எனக்கு விடுமுறை. திருவாரூர் போய் சேர்ந்த அன்று இரவே சென்னைக்கு கிளம்பியாகனும்.

முன்பதிவில்லாத பேருந்தில் ஏறுவதற்கு டோக்கன் கொடுக்கிறார்கள். 4000 பேருக்கு நாற்பது டோக்கன் எம்மாத்திரம். டோக்கன் வாங்கவே முடியவில்லை. நடுராத்திரி பனிரெண்டு மணிக்கு பேருந்து கிளம்புவதை நிறுத்துகிறார்கள். இனி விடியற்காலை தான் பேருந்து என்ற அறிவிப்பு செய்கிறார்கள். அன்று இரவு முழுக்க பேருந்து நிலையத்தில் காத்திருந்து காலை நாலு மணிக்கு வந்த பாண்டி பேருந்தில் ஏறி, அங்கிருந்து மாறி மாறி மதியத்திற்கு மேல் திருவாரூருக்கு வந்தடைந்தேன். 

வந்து குளித்து சாப்பிட்டு விட்டு பேருக்கு ரெண்டு வெடி வெடித்து விட்டு கிளம்பி பேருந்து நிலையத்தை வந்தடைந்தேன். சென்னைக்கு திரும்புவதற்காக. வாழ்க்கையே வெறுத்து விடும், இது போன்ற கொடுமையான பயணங்களில். 

2003 தீபாவளி இன்னும் கொடுமை. அப்போ வேலையில் சேர்ந்திருந்ததால் கையில் காசு எக்கச்சக்கமாக இருந்த நேரம். ஏதோ ஒரு தனியார் பேருந்தில் ஒரு மாதத்திற்கு முன்பே கூடுதல் விலை கொடுத்து டிக்கெட் புக் பண்ணியிருந்தேன். பேருந்தில் ஏறி அமரும் போது இரவு, பத்து மணி பேருந்து கோயம்பேட்டை தாண்டிய போது விடிந்திருந்தது. அப்படி ஒரு டிராபிக். அண்ணாநகர் முதல் அசோக் நகர் வரை ஒரு வாகனம் நகர முடியவில்லை. சென்னையே ஸ்தம்பித்த நாள் அன்று. 

நம்மிடம் காசு இருந்தால் கூட நேரம் சரியில்லை என்றால் தீபாவளி, பொங்கல் போன்ற விஷேசங்கள் குடும்பத்துடன் கொண்டாடுவது கேள்விக்குறியாகி விடும்.

இப்பவும் வீட்டில் அம்மா பாரம்பரியமாக எல்லா பலகாரங்களையும் வீட்டில் தான் செய்வார். நான் தான் இப்பக் கூட, ஏன் இன்று கூட நான் தான் மில்லுக்கு போய் அரிசி, ரவை, பயித்தம்பருப்பு, சர்க்கரை எல்லாத்தையும் அரைத்து வந்தேன். அங்கே க்யூ நிற்கும். அவமானமெல்லாம் இதில் பார்க்க முடியாது. 

சினிமா சென்னையில் இருப்பது போல் அதிகாலை காட்சிகள் இருக்காது. 1 1 மணிக்கு தான் முதல் காட்சி தொடங்கும். அதற்குள் சென்னையில் இருந்து விமர்சனங்கள் வரத் தொடங்கியிருக்கும். முக்கிய நண்பர்கள் உறவினர்கள் வீடுகளுக்கு பலகாரங்கள் கொடுப்பது, ஆட்டுக்கறியும், கோழிக்கறியும் வாங்கி வந்து கொடுப்பது போன்ற வேலைகள் நம் தலையில் தான் கட்டப்படும்.

இந்த வேலைகளை முடித்து விட்டு சினிமா முதல் காட்சி பார்ப்பதென்பது சாத்தியமே இருக்காது. அதுவும் இப்போ நாம அரைக்கிழம். திருவாரூர் மாதிரியான ஊர்களில் 25-30 வயதுடைய சின்னப்பசங்க மட்டும் தான் முதல் காட்சி டிக்கெட் எடுக்க நிற்பார்கள். அவர்களுக்கு நிகராக போட்டிப் போட்டு படம் பார்க்கவும் வெட்கமாக இருக்கும். என் வயதுடைய நண்பர்கள் எவனும் முதல் காட்சிக்கு வரமாட்டான். சென்னையில் இந்த பிரச்சனையே இருக்காது.

இதை ஜஸ்ட் லைக் தட் நாம் வேலை இருக்கு, தீபாவளிக்கு வரமுடியாது என்று சொல்லி விட்டால் எல்லாம் சுபமாகவே இருக்கும். ஆனால் என் அம்மா அப்பாவுடன் பண்டிகையை கொண்டாடும் மகிழ்வை அது தருமா. 

தீபாவளியன்று அதிகாலை நாலு மணிக்கு என் அப்பா தான் இப்பவும் எனக்கு எண்ணெய் தேய்த்து விடுவார், எண்ணெய் தேய்த்த தலையுடன் அப்படியே வந்து ரெண்டு சரத்தை கொளுத்திப் போட வேண்டும், ரெண்டு உலக்கை வெடியும் சேர்த்து வெடிக்கனும். 

அப்புறம் கொல்லையில் மர அடுப்பில் சூடாக்கப்பட்ட வெந்நீரை எடுத்து பதமாக வெளாவி கூப்பிடுவார். போய் குளித்து விட்டு வந்து புத்தாடைகளை அணிந்து ஒரு பண்டில் சரம், பத்து உலக்கை வெடி போன்றவற்றை வெடிக்க வைத்து வாசலை பேப்பர் குப்பைகளால் நிறைத்து முடிப்பதற்குள், மற்றவர்கள் வந்து குளித்து முடித்ததும் சாமி கும்பிட்டு, இலை போட்டு இட்லி, வடை, சுளியன் மேலும் பலகாரங்கள் வைத்து சாம்பார், தேங்காய் சட்னி தொட்டுக் கொண்டு சாப்பிட்டு முடித்ததும் அம்மா பலகாரங்கள் நிரப்பிய பையை கையில் கொடுப்பார். 

நண்பர்கள் வீடுகளில் கொடுத்து அவர்கள் வீட்டு பலகாரங்களை திரும்ப பெற்று வீட்டில் கொடுத்து விட்டு கடும் கூட்டத்திற்கு இடையே பாய் கடையில் ஒரு கிலோ ஆட்டுக்கறியை வாங்கி, வழியில் கோழிக்கறியையும் வாங்கி வந்து அம்மாவிடம் கொடுத்து விட்டு சினிமாவுக்கு போய் விசிலடித்து பேப்பர் பறக்க விட்டு படம் பார்த்து வீட்டுக்கு மதிய சாப்பாட்டுக்கு வந்து தோசை, ஆட்டுக்கறி குழம்பு, கோழிக்கறி வறுவல் ஒரு காட்டு காட்டி விட்டு நண்பர்களை சந்திக்க கிளம்பி விடுவேன். 

மாலை வந்து மிச்சமிருக்கும் வெடிகளை வெடித்து சில வெடிகளை கார்த்திகைக்கு ஒதுக்கி வைத்து விட்டு சாப்பிட்டு அரக்கப் பறக்க சென்னைக்கு கிளம்ப வேண்டும். ஆனால் அந்த ஒரு நாள் மகிழ்ச்சியும் அனுபவமும் நம்மை பல மாதங்களுக்கு தெம்புடனே வழிநடத்தும்.

அதனாலேயே இந்த அனுபவத்தை என் மகளுக்கும் கொடுப்பதற்காக என் அம்மா, அப்பா காலம் வரை, எவ்வளவு சிரமம் ஏற்பட்டாலும் சொந்த ஊருக்கு வந்து குடும்பத்துடன் கொண்டாடும் பழக்கத்தை கைவிடக் கூடாது என்பதை கொள்கையாகவே வைத்திருக்கிறேன்.

ஆரூர் மூனா

Wednesday, 14 October 2015

காலை உணவும், கட்டன் சாயாவும்

காலை உணவு என்பது எவ்வளவு முக்கியம் என்பது காலையில் 7 மணிக்கே வேலையை துவக்குபவர்களால் தான் உணர முடியும். முக்கியமா ரயில்வே தொழிற்சாலைகளில் பணிபுரிவர்கள். சென்னையின் மற்ற ஏரியாக்களில் 8 மணிவாக்கில் தான் சிறுஉணவகங்கள், கையேந்திபவன்களில் நாஷ்டா கிடைக்கும். பெரம்பூர் தொழிற்சாலைகளான கேரேஜ் ஓர்க்ஸ், லோகோ ஒர்க்ஸ், ஐசிஎப்பை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 6 மணிக்கே எல்லா வித உணவுகளும் பறிமாற தயாராக இருக்கும்.


பள்ளிக்காலம் வரை தான் நான் திருவாரூரில் இருந்தேன். 12 வது முடிந்தவுடனே சென்னைக்கு என்னை நாடு கடத்தியதால் அதன் பிறகு எப்பொழுதுமே ஹோட்டல்கள், மெஸ்கள், கையேந்திபவன்கள் தான் தான். சிலசமயம் ஆர்வக் கோளாறினால் சொந்த சமையலும் நடந்ததுண்டு. 

அம்மாவின் நிர்வாகத்தில் (எங்க அம்மா, எங்க அம்மாய்யா, என்னை பெத்தெடுத்த தெய்வம்யா) இருந்த வரை சாப்பிட்ட காலை சாப்பாடு எப்பொழுதுமே சிறந்த உணவுகளை மட்டுமே இப்ப வரை நினைவில் வைத்து இருக்கிறது. 

ஆகககா என்ன காம்பினேசன்கள், இட்லியும் சாம்பாரும், இட்லியும் கடப்பாவும். வாவ். காலை டிபனுடன் சாம்பாரை நாலு ரகமாக செய்து சாப்பிட்டது என் அம்மாவின் கையால் தான். பருப்பை வேக வைத்து மசித்து அதனுடன் மிளகு மற்றும் மசாலாக்களை வறுத்து பொடி செய்து வைக்கப்படும் நீர்த்த சாம்பார், உருளைக்கிழங்கு மற்றும் கேரட்டை அளவான அளவில் நறுக்கி பெருங்காயம் ஏத்தமாக போட்டு வைக்கப்படும் கெட்டி சாம்பார், பருப்புடன் மஞ்சள் பூசணியை சேர்த்து வேக வைத்து மசித்து முழு சின்ன வெங்காயம் நிறைய போட்டு வேக வைத்து செய்யப்படும் கல்யாண சாம்பார், மசாலாப் பொருட்கள் அரைத்து அதனுடன் வேகவைத்த பட்டாணி உருளைக்கிழங்கு சேர்த்து வைக்கப்படும் கடப்பா  (இது தஞ்சை பகுதிகளில் மட்டும் தான் கிடைக்கும்) என வெறும் சாம்பாரில் மட்டுமே நாலு ரகமென்றால் மற்ற உணவு வகைகள் பற்றி சொல்லவா வேண்டும். 


சட்னி என்றால் தேங்காய்ச் சட்னி, வதக்கிய வெங்காய சட்னி, வதக்கா வெங்காய சட்னி, பீர்க்கங்காய் சட்னி, முள்ளங்கி சட்னி, பிரண்டை சட்னி, கொத்தமல்லி வெங்காய சட்னி, துவையல்கள் அதிலும் டூர் துவையல் என்று ஒன்று இருக்கு. திருப்பதி, ராமேஸ்வரம் போன்ற ஊர்களுக்கு சுற்றுலா செல்லும் போது அம்மா இட்லியும் இந்த துவையலும் எடுத்து வருவார். இது கெட்டுப் போகாது. வெங்காயம் தக்காளி, புளி, உப்பு சேர்த்து அரைத்து பிறகு தாளித்து நன்றாக துவையல் பதம் வரும் வரை நன்றாக வாணலியில் வதக்கி செய்வது, டேஸ்ட் சும்மா பட்டைய கிளப்பும். இப்ப வரைக்கும் அம்மா சென்னை வந்தால் ஊருக்கு செல்லும் போது எனக்காக ஒரு டப்பா முழுக்க இந்த துவையல் செய்து வைத்து விட்டு தான் செல்வார். 

வாரத்தின் இரு நாட்கள் காலையில் ஆட்டுக்கறியில் நல்ல நெஞ்செலும்பாக மட்டும் அப்பா வாங்கி வந்து தருவார். அதனுடன் முருங்கைக்காய், முள்ளங்கி, கத்தரிக்காய் சேர்த்து இட்லிக்கான குழம்பாக மட்டும் சற்று நீர்த்து போனது போல் அம்மா வைப்பார். நம்பினால் நம்புங்கள் அப்பவே முப்பது இட்லி வரை சாப்பிடுவேன். 

முதல் நாள் இரவு செய்த மீன் குழம்பென்றால் இட்லியின் எண்ணிக்கை இன்னும் கூட தான் செய்யும். இட்லிக்கே இப்படி என்றால் மற்ற உணவு வகைகளை பற்றி கேட்கவா வேண்டும். 


இட்லியை விட சில நாட்கள் அபூர்வமாக கிடைக்கும் தண்ணி சோறு இன்னும் சுவைக்கவே செய்யும். அதுவும் எங்க அம்மா வழித்தாத்தா பழக்கி கொடுத்த சுட்ட கருவாடு மட்டும் வைத்துக் கொண்டு ஒரு சட்டி தண்ணிசோறு சளைக்காமல் சாப்பிடலாம். ஆமாம் என் தாத்தா பெரும்பாலும் காலையில் தண்ணிசோறு விறகு அடுப்பில் எரியும் நெருப்பில் எதுவுமே சேர்க்காமல் அப்படியே சுட்டுத் தரப்படும் கருவாடு தான் சாப்பிடுவார். கூடுதல் சுவைக்காக என்றால் சின்ன வெங்காயம் வைத்துக் கொள்வார். 

அப்பா கூட்டுறவுத் துறையில்  வேலை செய்ததாலும் பட்ஜெட் பத்மநாபனாக இருந்ததாலும் பெரும்பாலும் ஹோட்டல்களில் சாப்பிடுவதை விரும்ப மாட்டார். தவிர்க்க முடியாமல் வெளியூர் செல்லும் சமயங்களில் திருவாரூர் பேருந்து நிலையத்தில் இருக்கும் அருண் ஹோட்டல், மாத்திரிச்ச பிள்ளையார் (மாற்றிஉரைத்த வினாயகர் என்பது மருவி பேச்சு வழக்கில் அப்படி ஆகிடுச்சி) கோவில் அருகில் இருக்கும் அலங்கார் ஹோட்டல் ஆகியவற்றில் தான் வாங்கி தருவார். அங்கே கிடைக்கும் தோசையும் சட்னி சாம்பார்களும் செம டேஸ்ட்டாக இருக்கும்.


பதினேழாவது வயதில் வெந்நீர் கூட வைக்கத் தெரியாத அப்பாவியாக சென்னை வந்து இறங்கினேன். அப்ரெண்டிஸ் சேர்ந்ததும் ஹாஸ்டலில் மெஸ் வசதி கிடையாது என்பதால் தட்டுமுட்டு சாமான்களுடன் எந்த வித முன்னேற்பாடும் இல்லாமல் சமையலில் தொபுக்கடீர் என்று குதித்தேன். சில நாட்கள் கேவலமாக சமைத்து சாப்பிட்டு விட்டு பிறகு ஒரு தெய்வத் திருநாளில் கையேந்திபவன்கள் சரணம் என்று முடிவு செய்து எல்லா பாத்திரங்களையும் பரணில் ஏற்றினேன். அதன் பிறகு ஐசிஎப்பில் இருந்த அக்கா கடை தான் அட்சயபாத்திரம், கணக்கு வழக்கே இல்லாமல் சாப்பிட்டு நாங்களாக ஒரு கணக்கு வைத்து அக்காவின் லாபத்தில் கை வைத்துக் கொண்டு இருந்தோம்.

கேரளாவுக்கு செல்லும் வரை பெரிதான மாற்றங்கள் காலை உணவில் இருந்ததில்லை. கேரளாவில் எப்படி சாப்பிட வேண்டும் என்பதை ஒரு பெரியவர் கற்றுக் கொடுத்தார். இன்று வரை ஒரு மணிநேரத்திற்கும் அதிகமாக காலை உணவை சாப்பிட்டது அங்கு தான். 

புட்டு, கடலைக்கறி, ஒரு பழம்பூரி, தேங்காய் எண்ணெயில் பொறித்த டபுள் ஆம்லேட், அப்பளம், கட்டன் சாயா இது தான் அந்த ஒரு வருடமும் என் காலை உணவு, சில நாட்கள் மட்டும் கடலைக்கறிக்கு பதிலாக பீப் கறி. இந்த சாப்பாட்டின் முதல் விதி சாப்பாட்டின் இடையே தண்ணீர் குடிக்க கூடாது. புட்டு தண்ணீர் குடிக்காமல் சாப்பிட வேண்டுமென்றால் எவ்வளவு மெதுவாக சாப்பிட வேண்டும். ரசிச்சி ருசிச்சி சாப்பிட்ட தருணம் அது. ஒரு வாய் புட்டு, ஒரு கடி பழம்பூரி, அப்பளத்துடன் சேர்த்து ஆம்லெட் கொஞ்சம், ஒரு சிப் கட்டன் சாயா. சொர்க்கத்தை அந்த தருணத்தில் காணலாம்.

ஐதராபாத்தில் இருந்த காலத்தில் தோசை சாப்பிட வேண்டும் என்று நினைப்பேன். சாப்பிட்டுப் பார்த்தால் கன்றாவியாக இருக்கும். ஆனால் பெசரெட் சூப்பராக இருக்கும். சில நாட்கள் முதல்நாள் வாங்கிய பிரியாணியை வைத்து மறுநாள் காலையும் பிரியாணியாக வெளுத்ததெல்லாம் உண்டு.

மத்தியபிரதேசத்தில் பூண்டு வாங்கிய சென்னைக்கு அனுப்பிய காலத்தில் காலை உணவுக்கு படாத பாடு பட்டேன். அங்கு எந்த உணவகத்திலும் காலை உணவு கிடையாது. என்ன தான் சாப்பிடுவாங்க என்று தேடிப் பார்த்தால் அந்த ஏரியா முழுவதுமே காலையில் பொகாவும் டீயும் தான். பொகா என்றால் ஒரு ரகமான அவல் உப்புமா. இது டீக்கடையில் மட்டும் தான் கிடைக்கும். அதுவும் பேப்பரை சுண்டலுக்கு சுருட்டுவார்களே அப்படி சுருட்டி ஒரு கரண்டி பொகா வைத்து தருவார்கள். அப்படியே தின்னுட்டு ஒரு டீ மட்டும் குடித்து விட்டு நம்ம வேலையை பார்க்க வேண்டியது தான். 

இவ்வளவு கதை பேசுகிறேனே, இன்றைய நிலைமை என்ன தெரியுமா, ரெண்டு ரகமான சட்னியோ, கூடுதலாக ஒரு துவையலோ கேட்டால் மிக்ஸியை கொண்டு வந்து கையில் கொடுத்து விட்டு அரைக்க சொல்கிறார் இல்லத்து அரசி. 

ம்ஹும். . பேசாம கேரளாவுலயே ஒரு வல்லிய பெண்குட்டியை கல்யாணம் பண்ணியிருக்கலாம்னு தோணுது. புட்டும் கடலைக்கறியுமா வாழ்க்கை சந்தோசமா போயிருக்கும்.

ஓவரா ஔறிட்டோமோ, இந்த பதிவு என் தங்கமணி கண்ணில் படாம இருக்க செய் ஆண்டவா. கிடைக்கிற சோத்துக்கும் ஆப்பாகிட போகுது.

ஆரூர் மூனா

Friday, 9 October 2015

மசாலா படம் - சினிமா விமர்சனம்

சில சமயம் சில வெள்ளிக்கிழமைகளில் அசூயையாக இருக்கும். எந்த முக்கியத்துவமும் இல்லாத படங்கள் வெளிவரும் தினத்தன்று அரங்கிற்கு போகலாமா வேண்டாமா என்று மனசும் மூளையும் பட்டிமன்றம் நடத்தும்.


இன்று கூட அப்படியான பட்டிமன்றம் நடக்கும் நாள் தான். ஆனால் சிவா போன் செய்து தமிழ்சினிமாவை விமர்சனம் செய்யும் நம்மளைப் போன்ற ஆட்கள் தான் படத்தின் முக்கிய கதாபாத்திரம். கதைக்களமும் இணைய சினிமா விமர்சனம் தான் என கூறினார். 

நண்பர் ஒருவர் இன்று ஹயாத்தில் நடக்க இருக்கும் ஒரு சினிமாவின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு அழைத்திருந்தார். பிரமாதமான லஞ்ச் என்று உசுப்பேத்தியிருந்தார்கள், போகலாம் என்ற யோசனையும் இருந்தது.

இப்போ மனசு பட்டிமன்ற தலைப்பை ஹயாத் லஞ்ச்சா அல்லது சினிமாவா என்று மாற்றிக் கொண்டது. நெடுநேர வாக்குவாதத்திற்கு பிறகு சினிமாவை ஜெயிக்க வைத்து அரங்கிற்கு கிளம்பினேன்.


ஒரு படம் வெளியானதும் நம்மைப் போல் ஒரு இணைய சினிமா விமர்சகர் அந்த படத்தை கிழித்து தோரணம் கட்டி தொங்க விடுகிறார். அந்த படத்தின் வசூர் பாதிக்கப்பட்டதால் கோவப்பட்ட தயாரிப்பாளர் அந்த விமர்சகரை தாக்கி காயப்படுத்துகிறார். 

பின்னர் ஒரு தொலைக்காட்சியில் நடக்கும் வாக்குவாதத்தில் விமர்சகர்களைப் பார்த்து 120 ரூவாய் கொடுத்து படம் பார்க்கும் உனக்கு, கோடிக்கணக்கில் செலவு செய்து எடுக்கப்பட்ட படத்தை விமர்சிக்க என்ன தகுதியிருக்கு என்று கேட்க வாக்குவாதம் முற்றி அந்த விமர்சகர்கள் க்ளிஷேவே இல்லாத ஒரு மசாலாப் படத்தின் கதையை தயாரிப்பாளருக்கு கொடுப்பதாகவும், அதை அவர் தயாரிப்பதாகவும் முடிவாகிறது. நேரம் ஆறு மாத காலம். 

அந்த காலக்கட்டத்திற்குள் கதையை உருவாக்க வேண்டி அந்த விமர்சகர் குழுவினர் மிடில் கிளாஸ் இளைஞன் மிர்ச்சி சிவா, கொடூர கொலைகாரன் பாபி சிம்ஹா, பொறுப்பில்லா பணக்கார இளைஞன் கௌரவ் ஆகியோரின் வாழ்க்கையை லட்சுமி தேவியின் துணை கொண்டு தொடர்கிறார்கள். 


அவர்கள் லைப்பில் இருந்து  என்ன எடுத்தார்கள், அந்த மூவரின் நிலை என்ன, விமர்சகர்கள் க்ளிஷே இல்லாத மசாலாப் படத்தை எடுத்தார்களா என்பதே மசாலா படத்தின் கதை.

ஆரம்பம் என்னவோ சுவாரஸ்யமாக தான் இருந்தது. என்னவோ சொல்லப் போறங்க என்பது மாதிரியே காட்சிகள் ஆரம்பித்தது. ஆனால் போகப் போக நிலைமை பாதாளத்திற்கு போய் இருக்கை உறுத்தலாகி மனசு ஹயாத் லஞ்ச் நோக்கி பறக்க ஆரம்பித்து விட்டது.

படத்தில் நடிப்பிலும், கதாபாத்திரத்திர வடிவிலும் சுவாரஸ்யப்படுத்தும் ஒரே நபர் சிவா மட்டும் தான். டிப்பிகல் சென்னையில் லோ மிடில் கிளாஸ் இளைஞனாக நன்றாகவே செய்துள்ளார். நண்பர்களுடன் ஞாயிற்றுக்கிழமை கிரிக்கெட், வேலைநேரங்களில் பாஸிடம் மாட்டுவது, வீட்டில் ஒரு நவநாகரீகப் பெண் வந்ததும் காட்டும் படபடப்பு, இறுதியில் அந்த பெண் தனக்கு ஏன் செட்டாக மாட்டாள் என்று விளக்கும் விதம் என கவனம் ஈர்க்கிறார்.

கொலைகார அமுதனாக பாபி சிம்ஹா, தமிழ் சினிமாவில் இவருக்கு கொடுக்கப்பட்டு இருக்கும் இடம் ரொம்பவே அதிகம் என்று நினைக்கிறேன். வில்லத்தனம் என்றால் இறுக்கமாக முறைப்பது என்று யார் இவருக்கு சொல்லிக் கொடுத்தது என்று தான் தெரியவில்லை. 

அது போல இடது கை பழக்கமுள்ளவர் போல் இருக்க இயல்பு மாறாமல் இருக்க வேண்டும். வலது கையில் அடிபட்டவன் இடது கையில் சாப்பிடுவது போல் இருக்கிறது. அது போல் காரணமேயில்லாமல் லட்சுமி தேவியிடம் நெருங்குவதும் பொருந்தவில்லை.

பணக்கார இளைஞனாக கௌரவ். அவரது பாத்திரமும் சரியாக வடிவமைக்கப்படவில்லை. டிக்கெட் எக்ஸ்ட்ரா வைத்திருந்து கொடுத்தவளிடம் காதல் வயப்படுவது என்னா கன்றாவி லாஜிக்கோ. 

ஆரம்பித்த பொழுதில் சினிமா பார்ப்பது, உடனுக்குடன் விமர்சனம் போடுவது, யூடியுபில் வீடியோ விமர்சனம், அதனால் படத்தில் வசூலுக்கு பாதிப்பு என்று கவனம் ஈர்த்தவர்கள் போகப் போக என்ன செய்வது என்று தெரியாமல் தட்டுத்தடுமாறி படத்தை குழப்பி பார்ப்பவனையும் குழப்பி விட்டு இருக்கிறார்கள். 

படம் போட்ட 45 நிமிடத்திற்குள் இன்டர்வெல் ஒரு அதிர்ச்சி என்றால் அதற்கு பிறகு வரும் காட்சிகள் இன்னும் அதிர்ச்சி. நினைவுகள் எல்லாம் ஹயாத் சாப்பாட்டிற்குள் இருக்கிறது. கண்ணை சொருகுகிறது. என்னைக் கட்டுப்படுத்தி தான் மிச்சப்படத்தை பார்த்து முடித்தேன். 

மிர்ச்சி சிவா சம்பந்தப்பட்ட காட்சிகள் மட்டும் இல்லையென்றால் படம் பார்ப்பவர்களின் நிலைமை இன்னும் மோசமாகி இருக்கும். ஹீரோயினி லட்சுமி தேவி பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை, பார்க்க சில காட்சிகளில் மட்டும் நன்றாக இருக்கிறார். அவ்வளவு தான்.

தியேட்டரில் போய் படம் பார்க்கும் அளவுக்கு ஒன்றுமில்லை. எப்பவாவது ஒரு விஷேச நாளில் டிவியில் போடும் போது பார்த்துக் கொள்ளுங்கள்.

ஆரூர் மூனா

Thursday, 24 September 2015

லைப் ஆப் ஜோசுட்டி - ஜீது ஜோசப் - சினிமா விமர்சனம்

ஒரு இயக்குனரின் படம் ஹிட் ஆனால் அடுத்த படத்திற்கு என ஒரு எதிர்பார்ப்பு இருக்குமே, அது தான் அடுத்த படத்தின் வசூலுக்கு முதலீடு. அதுவே இந்தியாவில் உள்ள 5 மொழிகளில் அதிரிபுதிரி ஹிட் அடித்திருந்தால் எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறி கிடக்கும் அல்லவா. அந்த எதிர்பார்ப்போடு தான் அரங்கிற்கு போனேன். 


த்ரிஷ்யம் படத்தின் மூலம் அகில இந்தியாவிலும் பிரபலமான ஜீது ஜோசப்பின் அடுத்த படம் தான் லைப் ஆப் ஜோசுட்டி. ஒரு மனிதனின் 8 வயதில் இருந்து 38 வயது வரை நடக்கும் சம்பவங்களின் தொகுப்பு தான் படம்.

படத்தின் மிகப்பெரும் குறை மெதுவாக நகரும் திரைக்கதை. த்ரிஷ்யம் மாதிரி பரபரப்பான படத்தை தந்தவரிடம் இருந்து இப்படிப்பட்ட படமா என்று யோசிக்க வைக்கிறது.  ஆனால் படம் மோசமெல்லாம் கிடையாது. ரசிக்கும் படி தான் இருக்கிறது. 

கேரளாவில் உள்ள கட்டப்பனை என்ற மலைகிராமத்தில் இரண்டு வீடுகள் மட்டும் அடுத்தடுத்து இருக்கிறது. ஒரு வீட்டில் திலீப், அடுத்த வீட்டில் ரச்சனா. சிறுவயதில் இருந்தே இருவரும் ஒன்றாக வளருகின்றனர். பருவ வயதில் காதல் கொள்கின்றனர். திலீப் நாலாவது வரை மட்டுமே படித்தவர் என்பதாலும், ரச்சனா வீடு வசதியானது என்பதாலும் காதலுக்கு எதிர்ப்பு வருகிறது. 


ரச்சனாவின் அப்பா வேறொருவருக்கு ரச்சனாவை மணமுடிக்க நினைக்கிறார். பொண்ணு பார்க்க வருபவர்களையெல்லாம் தன் நண்பர்கள் உதவியுடன் எதாவது பொய் சொல்லி திருமணத்தை நிறுத்திக் கொண்டே வருகிறார் திலீப். ஒரு நாள் உண்மை தெரிந்து ரச்சனாவின் அப்பா திருமணத்தை நடத்தி விடுகிறார்.

திருமணமாகிப் போன ரச்சனா திலீப்பின் மேலுள்ள கோவத்தால் அவரை வெறுப்பேத்த வருடத்திற்கு ஒரு பிள்ளையாக பெற்றுப் போடுகிறார். 

திலீப்புக்கு இரண்டு தங்கச்சிகள், ஒருத்தரை  சூரஜ்க்கு திருமணம் செய்து கொடுத்து இருக்கிறார்கள். வரதட்சணை பாக்கியிருப்பதால் அதுவும் பிரச்சனையில் இருக்கிறது. இரண்டாவது தங்கச்சிக்கு திருமணம் செய்ய பணம் தேவைப் படுகிறது. வீடு கடனில் இருந்து ஜப்தியாகும் நிலை. 



எல்லா பிரச்சனைகளையும் தீர்க்க டைவர்ஸியான ஜோதியை திருமணம் செய்து குடும்பத்தின் பிரச்சனைகளை தீர்த்து ஜோதியுடன் நியுசிலாந்துக்கு குடும்பம் நடத்த செல்கிறார் திலீப். 

அங்கு போனதும் தான் தெரிகிறது. ஜோதிக்கு ஒரு தோல்வியடைந்த காதல் இருக்கிறது என்று. அதனால் திலீப்புடன் சேர்ந்து வாழ அவகாசம் கேட்கிறார் ஜோதி. 

ஒரு நாள் அந்த பழைய காதலனுடன் ஜோதியை படுக்கையில் பார்க்கும் திலீப் ஜோதியை பிரிகிறார். அதுவரை சம்பாதிக்கனும் என்ற எண்ணமே இல்லாத திலீப் அதன் பிறகு ஒரு தொழில் ஆரம்பிக்க முயற்சிக்கிறார்.

நாலாவது மட்டுமே படித்த திலீப் நியுசிலாந்தில் முன்னேறினாரா, இந்தியா திரும்பினாரா, இந்தியாவில் உள்ள அவரது குடும்பம் என்னவானது என்பது தான் படத்தின் கதை.


எனக்கு இந்த படத்தின் மீது ஆர்வம் ஏற்படவும், இந்த படம் பிடிக்கவும் ஒரு காரணம் இருக்கிறது. அது என் கொள்கை ரீதியுடன் சம்பந்தப்பட்டது. எந்த ஒரு பிரச்சனையிலும் தன் நிலையில் இருந்து பார்க்காமல் எதிரியின் பாயிண்ட் ஆப் வியுவில் இருந்து பார்த்தால் சச்சரவும், சண்டையும் வராது என்று சொல்லியே திலீப்பை வளர்க்கிறார் அவரது அப்பா. இது தான் என்று தெரியாமல் நான் அப்படியே இருந்து இருக்கிறேன். அது தான் என்னை படத்தினுள் இழுத்தது.

படம் துவங்கியதிலிருந்து திலீப்பின் பின்னால் இரண்டு தேவதைகள் வருகிறார்கள். ஒருவர் நல்ல தேவதை, மற்றவர் துர்தேவதை. நல்லவனான திலீப் கெட்டவனாக மாற சந்தர்ப்பம் வரும் போதெல்லாம் துர்தேவதை சந்தோஷிக்க அதனை தவிர்த்து நல்லவனாகவே இருக்கும் திலீப்பை ஆசீர்வதித்தே வருகிறார் நல்ல தேவதை. வித்தியாசமான சிந்தனை.

முதல் பாதி மிகுந்த ரகளையாக இருக்கிறது. நண்பர்களுடன் அடிக்கும் கும்மாளமும் ரச்சனாவுடனான காதலும், ரச்சனாவே பெட்டியுடன் வந்து வா வீட்டை விட்டு ஓடிப் போகலாம் என்று கூப்பிடும் போது கூட உன் அப்பாவின் இடத்தில் இருந்து சிந்தித்துப் பார் என்று அறிவுரை கூறி திருப்பி அனுப்பிகிறார் திலீப். 

அதனால் திலீப் மீது வெறுப்படையும் ரச்சனா அவரை பழி தீர்ப்பதற்காகவே வருடாவருடம் பிரவிப்பதற்காக தாய் வீட்டுக்கு வருவதும், க்ளைமாக்ஸில் பத்து வருடம் கழித்து திலீப் வீடு திரும்பிய அன்றும் கூட பிரசவத்துக்காக ரச்சனா வருவதும் அடிப்பொளி காமெடி.

கொஞ்ச நேரமே வரும் சூரஜ் வெஞ்சாரமூடு கிடைத்த வாய்ப்பில் சிக்சர் அடிக்கிறார். திலீப்பின் பால்ய வயது நண்பராக வருபவர் செம பெர்பார்மன்ஸ், பின்னி எடுக்கிறார். ரச்சனாவின் கல்யாணத்தன்னைக்கு ரச்சனா கல்யாணத்திற்கு சம்மதம் என சர்ச்சில் சொல்வதை கேட்டு ஒடும் திலீப் தற்கொலை தான் செய்து கொள்ளப் போகிறாரோ என்று அவருடன் பயந்து ஓடும் காட்சியில் தியேட்டர் வெடிச் சிரிப்பு சிரிக்கிறது.

இரண்டாம் பாதி தான் சற்று சவசவவென்று நகர்கிறது. இன்னும் சொல்லப் போனால் நகரவே மாட்டேன் என்கிறது. கல்யாணம் செய்த ஜோதி ஏமாற்றி விட திடீரென அமையும் அக்ஷா பட்டுடனான காதல் சுவாரஸ்யம் தான்.

ஆனால் நாலாங்கிளாஸ் படித்த திலீப், நியூசிலாந்தில் உணவகம் ஆரம்பிப்பதும் அதை நியூசிலாந்திலேயே சிறந்த உணவகமாக மாற்றுவது எல்லாம் சினிமாவில் மட்டும் முடிந்த ஒன்று.

எனக்கு என் அப்பாவுக்குமான கெமிஸ்ட்ரி எல்லாருக்கும் தெரிந்த ஒன்று. ஒரு நாளைக்கு ஒரு முறையாவது என்னை திட்டாவிட்டால் அவருக்கு உறக்கம் வராது. அதே போல் ஒரு முறையாவது அவரிடம் திட்டு வாங்கி விட வேண்டும் என்பது என் கோட்டா. வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அது புரியாது. இன்று கூட கோவம் வந்தால் என்னை அடிக்க வருவார். நாம இருப்பதோ எருமை மாட்டிற்கு நிகராக, எங்கப்பா அதையெல்லாம் யோசிக்காமல் கையை ஓங்குவார். ஆனாலும் நான் கம்முன்னு இருப்பேன்.

அதே போல் ஒரு கெமிஸ்ட்ரி திலீப்புக்கும் அவரது தந்தைக்கும் ஒடுகிறது. பார்க்கும் போதே அவ்வளவு நெகிழ்வாக இருக்கிறது. திருமணம் முடிந்து குடும்பம், ஊர், நட்புகள் எல்லாவற்றையும் பிரிந்து நியூசிலாந்து போகும் திலீப்பிடம் அவரது அப்பா செயற்கையாக சிரித்து பேசும் காட்சியில் என்னையறியாமல் கண்ணீர் வழிந்தது. 

க்ளைமாக்ஸில் தனியாக அமர்ந்து இருக்கும் திலீப்பிடம் டீமேக்கர் விற்க வந்து இல்லாள் ஆகும் கௌரவத் தோற்றத்தில் வந்து போகிறார் நயன்தாரா.

வேறு வேலையே இல்லையென்றால், நிதானமாக ஒரு படத்தை பார்க்க தயார் என்றால் மட்டும் அரங்கம் பக்கம் செல்லுங்கள். இல்லையென்றால் இன்னும் நான்கு மாதத்தில் சூர்யா டிவியில் பார்த்துக் கொள்ளலாம்.

ஆரூர் மூனா