பேய்ப்படத்தில் நகைச்சுவை நுழைத்து ஹிட்டடிக்கும் கலாச்சாரத்தை தமிழ் சினிமாவில் ஆரம்பித்து வைத்தது லாரன்ஸ் தான். ஆனால் கண்டெண்ட்டை வைத்து மறுபடியும் ஹிட் கொடுக்க முடியும் என்பதை தன் திறமையால் நிரூபித்து இருக்கிறார்.
கங்கா காம்ப்ளக்ஸில் இரண்டு தியேட்டர்களில் திரையிட்டும் இரண்டுமே ஹவுஸ்புல் என்பதும் வந்திருந்த கூட்டத்தில் பெரும்பான்மையினர் குடும்பத்தினர் என்பதுமே இப்படத்தின் வெற்றிக்கு சாட்சி.
லாரன்ஸ் ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தில் ஒளிப்பதிவாளராக இருக்கிறார். டிஆர்பி ரேட்டிங்கை கூட்டுவதற்காக ஒரு பாழடைந்த பங்களாவில் பேய் இருப்பதாக நம்ப வைக்க ஒரு புரோகிராம் செய்கின்றனர். அதை படம் பிடிக்க மகாபலிபுரத்தில் உள்ள ஒரு வீட்டில் முகாமிடும் போது அங்குள்ள பேய்க் கூட்டம் ஒன்று டாப்ஸியை ஆக்கிரமிக்கிறது. அது சரியாக வில்லனை பழி வாங்கியதா என்பதே காஞ்சனா - 2 படத்தின் கதை.
படத்தின் மிகப் பெரிய ப்ளஸ், முதல் பாதி தான். தியேட்டரே வெடிச்சிரிப்பிலும் திகிலிலும் அல்லோகலப் படுகிறது. இரண்டாம் பாதி கொஞ்சம் சுமார் ரகம் தான். அதுவும் அந்த இராம. நாராயணன் பாணியிலான க்ளைமாக்ஸ் அய்யோ அய்யய்யோ தான்.
படப்பிடிப்புக்கு போகும் கூட்டணியில் இருக்கும் லாரன்ஸ், டாப்ஸி, சுமன், மயில்சாமி, மனோபாலா, சாம்ஸ் பயந்து பயந்தே சிரிக்க வைக்கின்றனர்.
லாரன்ஸ் இரண்டு வேடங்களில் வந்து அசத்தியிருக்கிறார். பேயைப் பார்த்து பயந்து போவது டாப்ஸிக்கு முன்னால் பயப்படாமல் இருப்பதை போல் நடிப்பது என மனுசன் நல்லாவே சிரிக்க வைக்கிறார்.
இரவில் தனியாக ஒன்னுக்கு போக பயந்துக் கொண்டு பாத்ரூமில் வாட்மேனாக மயில்சாமியை நியமிப்பது, பேயைப் பார்த்து அலறி அடித்து ஓடி வந்து படத்தில் இருக்கும் எல்லா பெண்களின் இடுப்பிலும் அமர்ந்து கொள்வது என காமெடியிலும்
மொட்டை சிவாவாக ஆக்சனிலும் பின்னியிருக்கிறார்.
டாப்ஸி அழகாகவே இருக்கிறார். நான் தான் முந்தைய படங்களில் சரியாக கவனிக்க தவறி விட்டேன். சரியான வடிவமைப்பு (ஸ்ட்ரக்ச்சர் என்பதின் சுமாரான தமிழாக்கம்). ப்ராம்ட்டிங் தெரியாத வகையில் சரியான உச்சிக்கிறார். சபாஷ் டாப்ஸி.
இரண்டாம் பாதி சற்று அலுப்பதற்கு காரணம் காஞ்சனா முதல் பாகத்தின் பெரும் வெற்றியடைந்த காட்சியை அதே மாதிரி இந்த படத்திலும் வைத்திருப்பது தான். முதல் பாதியில் காட்சிகளுக்கு மெனக்கெட்டிருப்பது போல் இரண்டாம் பாதியிலும் மெனக்கெட்டு இருக்கலாம்.
பேய் வீட்டில் தாப்ஸி குழுவினர் படப்பிடிப்பு நடத்திக் கொண்டு இருக்கும் போது காட்சியின் சுவாரஸ்யத்திற்காக இவர்களாக ஒரு பேய் அந்த காட்சியில் க்ராஸ் ஆவது போல் வைக்க, நிஜப் பேய் அவர்களின் பின்னால் க்ராஸ் ஆக இவர்கள் பயந்து அலற தியேட்டர் சிரிப்பில் பெரியதாகவே சிரிப்பில் அலறுகிறது.
படத்தில் பெர்பார்மன்ஸில் பின்னுவார் என்று நான் எதிர்பார்த்த ரேணுகாவை வீண் செய்து இருக்கிறார்கள். பேய்களிடம் கோவைசரளாவும் ரேணுகாவும் மாட்டி அடி வாங்கும் காட்சியில் குட்டிக்கரணம் அடித்து சிரிக்க வைக்கிறார்.
கோடை கொண்டாட்டத்திற்கு வந்திருக்கும் சிறுவர் சிறுமியர்களை கவர வந்திருக்கும் காஞ்சனா - 2 கண்டிப்பாக ஹிட் தான். அடுத்த பாகமும் வர இருக்கிறதாம்.
குறைகளாக சொல்ல ஆயிரம் லாஜிக் மீறல்கள் படத்தில் இருக்கிறது. அதையெல்லாம் புறந்தள்ளி குடும்பத்துடன் தியேட்டருக்கு போய் சிரித்து மகிழ்ந்து வாருங்கள்.
ஆரூர் மூனா
லாரான்சின் மூன்று பேய் படங்களுமே ஹிட் ஆகிவிட்டது! எனக்கும் நகைச்சுவை கலந்த அவரது படமாக்கல் பிடிக்கும்! சுவையான விமர்சனம்! நன்றி!
ReplyDeleteகோவை சரளா அவர்கள் சொல்வது போல் டிஃபிரன்ட்டா டிஃபிரன்ட்டா செய்து அடுத்த பாகமும் வெற்றி பெறட்டும்...
ReplyDelete