Wednesday 23 December 2015

பசங்க 2 - சினிமா விமர்சனம்

படத்தின் ட்ரெய்லரை பார்த்த போதே தெரிந்து விட்டது. இது தாரே ஜமீன் பர் படத்தின் மறுஉருவாக்கமாக தான் இருக்கும் என்று. படமும் அந்த அளவுக்கு இருந்தால் கூட போதும் என்ற மனநிலையில் தான் படத்துக்கு போனேன். 


இப்பவும் தாரே ஜமீன் பர் படம் பார்த்தால் இறுதிக்காட்சியில் தேம்பித் தேம்பி அழுவேன். அந்த அளவுக்கு அந்த பையனின் இயலாமையை நமக்குள் கடத்தி அவனுடனே பயணிக்க வைத்திருப்பார்கள். 

நான் எதிர்பார்த்த மாதிரியே தாரே ஜமீன் பர் படத்தை கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்த்து பசங்க 2 வாக நமக்கு அளித்திருக்கிறார்கள். 

முனிஸ்காந்த் தம்பதிக்கு ஒரு பையனும் கார்த்திக் குமார் - பிந்து மாதவி தம்பதிக்கு ஒரு பொண்ணும் பிறக்கிறார்கள். அந்த பசங்க ஒன்னாம் நம்பர் வாலுவாக இருக்கிறார்கள். நன்றாக படித்தாலும் மார்க் எடுப்பதில்லை. அதனால் வருடத்திற்கு ஒரு ஸ்கூல் என மாறிக் கொண்டே இருக்கிறார்கள். 


ஒரு கட்டத்தில் ஒரு போர்டிங் பள்ளியில் சேர்ப்பதற்காக வெவ்வேறு இடங்களில் இருந்து தாம்பரத்திற்கு குடி வருகிறார்கள். அதே அப்பார்ட்மெண்ட்டில் இருக்கும் சைல்ட் சைக்காலஜிஸ்ட் டாக்டர் சூர்யா - பள்ளி ஆசிரியை அமலா பால் தம்பதிகள் இவர்கள் சிக்கலை அறிந்து பசங்களின் திறமையை  மெருகேற்றி அவர்களின் பிரச்சனைக்கு தீர்வு தருகிறார்கள். அவ்வளவு தான். 

படத்தின் கதையே இது தான் என்பதால் சொல்லலாமா என்று  யோசித்தேன். தாரே ஜமீன் பர் கதை தான் என்று சொல்லி விட்டதால் அதில் என்ன ரகசியம் வைப்பது என்று சொல்லிவிட்டேன். 

முனிஸ்காந்த்தின் மகனாக வரும் நிசேஷ் பிரமாதமாக நடித்து இருக்கிறார். அவனது எக்ஸ்பிரசன்கள் பிரமாதம். பாத்ரூமில் பேய் இருப்பதாக சொல்லி பசங்களை பயமுறுத்தும் காட்சியிலும், அதிகாலையில் பாத்ரூமில் கொட்டமடிக்கும் காட்சியிலும் அசத்தி இருக்கிறான். 


கார்த்திக் குமாரின் மகளாக வரும் வைஷ்ணவி கூட நன்றாக நடித்து இருக்கிறார். 

சூர்யா கதையை கேட்டு தயாரித்து சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பதே படத்திற்கு கூடுதல் பலம். அஷ்ட கோணல் சேட்டைகள் வித்தியாசமான சூர்யாவை நமக்கு காட்டுகிறது. 

படத்தின் கலகலப்புக்கு ஆகச்சிறந்த உத்திரவாதமாக இருப்பது முனீஸ்காந்த். வாய்ப்புகள் கிடைக்காமல் சொற்ப கேரக்டர்களில் நடித்து வந்து முண்டாசுபட்டியில் கலக்கி எடுத்து லைம்லைட்டுக்கு வந்தவருக்கு இந்த படம் போனஸ். 

எல்லா பசங்க மனதிலும் இடம் பிடித்து விடுவார். க்ளெப்டோமேனியா பிரச்சனை இருப்பதால் போகும் இடங்களில் எல்லாம் சிறு பொருட்களை திருடி வந்து பிரச்சனையாவதால் மனநல மருத்துவரிடம் சிகிச்சைக்காக போய் அவரது ஸ்டெதஸ்கோப்பையே ஆட்டைய போட்டு வருவது செம ரகளை. 


இவ்வளவு சிறப்பு சொன்னாலும் படம் கொஞ்சம் டல்லடிக்கிறது. இதற்கு முக்கியமான காரணம் பசங்களின் குறையை நம்முள் கடத்தவில்லை. அவர்கள் பிரச்சனையை வெகு ஜாலியாக சொல்வதால், யாராவது வந்து இந்த பிரச்சனையை தீர்த்து வைங்கோ என்று நாம் எதிர்பார்க்கவே இல்லை. அதனால் சூர்யா வந்து அவர்களின் குறைகளை சரிசெய்வது நமக்குள் எந்த பாதிப்பும் ஏற்படுத்தவில்லை. 

இந்த பிரச்சனை தாரே ஜமீன் பர் படத்தில் சரியாக பார்வையாளனுக்குள் கடத்தப்பட்டு இருக்கும். அப்புறம் அமீர்கான் வந்து சரி செய்து அந்த பையன் சாதிக்கும் போது நாமும் ஆனந்த கண்ணீர் விடுவோம். 

பசங்க 2 படத்தின் காட்சிகள் ஜாலியாக வந்து ஜாலியாகவே செல்வதால் நமக்குள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இதுவும் ஒரு படம் என்றே கடந்து செல்கிறது. இடைவேளைக்கு பிறகு சில காட்சிகள் லேக் ஆகி கடுப்பேத்துகிறது. 

அரசு பள்ளி ஆசிரியரே தன் மகனை தனியார் பள்ளியில் சேர்க்க வரிசையில் நிற்பதும் அதனை சமுத்திரக்கனி வந்து கண்டிப்பதும் சரியான சவுக்கடி. 

ஒரு டிஸ்லெக்சியா மாதிரி குறைபாடுகள் இருந்து சரி செய்தால் ஒகே. ஆனால் சூப்பர் ஆக்டிவ் அதாவது வாலுத்தனமாக இருக்கும் பிள்ளைகள் ஒரு குறை என்பது ஏற்றுக் கொள்ள சிரமமாக இருக்கிறது. 

தனியார் பள்ளிகளின் கண்டிப்பு, தேர்வுக்கான ஸ்ட்ரெஸ் போன்றவற்றை குறை சொல்லியிருப்பதற்கு வாழ்த்துகள். பசங்களை குறை சொல்லும் பெற்றோர்கள் அவசியம் பார்க்க வேண்டிய சினிமா பசங்க 2. 

ஆரூர் மூனா

4 comments:

  1. //இந்த பிரச்சனை தாரே ஜமீன் பர் படத்தில் சரியாக பார்வையாளனுக்குள் கடத்தப்பட்டு இருக்கும். அப்புறம் அமீர்கான் வந்து சரி செய்து அந்த பையன் சாதிக்கும் போது நாமும் ஆனந்த கண்ணீர் விடுவோம். //

    உண்மை மூனா ஜி.!!!

    ReplyDelete
  2. விமர்சனத்துக்கு நன்றி ஆமு சார்

    ReplyDelete
  3. will watch... thanks for the review.

    ReplyDelete
  4. மியூசிக் எப்படி இருக்கு அண்ணாச்சி??

    ReplyDelete