Thursday, 30 July 2015

ஆரஞ்சு மிட்டாய் - சினிமா விமர்சனம்

பாக்யராஜ் சின்ன வீடு படத்தில் பெண்ணுக்குரிய லட்சணம் அத்தினி, பத்தினி, சித்தினி, தரங்கினி என்று வகைப்படுத்துவார். (எப்பவோ பார்த்த படம், வார்த்தைகள் மாறியிருக்கலாம்.) அது போல் தமிழ் சினிமாவுக்கு என்று ஒரு லட்சணம் வைத்துள்ளோம். 


படம் ஆரம்பித்து பத்தாவது நிமிடம் நாயகன் அறிமுகப் பாடல். பிறகு சண்டை, அடுத்து என்ன நடக்கும் என்று பதைபதைக்க வைக்கும் இடைவேளை, இடைவேளை முடிந்து பத்து நிமிடத்தில் ஒரு மொக்கை மெலோடி பாட்டு, பரபர க்ளைமாக்ஸ் என்பதே சினிமா என்பதற்கு நாம் வைத்துள்ள அளவுகோல்.

இந்த சமாச்சாரங்கள் எல்லாத்தையும் அப்புறப்படுத்தியிருக்கிறது படம். படம் ஓடும் நேரம் ஒரு மணி நாற்பது நிமிடங்கள். முதல் அரைமணிநேரம் முடிந்ததுமே இடைவேளை. அடுத்து என்ன என்று எண்ண வைக்கும் இடைவேளை, அதிரடி சண்டைகள், சீட் நுனிக்கு வர வைக்கும் காட்சிகள், அறிமுகப் பாடல், ரெட்டை அர்த்த காமெடி, நெகிழ்வான க்ளைமாக்ஸ் என ஒன்றுமே இல்லை.


ஆனாலும் எனக்கு படம் மிகவும் பிடித்து இருந்தது. என்னால் படத்துடன் ஒன்ற முடிந்தது. சில காட்சிகளில் என்னையும் என் அப்பாவையும் ஒப்பிட்டு பார்க்க முடிந்தது. சில காட்சிகளில் கண்கலங்க முடிந்தது. வேறென்ன வேண்டும் இது போன்ற படத்திற்கு.

ஆம்புலன்ஸில் டிரைவராக இருக்கிறார் ஆறுமுகம் பாலா. EMT (Emergency Medical Technician )ஆக இருக்கிறார் ரமேஷ் திலக். கைலாசம் என்ற பெரியவருக்கு உடல் நலம் சரியில்லை என்று தகவல் வருகிறது. இவர்கள் அழைக்க செல்கிறார்கள். அதகளம் பண்ணும் அவரை அழைத்து வந்து மருத்துவனைக்கு விடுகிறார்கள். அந்த நேரத்திற்குள் நடக்கும் சம்பவங்கள் தான் படம்.


எல்லாருக்கும் அப்பாவைப் பற்றிய பீல் இருக்கும். நாம் வெளியில் காட்டிக் கொண்டு இருக்க மாட்டோம். பாசமெல்லாம் அம்மாவிடம் மட்டும் தான் பகிர்வோம். ஆனால் அவர் போனதுக்கு அப்புறம் வருத்தப் படுவோம். ஆனால் அவர் இருக்கும் போதே அவரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை நாமே புரிந்து கொள்ளும் அளவுக்கு சொல்லியிருக்கிறார்கள்.

தனிமை ஒரு முதியவரை என்னவெல்லாம் செய்ய வைக்கும் என்பதையும், வயதானால் ஏற்படும் குழந்தைத்தனத்தையும் கண்முன்னே நிறுத்தியிருக்கிறார்கள்.

தன் மகனுடன் சண்டை, காரணம் கேட்டால் தான் எதனைப் பிடித்து ஒன்னுக்கு அடிக்கனும் என்று என் மகன் சொல்லக் கூடாது என்று வீம்பு பிடித்து அலையும் கதாபாத்திரம் விஜய் சேதுபதிக்கு. சிறப்பாகவே  செய்துள்ளார். தான் நினைத்ததை செய்யும் அடமெண்ட் பெரியவராக அதகளம் பண்ணுகிறார். 


நடுராத்திரி ஆட்டோவில் போகும் போது திடீரென்று ஆட வேண்டும் என்று அடம் பிடித்து ரோட்டில் தையதக்கா என்று குதித்து நடனமாடும் போது சிரிக்க வைக்கிறார். 

ஒரு அப்பாவுக்கும் மகனுக்குமான உறவு எப்படி இருக்கும் என்பதை ரமேஷ் திலக்கிற்கு காரில் பாடம் எடுக்கும் போது நெகிழ வைக்கிறார். படத்தில் நடித்ததற்காகவும் துணிந்து தயாரித்ததற்காகவும் வாழ்த்துக்கள் விஜய் சேதுபதி.

படத்தில் அவருக்கான குறை என்று பார்த்தால் வயதான பாத்திரம் செட்டாகவில்லை. வெறும்நரை முடி வைத்து, தொப்பை வைத்துக் கொண்டால் வயதானவருக்குரிய பீல் வந்து விடும் என்று நினைத்து இருக்கிறார்கள். 

ரமேஷ் திலக் சிறப்பாக நடித்துள்ளார். அவரை பல வருடங்களுக்கு முன்பு விஜய் டிவி கனா காணும் காலங்கள் நாடகத்தில் பார்த்துள்ளேன். இவரெல்லாம் எதுக்கு நடிக்கனும், ஆளும் சரியில்லை, முகமும் சரியில்லை என்று நினைத்துள்ளேன். ஆனால் எல்லாத்தையும் தவிடு பொடியாக்கியுள்ளார். இந்த படத்திற்கு அப்புறம் இவரை எனக்கு பிடிக்கிறது.

ஆச்சரியமான அறிமுகம் ஆறுமுகம் பாலா. அவரது டயலாக் டெலிவரியும் முகபாவங்களும், உடல்மொழியும் பிரமிக்க வைக்கின்றன. முதல் படம் என்றே தெரியவில்லை. சரியான வாய்ப்புகள் கிடைத்தால் நல்ல இடத்திற்கு செல்வார். அந்த ஸ்லாங்கில் அவர் பேசுவது வெகு இயல்பாக இருக்கிறது. 

இடையிடையே வரும் கதாபாத்திரங்கள் கூட சுவாரஸ்யத்தை கூட்டுகின்றன.  காதல் தோல்வி குடிகாரன், ரமேஷ் திலக்கின் காதலி, அவரது அப்பா, சசிகுமார் ரசிகரான ஆட்டோ டிரைவர் எல்லாருமே கவனம் ஈர்க்கிறார்கள்.

படத்தின் குறை என்றால் படம் சரியான விகிதத்தில் இல்லை. படம் கதையின் போக்கில் செல்கிறது. சுவாரஸ்யத்திற்காக மசாலா காட்சிகள் சேர்க்கப்பட வில்லை. அதனால் பி அண்ட் சி ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா என்பது சந்தேகம் தான். 

பார்த்து ரசிக்க வேண்டிய திரைப்படம் தான்.

ஆரூர் மூனா

Friday, 24 July 2015

நாலு போலீஸும் நல்லாஇருந்த ஊரும் - சினிமா விமர்சனம்

டிரைலரே படத்தின் நாட் என்னவென்று தெளிவாக சொன்னது, அதனாலேயே ரிலீஸ் அன்று பார்க்கும் ஆவல் ஏற்பட்டது. ஆனால் நாலைந்து முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு தள்ளி வைக்கப்பட்டது கடுப்பை ஏற்படுத்தியது. ஆனால் என்ன காரணம் என்று இப்பத்தான் தெரிகிறது.


ஐந்து வருடங்களாக ஜனாதிபதி விருது வாங்கி நல்லாயிருக்கும் ஒரு ஊர், அந்த ஊரில் ஒரு அமைதியான போலீஸ் ஸ்டேசன், சாத்வீக நிலையில் நான்கு காவலர்கள். ஸ்டேசன் அமைதியா இருப்பதினாலேயே அரசாங்கம் அதனை ஊரை விட்டு மாற்ற நினைக்கிறது. அதை தவிர்க்க நினைக்கும் காவலர்கள், ஊரில் எதாவது பிரச்சனையை கிளப்பி ஸ்டேசனை தக்க வைக்க நினைக்கிறார்கள். அதனால் சின்னச் சின்ன பிரச்சனைகளை கிளப்ப எல்லாம் சொதப்பலாக நடக்கிறது.

ஒரு கட்டத்தில் ஸ்டேசனை காலி செய்யும் முடிவை அரசாங்கம் கைவிடுகிறது. ஆனால் காவலர்கள் கிளப்பி விட்டிருந்த சின்ன பிரச்சனைகள் பூதாகரமாக வெடித்து ஊரின் அமைதிக்கு வேட்டு வைக்கிறது. முடிவு என்ன என்பதே படத்தின் கதை.


ஒரு சின்ன நாட், அதனை இரண்டரை மணிநேரப் படமாக எடுக்க வேண்டுமெனில் கன்டெண்ட்டுகள் சரியான அளவில். சரியான இடத்தில் சேர்க்கப்பட வேண்டும். ஆனால் அந்த நாட்டையே புடிச்சி இழு இழு என இழுத்தால் என்ன ஆகும். இந்த படம் மாதிரி தான் ஆகும்.

படுஅமெச்சூர்த்தனமான காட்சியமைப்புகள், மொன்னை காமெடிகள், தேவையில்லாத இடத்தில் பாட்டுகள், பொருந்தாத க்ளைமாக்ஸ் இன்னும் பல இருக்கிறது. ஆர்வமாகத்தான் படம் பார்க்க உட்கார்ந்தேன். பத்து நிமிசத்திலேயே பல்லை இளிச்சிடுச்சி படம். 


அருள்நிதி எப்படி இந்த படத்தில் நடிக்க ஒத்துக் கொண்டார் என்றே தெரியவில்லை. அவருக்கென்று ஹீரோயிச காட்சியமைப்புகள், வலுவான காட்சிகள் என்று எதுவுமே இல்லை. சிங்கம்புலியை விட குறைவான காட்சிகளே படத்தில் அவருக்கு இருக்கிறது.

ஹீரோயின் வேண்டுமென்ற கட்டாயத்திற்காக ரம்யா நம்பீசன். படத்தின் கதைக்கோ கதையின் ஓட்டத்திற்கோ எந்த விதத்திலும் சம்பந்தப்படவில்லை அவரது கதாபாத்திரம். 


சிங்கம்புலி சில இடங்களில் புன்னகைக்க மட்டுமே (கவனிக்க புன்னகைக்க மட்டுமே) வைக்கிறார். பல இடங்களில் கடுப்பேத்துகிறார். பகவதியுடன் சேர்ந்து பெட்ரோலை ஊற்றி கடையை எரிக்க முயற்சிக்கும் காட்சியில் மட்டுமே கவனிக்க வைக்கிறார். 

பாடல்கள் சுமாரோ சுமார். பின்னணி இசை இருப்பது மாதிரியே தெரியவில்லை.

யோகிபாபு எதற்கு வில்லனாகிறார் என்றும் தெரியவில்லை. கோவிலில் அர்ச்சனை செய்யும் பசங்க அவருடன் இணைந்து திருடர்கள் ஆவதும் பொருந்தவில்லை. நாலு தெரு மட்டுமே இருக்கும் ஊரை காவலர்களால் காக்க முடியவில்லை என்பது காதுல பூ தான்.

எதோ ஆரம்பிச்சி எங்கேயோ போய் எப்படியோ முடிந்த இந்த படத்தை பார்க்கனும் என்று நீங்கள் நினைத்தால் சத்தியமாக அதற்கு நான் பொறுப்பில்லை.

இதற்கு மேல் இந்த படத்தை விமர்சித்து எழுதவும் மனசில்லை.

ஆரூர் மூனா

Thursday, 23 July 2015

மீன் குழம்பும் கைப் பக்குவமும்

மலையாளத்தில் ஒரு சொலவடை உண்டு. சரியான வார்த்தை  மறந்து விட்டது. ஆனால் அதன் அர்த்தம் எல்லா மந்திரிகளும், மக்களும் அரசவையில் கூட்டமாக நிற்கும் போது பிரதம மந்திரி வந்தால் எல்லோரும் எப்படி வழி விடுகிறோமோ அது போல் வயிறு நிறைய உணவு இருந்தாலும் அடப் பிரதமன் (ஒரு வகை கேரள பாயாசம்) உள்ளே செல்ல வேண்டுமென்றால் மற்ற உணவுகள் விலகி வழி விடுமாம்.


அதாவது வயிறு நிரம்ப சாப்பிட ஒருவனுக்கு முன்னால் அடப் பிரதமனை வைத்தால் வயிறு நிரம்பியிருக்கிறதே என்று கூட நினைக்காமல் அந்த பாயாசத்தை எடுத்து சுவைப்பானாம். அந்தளவுக்கு சுவை மிகுந்ததாம் அந்த பாயாசம். ச்சூ.. இதை விளக்குறதுக்குள்ள எனக்கே மூச்சு வாங்குது.

என்னைப் பொறுத்த வரைக்கும் இது போன்ற ஆற்றல் மீன் குழம்புக்கு உண்டு. ஆனால் மீன் குழம்பு செய்வதற்கு ஒரு பக்குவம் உண்டு. எதாவது ஒன்று குறைந்து போனாலும் சொதப்பி விடும். என் அம்மா மீன் குழம்பு கரைப்பதில் வல்லவர், அசகாய சூரர்.


அவரது செய்முறை, பழைய புளியை வெதுவெதுப்பான நீரில் பதமாக கரைத்து வடிகட்டி அத்துடன் உப்பு, மிளகாய்ப் பொடி (வீட்டிலேயே அரைத்தது, மிளகாய் மல்லி சமஅளவு அத்துடன் ஒரு விரலி மஞ்சள்) அரைத்த தேங்காய் சோம்பு கலவை சேர்த்து கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். உப்பு புளி காரம் சம அளவு இருக்க வேண்டும். சுவையை அறிந்து கொள்ள ஒரு சொட்டு வாயில் விட்டுப் பார்த்தால் கூடக் கொறைச்ச வித்தியாசம் தெரியும். அதற்கேற்ற வகையில் குறைச்சலாக உள்ளதை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

மண்சட்டியில் நல்லெண்ணெய் விட்டு காய்ந்ததும் வடகம் தாளித்து கரைத்த கலவையை ஊற்றி அதில் நாலைந்து பச்சை மிளகாயை கீறிப் போட்டு நன்றாக கொதித்து பச்சை வாசனை போனதும் சுத்தம் செய்து வெட்டி வைத்த மீன் துண்டுகளை போட்டு பத்து நிமிடத்தில் இறக்கி வைத்தால் மீன் குழம்பு தயார். 


தட்டில் சூடான வடித்த சாதத்தை போட்டு இந்த குழம்பை ஊற்றி குழம்பில் இருக்கும் பச்சை மிளகாயையும், இரண்டு மீன் துண்டுகளையும் வைத்து சாப்பிட உட்கார்ந்தால், அடடடா எவ்வளவு சாப்பிடுவேன்னு எனக்கே தெரியாது. அமிர்தம் அமிர்தம்னு ஒன்னு சொல்லுவாங்க இல்லையா அது இதுக்கு பக்கத்துல கூட நிக்க முடியாது.

மீன் குழம்புக்கு கரைக்கும் போது மனசு கூட நல்ல மனநிலையில் இருக்க வேண்டும். கோவத்துடனோ அல்லது சண்டை போட்டுக் கொண்டோ கரைத்தால் பக்குவம் வரவே வராது. எதாவது ஒன்று கூடக் கொறைச்சல் போய் விடும். அப்புறம் குழம்பை சாப்பிடும் போது புளிக் குழம்பு போலவோ, காரக் குழம்பு போலவோ போய் விடும் வாய்ப்புள்ளது.

எங்கக்கா ஒன்று தஞ்சையில் இருக்கிறது. அதுவும் பிரமாதமாக கரைக்கும். சென்னையில் எங்க மாமா ஒருத்தர் இருந்தார். அவர் உறவினர்கள் வந்தால் நிறைய மீன் நண்டு வாங்கி வந்து சமைக்கச் சொல்லுவார். ஆனால் மாமிக்கு மாமாவின் உறவினர்களை கண்டாலே ஆகாது, 


அதனால் கண்டமேனிக்கு குழம்பு வைத்து சாப்பிடுவர்களை காலி செய்து விடுவார். நான் சொல்வது தஞ்சைப் பகுதி மீன் குழம்பு. எங்கள் ஊரில் மனோன்மணி மெஸ் என்று ஒரு ஹோட்டல் பழைய ரயில்வே ஸ்டேசன் அருகில் இருக்கிறது. அங்கு மட்டும் தான் இந்த பக்குவத்தில் மீன் குழம்பு கிடைக்கும். வேறெந்த ஹோட்டலிலுமே இந்த சுவையில் மீன் குழம்பு சாப்பிட்டதில்லை.

பூர்வீக சென்னைக்காரர்கள் சற்று வித்தியாசமாக குழம்பு வைப்பார்கள். இதே முறை தான், ஆனால் தேங்காய் சேர்க்க மாட்டார்கள். நல்ல திக்காக காரசாரமாக இருக்கும். சோத்துல தயிர் ஊற்றி குழைய பிசைந்து நடுவே குழி தோண்டி இந்த மீன் குழம்பை ஊற்றி ஒரு வறுவல் மீன் வைத்து சாப்பிட்டால் அய்யய்யய்யோ அந்த சுவையை விவரிக்க வார்த்தைகளே இருக்காது.

ஒரு முக்கிய விஷயம், நான் சொல்வது எல்லாமே எனக்கு தெரிந்த என் நண்பர்கள் வீட்டில் சாப்பிட்ட குழம்பும் அதன் செய்முறையும் மட்டுமே. ஹோட்டல்களில் வரும் விதவிதமான ரெசிப்பிகள் பற்றி குறிப்பிடவில்லை.

கேரளாவில் இன்னும் வித்தியாசமாக இருக்கும். நம்மூர் புளி இல்லாது கொடம்புளி என்றொரு புளி சேர்த்து சமைப்பார்கள். நம்ம ஏரியா குழம்பு மாதிரி புளியை கரைக்காமல் கொடம்புளியை அப்படியே குழம்பில் போட்டு சமைப்பார்கள். தேங்காயை முதல்பால், ரெண்டாம் பால் என இரண்டாக பிரித்து வைத்து ரெண்டாம் பாலில் மசாலா எல்லாம் சேர்த்து சமைத்து மீன் சேர்த்து வெந்ததும் முதல் பாலை சேர்த்து கொதி வரும் முன் இறக்கி வைப்பார்கள்.

அவித்த கப்பக்கிழங்கை மசித்து அதனுடன் இந்த குழம்பை பிசைந்து சாப்பிட்டால் ம்ம்ம்ம்... சொல்ல வார்த்தைகள் இல்லை. எனக்கான பர்சனல் குறை மீன் தான். அவர்கள் மத்தி மீன் சமைப்பார்கள், நான் அந்தளவுக்கு மத்தி மீன் சாப்பிட்டு பழகியதில்லை என்பதால் மீன் குறைவாகத்தான் சாப்பிடுவேன். ஆனால் குழம்பு ருசியை அடிச்சிக்கவே முடியாது.

நான் 17 வயதிலிருந்து வீட்டை விட்டு வெளியில் தங்கி வாழ்ந்தவன் என்பதால் சொந்த சமையல் தான். எப்போ மீன் குழம்பு வைக்க முயற்சித்தாலும் எதாவது ஒன்று அதிகமாகி சொதப்பி விடும். பிறகு என்ன, நான் வச்ச குழம்பை நான் தானே சாப்பிட்டாகனும். மல்லு கட்டி திம்பேன். மறுநாள் முழுக்க வயித்தை கலக்கிக் கொண்டே இருக்கும்.

பத்து வருடங்களுக்கு முன்பு வஞ்சிரம் மீன் வாங்கி நண்பர்கள் ஐந்து பேர் சமைத்தோம். ஒரே மீன் ஐந்து கிலோ என்பதால் முரட்டு மீனாக இருந்தது. வயிற்று பிசுக்கு எல்லாம் அரைத்த தேங்காய், மிளகாய்ப் பொடி, உப்பு, நசுக்கிய பூண்டு கருவேப்பிலை எல்லாம் கலந்த மசாலா போட்டு நல்ல பதமாக வறுத்து வைத்து விட்டு தலையையும் வாலையும் போட்டு குழம்பு வைத்துக் கொண்டு இருந்தேன்.

பெரும்பாலான சமையல் முடிந்ததால் மற்ற நண்பர்கள் சரக்கடித்து சாப்பிடலாம் வாடா என்று கூப்பிட்டார்கள். எங்களுடன் ஒரு ஒரிசா பையன் தங்கியிருந்தான். அவனுக்கு ஹிந்தியும் தெரியாது. ஒரியா மட்டும் தான் பேசுவான். 

அவனிடம் மீன் குழம்பு கொதித்ததும் இறக்கி வைத்து விடு என்று சொல்லி விட்டு நான் போய் சரக்கடித்து நல்ல பசியுடன் வீட்டுக்கு வந்தோம். அந்த ஒரிசா பையன் சென்னையை சுற்றிப் பார்க்க கிளம்பி போய் விட்டான். 

கிச்சனில் பார்த்தால் மீன் குழம்பும் சோறும் மட்டும் தான் இருந்தது. வறுவலை காணவே இல்லை. வறுவல் வைத்து இருந்த தாம்பாளம் வாஷ்பேசினில் இருந்தது. அடடா எல்லாத்தையும் அவனே தின்னுட்டுப் போய்ட்டான்டா என்று என் ரூம்மேட்கள் கடுப்பாகி திட்ட ஆரம்பித்து விட்டார்கள். 

அவன் வந்தவுடன் கச்சேரி வச்சிக்கலாம், இப்ப சாப்பிடலாம், பசிக்கிறது என்று நண்பன் கூற சோத்தைப் போட்டு குழம்பில் கரண்டியை விட்டு கிண்டினால் வறுத்த மீன் எல்லாம் குழம்பில் கிடக்கிறது. சமைக்கும் போது நான் சொன்னதை புரியாத அந்த ஒரிசா பையன் இப்படித்தான் குழம்பு வைக்க வேண்டும் என்று அவனாக நினைத்துக் கொண்டு குழம்பை இறக்கி வைத்ததும், வறுத்த மீனையெல்லாம் குழம்பில் போட்டு போய் விட்டான். 

வறுவலும் கெட்டு குழம்பும் கெட்டு சொதப்பலான சாப்பாட்டை கறுவிக் கொண்டே சாப்பிட்டோம். அவன் எங்கள் ஜிஎம்மின் பர்சனல் அசிஸ்டெண்ட். ஓப்பனா அடிக்கவும் முடியாது. அதற்கு ஒரு திட்டம் போட்டோம்.

நைட்டு வீட்டுக்கு திரும்பி வந்த அந்த ஒரிசா பையனுக்கு விழுந்த அடிக்கு பெயர் தான் ஊமைக்குத்து.

ஆரூர் மூனா

Wednesday, 22 July 2015

பஜ்ரங்கி பாய்ஜான்

பொதுவா ஒரு படம் ரிலீசாகி முதல் நாள் பார்ககவில்லையென்றால் அதற்கப்புறம் அந்த படத்திற்கு போக மாட்டேன். இந்த படம் ரிலீசான அன்று மாரி பார்த்து விட்டதால் இதனை பார்க்கும் எண்ணமே இல்லை. ஜில்மோர் தளமும் பெரிசாக எழுதவில்லை. அதனால் விட்டுவிட்டேன். நேற்று ஒரு வீடியோ பார்த்தேன். இந்த படம் பார்த்து விட்டு ஒரு குழந்தை தேம்பி தேம்பி அழும் காட்சி. 


உடனே முடிவு செய்து கிளம்பி விட்டேன். எனக்கும் சல்மான் கானுக்கும் பெரிதாக கெமிஸ்ட்ரி கிடையாது. அவரது படங்களை நான் விரும்பி பார்த்ததே கிடையாது. சின்ன வயதில் மைனே பியார் கியா. பதின்ம வயதில் ஹம் ஆப்கே ஹெயின் கோன். இப்போ பஜ்ரங்கி பாய்ஜான். சிடில பார்த்ததும், டிவியில் பார்த்ததும் இதில் கணக்குல வராது.

அதென்னவோ ஷாருக், அமீர், சையிப் பிடித்த அளவுக்கு சல்மான் பிடிக்காது. அவரது நெகட்டிவ் இமேஜ் தான் காரணம் என்று நினைக்கிறேன். எல்லா எண்ணத்தையும் இந்த படம் மாற்றி விட்டது.


கதை ஒன்னும் பெர்சா இல்லை. வழி தவறிய குழந்தையை அதன் அம்மாவிடம் சேர்ப்பிக்கும் வழக்கமான கதை தான். ஆனால் அதில் இந்துத்வா, ஜெய்ஸ்ரீராம், இந்தியா - பாகிஸ்தான் என வண்ணம் சேர்த்து கவனிக்க வைத்து வெற்றி பெற்று இருக்கிறார்கள்.

படத்தின் மிகப் பெரிய ப்ளஸ் செண்ட்டிமெண்ட் தான். மக்களின் உணர்வுகளை உசுப்பி விட்டு வெற்றிக் கனியை பறித்து இருக்கிறார்கள். எனக்கு பக்கத்து சீட்களில் ஒரு சேட்டு குடும்பம் அமர்ந்து படம் பார்த்தது. க்ளைமாக்ஸ் காட்சிகளில் அந்த குடும்பத்திலேயே சற்று பெர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரியதாக இருந்த அம்மணி மேரே பச்சோ என்று கதறிக் கதறி அழுதுக் கொண்டு இருந்தார். 

அதை விட கொடுமை அந்த குழந்தை தாயுடன் சேரும் காட்சியில் நானே குமுறிக் குமுறி அழுதேன். கட்டுப்படுத்த முடியவில்லை. ஒரு ஜீன்ஸ் அம்மணி என்னை கவனிப்பது தெரிந்ததால் வெக்கம் வந்து தலையை குனிந்து கொண்டேன். 

என் நண்பன் ஒருத்தன் ஆந்திராவில் உள்ள ஸ்ரீகாகுளத்தில் இருக்கிறான். அவனிடம் பேசிய போது தான் தெரிந்தது, அங்கும் இதே கதை தானாம். மக்கள் தியேட்டருக்கு வந்து குடும்பம் குடும்பமாய் அழுது செல்கிறார்களாம். இணைய பத்திரிக்கைகளில் படித்ததும் தான் தெரிந்தது, வடஇந்தியாவிலும் இதே நிலைமை தான். தக்காளி இந்தியனோட வீக் பாயிண்ட்ல குறி வச்சி அடிச்சி ஜெயிச்சிட்டானுங்க.

சல்மானுக்கும் அவரது அப்பாவுக்குமான புரிதல் சிறப்பாக இருந்தது, எனக்கும் எங்கப்பாவுக்கும் இருந்ததைப் போல. அதனாலேயே என்னால் படத்துடன் முதல் காட்சிகளிலேயே ஒன்ற முடிந்தது.

பாகிஸ்தான் குழந்தையாக வரும் ஹர்ஷாலி மல்ஹோத்ரா சரியான தேர்வு. முக அசைவுகளிலேயே மிக அனாயசமாக எக்ஸ்பிரசன்களை வெளிப்படுத்துகிறார். லட்சணமான களையான முகம். ஒவ்வொரு இடத்திலும் தன் பெயர் பவன், தான் இந்தியன் என்று உண்மையை சொல்லி சல்மான் கான் பிரச்சனையில் சிக்குவார். அதனை சொல்லவேண்டாம் என்று ஹர்ஷாலி ஜாடையிலேயே சொல்லும் காட்சிகளில் பிரமாதமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். அது போல தன் வீட்டை கண்டவுடன் அவரது முகம் மலரும் பாருங்கள். காண கண்கோடி வேண்டும்.


நவாஸுதீன் சித்திக் பாகிஸ்தான் ரிப்போர்ட்டராக வருகிறார். எத்தனையோ படங்களில் அவரது நடிப்பை சிலாகித்து இருப்போம், அவருக்கே இந்த படத்தின் தீனி குறைவு தான். சல்மானுடன் நடந்து ஒரு செக் போஸ்ட்டை கடக்க போலீஸின் ஜீப் சைலன்சரில் வாழைப்பழத்தை வைத்து மடக்கும் போதும், ஹர்ஷாலி வாழைப்பழத் தோலை கீழே போட அதனை சமாளித்து எடுக்கும் போதும், ஒரு வீட்டில் வாசலில் முதியவரிடம் போலீஸை சமாளிக்க போலியாக சண்டை போடும் போதும் கவனிக்க வைக்கிறார்.

கரீனா கபூர் கான். கல்யாணமாகிடுச்சில. அதனால கான் போட்டு தான் ஆகனுமாம். முதல் பாதியில் நாகரீகமாக வந்து, பிரச்சனைகளின் போது சல்மானுக்கு துணை நிற்கிறார். இரண்டாம் பாதியில் சில காட்சிகளில் தலை காட்டுகிறார் அவ்வளவே.

சல்மான்கான் தன் மீதுள்ள சர்ச்சைகளையும் வழக்குகளையும் புறந்தள்ளி ரசிகர்கள் தன்னை மட்டுமே கவனிக்க வேண்டும் என்பதற்காக இது போன்ற கதைகளை கவனமாக தேர்ந்தெடுக்கிறார். நடிப்பெல்லாம் ஒன்றும் சொல்லிக் கொள்ளும்படியில்லை. ஆனால் படத்தில் கவனம் செலுத்தியிருப்பதற்காகவே பாராட்டலாம்.

படத்தில் பெரிதும் கவர்ந்தது பாகிஸ்தான் பஸ் கண்டக்டராக வரும் கதாபாத்திரம் தான். இயல்பாக பிரச்சனைகளை புரிந்து கொண்டு வரம்பு மீறாமல் உதவும் அந்த கேரக்டர் என்னை ரொம்பவே கவர்ந்தது. அதற்கடுத்த இடம் ஓம்புரிக்கு.

என்னதான் பெரிசா படத்தை கொண்டாடினாலும் படத்தில் க்ளைமாக்ஸ் காட்சிகளில் நன்றாக மசாலாவை நொறுங்க அரைத்து மணக்க மணக்க நம் காதுகளில் தடவி விடுகிறார்கள். இது போன்ற விஷயங்களை குறைத்து இருந்தால் விமர்சகர்களிடம் இருந்தும் பெரும் பாராட்டுகள் வந்து சேர்ந்து இருக்கும்.

இந்தியாவில் இருக்கும் இந்துக்கள் எல்லோருமே இந்துத்வாக்கள் என்றும், அனைவருமே ஜெய்ஸ்ரீராம் என்று தான் வணக்கத்தை சொல்வார்கள் என்றும் காட்சிப்படுத்தப் பட்டு இருப்பது கூட ஓவர்டோஸ் தான்.

படத்தில் பாகிஸ்தான் பகுதியாக வரும் பகுதிகள் சரியாக தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றன. அந்த பாகிஸ்தான் மதரஸா, பாகிஸ்தான் வீட்டு கதவுகள், பஸ்கள் என பலவும் கவனிக்க வைத்தன. 

சந்தேகமில்லாமல் பஜ்ரங்கி பாய்ஜான் சல்மான்கானுக்கு மிகப் பெரிய சூப்பர் ஹிட் படம் தான்.

ஆரூர் மூனா

Thursday, 16 July 2015

மாரி - சினிமா விமர்சனம்

இன்று வில்லிவாக்கம் ஏஜிஎஸ் திரை வளாகத்தில் உள்ள 5 தியேட்டர்களிலும் 9 மணிக்காட்சி மாரி தான். அத்தனை அரங்குகளும் ஹவுஸ்புல். படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எந்தளவுக்கு இருந்தது என்பதற்கு சாம்பிள். காரணம், தனுஷின் முந்தைய படங்களான விஐபி மற்றும் அனேகன் படங்களின் வெற்றி.


திருவெல்லிக்கேணி பகுதியில் மாமூல் வசூல் செய்து கொண்டும், ஏரியா மக்களை மிரட்டி ரவுடியிசம் செய்து கொண்டும், புறா பந்தயத்தில் ரொம்ப வருடங்களாக ஜெயித்துக் கொண்டும் இருப்பவர் தனுஷ். 

செம்மரக் கடத்தலில் பெரிய ஆளாக இருக்கும் சண்முக ராஜேஸ்வரனிட்ம் கப்பம் கட்டி வாழ்ந்து வருகிறார். அவரிடம் இன்னொரு கையாளாக இருக்கும் மைம் கோபி தனுஷின் இடத்தை பிடிக்க முயற்சிக்கிறார். அந்த ஏரியா ஸ்டேஷனுக்கு எஸ்ஐயாக வரும் விஜய் யேசுதாஸ் உதவியுடன் சதி செய்து தனுஷை உள்ளே தள்ளி ஏரியா தாதா ஆகின்றார். 


வெளியே வரும் தனுஷ் சதி வேலைகளை முறியடித்து தன் இடத்தை திரும்ப அடைந்தாரா என்பதே மாரி படத்தின் தோராயமான கதை. 

தனுஷ் ஒரு மாஸான படம் நடிக்க ஆசைப்பட்டு இருக்கிறார். அதற்கேற்றாற் போல அமைந்திருக்கிறது படம். படம் முழுக்கவே ஸ்டைலாக நடந்து வந்தும், பஞ்ச் டயலாக் பேசியும் ரசிகர்களை மகிழ்விக்கிறார். அனுபவித்து நடித்து இருக்கிறார். 

ரொம்ப வருடங்களாக சினிமாவில் பெரிய ஆளாக முயற்சித்து வந்த ரோபோ சங்கர் இந்த படத்தின் மூலம் சோலோ காமெடியன் ஆகி வெற்றி பெற்று இருக்கிறார். அவர் தான் இந்த படத்தின் ஆகச் சிறந்த ப்ளஸ். தனுஷ்க்கு நிகராக படத்தில் கைத்தட்டல் பெறுகிறார். இவரது என்கவுண்ட்டர் டயலாக்குகள் தான் படத்தை ரசிக்கவே வைக்கின்றன. மனிதர் இது போல் பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராக வாழ்த்துக்கள்.


நாயகியாக காஜல் அகர்வால், நாயகனின் கூட இருந்து கழுத்தறுக்கும் வித்தியாசமான கதாபாத்திரம். இவருக்கு மைனஸ் இருக்கிறது. சில ஆங்கிள்களில் பார்த்தால் டொங்கு போல இருப்பார். இந்த படத்தில் அந்த ஆங்கிள்களில் பல காட்சிகளில் வருகிறார். பார்க்க நமக்கு தான் கஷ்டமாக இருக்கிறது. 

வில்லனாக அறிமுகம் விஜய் யேசுதாஸ். ஆரம்ப காட்சிகளில் பில்ட்அப்களை கொடுக்கும் போது ஏதோ செய்யப் போகிறார் என்று எதிர்ப்பார்த்தால் திடீரென வில்லனாக ட்விஸ்ட் கொடுக்கிறார். 

இதற்கு முன்பு பாடல்களை கேட்கவில்லை என்பதால் படத்தில் பார்க்கும் போது பெரிதாக ஈர்க்கவில்லை. 


படத்தில் எனக்கு பிடித்த ஒரே ஒரு காட்சி, தனுஷிடம் இருந்து ஏரியா கையை விட்டுப் போன பிறகு முயற்சி எடுத்து சண்முகராஜேஸ்வரனையும் தன் ஏரியா ஆட்களையும் ஜெயிலில் இருந்து வெளியே எடுத்த பிறகு தன் ஏரியாவில் டேபிள் சேர் போட்டு அமர்ந்து பிஜிலி வெடிகளை எடுத்து பற்ற வைத்து வில்லன் ஆட்கள் மீது போட்டு வெடிக்க வைத்து கலாய்க்கும் போதும், மாமூல் வாங்க வந்த வில்லன் ஆட்களை தவிர்த்து ஏரியா மக்கள் தனுஷிடமே வந்து மீண்டும் மாமூல் கொடுக்கும் காட்சி மட்டும் தான். 

மற்றபடி படம் சுமார் தான். படத்தில் காளி கொடுக்கும் பில்ட்அப்புகளுக்கு ஏற்ப தாதா ப்ளாஷ்பேக்கோ, தனுஷிடம் முரட்டுத்தனமோ இல்லை. அது தான் படத்தை பெரிதும் ஆட்டம் காண செய்கிறது. ரெண்டு காமெடி அல்லக்கைகளை வைத்துக் கொண்டு தனுஷ் எப்படி ஒரு ஏரியாவை கண்ட்ரோல் செய்கிறார் என்பதை நம்ப முடியும்.

அவரது காமெடி ரவுடியிசமும், ஹீரோயிசமும் எடுபடவேயில்லை. செஞ்சிடுவேன், செஞ்சிடுவேன் என்று சொல்லிக் கொண்டே இருக்கிறாரே தவிர ஒன்னுமே செய்யவில்லை என்பது தான் வருத்தமே.

புறா பந்தயம் பற்றிய டீடெயிலிங் பிரமிக்க வைக்கிறது. அதையே களமாக எடுத்து ரவுடியிசத்தை குறைத்து இருந்தால் கூட படம் நல்லா வந்து இருக்குமோ என்னவோ.

இந்த வார இறுதி முழுக்க எல்லா அரங்குகளும் ஹவுஸ்புல் ஆகி விட்டது. அதனால் வசூலுக்கு குறைவிருக்காது. ஆனால் திருப்திப்படுத்துமா என்று கேட்டால் ப்ச் தான் பதிலாக இருக்கும்.

ஆரூர் மூனா

Monday, 13 July 2015

ஆரூர் மூனா எக்ஸ்பிரஸ் - 10

ரயில்வேயில் இப்போது  BE மற்றும் Diploma முடித்தவர்களுக்கு இளநிலை பொறியாளர் மற்றும் முதுநிலை பொறியாளர் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நேரம் என்பது அனைவரும் அறிந்ததே.


வெறுமனே விண்ணப்பித்து விட்டு நாமே படித்து தேர்ச்சி பெற்று விடலாம் என நினைத்து அசிரத்தையாக இருந்து விட வேண்டாம். போட்டி கடுமையாக இருக்கும். விண்ணப்பிப்பவர்கள் எண்ணிக்கையும் இந்திய அளவில் இருப்பதால் கண்டிப்பாக இதற்காக நீங்கள் உழைக்க வேண்டும்.

இதற்கென பயிற்சி நிலையங்கள் சென்னையில் அண்ணாநகர் மற்றும் தி நகரில் நிறைய இருக்கின்றன. அவற்றில் தகுதியாக பயிற்சி நிலையத்தை தேர்ந்தெடுத்து சேர்ந்து படியுங்கள். அவர்கள் தரும் மாதிரி தேர்வுகள் உங்களை மெருகேற்றும். தேர்வு பற்றிய புரிதலை உண்டாக்கும். 


எனக்கு தெரிந்து ஆந்திராவில் உள்ள நண்பர்கள், அவர்களின் உறவினர்கள் அது போல் உள்ள பயிற்சி நிலையங்களில் சேர்ந்து படித்துக் கொண்டு இருக்கின்றனர். என்னால் முடியும், நானே படித்து தேர்ச்சி பெறுவேன் என்று நினைப்பது சற்று சிரமத்தை தான் உண்டாக்கும். 

நண்பர்ளே, தேர்ச்சி பெற்று ரயில்வேயில் பொறியாளர் ஆக வாழ்த்துக்கள்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

எங்களது அலுவலகத்தில் ரயில்வே பற்றிய ஆவணங்கள் உள்ளது. அவற்றில் இருந்து கிடைத்த சில துணுக்குகள். சில ஆச்சரியம் தருகிறது.

GT Express என்பது Madras and southern Mahratta Railway ஆல் 1929 அப்போதைய பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த வடமேற்கு எல்லைப் புறமாகாணத்தின் தலைநகராக இருந்த பெஷாவரிலிருந்து அப்போதைய மெட்ராஸ் மாகாணத்தில் இருந்த மங்களூருக்கும் இடையே இந்த ரயில் சேவை ஆரம்பிக்கப் பட்டது. 

இந்த ரயில், இந்த தொலைவை எடுத்துக் கொண்ட நேரம் 104 மணிநேரம். சுதந்திரத்திற்கு பிறகு இறுதியாக புது தில்லியிலிருந்து சென்னை வரை செல்லும் ரயிலாக மாற்றப்பட்டது.

----------------------------------------------------

Boat Mail என்பது தனுஷ்கோடி தலைமன்னார் மார்க்கம் 1914ல் பாம்பன் பாலம் கட்டி முடிக்கப்பட்ட பின் போட் மெயில் சென்னையிலிருந்து தனுஷ்கோடி வரை இயக்கப்பட்டது. தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னார் வரை கப்பலிலும், தலைமன்னாரிலிருந்து கொழும்பு வரை இலங்கை ரயிலிலும் செல்ல வேண்டும். 

தனுஷ்கோடியிலிருந்து தலைமன்னார் செல்லும் தொலைவு 35 கிமீ. 1964 வீசிய புயலில் தனுஷ்கோடி மூழ்கி விட்டதால் இந்த ரயில் நிறுத்தப்பட்டு ராமேஸ்வரம் வரை இயக்கப்பட்டது.

----------------------------------------------------

சென்னை கடற்கரை - தாம்பரம் இடையேயான மின்சார ரயில் 02.04.1931 முதல் இயக்கப்பட்டது.

----------------------------------------------------

எழும்பூர் ரயில் நிலையம் 

எழும்பூர் ஒரு காலத்தில் வெடி பொருட்களை சேமித்து வைக்கும் கிடங்காக இருந்தது. எழும்பூர் ரயில் நிலையம் 2.5 ஏக்கர் நிலத்தில் கட்டப்பட்டு உள்ளது. இதில் 1.8 ஏக்கர் Dr. Paulandy (உண்மையில் அவரது பெயர் Dr. Palanyandi) என்பவரிடமிருந்து South Indian Railway Companyஆல் வாங்கப்பட்டது. பிறகு இங்கிலாந்திலிருந்து ஹென்றி இர்வின் என்ற சீப் இஞ்சினியர்  மற்றும் E.C. Bird என்ற ஆர்க்கிடெக்ட் ஆகியோரை வரவழைத்து வடிவடிவமைக்கப்பட்டது. 

செப்டம்பர் 1905ல் தொடங்கப்பட்டு 1908ல் முடிக்கப்பட்டு ஜுன் 11 1908 அன்று எழும்பூர் ரயில் நிலையம் தொடங்கப்பட்டது. கரயில் நிலையத்தை காண்ட்ராக்ட் எடுத்து கட்டியவர் பெங்களூரை சேர்ந்த சாமிநாதப் பிள்ளை. ரயில் நிலையத்தை கட்டி முடிக்க ஆன செலவு ரூ 17,00,000/-.

----------------------------------------------------

சுல்தான், சிந்த் மற்றும் சாஹிப் 1853-ல் முதன் முதலில் இயக்கப்பட்ட ரயிலை இழுத்த 3 ஸ்ட்ரீம் என்ஜினின் பெயர்கள்.

ஆரூர் மூனா

Friday, 3 July 2015

பாபநாசம் - சினிமா விமர்சனம்

இன்னிக்கி மாநிலத்தின் சி சென்டர் நகரத்திற்கு விஜயமானதால் அதிகாலை காட்சிக்கெல்லாம் முயற்சிக்கவே இல்லை. முயன்றாலும் காட்சி கிடையாது என்பது வேறு விஷயம். ஏற்கனவே திருஷ்யம் படத்தை மலையாளத்தில் 10 முறைக்கும் மேலாக, தெலுகில் கூட நாலைந்து முறை, கன்னடத்தில் ஒரு முறை என கண்டமேனிக்கு பார்த்து தொலைத்ததால் படத்திற்கு போகும் எண்ணமெல்லாம் இல்லை.


சிவாவின் ரன்னிங் கமெண்ட்ரிக்கு பிறகு மதியம் ஒரு வாறாக மனதை தேற்றி படத்திற்கு போகலாம் என்று முடிவெடுத்தவுடன் ஒரு நடராஜ் அழிரப்பரை எடுத்து திருஷ்யம் நினைவுகளை பரபரவென அழித்தேன். எம்ப்டி ஸ்லேட்டாக அரங்கிற்கு சென்றால் வேதனை, அவமானம், வெக்கம். கமலஹாசன் படத்திற்கு முதல் நாள் இரண்டாம் காட்சிக்கு வந்திருந்தவர்கள் எண்ணிக்கை 30 மட்டுமே. 

கொஞ்ச நாளைக்கு முன்பு நம்ம சைன்ட்டிஸ்ட் முரளிக்கண்ணன் அவர்கள் இது பற்றி ஸ்டேட்டஸ் போட்ட போது ஏகப்பட்ட பேர் அந்த பதிவுக்கு போய் எதிர்வினையாற்றினார்கள். ஆனால் சைன்ட்டிஸ்ட்  சொன்னது என்பது தான் உண்மை. அதிபுத்தசாலித்தனத்தை காட்டும் விதமாக எந்த த்ரிஷ்யம் படத்தையும் ஒப்பிடாமல் படத்தை புதியதாக பார்த்தது போலவே பார்த்து எழுதிய ஒரு சி சென்ட்டர் ரசிகனின் விமர்சனம்.


தன் குடும்பமே தன் உலகம் என வாழும் நாயகன். அவரது குடும்பத்தை ஒரு மரணம் சிக்கலில் விடுகிறது. அதிலிருந்து எப்படி லாவகமாக வெளியில் வந்தான் என்பதே பாபநாசம் படத்தின் கதை. மிகச்சிறந்த த்ரில்லர் படமாதலால் பார்ப்பவர்கள் திரையில் கண்டு ரசித்தால் இந்த படம் ஒரு மிகச்சிறந்த அனுபவமாக அமையும்.

சென்னை போன்ற பெருநகரங்களில் உள்ள மிகச்சில சினிமா ஆர்வலர்கள் வேண்டுமானால் மலையாளத்தில் படத்தை பார்த்து விட்டு காட்சிக்கு காட்சி ஒப்பிட்டு குறைகளை சொல்லலாம். ஆனால் சிறுநகரங்களில் படத்தின் திருப்பங்களை முன்னரே அறியாதததால் படத்தை ரசித்து பார்க்கிறார்கள். அந்த வகையில் இந்த படம் தான் சீட் நுனிக்கு வர வைக்கும் ஆகச் சிறந்த பொழுது போக்கு சித்திரம்.


கமல் தளர்ந்து இருப்பதை பார்க்கும் போது பகீர் என்று இருக்கிறது. இந்த படத்திற்காக இப்படி ஆனாரா அல்லது முதுமையா என்பது அவருக்கு தான் தெரியும். க்ளைமாக்ஸில் ஆஷா சரத் மற்றும் ஆனந்த் மகாதேவன் இருவரிடமும் தன் குடும்பத்தையும் அதற்காக தான் செய்ததையும் குற்ற உணர்வுடன் சொல்லி கண்கலங்கும் இடத்தில் தெரிகிறது கமல் ஏன் சிறந்த நடிகர் என. வருடத்திற்கு ஒரு படம் உங்கள் ரசனைக்கும், எங்கள் ரசனைக்கு பாபநாசம் போன்ற படங்களிலும் நடியுங்கள். என்றுமே நீங்கள் மக்கள் மனதில் உயர்ந்த இடத்தில் இருந்து கொண்டே இருப்பீர்கள். 

கௌதமி வயதானதாலும், நோய்க்கு எடுத்த மருந்துகளின் விளைவாலும் பொலிவிழந்து இருக்கிறார். முகத்தில் சதை தொங்குகிறது. அது தான் அவரை ஆண்ட்டி என்ற இடத்தில் வைத்து ரசிக்க வைக்க விடாமல் தடுக்கிறது. நல்ல கட்டுக்கோப்பான (!)  நடிகையை நடிக்க வைத்திருந்தாலும் பட்டையை கிளப்பியிருக்கும்.


கமலின் பெண்களாக வரும் இருவருமே சிறந்த நடிப்பை பதட்டப்படும் போது வெளிப்படுத்தியுள்ளனர். நிவேதா தாமஸ் பள்ளியில் போலீஸிடம் பதட்டத்தை கட்டுப்படுத்தி இயல்பாக பதில் சொல்லும் போது கவர்கிறார். சின்னப் பெண்ணும் க்ளைமாக்ஸில் புதைக்கப்பட்ட இடத்தை காட்டி விட்டு வந்து கமலிடம் வந்து பதில் சொல்லும் போது கவனிக்க வைக்கிறார்.

கலாபவன் மணி எப்படி இருந்த நான் இப்படியாகிட்டேன் என்பது போல் இருக்கிறார். அவருக்கு கிட்னி பிரச்சனை அல்லது லிவர் பிரச்சனை இருக்கும் என்று நினைக்கிறேன். முகத்தில் நோயின் தீவிரம் தெரிகிறது. அதை தாண்டி காட்டும் எக்ஸ்பிரசன்கள் எடுபடவில்லை.

ஆஷா சரத் நடிப்பில் மிரட்டியே பிரமாதப்படுத்தி விடுகிறார். நியாயமாக பார்த்தால் ப்ரச்சோதகம் கேட்டகிரியில் வர வேண்டியவர் பயானகம் கேட்டகிரிக்கு வலு சேர்க்கிறார்.

எந்த காட்சியையும் விளக்கி விவரப்படுத்தி உங்கள் சுவாரஸ்யத்தை குறைக்கும் எண்ணமில்லை.  முடிந்த வரை படத்தை திரையில் பார்க்க தவறாதீர்கள். 

மிகச் சிறந்த ஆகச் சிறந்த (இலக்கியவாதி ஆகிக்கிட்டு இருக்கோம்ல) த்ரில்லர் மூவி. பார்த்து மகிழுங்கள். 

ஆரூர் மூனா