Sunday, 1 February 2015

உளவாளி ஜானி (Johny English Reborn)- திரைப்பட விமர்சனம் - பழசு

ஜானி இங்கிலீஷ் ரீபார்ன் படம் தமிழில் பார்க்கலாம் என்று இன்று மதிய காட்சி மினிமோட்சம் தியேட்டருக்கு சென்றிருந்தோம், ஒருவன் வருவதற்கு லேட் ஆகியதால் படம் போட்டு பதினைந்து நிமிடத்துக்கு பிறகு தான் உள் நுழைந்தோம். ஒரு டிக்கெட் ஐம்பது ரூபாய், சென்னையில் இவ்வளவு கம்மி விலையில் சினிமாவா என்று ஆச்சரியப்பட்டு உள்ளே சென்றால் தான் தெரிந்தது ஏன் ஐம்பது ரூபாய் என்று. படத்தில் க்ளாரிட்டியே இல்லை, ப்ரோஜக்டர் படு மோசம். ஒரு இருபது வருடத்துக்கு முன்பு டூரிங் டாக்கீஸில் படம் இப்படி தான் தெரியும். கஷ்ட காலம்டா சாமி.

சரி படத்தின் கதைக்கு வருவோம், ஜானி (ரோவன் ஆட்கின்சன்) ஒரு ரகசிய ஏஜெண்ட். அவரின் உதவியாளர் ஒருவர் பெயர் தெரியவில்லை. இருவரும் ஓரு மிஷன் காரணமாக ஹாங்காங் சென்று டெரரிஸ்ட் ஒருவரை சந்திக்கின்றனர், அவரிடம் ஒரு நாட்டின் அதிபரை கொலை செய்யும் திட்டம் பற்றி அறிகின்றனர், கொலை செய்வதற்குரிய ஆயுதத்தின் செயல்படுத்தும் சாவி மொத்தம் மூன்று பேரிடம் உள்ளது எனவும் அதில் ஒருவர் அந்த டெரரிஸ்ட் தான் எனவும் அறிகின்றனர். பேசிக்கொண்டிருக்கும் போதே ஒரு வில்லிக்கிழவியால் சுடப்பட்டு அந்த டெரரிஸ்ட் இறக்கின்றார். அந்த சாவி வில்லன் கையில் சிக்குகிறது. அவரது அரசாங்கத்திடம் திட்டு கிடைக்கிறது. மீண்டும் மற்ற இரண்டு சாவிகளை கைப்பற்றும் பொறுப்பு அவரிடம் கொடுக்கப்படுகிறது, இரண்டாவது ஆள் ஒரு ரஷ்யன் என்று விவரம் தெரிந்து ரஷ்யனிடம் இருந்து இரண்டாவது சாவியை கைப்பற்ற இருவரும் கால்ப் விளையாடுவது போல் சென்று அவருடன் விளையாடிக் கொண்டிருக்கும் போது அந்த ரஷ்யனும் வில்லிக்கிழவியால் சுடப்படுகிறார். அவரைக் காப்பாற்ற ஜானியும் அவரது உதவியாளரும் ஹெலிகாப்டர் எடுத்துக் கொண்டு செல்கின்றனர். வழியில் மூன்றாவது ஆள் ரகசிய ஏஜெண்ட்களில் ஒருவர் என்று விவரம் சொல்லி ரஷ்யன் செத்துப் போகிறார். அவரிடம் இருந்த சாவி ஜானியிடம் கிடைக்கிறது. அவர் நாட்டின் பிரதமருடன் நடக்கும் ரகசிய ஏஜெண்ட் குழு மீட்டிங்கில் மூன்றாவது ஆளை நாளைக்குள் கண்டு பிடிப்பதாக கூறுகிறார். ஜானியின் உதவியாளர் மூலம் அந்த வில்லன் யாரென்று தெரிகின்றது, ஆனால் அந்த வில்லன் முந்திக் கொண்டு ஜானி தான் அந்த ரகசிய ஏஜெண்ட் என்று அரசாங்கத்திடம் சொல்லி நம்ப வைக்கின்றார். நாட்டின் உளவுத்துறை அவரை துரத்துகிறது, அவர் அவர்களிடமிருந்து தப்பித்து தன் தோழியும் ரகசிய ஏஜெண்டுமான கதாநாயகியின் வீடடில் தஞ்சமடைகிறார். அவரிடம் உள்ள டாக்குமெண்டடுகளின் மூலம் வில்லன்களின் ஆயுதம் ஒரு மருந்து என்றும் அதை யார் உடம்பில் செலுத்துகிறோமோ அவர் அவர்கள் சொல்படி நடப்பர் என்றும் அதன் மூலம் கொலை செய்யப்படுகிறது என்பதையும் அறிகின்றார். அவர்கள் அந்த நாட்டின் பெரிய பெண் அதிகாரி மூலம் அந்த நாட்டிற்கு வரும் வேறு நாட்டு அதிபைர கொலை செய்ய திட்டமிடுகின்றனர் என்பதையும் அறிகின்றார். அதை தடுக்க அவர் முயற்சிக்கும் போது அவரே தவறுதலாக அந்த மருந்தை குடித்து விடுகிறார். அதன் மூலம் ஜானியையே கொலை செய்ய அனுப்புகின்றனர். அவர் கொலை செய்தாரா இல்லை திட்டத்தை முறியடித்து வில்லன்களை பிடித்தாரா என்பதே படம். அப்பாடா.

மற்றவர்களெல்லாம் எப்படி விமர்சனம் எழுதுகிறார்களோ, படம் பார்த்து விட்டு வந்ததும் படத்தில் உள்ள கேரக்டர்களின் பெயர்களெல்லாம் மறந்து விடுகிறது, கஷ்டம்டா சாமி.

படத்தின் மூலமே ரோவன் ஆட்கின்சன் தான். காமெடி சான்சே இல்லை. நீண்ட நாட்களுக்கு தியேட்டரில் கண்ட்ரோல் செய்ய முடியாமல் விழுந்து விழுந்து சிரித்த படம் இது தான்.

ரஷ்ய வில்லனை காப்பாற்ற ஹெலிகாப்டர் எடுத்து ஆஸ்பத்திரி செல்லும் போது வழி தெரியாததால் சாலைகளின் ஊடாக ஹெலிகாப்டரை ஓட்டி செல்லும் போது சிரிப்பில் தியேட்டர் அதிர்கிறது. அதே போல் வில்லிக்கிழவி என்று நினைத்து ஒவ்வொரு முறையும் வேறு ஒரு கிழவியை பிடித்து அடிக்கும் போது சிரித்து வயிறு வலிக்கிறது. இன்னும் நிறைய காட்சிகள் படம் முழுவதும் உள்ளது, சொன்னால் பார்க்கும் போது உங்களுக்கு சுவாரஸ்யம் போய் விடும், எனவே அனைவரும் தியேட்டரில் சென்று பார்த்து விட்டு நன்றாக சிரித்து மகிழுங்கள்,

ஆரூர் முனா

சினிமா விமர்சனம் - பழசு

திரைப்படத்துக்கு விமர்சனம் எழுதுவதற்கு பதிலாக விவேக் சொன்ன மாதிரி கேரளாவுக்கு அடிமாடா போகலாம். என்னா பொழப்புடா இது, நம்ம கேபிள் அண்ணே, ஜாக்கி அண்ணே, சிபி அண்ணே மற்றும் பலர் எழுதும் விமர்சனங்களை பார்க்கும் போது நாமெல்லாம் செல்லாக்காசு போல் தோன்றும்.

இத்தனைக்கும் இத்தனை பதிவர்களுக்கு நான் சவால் விடுவேன். என்னைப்போல் சினமா பார்க்க இன்னொருவர் பிறந்து வரணும். உதாரணம் வேண்டுமா ஒரே நாளில் திருவாரூரில் மாணிக்கம், சிவசக்தி, மேட்டுக்குடி மற்றும் வேறு வேலையாக மதுரை சென்று அங்கு தேவர் பூஜையன்று வேறு வழியில்லாமல் வெளியில் வரமுடியாமல் இருந்த காரணத்தால் ஒரே நாளில் பார்த்த பாபா, பைவ் ஸ்டார், ரன் மற்றும் பல நாட்கள் பல படங்கள் என் நினைவில் இருக்கின்றன.

ஆனால் மேற்கூறிய சினிமா விமர்சன சீனியர்கள் போல் என்னால் சினிமா விமர்சன பதிவிட முடியாது. ஏனென்றால் எழுத்து என்பது என்னால் படிப்பது என்றளவில் இருக்கிறதே தவிர எழுதுவது என்பது இன்னும் நான் வளர்த்துக் கொள்ள வேண்டிய கலை, நான் இனிமேல் எழுதி எழுதி என்னை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

ஆனால் ஒன்று புரிகிறது, நான் எழுதியது இரண்டே இரண்டு சினிமா விமர்சன பதிவுகள் தான், ஆனால் இரண்டும் மொக்கை என எனக்கு தெரியும். ஆனால் என்னுடைய பலம் அதே நாளில் பதிவெழுதுவது மட்டும் தான். இந்த இரண்டு பதிவு நாட்களில் மட்டும் என் பிளாக் ஹிட்கள் தினம் 2000. மற்ற நாட்களில் 750 வருவதற்கு கூட முக்குகிறது. சரியோ தப்போ எவனோ பல கோடி செலவு செய்து எடுத்த படத்தை நான் எப்படி விமர்சனம் செய்யலாம் என்று யாராவது வீட்டில் வந்து அடிப்பார்களோ என்று யோசித்து இருந்த நாட்கள் எல்லாம் உண்டு. ஆனால் சுயநலமாக சொல்கிறேன், படத்தை வெளியான அதே நாளில் விமர்சனம் செய்தால் மட்டுமே ஹிட் கிடைக்கும். இப்படியெல்லாம் டகால்டி செய்தால் மட்டுமே ஹிட் கிடைக்கும். அது மட்டும் புரிகிறது.

சில சமயங்களில் எனக்கு நானே யோசித்து கொள்கிறேன். இப்படி நாலு பேரை ஏமாத்தி ஹிட்ஸ் வாங்குறது ஒரு பொழப்பா? ஆனா மற்றவர்களை பாரக்கும் போது எனக்கும் தேவைப்படுகிறது. ஒன்று மட்டும் உண்மை அரசியலில் மட்டுமல்ல பதிவுலகிலும் சாணக்கியத்தனம் செய்து பெரிய ஆள் ஆவதே பலரின் லட்சியம் என்று புரிகிறது. நானும் அவர்களுடன் சேர்ந்து கொள்கிறேன்.

இனிமேல் விமர்சனம் என்ற பெயரில் ஏமாற்ற போகும்

ஆரூர் முனா 

வெடி படம் விமர்சனம் - பழசு

இன்று மூன்று படம் ரிலீஸ் ஆகியிருப்பதால் எதாவது ஒரு படம் பார்க்கலாம் என்று அம்பத்துர் ராக்கி தியேட்டருக்கு நானும் என் நண்பர்களும் சென்றோம். வாகை சூடவா ஞாயிறு அன்று என் மனைவியுடன் செல்லும் திட்டம் இருப்பதால் அதை தவிர்த்து வெடி அல்லது முரண் பார்க்கலாம் என்று சென்று டிக்கெட் கவுண்டரில் கேட்டால் முரண் மதிய காட்சி இல்லை என்று கூறியதால் வெடி படம் பார்க்கலாம் என்று டிக்கெட் எடுத்தேன். டிக்கெட் விலை நூறு ரூபாய்னு சொன்னானுங்க. நாலு டிக்கெட் நானூறு ரூவாயாயம். முழுசா நாலு நாளைக்கு நாலு குவாட்டர் அடிச்சிருக்கலாம், ம்ஹூம்,என் நண்பன் வேணாம்டா டிரெய்லரே பயமுறுத்துகிறது, என்றான் அப்படி என்னதான் என்று பார்க்கலாம் வாடா என்று கூறி உள்ளே சென்றோம், அதுதான் நாங்கள் செய்த தப்பு. அதைப்பற்றி பிறகு பார்ப்போம், முதலில் படத்துக்கு வருவோம்,

படத்தின் கதை என்ன? அதுக்கு முன்னால் ஒரு விஷயம். இரண்டு நாட்களுக்கு ஒரு தெலுங்கு படம் ஜெமினி டிவியில் வந்தது, படத்தின் பெயர் செளர்யம் என்று நினைக்கிறேன். முன்பே அந்த படத்தின் ரீமேக் தான் இது என்று தெரியாது தெரிந்திருந்தால் போயிருக்க மாட்டேன், அங்கு தான் விதி விளையாடியிருக்கிறது.

விஷால் கொல்கத்தாவுக்கு வருகிறார், அங்கு பூனம்மை சந்தித்து நட்பாகி அவரால் சமீரா ரெட்டி வீட்டில் பேயிங் கெஸ்டாக தங்குகிறார். பூனம்மிற்கு உதவிகள் செய்து அவரது பாதுகாவலராக இருக்கிறார், அப்பொழுது வில்லன் ஷாயாஜி ஷிண்டேவி்ன் கும்பல் தூத்துக்குடியிலிருந்து அவர்களை தேடி கொல்கத்தா வருகிறது. அங்கு அவர்களை கணடுபிடித்து பூனம்மை கடத்தி செல்கிறது. போகும் வழியில் விஷால் வழிமறி்த்து அவர்களை தாக்குகிறார். அப்பொழுது தான் சொல்கிறார், பூனம் தனது தங்கை என்று கூடவே வில்லனின் மகனை கொலை செய்கிறார், இன்டர்வெல் வருகிறது.

என் நண்பன் என்னை போட்டு அடித்தான், நான் தான் அப்பவே சொன்னேன்ல. ஏண்டா டிக்கெட் எடுத்த என்று, அதற்கு தண்டனையாக பாப்கார்ன், கூல்டிரிங்ஸ் செலவு என் தலையில் கட்டப்பட்டது. வெளியில் சென்றால் பல குமபல் பல பேரை போட்டு அடித்துக் கொண்டு இருந்தார்கள், அப்போது தான் எனக்கு உயிரே வந்தது, அப்படா தியேட்டரில் கம்பெனிக்கு பலர் உள்ளனர் என்று ஆறுதல் அடைந்து கொண்டேன். என்னடா படத்தை விட்டு விட்டேன் என்று பார்க்கிறீர்களா? சரி உங்க தலையெழுத்து படத்துக்கு வருவோம்.

அடிபட்ட பூனம் ஆஸ்பத்திரியில் இருக்கிறார். சமீரா ரெட்டி அவரது பெற்றோர்களிடம் முன்கதை சுருக்கத்(1)தை சொல்கிறார். அவரது அப்பா பெரிய ரெளடியாக இருந்து செத்துப் போகிறார். சிறுவயது விஷாலும் பூனமும் சாப்பிட கூட வழியில்லாமல் பசியில் தவிக்கின்றனர், அப்பொழுது ஒரு கிறிஸ்துவ பாதிரியார் அனாதை பெண்குழந்தை என்று பூனம்மை அழைத்துச் செல்வதாக கூறுகிறார். தங்கைக்கு சாப்பாடு கிடைக்கும் என்பதால் அவரை யாரென்று தெரியாது என்று கூறுகிறார். அதனால் தங்கை அவரை வெறுக்கிறார், முன்கதை சுருக்கம் (1) ஓவர். வில்லனின் மகனை கொன்றதால் வில்லன் கும்பல் மீண்டும் அவரையும் சமீராவையும் துரத்துகிறது. அவர்களையெல்லாம் சும்மா சுளுக்கெடுத்து விட்டு முன்கதைசுருக்கத்(2)தை சமீராவுக்கு சொல்கிறார். அவர் ஒரு போலீஸ் ஐபிஎஸ் ஆபீசர். தூத்துக்குடியில் அராஜகம் பண்ணும் ஷாயாஜி ஷிண்டேவை அடக்குகிறார். அவரை ரவுடியிசம் செய்ய விடாமல் தடுக்கிறார்.ஜெயிலுக்கு அனுப்புகிறார். தங்கை பற்றிய விவரம் தெரிந்ததால் வேலைக்கு லீவு போட்டு விட்டு கல்கத்தா புறப்படுகிறார், முன்கதை சுருக்கம் (2) ஓவர், அப்புறம் என்ன வில்லன் தங்கையை கடத்தினாரா? தங்கைக்காக விஷால் அடி வாங்கினாரா? வில்லனை அடித்து படத்தை முடித்தாரா? என்பதை காசு கொடுத்து டிக்கெட் வாங்கி பார்த்து ஜென்ம சாபல்யம் அடைந்து கொள்ளவும். ஏனென்றால் பிளாஷ்பேக் முடிந்ததும் நாங்கள் வெளியில் வந்து விட்டோம். நாங்கள் மட்டுமல்ல திரையரங்கில் இருந்த பாதிக்கூட்டம் வந்து விட்டது

ஸ்ஸ்ஸ் அப்ப்ப்பா இதை டைப் பண்ணும் போதே கண்ண கட்டுதே.

படத்தில் விவேக்கும் இருக்கிறார். படம் பார்க்கும் நமக்கு தான் சிரிப்பு வர மாட்டேங்குது. சமீரா ரெட்டியும் இருக்கிறார், ஆனால் ஒன்னும் சொல்லிக் கொள்வது போல் இல்லை. உடம்பும் தளர்ந்து போய் இருக்கிறது.

ஆந்திராவில் படம் ஓடினால் தமிழ்நாட்டிலும் படம் ஓட வேண்டுமா என்ன?

வெடி - நூறு ரூவா டமார்.

அண்ணே இவ்வளவு பேர் படிக்கிறீங்க. சும்மா சீ போ அப்படினாவது யாராவது கமெண்ட் போடுங்கப்பா.

ஆரூர் முனா

மும்பை சென்ற ஜொள்ளு சித்தப்பா - பழசு

நான் அப்பொழுது திருவாரூரில் பதினொன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சமயம், என் சித்தப்பா ஒருவர் ரேஷன் கடையில் பணிபுரிந்து கொண்டிருந்தார். அவரைப்போல் ஒரு நபரை வேறு எங்கும் பார்க்க முடியாது. மனிதர் பழகுவதற்கும் அடுத்தவருக்கு ஒரு உதவி என்றால் முன்னின்று செய்வதற்கும் அவரைப்போல் ஒருவர் கிடையாது. ஆனால் அவர் ஒரு ஜொள்ளர். வயது வித்தியாசமெல்லாம் அவருக்கு கிடையாது. யார் ஒருவர் புடவைக்கட்டிக் கொண்டு அவரது கடைக்கு வந்தாலும் அவரிடம் வழிந்து பேசுவார், அதுவும் அழகாக இருந்து விட்டால் இலவசங்கெலல்லாம் கிடைக்கும். அதில் சிலவற்றில் வெற்றியும் பெற்றுள்ளார், பலவற்றில் செருப்படியும் பட்டுள்ளார்.

எங்கள் சொந்தங்களில் எந்த வீட்டு விசேஷம் என்றாலும் அவரே முக்கியஸ்தர் ஆகிவிடுவார், அனைத்து வேலைகளையும் தானே இழுத்துப் போட்டு செய்வது என் வயதையொத்த பசங்களை வேலை வாங்குவது எல்லாம் அவரே, ஆனாலும் அவர் சொல்லும் வேலைகளை நாங்கள் விரும்பி செய்வதற்கு காரணம் அவர் சொல்லும் அவரது வாழ்வில் நடந்த கிளுகிளு கதைகள், நாம் நம் வயதில் பார்க்கும் கிழவிகளை பற்றிய டீன்ஏஜ் கதைகலெல்லாம் அவரிடம் இருக்கும், எங்களுக்கெல்லாம் அவர் கதாநாயகர், ஏனெனில் எங்களுக்கு அப்பொழுது பதின்வயது என்பதால் பெண்களைப்பற்றிய ஆர்வமிக்க வயது என்பதால் தான்.

எங்கள் தாத்தா நாங்கள் அவரிடம் சுற்றிக் கொண்டிருக்கும்போது எல்லாம் பசங்களை எல்லாம் உன் போல் ஆக்கிவிடாதே என்று எஙகள் சித்தப்பாவை திட்டிக் கொண்டிருப்பார், இதில் நாங்கள் நாங்கள் நான் கூறுவது நான், என் அத்தை மகன் சதீஷ் (தற்பொழுது மன்னார்குடியில் பேருந்து நிலையம் எதிரில் புட்பிளாசா என்ற பெயரில் ஹோட்டல் நடத்தி வருகிறான்),என் சித்தப்பா மகன் வினோத் (தற்பொழுது ஹூண்டாயில் இன்ஜினியர்),என் மாமா மகன் ஜானகிராமன் (தற்பொழுது அமெரிக்காவில் சாப்ட்வேர் இன்ஜினியர்) ஆகியோர் தான்.

இந்நிலையில் எங்கள் சித்தப்பா அவரது கூட்டுறவு சங்கத்தின் சார்பாக ஒரு பணிநிமிர்த்தமாக மும்பைக்கு முதல் முறையாக செல்ல வேண்டியிருந்தது. அவரோ அதுவரை ஒருங்கிணைந்த பழைய தஞ்சாவூர் மாவட்டம், பழைய திருச்சி மாவட்டம் ஆகியவற்றை விட்டு வெளியில் சென்றதில்லை. வெளியூர் செல்வதால் அதுவரை பேண்ட் போடாத அவர், புதிதாக கடைக்கு சென்று புது பேண்ட், புது சட்டை, புது ஷு ஆகியவற்றை வாங்கி வந்தார், புதிதாக ஹேர் டை அடித்துக் கொண்டார். எங்களுக்கெல்லாம் திடீரென்று அவரின் செய்கை வியப்பை அளித்தாலும் நாங்களும் அவருக்கு கிளம்புவதற்குரிய உதவிகளை செய்து வந்தோம், ஒரு நாள் அதிகாலை சைக்கிள் எடுத்து வீட்டுக்கு வந்து என்னை அழைத்தார், என்னவோ ஏதோவென்று அவருடன் சென்றேன். என்னவென்று விசாரித்தால் அவருக்கு மும்பை செல்வதால் ஹிந்தியில் ஒரு வார்த்தை தெரிந்து கொள்ள வேண்டும், பக்கத்து ஊரில் ஆந்திராவில் வேலை செய்த ஒருவன் இருக்கிறான், அவனிடம் கேட்டு தெரிந்து கொள்வோம் என கூறினார், சரி என்று அவருடன் சென்று பக்கத்து ஊருக்கு சென்று தேடி வந்தவரை அணுகி கேட்டால் அவரோ தனக்கு தெலுங்கு மட்டுமே தெரியுமென்றும், ஹிந்தி தெரியாது என்றும் கூறி விட்டார், நாங்கள் ஊருக்கு திரும்பி விட்டோம்.

என்னை வீட்டில் இறக்கி விடும்போது சித்தப்பா நீ யாராவது ஹிந்தி தெரிந்தவர் இருந்தால் விசாரித்து வை நாம் சென்று அவரிடம் அந்த வார்த்தையை கற்று வருவோம் என்றார், நானும் என் உறவுக்கார பசங்களும் அவருக்காக தேடியலைந்தால் இரண்டு நாட்களாக யாரும் கிட்டவில்லை, இரண்டு நாள் கழித்து வடஇந்தியாவிலிருந்து செட்டியார் கடைக்கு லோடு ஏற்றி லாரி வந்ததாகவும் அவர்களிடம் கேட்டால் தெரியும் என்று கேள்விப்பட்டு சித்தப்பாவை அழைத்துக் கொண்டு சென்றேன்.அவர்களிடம் விசாரித்தால் அவர்கள் ததக்கா பிதக்கபவென பிதற்றினார்கள், பிறகு தான் தெரிந்தது வந்தவர்கள் ஒரிசாக்காரர்கள் அவர்களுக்கும் இந்தி தெரியவில்லை என்று. நொந்துகொண்டே திரும்பி வந்தோம்.

சித்தப்பாவுக்கு செல்லும் நாள் நெருங்கி கொண்டு வந்தது. அப்பொழுது என் நண்பன் பிரசாத் ஒரு ஐடியா சொன்னான். எங்கள் ஊரில் கமலாலயம் தென்கரையில் ஹந்தி டியூசன் சென்டர் இருப்பதாகவும் அங்கு சென்றால் உங்கள் சித்தப்பாவுக்கு வார்த்தைக்கு அர்த்தம் கண்டு பிடித்துவிடலாம் என்றும் கூறினான். மிகுந்த சந்தோஷத்தோடு சித்தப்பா வீட்டுக்கு சென்று அவரிடம் செய்தியை கூறினேன். அவரும் என்னுடன் புறப்பட்டு வந்தார். அவரிடம் சென்று சித்தப்பாவை அந்த ஹிந்தி வார்ததையை கற்றுக் கொள்ளக் கூறினேன். அவர் டியூசன் சென்டர் உள்சென்று சிறிது நேரம் கழித்து சந்தோஷமாக வந்தார். வெளியில் வந்த ஹந்தி வாத்தியார் வெளியில் வந்து தலையில் அடித்துக் கொண்டு இவரையெல்லாம் ஏன் அழைத்து வந்தீர்கள் என்று அலுத்துக் கொண்டார்.
எல்லாம் சரி என்னடா ஓவர் பில்ட்அப் செய்கிறாயே, அந்த வார்த்தை என்னவென்று கேட்கிறீர்களா? அது பெரிய காமெடி, நம்ம சித்தப்பு மும்பை போய் பலான இடத்துக்கு போனா அங்க பேசறதுக்கு கத்துக்கிட்டு போன வார்த்தை "பூரா கப்டா நிக்காலோ". இதுக்கு என்ன அர்த்தம்னு கேட்குறீங்களா, எல்லா துணியையும் கழட்டுன்னு அர்த்தம், எப்பூடி


ஆரூர் முனா

நானும் என் பிரியாணியும் - பழசு

பிரியாணி. இந்த ஒரு வார்த்தை, அதன் ருசி என் வாழ்வில் ஏற்படுத்திய கிளர்ச்சிகள், மாற்றங்கள், நடந்த சுவையான சம்பவங்கள் இவற்றை தொகுத்து வழங்குகிறேன்,

சிறுவயதில் எனக்கு திருவாரூரில் என் அப்பா டீலக்ஸ் ஹோட்டலில் இருந்து வாங்கி வந்து தரும் பிரியாணி, அடடா அதன் சுவை மாதம் இருமுறை வாங்கித்தருவார்,நானும் என் தம்பியும் போட்டிப்போட்டு திருப்தியுடன் சாப்பிடுவோம், நான் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் வரை எனக்கு தெரிந்த வரையில் இந்த ஒரு கடை பிரியாணியை மட்டும் தான் சாப்பிட்டு இருக்கிறேன், பனிரெண்டாம் வகுப்பு முடிந்ததும் தொழிற்கல்வி பட்டயப்படிப்பு படிக்க சென்னை ஐசிஎப் வந்து விட்டேன். எனக்கான வெளியுலக வாசலை திறந்து விட்டது இந்த காலக்கட்டம் தான். சென்னையில் ஏராளமான பிரியாணி கடைகள், தோன்றும் போதெல்லாம் பிரியாணி தான். இருந்தாலும் அது, படித்த காலகக்கட்டம். மேலும் இந்த குடிப்பழக்கம் என்னிடம் இல்லாத நாட்கள் அவை, அந்த சமயத்தில் வில்லிவாக்கத்தில் உள்ள மகேஷ் ஓட்டல் பிரியாணி, அயனாவரம் நூர் ஹோட்டல் பிரியாணி. பெரம்பூரில் ரயில்வே கீழ்ப்பாலத்திற்கு அருகில் உள்ள ஒரு அசைவ ஹோட்டல் பிரியாணி(அதன் பெயர்ப் பலகையில் ராஜ்கிரண் தொடைக்கறி கடிப்பது போல் ஓவியம் தீட்டப்பட்டிருக்கும்) ஐசிஎப் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஒரு பிரியாணி கடை பிரியாணி ஆகியவை எங்கள் பகுதியில் மிகவும் புகழ் பெற்றவை.

படிப்பு முடிந்த பிறகு ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் தனியார் கட்டுமான நிறுவனத்தில் சென்னை மண்டல அலுவலகத்தில் நிர்வாக உதவியாளராக வேலைக்குச் சேர்ந்தேன். என் வாழ்க்கையை புரட்டிப்போட்ட இடம் அது, 2001 முதல் நான் அந்த நிறுவனத்தில் இருந்து வெளியே வந்த 2009 வரை நான் இருந்த நிலையே வேறு, நிர்வாக அலுவலர் என்பதால் அந்த நிறுவனத்திற்கு வரும் வெளியூர், வெளிநாட்டு விருந்தினர்களை விமான நிலையத்தில் பிக்அப் செய்ய கார் அனுப்புவது முதல் அவர்க்ள் தங்கியிருக்க விருந்தினர் இல்லம் ஏற்பாடு செய்வது, அவர்களது அலுவல் பணி முடியும் வரை உடன் இருப்பது, சென்னையை சுற்றிப்பார்க்க உறுதுணையாக இருப்பது, திருப்பி ஏர்போர்ட்டில் இறக்கி விடும் வரை என்னுடைய பொறுப்பு. அந்த நாட்களில் அவர்களுக்கு உணவு ஏற்பாடு செய்வது என்னுடைய பொறுப்பு என்பதால் எனக்கு பிடித்த கடையில் பிரியாணி வாங்க வண்டி ஓட்டுனரை அனுப்புவேன். இது வாரம் மூன்று நாட்கள் குறைந்தது இருக்கும் என்பதால் என் பிரியாணி நண்பன் என்னுடன் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தான். ஊருக்கு திரும்பி சென்ற விருந்தினர்கள் எல்லாம் என்னையும், பிரியாணியையும் மறக்க முடியவில்லை என்று மின்னஞ்சல் அனுப்பும் அளவுக்கு அவர்களையும் பிரியாணி பிரியன் ஆக மாற்றியவன் நான்.

பிரியாணி வாவ். எங்கள் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் ஐதராபாத்தில் இருந்த காரணத்தால் அடிக்கடி நான் அங்கு சென்று வருவேன். ஐதராபாத்தில் லக்டிகபூல் என்ற பகுதியில் உள்ள ஹோட்டல் அசோகாவில் தான் நான் வழக்கமாக தங்குவேன், அங்கு சென்றது முதல் காலை, மதியம், இரவு மூன்று வேளையும் நமக்கு பிரியாணி தான். ஹோட்டல்காரர்கள் சாப்பாடு நேரத்தில் என்ன வேண்டும் என்று கேட்காமல் பிரியாணியை அனுப்பி விடுவார்கள், இந்தியாவில் வேறு எந்த ஊரில் சாப்பிடும் பிரியாணியை விட ஐதராபாத்தில் உள்ள பிரியாணிக்கு மட்டும் அந்த சுவை வருகிறதோ தெரியவில்லை, அங்கு ஓரு கடை தான் என்றில்லை, எந்த கடையில் சாப்பிட்டாலும் அந்த சுவை வரும்.
அதிலும் செகந்திராபாத்தில் உள்ள பாரடைஸ் ஹோட்டல் தான் மிகுந்த பேமஸ். நள்ளிரவு, விடியற்காலை நேரத்திலும் அங்கு சுடச்சுட பிரியாணி கிடைக்கும். மதிய நேரத்தில் அலுவலகத்திலேயே கேண்டீன் இருக்கும். நண்பர்கள் சாப்பிட அழைப்பார்கள், நான் அவர்களையும் அழைத்துக் கொண்டு வெளியே பிரியாணி சாப்பிட வந்து விடுவேன். அதிலும் அங்கு மட்டும் தான் பிரியாணியில் எந்த ஒரு மசாலாவும் வாயில் பிடிபடாது, அப்படியே எடுத்து சாப்பிடும் வகையில் இருக்கும். பட்டை, ஏலக்காய், இலை இது போன்ற எதுவும் சிக்காது. ஆனால் அவற்றின் வாசம், சுவை மட்டும் இருக்கும்.
அது மட்டும் இல்லை, ஒரு முறை சென்னை ஏர்போர்ட் எதிரில் உள்ள பகுதியில் மிலிட்டரி ரம் கிடைக்கும், ஒரு முறை நானும் என் நண்பன் எட்வினும் ஒரு புல் ரம் வாங்கி அங்குள்ள ஒரு மைதானத்தில் ஒரு ஏழு மணியளவில் ஆரம்பித்தோம், எட்டு மணிக்கு முடிந்தது, பைக் எடுத்து ரூமுக்கு வரும் போது ஏர்போரட் எதிரில் வரும் போது நான் பிரியாணி சாப்பிட்டு போகலாம் என்று கூறினேன். அவன் சுவையான பிரியாணி என்றால் ஐதராபாத் தான் போக வேணடியிருக்கும் என்று கூறினான். போதையில், விடுறா வண்டியை ஏர்போர்ட்டுக்கு என்று கூறி பைக்கை பார்க் செய்து விட்டு அப்பொழுது இருந்த ஏர்டெக்கான் விமானத்தில் அந்த நிலையிலேயே ஏறி ஐதராபாத் சென்றோம். ஏறுவதற்கு முன் அங்குள்ள எனது நண்பன் சீனிவாசலுவுக்கு போன் செய்து விட்டதால் அவன் கார் எடுத்து வந்து ஏர்போர்ட்டில் நின்றான். வண்டியில் ஏறினோம்.

நேரே பாரடைஸ் ஹோட்டல் சென்றோம். வழியில் பத்தவில்லை என்பதால் அங்கு ஆளுக்கு ஒரு குவாட்டரை சாய்த்து விட்டு பிரியாணியை புல் கட்டு கட்டிவிட்டு கையில் பார்சலும் வாங்கிக் கொண்டு திரும்பி ஏர்போர்ட் வந்தோம். அப்பொழுது 11 மணிக்கு ஒரு விமானம் இருந்தது, டிக்கெட்டும் இருந்ததால் புறப்பட்டு 12 மணிக்கு சென்னை வந்து விட்டோம். பிறகு என்ன மறுநாள் முழுக்க சென்னையில் ஐதராபாத் பிரியாணி தான். ஆனாலும் சென்று வந்த செலவுக்கு பங்கு போடும் போது சண்டை போட்டு மாலை சமாதானத்திற்கு மீண்டும் சரக்கு போட்டது தனிக்கதை.

எங்கு சென்றாலும் அந்தந்த ஊர் ஸ்டைல்களில் பிரியாணி சாப்பிடுவதை வழக்கமாக்கி கொண்டவன் நான். 2004ம் ஆண்டு இறுதியில் கேரளாவில் திருவனந்தபுரத்திலுள்ள கழக்கூட்டம் என்ற பகுதியில் கின்ப்ரா பார்க் என்ற சினிமா பார்க்கில் அனிமேஷன் பார்க் பில்டிங் கன்ஸ்ட்ரக்ஷன் ப்ராஜக்ட்டில் நிர்வாக அலுவலராக பணிமாற்றம் செய்யப்பட்டேன்.

அது எங்களது கம்பெனியில் சிறிய ப்ராஜக்ட் என்பதால் அக்கவுண்ட்ஸ் மற்றும் அட்மினிஸ்ட்ரேசன் இரண்டும் நானே, அங்கு சென்றும் என் பிரியாணி வேட்டையை விடவில்லை. அங்கு ஓருநாள் விட்டு ஒருநாள் வங்கி செல்லும் பணியிருக்கும். வங்கியோ பத்மநாதசாமி கோயிலின் எதிர்புறம் உள்ள பார்க்கின் பின்புறம் இருக்கும், அங்கு பணம் டிராப் செய்ய செல்லும் போதெல்லாம் செலானை கொடுத்து விட்டு டோக்கனை வாங்கிக் கொண்டு பக்கத்தில் உள்ள பத்மநாபா தியேட்டருக்கு பின்புறமுள்ள ஒரு ஹோட்டலுக்கு மதிய சாப்பாட்டு நேரத்துக்கு நானும் என்னுடன் வரும் கார் டிரைவரும் சென்று விடுவோம்.

கேரளா பிரியாணி வித்தியாமான முறையிலும், சுவையிலும் சமைக்கப்பட்டிருக்கும். எப்படியெனில் சமைக்கும்போதே சாதத்தையும் மசாலாவையும் கலக்க மாட்டார்கள். கேட்கும் போது கொண்டு வரும் பாத்திரத்தில் அடிப்பகுதியில் சாதம் நடுப்பகுதியில் மசாலாவும் மேல்பகுதியில் சாதமும் வைத்துக் கொடுப்பார்கள். அருமையான சுவையாக இருக்கும் அங்கு பிரியாணியை சுவைத்து விட்டு அருகில் உள்ள பழரசக்கடையில் ஷார்ஜா என்று ஒரு ஜூஸ் கிடைக்கும். அதையும் சாப்பிட்டால் கேபிள் அண்ணன் ஸ்டைலில் சொல்வதென்றால் டிவைன்.

அந்த ஷார்ஜா என்ற ஜூஸ் பால் கட்டி அதாவது பால் பாக்கெட்டை ப்ரீசரில் வைத்து கட்டியான பின்பு, உடைத்து அந்த பால் கட்டியுடன் வாழைப்பழம், சர்க்கரை கலந்து அடித்து தருவார்கள். அந்த ஜூஸை நான் வேறு எந்த ஊரிலும் சாப்பிட்டதில்லை, யாருக்காவது அந்த ஜூஸ் சென்னையில் கிடைக்குமென்றால் சொல்லுங்கள். மீண்டும் சுவைத்து பார்க்க வேண்டும் போல் உள்ளது.

அதை விட கூத்து என்னவென்றால் எங்களது ப்ராஜக்ட்டில் தமிழர்கள் அதிமென்பதால் சுமாராக சமைக்கும் ஒரு பையனை வேலைக்கு வைத்திருந்தேன். சில மாதங்களுக்கு பிறகு ஒரு மலையாள சமையற்காரர் வேலைக்கேட்டு வந்தார். அவரிடம் பிரியாணி சமைக்கத்தெரியுமா என்று கேட்ட போது மதியம் அவர் வீட்டில் இருந்து சமைத்துக் கொண்டு வந்து கொடுத்தார். சாப்பிட்டுப்பார்த்தேன். அவ்வளவு தான் அன்றிலிருந்து அவர் தான் பிரதான சமையற்காரர். பிறகென்ன நினைவு வரும்போதெல்லாம் மெஸ்ஸில் பிரியாணி தான்.

ஞாயிற்றுக் கிழமையானால் காலையிலேயே சரக்கு துவங்கி விடும். காலையில் இருந்தே பிரியாணி வரத்துவங்கி விடும். பின்புறமுள்ள பாக்கு தோட்டத்தில் அன்று முழுவதும் கிரிக்கெட் விளையாடுவோம். இருட்டும் வரை கிரிக்கெட் கூடவே சரக்கு, அவ்வப்போது பிரியாணி அந்த ஒரு நாளே அந்த வாரம் முழுவதும் வேலை செய்வதற்குரிய உற்சாகத்தை கொடுத்து விடும்.

ஜாலியாக இருப்பதை மட்டும் பேசுகிறானே வேலை இருக்காதோ என்று எண்ண வேண்டாம். அது குறுகிய கால ப்ராஜக்ட் எனவே பகல், இரவு இரண்டு ஷிப்ட் வேலையும் இடையறாது நடந்து கொண்டே இருக்கும். எந்த நல்ல நாளுக்கும் நாங்கள் வீட்டுக்கு வர முடியாது. அதற்கிடையே நடக்கும் ஞாயிற்றுக்கிழமை போன்ற சம்பவங்கள் மற்றும் பிரியாணி ஆகியவையே எங்களுக்கு உற்சாகத்தை கொடுக்கும். அந்த ப்ராஜக்ட்டில் ப்ராஜக்ட் மேனேஜர் தவிர மற்ற அனைவரும் பேச்சிலர்கள். அதனால் இவையே எங்களுக்கு இன்றும் மறக்க முடியாத நினைவுகளாக நெஞ்சில் நின்கின்றன. ஒரு வருடத்தில் ப்ராஜக்ட் முடிந்ததும் மீண்டும் சென்னை மண்டல அலுவலகத்திற்கே திரும்பி விட்டேன். கேரளாவில் அந்த நாட்களும் பிரியாணியும் என்றும் வாழ்வில் மறக்க முடியாதவை.

ஆரூர் முனா

தவிர்க்கவே முடியாத எங்கேயும் எப்போதும் - பழசு

என்னடா இது இப்படி ஒரு படம் நானெல்லாம் சிறு வயதில் ஒரு உணர்ச்சி களஞ்சியம், எந்த படத்திலாவது சோககாட்சிகள் வந்தால் அழுது விடுவேன் சிறு வயதில் என்னை எல்லோரும் கிண்டல் செய்வார்கள், பிறகு பால்ய வயதில் அது சுத்தமாக நின்று போனது, அதன் பிறகு யாராவது சினிமா பார்க்கும் போது அழுதால் அவர்களை நானே ஓட்டி எடுத்து விடுவேன், மிக நீண்ட நாட்களுக்கு பிறகு வெயில் படம் பார்த்து அழுதேன், அதன் பிறகு அங்காடி தெரு, அவ்வளவு தான்,

இத்தனைக்கும் எங்கேயும் எப்போதும் படம் வெளியான அன்றே நான் எனது ஓபிசி சர்டிபிகேட் விஷயமாக திருவாருர் சென்றிருந்ததால் அங்குள்ள நடேஷ் தியேட்டரில் படம் பார்த்தேன், துவக்கத்திலேயே பஸ் விபத்து நடப்பதை காட்டியிருந்தாலும் கதைக்குள் சென்ற பிறகு அதுவும் அநத மரணங்களை பார்த்த பிறகு தியேட்டரில் அழுதேன், பிறகு யாராவது நான் அழுவதை பார்க்கிறார்களா ரகசியமாக திரும்பி பார்த்தால் தியேட்டரில் உள்ள வெகுஜன மக்கள் அழுது கண்களை துடைத்துக் கொண்டிருந்தனர், சரி நாமும் மக்களுடன் கலந்து விட்டோம் என்று நினைத்துக்கொண்டேன்.

இப்பொழுது
சென்னை வந்து விட்டேன், நான் சென்னை ஐசிஎப்பில் படித்தவன், என்னுடன் அங்கு படித்தவர்களுக்கு இப்பொழுது தென் மேற்கு ரயில்வேயில் பணிபுரிவதற்கான ஆர்டர் வந்து கொண்டு இருக்கிறது, நான் ஆர்ஆர்பி தேர்வில் தேர்ச்சியடைந்து விட்டதால் நான் அதற்கு விண்ணப்பிக்கவில்லை, ஏனெனில் நான் தேர்வெழுதி கிடைத்த வேலையில் அவர்கள் கொடுக்கும் வேலையின் சம்பளத்தை விட பத்தாயிரம் ருபாய் அதிகம். எனது நண்பர்களுக்காக அவர்களின் விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்காக செல்லும் போது என்னையும் அழைத்ததால் சென்றிருந்தேன்,

அவர்களின் விண்ணப்பத்தை சமர்ப்பித்த பிறகு நீண்ட நாட்களுக்கு பிறகு அனைவரும் ஒன்று சேர்ந்ததால் நீண்ட நேரம் அரட்டையடித்து விட்டு சினிமாவுக்கு செல்லலாம் என்று முடிவெடுத்து அம்பத்துர் ராக்கி திரையங்கிற்கு சென்றோம். மிகுந்த கலாட்டாவோடு துவங்கிய படம், நான் ஏற்கனவே பார்த்த படம் என்றாலும் மீண்டும் படத்தின் இறுதிகாட்சியில் அழுது விட்டேன். நண்பர்கள் பார்த்து விட்டு என்னை ஓட்டி எடுத்து விட்டார்கள்.

அதனால் தான் சொல்கிறேன். படம் உண்மையில் நம் உணர்வுகளை தட்டியெழுப்புகிறது. கண்டிப்பாக நான் மீண்டும் பலமுறை பார்ப்பேன் என்பதை சொல்லிக் கொள்கிறேன்.
என்னா படம்யா


ஆரூர் முனா

காபரே நடனம் பார்க்க போய் வாங்கி வந்த முத்தம் - பழசு

இதையெல்லாம் வெளியில் சொல்வார்களா என்ன. இருந்தாலும் சொல்ல வேண்டும் என்று தோன்றியது அதனால் சொல்கிறேன். அப்பொழுது எனக்கு வயது 15. இன்று மன்னார்குடி பேருந்து நிலையம் எதிரில் புட் பிளாசா என்று உணவகம் வைத்திருக்கும் என் அத்தை மகன் சதீஷ் என் வயதை ஒத்தவன். நாங்கள் அந்த வயதில் எங்கு கரகாட்டம், கிளப் டான்ஸ் நடந்தாலும் அங்கு சென்று விடுவோம். ஒரு முறை அவர்கள் ஊரான மேலவாசல் அருகில் உள்ள மற்றொரு கிராமத்தில் கிளப் டான்ஸ் நடப்பதாகவும் ஐந்து ரூபாய் டிக்கெட் என்றும் கேள்விப்பட்டு அங்கு சென்றோம். எங்களுக்கு சிறிய வயது என்பதாலும் நாங்கள் அரைக்கால்சட்டை அணிந்திருந்ததாலும் உள்ளே விட மறுத்து விட்டார்கள். பிறகு மறுபடியும் சைக்கிளில் வீட்டிற்கு சென்று யாருக்கும் தெரியாமல் எங்கள் வீட்டில் வேலை செய்யும் வேலையாட்களின் வேட்டியை எடுத்துக் கட்டிக்கொண்டு மறுபடியும் அந்த ஊர் சென்று டிக்கெட் வாங்கி உள்ளே சென்று டான்ஸ் பார்க்க அமர்ந்தோம், சிறிது நேரத்தில் டான்ஸ் துவங்கியது . அப்பப்பப்பா நடனமாடிய பெண்ணின் வாளிப்போ அருமை.

ஆரம்பித்து ஒரு மணி நேரத்தில் வெளியில் இருந்து ஒருவன் போலீஸ் என்று கத்திக் கொண்டு உள்ளே வந்தான். எல்லோரும் டெண்ட் கொட்டாயை பிரித்துக் கொண்டு பறந்தார்கள். நாங்கள் ஒடினோம். நாங்கள் சிறிய வயது பையன்கள் என்பதால் நடனமாடிய அந்த பெண்ணும் எங்களுடன் ஒடி வந்தார். சிறிது தூரம் ஓடி ஒரு வைக்கப்போரின் பின் சென்று அமர்ந்தோம் எங்களுடன் அவளும் அமர்ந்தாள். சிறிது நேரம் கழித்து அவள் எங்களுடன் பேசினாள். நானும் நீ என்ன செய்கிறாய், எப்படி இந்தவாறு நடனமாடுகிறாய் என்று கேட்டேன். அவளோ தான் மதுரை பக்கம் என்றும் வீட்டுத்தேவைக்காக நடனமாடி பிழைக்க வந்ததாகவும் கூறினாள். தனக்கு ஒரு புடவை தேவை என்றும் கிடைத்தால் கட்டிக் கொண்டு ஊர் சென்று விடுவதாகவும் கூறினாள். பிறகு நானும் என் மச்சானும் எங்கள் வீட்டிற்கு சென்று வீட்டில் உள்ள ஒரு புடவையை யாருக்கும் தெரியாமல் எடுத்து வந்து கொடுத்தோம். அவள் வாங்கி கட்டிக் கொண்டு செல்லும் போது எங்கள் இருவருக்கும் முத்தம் கொடுத்து சென்றாள். ஆஹா அன்று நாங்கள் ஊருக்கு சென்று எங்கள் வயதை ஒத்த நண்பர்களிடம் சொல்லி கர்வப்பட்டு கொண்டிருந்தோம்.

இன்று நினைத்துப் பார்த்தால் அதெல்லாம் சிரிப்பாக இருக்கிறது.

பழைய நினைவுகளுடன்


ஆரூர் முனா