ஆர்யா 2065ல் ஒரு டைம் டிராவல் மெஷினை கண்டுபிடிக்கிறார். அதனை பரிசோதிக்க 2015க்கு ஒரு நாய்க்குட்டியுடன் அந்த மெஷினை அனுப்புகிறார். வேலையில்லா பட்டதாரியான விஷ்ணு விஷாலிடம் அந்த மெஷின் வந்து சேருகிறது. அதனை வைத்து நண்பனான ஜோசியக்காரர் கருணாகரனுடன் இணைந்து பணம் சம்பாதிக்கிறார்.
ஷேர் ப்ரெடிக்ஷனை துல்லியமாக கொடுத்து காதலியான மியா ஜார்ஜின் அப்பாவை அசர வைத்து திருமணத்தை உறுதி செய்கிறார். அதே சமயம் போலீஸ் என்கவுண்டடரில் இறந்து போன வில்லன் சாய் ரவியை இறந்த காலத்திற்கு போய் தவறுதலாக பிழைக்க வைக்கின்றனர். பிழைத்து வரும் சாய்ரவி மியா ஜார்ஜின் அப்பாவான ஜெயப்பிரகாஷை கொல்ல நினைக்கிறார்.
அதனால் ஏற்படும் குளறுபடிகளை எப்படி சரி செய்து காதலியை கைப்பிடிக்கிறார் என்பதே இன்று நேற்று நாளை படத்தின் கதை.
திரைக்கதையை பிரமாதமாக அமைத்துள்ளனர். ஒரு நிமிடம் கூட அசர வைக்காமல் பரபரவென்று காட்சிகள் நகர்கின்றது. ஆனால் படத்தின் கருத்து ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில் இல்லை. எல்லா சாகசங்களையும் செய்து விட்டு இறுதியில் எந்த ஏற்ற இறக்கமும் இல்லாமல் செல்வதே வாழ்க்கை என்று படத்தை முடித்திருப்பது நெருடுகிறது. இது தான் படத்தின் கருத்து என்றால் என்னத்துக்கு பேன்டஸி பேக் ட்ராப், டைம் ட்ராவல் மெஷின் எல்லாம்.
அது போல் வில்லன். அதிபயங்கர கொடூர வில்லன்கள் எல்லாம் வேட்டைக்காரன் படத்தோடு வழக்கொழிந்து போய் விட்டார்கள். நிஜத்திற்கு கொஞ்சம் கூட ஒத்து வராமல் பொது இடங்களில் சர்வசாதாரணமாக துப்பாக்கியை வைத்து கொலை செய்யும் வில்லன் பொருந்தவில்லை. கொஞ்சம் நிஜத்திற்கு அருகில் யதார்த்தத்தோடு வில்லன் கதாபாத்திரம் படைக்கப்பட்டு இருக்கலாம்.
ஆக்சன் ரீப்ளே என்றொரு இந்திப் படம் 5 வருடத்திற்கு முன்பு வந்தது. அதாவது அம்மாவும் அப்பாவும் எப்பவும் சண்டைப் போட்டு கொண்டே இருப்பதை பொறுத்துக் கொள்ள முடியாத மகன் இவர்கள் நிச்சயிக்கப்பட்ட திருமணம் செய்ததால் தான் இந்த பிரச்சனை, இவர்களை திருமணத்திற்கு முன்பு காதலிக்க வைத்தால் தான் பாசத்துடன் இருப்பார்கள் என முடிவு செய்து டைம் ட்ராவல் மெஷினில் முந்தைய காலத்திற்கு பயணித்து அப்பாவையும் அம்மாவையும் காதலிக்க வைத்து திருமணம் செய்து வைப்பான். அப்பாவாக அக்ஷய் குமார், அம்மாவாக ஐஸ்வர்யா ராய். பேண்டஸி டைம் டிராவல் கதையென்றால் அப்படி இருக்க வேண்டும். படம் சும்மா பட்டைய கௌப்பி இருக்கும்.
திரும்பவும் இன்று நேற்று நாளை படத்திற்கு வருவோம்.
நாயகனாக விஷ்ணு விஷால். நன்றாகவே நடித்து இருக்கிறார். கொடூரமான வில்லன் என்பதால் அவரை லெக் ஷாட்டில் எல்லாம் அடித்து வீழ்த்தாமல் சாதாரணமாக அடிப்பதாலேயே கவனிக்க வைக்கிறார். இந்த படம் அவருக்கு கண்டிப்பாக ப்ளஸ் தான்.
இரண்டாம் கதாநாயகன் ரேஞ்சில் கருணாகரன். டுபாக்கூர் ஜோசியக்காரனாக வந்து காணாமல் போன பொருட்களை கண்டுபிடித்து தரும் போது நகைக்க வைக்கிறார். நாயகனுக்கு நிகராக படம் முழுக்கவே வரும் வாய்ப்பு. நன்றாகவே செய்திருக்கிறார்.
மியா ஜார்ஜ் டிபிக்கல் கேரள முகம். கிடைத்த வாய்ப்பில் சரியாக செய்திருக்கிறார். முகத்தில் அவரது எக்ஸ்பிரசன்கள் கவனிக்க வைக்கின்றன. க்ளைமாக்ஸில் அவர் மணமகள் அறையில் இருப்பதை பார்க்கும் போது நாயகனைப் போல் நமக்கும் மகிழ்ச்சி பொங்குகிறது.
இந்த டைம் ட்ராவல் மெஷின் என்ற பேண்டஸியை எடுத்து விட்டால் வெகு சுமாரான கதை தான். சதுரங்க வேட்டை படத்திற்கு திருந்துவது போன்ற க்ளைமாக்ஸ் எடுபடலாம். ஆனால் இந்த படத்திற்கு டைம் டிராவல் மெஷின் சாகசங்கள் இல்லாமல் இருப்பதே வாழ்க்கை என்று முடித்திருப்பது ஒப்பவில்லை. அதன் சாகசங்களுடன் முடித்திருக்கலாம்.
அதி சிறந்த சமையற்காரர்கள் 5 பேர் சேர்ந்து ஒரு சமையல் செய்தால் உணவின்
ருசி எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது சிறந்த
திரைக்கதையாளர்கள் இணைந்து மெருகேற்றிய இப்படம்.
மற்றபடி நேரம் கிடைத்தால் பார்க்க வேண்டிய திரைப்படம் தான்.
ஆரூர் மூனா