Monday, 1 June 2015

அய்யா - தமிழ்ப்பையனை டாவடிக்கும் மராத்திய பெண்ணின் கதை - பழசு 2013

அய்யா இந்தப் படத்தின் டிரெய்லரை பார்த்த போதே படம் வெளியானதும் முதல் காட்சி பார்த்து விட வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன். ஏனென்றால் கதைப்படி படத்தின் நாயகன் ஒரு தமிழ்ப்பையன். அதனால் தமிழை போற்றியிருப்பார்கள் அதனால் பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.

ஆனால் படம் வெளியான போது நான் சென்னையில் இல்லாமல் போனதால் பார்க்க முடியவில்லை. பிறகு சிலநாட்கள் கழித்து பர்மா பஜாரில் சிடி வாங்கி பார்த்தேன். சொல்லிக் கொள்ளுமளவுக்கு சிறப்பாக இல்லையென்றாலும் மும்பையில் இருக்கும் தமிழர்களைப் பற்றி இந்தி சினிமாவில் காட்டியிருப்பதை பார்த்து ரசிக்கலாம்.

ஹீரோயினாக ராணி முகர்ஜி, அவருக்கு தான் ஒரு புகழ்பெற்ற கதாநாயகியைப் போல் தன் வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற கனவு இருக்கிறது. ஆனால் அவர் டேஸ்ட்டுக்கு ஏற்றது போல் ஒரு ஆண்மகன் அமையவில்லை.
அவரது குடும்பமும் அவருக்கு ஏகப்பட்ட மாப்பிள்ளைகளை பார்க்கிறார்கள். ஆனால் ஒரே சமயத்தில் மூன்று சிகரெட்டுகளை பிடிக்கும் செயின் ஸ்மோக்கர் அப்பா, தலைவிரித்துப் போட்டு பேய் போல் வீல்சேரில் வீட்டை சுற்றும் பாட்டி ஆகியோரினால் வரும் மாப்பிள்ளைகள் ராணி முகர்ஜியை நிராகரிக்கின்றனர்.

அவர்கள் வீட்டு வாசலில் தெருவுக்கே உரிய குப்பைத்தொட்டி இருப்பதனால் எந்நேரமும் வீடு நாறிக் கொண்டே இருக்கிறது. இதனால் ராணிக்கு வீட்டில் சாப்பிடும் சாப்பாடுகளிலும், உடைகளில் அந்த குப்பை நாற்றம் வீசிக் கொண்டு இருப்பதைப் போல் ஒரு எண்ணம். மாப்பிள்ளை அமையாததால் ஒரு ஓவியக்கல்லூரியில் நூலக உதவியாளராக வேலையில் சேருகிறார்.
அங்கு அவருக்கு சக ஊழியரான மைனாவை சந்திக்கிறார். அவர் சினிமாவில் சேரும் ஆசையினால் ஹிந்தி படத்தில் வரும் கதாநாயகியைப் போல் உடையணிந்து வலம் வரும் தெத்துப் பல்லழகி.

அந்த நூலகத்தில் திடீரென அவருக்கு வித்தியாசமான ஒரு வாசனை தோன்றுகிறது. அது அவருக்கு பிடித்துப் போகவே வாசனையில் நூலைப் பிடித்துப் போகிறார். அந்த வாசனை அந்த கல்லூரியில் படிக்கும் தமிழனான ப்ரித்விராஜிடம் இருந்து வருகிறது என்று தெரிகிறது. அந்த வாசனையின் காரணமாகவே ப்ரித்விராஜை ஒரு தலையாக காதலிக்கிறார்.

ஆனால் ப்ரித்வி முசுடாகவும் எந்நேரமும் தூங்கிக் கொண்டு இருப்பதுமாக இருக்கிறார். மற்றவர்கள் ப்ரித்வி தூங்கிக் கொண்டே இருப்பதற்கும் கண்கள் சிவப்பாக இருப்பதற்கு காரணம் குடிப்பழக்கம் என ராணியிடம் சொல்கிறார்கள்.

அவரைப்பற்றிய எந்த விவரங்களும் கிடைக்காமல் போகவே அந்த கல்லூரியில் ப்ரித்விக்கு பழக்கமான கேண்டீன் சப்ளையராக இருக்கும் தமிழனான பசங்க படத்தில் நடித்த பக்கடாவை சினேகம் பிடிக்கிறார். அவனிடம் ப்ரித்வியைப் பற்றிக் கேட்க அவனோ ப்ரித்வி ஹெராயின் பயன்படுத்துவதால் தான் அந்த வாசனை வருகிறது என்று கூறுகிறான்.

ஆனாலும் நம்பாத ராணி அவரது வீட்டை கண்டுபிடித்து அவரின் அம்மாவிடம் சினேகம் கொள்கிறார். இந்நிலையில் ராணிமுகர்ஜிக்கு மாதவ் என்ற மராத்தியருடன் திருமணம் உறுதியாகிறது. நிச்சயத்திற்கு முன்பு தான் எப்படியாவது ப்ரித்வியிடம் வரும் வாசனையை கண்டுபிடித்து அவரிடம் தன் காதலை சொல்ல முனைகிறார்.

நிச்சய தினத்தன்று விடாமல் ப்ரித்வியை தொடர்ந்து சென்று வாசனையின் மூலகாரணத்தை கண்டு பிடிக்கிறார். தன் காதலையும் சொல்கிறார். ப்ரித்வி ஏற்றுக் கொண்டாரா நிச்சயம் என்னவானது என்பதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

இது ஹீரோயின் ஓரியண்டட் படம். ராணி முகர்ஜியை சுற்றியே படம் செல்கிறது. 90களில் குலாம் மற்றும் குச் குச் ஹோத்தா ஹை படங்களில் அவரை பார்த்து வெறி கொண்டு அலைந்த ரசிகர்களில் நானும் ஒருவன்.

15 வருடங்களுக்கு பிறகு பார்க்கும் போது சற்று வற்றிப் போய் தான் இருக்கிறார். ஆனாலும் வசீகரம் குறையவில்லை. படத்தினை மொத்தத் தூணாக தாங்கிப் பிடிக்கிறார். ட்ரீமம் வேக்கப்பம் என்ற பாடலுக்கு போடுகிறாரே ஒரு கெட்ட ஆட்டம், யப்பா பார்த்தாலே டென்சனாகிறது நமக்கு.

நாயகனாக ப்ரித்வி, படம் முழுவதும் அதிக நடிப்போ ஆக்சனோ இல்லாமல் அண்டர்பிளே செய்கிறார். இறுதியில் அவர் யாரென்று தெரிய வந்ததும் நமக்கே வியப்பாக இருக்கிறது. தனது அப்பாவின் தொழிலை இரவு முழுவதும் கண்முழித்து செய்து விட்டு தனது ஆசைக்காக பகலில் தூக்கக் கலக்கத்துடன் கல்லூரிக்கு வருகிறார்.

படத்தின் கலகலப்புக்கு முக்கியமாக கதாபாத்திரத்தில் மைனாவாக வரும் அனிதா தாத்தே தான் காரணம். அவர் படத்தில் ஒரு கரடிபொம்மை வாட்டர் பாட்டிலில் தண்ணீர் கொண்டு வந்து யாருக்கும் தராமல் குடிப்பதும் இறுதியில் அவர் குடிப்பது வெறும் தண்ணியல்ல, வோட்கா என்று தெரிய வரும் போது சிரித்து மாளவில்லை.

சந்தர்ப்பம் கிடைத்தால் பார்த்து மகிழுங்கள்.


ஆரூர் மூனா

No comments:

Post a Comment