Friday, 11 September 2015

யட்சன் - சினிமா விமர்சனம்

இந்த கதை தொடராக ஆனந்தவிகடனில் வந்த போதே என்னை பெரிதாக ஈர்க்கவில்லை. அதை படமாக பார்க்க நேரும் போது இன்னும் மோசமானது தான் காலத்தின் கட்டாயம். இந்த படத்தை பார்ப்பதற்கு எப்படி எனக்கு தைரியம் வந்தது என்பதே பெரிய ஆச்சரியம் தான்.


எல்லா சிறந்த இயக்குனர்களுக்கும் அவுட் டேட் அல்லது எக்ஸ்பைரி டேட் என்று ஒன்று வரும். ஆளானப்பட்ட பாரதிராஜா, பாக்யராஜ் கூட இரு தசம வருடங்களுக்கு முன்பு காலாவதியானார்கள். இது அடுத்த ஜெனரேசனுக்கான நேரம். அது விஷ்ணுவர்த்தனுக்கும் நிகழத் தொடங்கியிருக்கிறது. 

அவர் தன்னைப் புதுப்பிக்காவிட்டால் சிரமம் தான். க்ளைமாக்ஸ் சண்டையும் அதில் திருப்பமாக போலீசோ அல்லது ஹீரோவின் ஆட்களோ என்ட்ரி கொடுப்பது எல்லாம் 90களிலேயே வழக்கொழிந்து போய் விட்டது, இன்னும் அதை வைத்து எடுத்துக் கொண்டிருந்தால் வேறு என்ன தான் சொல்வது.

தூத்துக்குடியில் ஒரு கொலையை செய்து விட்டு சென்னைக்கு வருகிறார் ஆர்யா. இங்கு ஒரு கொலை செய்யும் பிளான் அவருக்கு வழங்கப்படுகிறது. அதே போல் சினிமாவில் நாயகனாகும் ஆசையில் சென்னைக்கு வருகிறார் கிருஷ்ணா. 


நாயகனாக அவதாரம் எடுக்கும் நாள் அன்று நடந்த அதிரிபுதிரி திருப்பத்தின் காரணமாக ஆர்யா நாயகனாக கிருஷ்ணா கொலைகாரன் பட்டம் சுமக்கிறார். இறுதியில் என்ன நிகழ்கிறது என்பதே யட்சன் படத்தின் கதை.

படத்தின் நாயகர்களில் ஒருவராக ஆர்யா. அசால்ட்டாக நடிப்பது ஓகே. ஆனால் அளவுக்கு அதிகமாக அசால்ட்டாக இருப்பது எரிச்சலை வரவழைக்கிறது. இதைத்தான் நாங்க அறிந்தும் அறியாமலும் படத்திலேயே பாத்துட்டோமே இன்னுமா அப்படியே இருக்கிறது போங்க பாஸ். 

இன்னொரு நாயகன் கிருஷ்ணா. நடிக்கிறது எல்லாம் இருக்கட்டும் பாஸ். நீங்க எப்பதான் ஆடியன்ஸுக்கு புரியிற மாதிரி பேசப் போறீங்க. டயலாக் டெலிவரி சுத்த மோசம். மூக்கால பேசுற மாதிரி இருக்கு. அவர் பேசும் பாதி வசனங்கள் புரியவேயில்லை. உங்களை மாற்றிக் கொள்ளாவிட்டால் சிரமம் தான்.


படத்தின் முக்கிய நாயகியாக தீபா சன்னிதி. படத்தின் கதையே இவரைச் சுற்றி தான் நிகழ்கிறது. ஒரளவுக்கு சிறப்பாக நடித்துள்ளார். எனக்குள் ஒருவன் படம் நான் பார்க்கவில்லை. அதனால் என்னைப் பொறுத்த வரைக்கும் அவரது முதல் படம் இது தான். 

பத்திரிக்கைகளில் எல்லாம் ஆகா ஓகோ என்று புகழ்ந்ததால் சிறப்பான அழகி என்றே நினைத்தேன். ஆனால் ம். . . ஒன்னும் சொல்றதுக்கில்லை. அவரது மூக்கு அவசரத்துல செஞ்ச பிள்ளையார் சிலைக்கு வைச்ச மாதிரி இருக்கு.

சுவாதி இன்னொரு நாயகி. நக்கலும் துணிச்சலுமாக ரகளை செய்யும் போதெல்லாம் ரசிக்க வைக்கிறார். அழகம் பெருமாளிடம் கிருஷ்ணாவுக்காக மல்லுகட்டும் இடத்திலும் தம்பிராமையாவின் அடியாளை அடித்து கத்தியை புடுங்கும் போதும் செம கலாட்டா தான்.


இன்னும் படத்தில் குறிப்பிட்டு சொல்லும்படியாக ஆர்ஜே பாலாஜி, தம்பி ராமையா, பைவ் ஸ்டார் கிருஷ்ணா என நிறைய பேர் காமெடிக்கு என்று இருக்கிறார்கள். அதற்கேற்றாற் போல் நிறைய இடங்களில் நகைச்சுவை வைத்து இருக்கிறார்கள். ஆனால் கொடுமை பாருங்கள் நாம் சில இடங்களில் மட்டும் தான் சிரிக்கிறோம்.

படத்தின் ஆகச்சிறந்த தலையாய குறை படம் ஒரு க்ரிஸ்பி இல்லாமல் அலைபாய்வது தான். ஆர்யா கதை, உடனே கிருஷ்ணா கதை என்று அல்லாடுவதால் நம்மால் படத்தினுள் கவனம் செலுத்த முடியவில்லை. 

எப்படா இன்டர்வெல் வரும் என்று கடிகாரத்தை பார்க்க வேண்டியதாக இருக்கிறது. இன்டர்வெல்லுக்கு அப்புறம் எதுனா சிறப்பா இருக்குமோ என்று பார்த்தால், அப்புறம் தான் தெரிகிறது. முதல்பாதி தான் கொஞ்சமாவது பார்க்கிற மாதிரி இருக்கு. ரெண்டாவது பாதி அய்யய்யோ யம்மா, அந்தக் கொடுமையை என் வாயால எப்படி நான் சொல்வேன். 

ஏன் அய்யா, இன்னும் சவசவன்னு பேசிக் கொண்டே இருக்கிறீர்கள். தமிழ் சினிமா கதையை விசுவலா சொல்ல ஆரம்பித்து வசனங்களை குறைக்க ஆரம்பித்து பல வருடமாச்சி. ஆனாலும் உங்கள மாதிரி சிலபேர் தான் இன்னும் விடாம பேசிக் கொண்டே இருக்கிறீர்கள். ஏன் டயலாக் ரைட்டருக்கு ஏதும் பேமண்ட் பிரச்சனையா.

பாடல்கள் ஒன்னும் பெரிதாக எடுபடவில்லை. பட்டியல் படத்துல நம்ம காட்டுல அப்படின்னு ஒரு பாட்டு வருமே அதே ஸ்டைல்ல, அதே கலர் டோன்ல ஒரு பாட்டு படமாக்கியிருக்காங்க. ஆனா கேக்க தான் முடியலை. அதுக்கு நாங்க அந்த பாட்டையே இன்னொருக்கா பாத்து ரசிச்சிருக்கலாம். பத்மப்பிரியாவை அந்த பாட்டுல உரிச்சி, ரசிச்சி யப்பா. . . சாரி சாரி இது யட்சன் படத்து விமர்சனம்ல. அதைப் பற்றி பிறகு பேசுவோம்.

அஜித்தை பார்க்கனும்னா நாங்க அவர் நடிச்ச படத்தையே பாத்துக்குறோம். எதுக்கு அய்யா அளவுக்கு அதிகமான அஜித் புராணம். அஜித்தின் அடுத்த படத்துக்கு சான்ஸ் வேணும்னா நேரடியா கேட்டு வாங்கிக்கலாம்ல. எதுக்கு காசு கொடுத்து பாக்க வர்றவன இம்ச பண்ணிக்கிட்டு.

காமெடி நிறைய இடங்களில் எடுபடவேயில்லை. வாய் விட்டு சிரிக்கிற மாதிரி ஒரு காமெடி கூட இல்லை. சில இடங்களில் புன்முறுவல் மட்டும் தான் பூக்க வைக்கிறார். அதுவும் ஆர்ஜே பாலாஜியின் மொக்கை கவுண்ட்டருக்கு மட்டும் தான் அது நிகழ்கிறது.

படத்தில் நாயகிக்கு அடுத்தவனுக்கு என்ன நிகழப் போகிறது என்று ஆரூடம் சொல்கிறார். அது தான் அவருக்கு பிரச்சனையாகி இந்த படத்தின் மையக்கருவாக இருக்கிறது. அது போல் நான் ஆரூடம் சொல்கிறேன். இந்த படம் ஞாயிறைத் தாண்டாது. அதன் பிறகும் தியேட்டரில் ஓடுவது தியேட்டர்காரன் செய்த புண்ணியம். மற்ற சுமாரான படங்களுக்காகவாவது அடுத்த வெள்ளிக்கிழமை வரை வாய்ப்பு இருக்கும். இந்த படத்துக்கு அதுவும் கிடையாது. ஏன்னா வியாழக் கிழமையே படங்கள் வெளியாகின்றன.

ஆரூர் மூனா

5 comments:

  1. Replies
    1. எங்கள் சுபா படம் என்று இறுமாப்பில் இருந்த என்னை ஏமாற்றி விட்டீ(டா)ர்களே....:-((((

      Delete
    2. என்ன பண்றது, நம்ம கையிலயே எல்லாம் இருக்கு.

      Delete
  2. சுபா இருந்துமா படம் இப்படி இருக்குது?? அவ்வ்வ்வ்..

    ReplyDelete
  3. சு...பா.... சு...ப்....ப.....ர்......

    ReplyDelete