Thursday 11 June 2015

இனிமே இப்படித்தான் - சினிமா விமர்சனம்

கொஞ்ச நாட்களாக பதிவுகள் எதுவும் எழுத முடியவில்லை. ஒரு பதிவு எழுத குறைந்த பட்சம் ஒரு மணிநேர உழைப்பு தேவைப்படுகிறது. அவ்வளவு நேரமெல்லாம் கம்ப்யூட்டர் எனக்கு கிடைப்பதேயில்லை. ஆரூர் மூனா எக்ஸ்பிரஸ் எழுத ஏகப்பட்ட கண்டென்ட்டுகள் எடுத்து வைத்துள்ளேன். நான் பதிவெழுத அமர்ந்தாலே முல்லை வந்து மடியில் அமர்ந்து கீபோர்டு மவுஸை பெரட்டிப் போட்டு மானிட்டரை கீழே தள்ளி விட்டு தான் இறங்குகிறாள். மகளதிகாரத்திற்கு கட்டுப்பட்டு நேரம் கிடைக்கும்போது பதிவுகள் தருகிறேன். நன்றி.

------------------------------------------------------

சந்தானத்திற்கு ஹீரோவாகவே தொடர வேண்டும் என்ற ஆசை வந்து விட்டது. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தை தனக்கான ட்ரெய்லராக பார்த்தவர் இந்த படத்தில் துணிவுடன் நடித்து தனது வளர்ச்சிக்கு முதல் படியை வெற்றிகரமாக தொட்டுள்ளார்.


பெரிய அப்பாடக்கர் கதையெல்லாம் கிடையாது. ஏற்கனவே தமிழ் சினிமாவில் அடித்து துவைத்து தொங்கப் போட்ட முக்கோண காதல் கதை தான். சொன்ன விதத்தில் எடுபட்டு இருக்கிறது. 

சந்தானத்தின் பெற்றோர் ஜாதகம் பார்க்கும் போது மூன்று மாதத்திற்குள் சந்தானத்திற்கு கல்யாணம் பண்ணியே ஆக வேண்டும் இல்லையென்றால் பெரும் தோஷம் வரும் என ஜோசியர் சொல்கிறார். அவசர அவசரமாக பெண் பார்க்கும் படலம்  தொடங்குகிறது. 

பார்க்கும் பெண்ணெல்லாம் சரியாக அமையாமல் போக ஆஷ்னா ஜவேரியை காதலிக்க தொடங்குகிறார். அவரோ சந்தானத்தின் காதலை மறுக்கிறார். அதே நேரம் சந்தானத்தின் பெற்றோர் அகிலா கிஷோரை சந்தானத்திற்கு பேசி முடிக்கின்றனர். 


தாய்மாமன் தம்பி ராமையாவின் வற்புறுத்தலால் திருமணத்திற்கு சம்மதிக்கிறார் சந்தானம். அகிலா கிஷோருடன் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் ஆஷ்னா ஜவேரிக்கு சந்தானத்தின் மீது காதல் பிறக்கிறது. ஒரே நேரத்தில் சந்தானம் இருவரையும் சமாளிக்க பிரச்சனைகள் கூடுகிறது. 

இறுதியில் யாரை சந்தானம் திருமணம் செய்தார் என்பதே படத்தின் கதை. கட்டக் கடைசியாக பாக்யராஜின் சின்ன வீடு பட பாணியில் ஒரு தத்துவத்தை சொல்லி அனுப்புகிறார்கள்.

படத்தில் காமெடி முதல் பாதியை விட இரண்டாம் பாதியிலேயே நன்றாக எடுபட்டு இருக்கிறது. முதல் பாதி முடிவதற்குள் லேசாக அலுப்பு தட்டுகிறது. இரண்டாம் பாதி போனதே தெரியவில்லை. பட்டென்று க்ளைமாக்ஸ்க்கு வந்து படமும் முடிந்து போகிறது. 


சந்தானம் நாயகனாகி விட்டதால் பழைய கோக்குமாக்குத்தனங்களை விட்டு விட்டு கொஞ்சம் அடக்கியே வாசிக்கிறார். நடனமாடத் தொடங்கியிருக்கிறார். ஒரு சோலோ பைட்டு வேறு இருக்கிறது. ஒரு பாடலுக்கு என்டிஆர் ஸ்டைலில் பீச்சில் அசத்துகிறார். 

இந்த நடிப்பு, நடனம் எல்லாம் இந்த படத்திற்கு ஓகே. ஆனால் நாயகனாக தொடர வேண்டுமானால் இன்னும் மெருகேற வேண்டும். அழுத்தமுள்ள கதைகளில் அவ்வப்போது நடிக்க வேண்டும். வெறும் டைம் பாஸ் மூவியை வைத்து கரையேற முடியாது பாஸ்.

ஆஷ்னா ஜவேரியை விட அகிலா கிஷோர் பார்ப்பதற்கு அழகாகவும் ப்ரெஷ்ஷாகவும் இருக்கிறார். ஆஷ்னா முகம் பார்க்க சற்று தொங்கலாக இருக்கிறது. ஆனால் அவருக்கு தான் படத்தில் அதிக காட்சிகள் இருக்கிறது. அகிலா கிஷோர் ஒரு காட்சியை தவிர மற்ற இடங்களில் வந்து போகிறார். 


படத்தில் சந்தானத்திற்கு இணையாக அசத்தியிருப்பவர் தம்பி ராமையா. சந்தானத்திற்கு கல்யாணம் நடந்த பின்னே தான் தனக்கு பரம்பரை வீடு கிடைக்கும் என்பதற்காக அவர் விரைவாக கல்யாணத்தை நடத்த செய்யும் கலாட்டாக்கள் தான் படத்தை கூடுதல் சுவாரஸ்யமாக்குகிறது. 

குலதெய்வம் கோவிலில் சாமி வந்தது போல் தம்பி ராமையா ஆட்டம் போட அந்த நேரத்திற்கு அங்கு வரும் சிங்கமுத்து ஆறடி அலகை சாமி வந்த தம்பி ராமைய்யாவின் வாயில் குத்த நடக்கும் களேபரங்களில் சிரித்து சிரித்து வயித்து வலியே வந்து விடுகிறது.

திடீரென க்ளைமாக்ஸில் தம்பி ராமைய்யாவின் ட்விஸ்ட்டும் அதனால் நுழையும் வித்யூ ராமனும் பலே திருப்பங்கள். 

காக்கா முட்டை தமிழ் சினிமா ரசிகர்களை ஒரு படி மேலே உயர்த்தி கலக்கிக் கொண்டு இருக்கும் சூழ்நிலையில் இந்த படத்தை நல்லாயிருக்கு என்று சொல்வது நல்லாயிருக்காது.

நன்றாக சிரிக்க வைத்து வெளியே வந்த பின் ஏண்டா சிரித்தோம் என்று யோசிக்க வைக்கும் ஜஸ்ட் டைம் பாஸ் படமே இந்த இனிமே இப்படித்தான்.

ஆரூர் மூனா

4 comments:

  1. விமர்சனத்திற்கு நன்றி சார் ..என்னை பொறுத்த வரை படம் பார்க்கும் பொழுது சிரிப்பு வந்தால் சரி ...:)

    ReplyDelete
  2. இது தான் கதையா நல்ல வேலை நான் இன்னும் படத்துக்கு போகல நன்றி அண்ணா .... காக்கா முட்டை இருக்கும் போது இனிமே இப்படிதான் படத்த ரிலிஸ் பண்ண எப்படிதான் இவங்களுக்கு மனசு வருதோ தெரில... அப்புறம் சின்ன பட்ஜெட் படத்துக்கு வரவேற்பு இல்ல னு பொலம்ப வேண்டியது .. இவங்களுக்கு இவங்களே ஆப்பு வச்சிக்கிட்டு நம்ம மேல குற சொல்றாங்க ...

    நேத்திக்கி திருவண்ணாமலையில் காக்கா முட்டை பார்க்க போயிருந்தேன் . நல்ல கூட்டம் இருந்தும் படம் நேற்றே கடைசி இன்று சந்தானம் படம் வந்துவிட்டது .. இல்லையென்றால் இன்னும் ஒரு வாரம் அந்த தியேட்டரில் அந்த படம் நல்லா போய் இருக்கும்.

    ReplyDelete
  3. எதை எதையோ பார்த்தாச்சு ,இது என்ன தும்மா துண்டு.. தொல்லைகாட்சியில் இலவசமா பார்த்துக்கலாம் :)

    ReplyDelete
  4. அவர் இனிமே அப்படித்தான்... பார்க்கும் நாம் இனிமே எப்படித்தான்...? பொறுமை...!?

    ReplyDelete