Friday 4 September 2015

தேவை இடஒதுக்கீடு பற்றிய புரிதல்

இந்த கட்டுரைக்கு நல்ல துவக்கம், சுவாரஸ்ய முடிவு, உவமை போன்றவை இருக்காது. மனதில் தோன்றியதை ராவாக எழுதியிருக்கிறேன்.

நம் நண்பர்களில் சிலருக்கு ஏன் பலருக்கும் கூட இடஒதுக்கீடு சம்பந்தமாக புரிதல் இல்லாமல் இருக்கிறது. தனக்கு சீட் கிடைக்கவில்லை என்பதற்காகவே இந்த பிரச்சனையில் சமூகம் சார்ந்து சிந்திக்காமல் தன்னை சார்ந்தே சிந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுகிறார்கள்.


நிறைய பேருக்கு இடஓதுக்கீடு சம்பந்தமாக நிறைய வருத்தங்கள் இருக்கிறது. தாழ்த்தப்பட்டவர்களுக்கு அதிக இட ஓதுக்கீடு கிடைக்கிறது. குறைந்த மதிப்பெண்கள் எடுத்த தாழ்த்தப்பட்டவர்கள் நமக்கு கிடைக்க வேண்டிய இடத்தை பிடித்துக் கொள்கிறார்கள் என்ற ஆதங்கம் பெரும்பாலான பிற்படுத்தப்பட்ட மற்றும் உயர்சாதி பிரிவினரிடம் இருக்கிறது.

இந்த பிரச்சனையை அப்படி பார்க்க கூடாது. மனிதன் என்பவனை பிராணிக்கு சமமாக மதித்த அதற்கும் கீழாக நடத்திய மற்றவர்களிடம் இருந்து அந்த தாழ்த்தப்பட்டவர்கள் விடுபட்டு மற்றவர்களுக்கு சமமாக வளர்ந்து வரும் நேரம் இது. வளர்ச்சியடைந்த நிலையை எட்டியவர்கள் வெகு சொற்ப சதவீதத்தினரே.

நீங்கள், உங்களுடன் படித்த சக நண்பர்கள், உங்கள் வீட்டுக்கு வரும் போது அவர்கள் தாழ்த்தப்பட்டவர்களாக இருந்தால் வெளியில் நின்று பேசியாக வேண்டும். உங்கள் வீட்டுக்கு உள்ளே வரமுடியாது என்ற நிலை இப்பவும் தமிழகத்தில் பாதிக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருக்கிறது. இந்த நிலை மாற அவர்கள் வேலை வாய்ப்பிலும் வசதியிலும் மாற வேண்டும். அதற்கு இந்த இட ஓதுக்கீடு அவசியமாகிறது.

நீங்கள் விரும்பிய படிப்பை படிக்க முடியாவிட்டால் அதற்கு காரணம் தாழ்த்தப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீடு தான் என்று எண்ணாதீர்கள். உங்களுக்கென்று ஒரு மதிப்பெண் வரம்பு ஒதுக்கப்பட்டுள்ளது. அதனை எட்டாததால் தான் உங்களுக்கு சீட் கிடைக்கவில்லை என்ற உண்மையை புரிந்து கொள்ளுங்கள்.

எனக்கு தெரிந்த ஒரு தாழ்த்தப்பட்ட குடும்பத்தை சேர்ந்த ஒருவர் ஐடிஐ படித்து விட்டு சுமாரான வேலையில் இருந்தார். அந்த சமயம் அவர்கள் குடும்பம் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள சாட்டியக்குடி என்ற கிராமத்தில் இருந்தது. மற்ற சாதிக்காரர்கள் வீட்டுக்கு உள்ளே அவர்கள் போக முடியாது. சில சமயம் மற்றவர்கள் வீட்டில் இரவு போய் மிச்சமிருக்கும் சாப்பாட்டை வாங்கியும் சாப்பிட வேண்டியிருக்கும்.

20 வருடங்களுக்கு முன்பு அந்த ஐடிஐ பிட்டர் படித்த பையனுக்கு தாழ்த்தப்பட்ட கோட்டாவில் அரசு வேலை கிடைத்தது. திருவாரூருக்கு குடியேறினார்கள். இப்போ அவர்கள் குடும்பம் மேம்பட்ட நிலைமையை அடைந்து விட்டது.

திருவாரூரில் இரண்டு வீடு வைத்து இருக்கிறார். கார் வாங்கி விட்டார்.  இப்போ அவர் போஸ்டிங் எக்சிகியூட்டிவ் என்ஜினியர். அவரது மகன் பிஈ சென்னையில் படிக்கிறான்.

அதை விட முக்கியமாக திருவாரூரில் அவரது ஏரியாவை சுற்றியிருக்கும் மக்கள் அவரது சாதி பாராமல், வேலையை மட்டுமே மதிப்பீடாக வைத்து விசேசங்களுக்கு கூப்பிடுகிறார்கள். மற்றவர்கள் வீட்டுக்குள் எந்த தயக்கமும் இன்றி நுழைய முடிகிறது.

ஒரு நாள் அவர் என்னுடன் சென்னையில் சரக்கடித்த போது சிறுவயதில் எப்படியெல்லாம் மற்றவர்களால் அவமானத்துள்ளாக்கப் பட்டார் என்று கூறிய போது சமூகத்தின் கேவலத்தை கண்டு அதிர்ந்தே போனேன்.

இந்த நிலை மாற காரணம், இட ஒதுக்கீடு. இந்த மாற்றம் இத்தனை நாட்களாக வெகு சொற்ப அளவிலேயே நடந்துள்ளது. இன்னும் நடக்க வேண்டியது நிறைய இருக்கிறது. அது வரை அவர்களுக்கு இடஒதுக்கீட்டில் முன்னுரிமை வழங்கப்பட்டே தீர வேண்டும்.

அவர்களை உங்களுடன் ஒப்பிடாதீர்கள். உங்களது ஏழ்மையை விட அவர்களது தீண்டாமை கொடுமையானது. கேவலமானது. உங்கள் ஏழ்மையை நீங்கள் சிறிது உழைத்தால் விரட்டி அடித்து விடலாம். ஆனால் அவர்கள் தீண்டாமையை அது போல் சாதாரணமாக செய்து விட முடியாது.

தாழ்த்தப்பட்ட ஒருத்தர் அந்த இடஓதுக்கீட்டை பயன்படுத்தி முன்னேறி விட்டார் என்றால் அவர் அதற்கடுத்த தாழ்த்தப்பட்ட குடும்பத்திற்காக சலுகையை தன் வம்சத்திற்கு வேண்டாம் என விட்டுக் கொடுப்பது தான் சரி. அதனை செய்யாமல் இடஒதுக்கீட்டை, அதன் சலுகையை பயன்படுத்துதல் என்பது தனிமனித ஒழுங்கீனமே.

இதற்காக இடஒதுக்கீட்டையே அரசு ரத்து செய்ய வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பது மற்ற சாதிக்காரரின் சுயநலம் உங்கள் எண்ணங்களை விசாலமாக்குங்கள். 

சாதிமத பேதமற்ற மனிதனுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாட்டை உருவாக்குவோம்.

நன்றி 

ஆரூர் மூனா

14 comments:

  1. வெளிப்படையான உங்கள் கருத்திற்கு எனது பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. நீங்கள் சொல்வதெல்லாம் சரி தான் ஜி.... ஆனால் சாதி பாகுபாட்டை ஒழிப்பதை விட்டுவிட்டு, இன்னும் சாதி வாரியிலான இட ஒதுக்கீட்டை அமலில் வைத்திருப்பது எந்த அளவில் நியாயம் என தெரியவில்லை...இதை பற்றி ஒரு SC /ST சாதிக்காரரை பார்த்து கேட்டால், கண்டிப்பாக இடஒதுக்கீடு வேண்டும் என்று தான் சொல்லுவார்கள். ஏனென்றால் கடந்த 68 ஆண்டுகளாக அவர்கள் வசதியை (ஒதுக்கீட்டை) நன்றாக அனுபவித்து விட்டார்கள்... இனி வேண்டாம் நீ சொல்ல மாட்டார்கள்... இதுவே ஒரு FC அல்லது General கோட்டா வில் உள்ள சாதியாரிடம் போய் கேளுங்கள்... அவர்கள் கைநழுவிய வாய்ப்புகளை பற்றிதான் சொல்லுவார்கள்... இதில் எது வரம் , எது சாபம் என நீங்கள் தான் சொல்லணும்..

    ReplyDelete
    Replies
    1. இது தான் புரிதல் இல்லாமை என்பது. தமிழகத்தில் உள்ள எல்லா தாழ்த்தப்பட்டவர்களும் இடஒதுக்கீட்டை பயன்படுத்தி அரசு வேலை பெற்றும் மற்றும் உயர்படிப்புகளை படித்தும் வாழ்க்கையில் முன்னேறி விட்டார்கள் என்கிறீர்களா. சலுகைகள் கிடைக்கப் பெற்றவர்கள் வெகு சொற்பமே என்கிறேன் நான். இது மாற இன்னும் காலம் பிடிக்கும். அது வரை காத்திருக்கதான் வேண்டும். பொதுபிரிவு மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களில் வசதியுள்ளவர்கள் இடஒதுக்கீட்டை பற்றிய பிரச்சனைகளுக்குள் நுழைவதில்லை. வசதியில்லாதவர்கள் மட்டுமே எதிர்பார்க்கும் நிலை இப்போது. அதைத்தான் சொல்கிறேன். நீங்கள் சந்திக்கும் பிரச்சனையான ஏழ்மையை விட அவர்கள் சந்திக்கும் பிரச்சனையான தீண்டாமை கொடியது. அது விலக அவர்கள் வெளியே வரவேண்டும். சாதி பாகுபாட்டை தாண்டி மற்றவர்களுடன் அவர்கள் இயல்பாக பழக அவர்களுக்கு படிப்பும் நல்ல வேலையும் அவசியமாகிறது. அது வரை காத்திருக்க தான் வேண்டும்.

      Delete
  3. நன்றி ஆனா மூனா செந்திலண்ணா, சிம்ப்ளா புரிய வைச்சிட்டிங்க அவரவர் இடங்களில்தான் போட்டியிடுகின்றனர். ஆனா பழியைஅடுத்தவங்க மேல போடுறாங்க. .... தனி மனித ஒழுங்கீனமாக சாதிப்பெருமை பேசும்,அவசியமே இல்லாமல் கோவில் பள்ளி,கல்யாணம்,சுடுகாடுன்னு சமூகத்தின் அத்தனை இடத்திலும் சாதியை பயன்படுத்தும் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் ஒழுக்கம் வந்துட்டாலே போதும். இந்த இட ஒதுக்கீடு அடுத்த தலைமுறைக்கு அவசியமில்லாது போகும். சலுகைல படிச்சிட்டு எகதாளத்த பாருன்னு கண்டவனும் பேசி கேட்டுக்கொண்டுதான் இருக்குறோம் இப்போதும்.தனியார் துறையிலும் பங்கீடு கொடுத்திருந்தால் பரவலாக முன்னேற்றமாகிருக்கும்.
    ஆரெம்கேவி, Tvs நிறுவனங்களில் பெரும்பாலும் அவர்கள் ஜாதியினரை மட்டுமே வேலைக்கு எடுத்தனர்.தற்போதுதான் சற்று நிலை மாறியுள்ளது. அதிலும் ஆரெம்கேவி நிலை இன்னும் மோசம் என கேள்விப்படுகிறேன்.
    பிறக்கும்போதே சாதிப்பெய்ரோடுதான் வடக்கே குழந்தைகள் பிறக்கின்றன. ஒதுக்கீடுக்கு எதிரான இத்தனை ஆவேசத்தை இந்த சமூக ஆர்வலர்கள் சாதிக்கு எதிராக காட்டும்பட்சம் இன்னைய தேதிக்கு எவ்வளவோ முன்னேற்றமாகி இருக்கும்.
    ஒரு உதாரணம் சொல்கிறேன் 1999ல பொள்ளாச்சி சமத்தூர்ல நான் நாயக்கர்னு பொய் சொல்லித்தான் வீடு வாடகைகு பிடிச்சேன். இப்போ ல 2015ல என்னோட அண்ணன் பெயர் கிருத்துவ பெயர் என்பதால் நாடார் என நம்பி கோவை மாநகரத்தில் வீடு தந்துள்ளார் ஓனர். அவனிடமே வந்து பக்கத்து வீடு காலியா இருக்கு எஸ் சி ஆட்கள் வீடு கேட்டு வந்தால் மறுத்துவிடுங்கள் என்றுள்ளார் ஓனர். இதுதான் இன்றைய நிலை. நானே பல இடங்களில் அனுபவிக்கிறேன்.
    அதன் வீச்சு குறைந்திருக்கலாம். ஆனால் முடியவில்லை.இன்னும் உயரதிகார இடங்களுக்கு செல்லமுடிவதில்லை. பயங்கர லாபி .அத்தனையும் கடந்து சென்றால் ஒத்துழைப்பு இல்லை. க்ளர்க் போன்ற இடங்களில் வேலைக்கு வந்துவிட்டாலே சமுதாயத்தில் முன்னேறி விட்டதாக கணித்து விடுகின்றனர்.
    நடைமுறை வலிகள் அனுபவிப்பனுக்குதான் தெரியும்.

    ReplyDelete
    Replies
    1. இந்த பிரச்சனைகள் எனக்கு புரிந்த வரையில் தான் இந்த பதிவை இட்டுள்ளேன். நானும் தெரிந்து கொள்ள வேண்டியது நிறையவே உள்ளது. நாலு பேர் அரசு வேலையில் சேர்ந்து விட்டாலே எல்லா தாழ்த்தப்பட்டவர்களுக்கும் வேலை கிடைத்து முன்னேறி விட்டதாக நினைக்கிறவர்களுக்காகத் தான் இந்த பதிவு. தங்கள் கருத்திற்கு நன்றி சதீஷ்

      Delete
    2. அரசே சாதியை பற்றி கண்டு கொள்வதில்லை. என் வயது முதிர்ந்த தாத்தாவை ஒரு சிறுவன் இழி சொல் கொண்டு பேசியதை எதிர்க்க இயலாமல் இருந்துள்ளேன். ஊராம், அப்படித்தான் இருக்குமாம். எவன் இட ஒதுக்கீடு வேண்டாம் என்கிறானோ அவன் எந்த வலியும் அனுபவிக்கவில்லை. பல ஆயிரம் ஆண்டு அனுபவித்து விட்டு இப்போது அறுபது ஆண்டு ஆகி விட்டது என்று கூச்சல் போடுபவர்கள் உண்மையில் இன்னும் மமதை, செருக்கு இதில் வாழ்கிறார்கள். மனிதரில் என்ன வித்தியாசம் என்று நினைத்து பார்க்க முடியாத உள்ள ஊனம் உடையவர்கள்.
      இவர்களுக்கு இரத்தமோ, கண்ணோ, வேறோ தேவை பட்டால் இவர்கள் சாதியிலிருந்து வேண்டும் என்று கேட்பார்களா?

      Delete
    3. அது தான் இங்கே பிரச்சனையே

      Delete
  4. good article brother.i agree.

    ReplyDelete
  5. இட ஒதுக்கீட்டிற்கு மாற்று கருத்து சொன்னாலே எதிரியாகப் பார்க்கும் நிலைதான் நம் நாட்டில் இருக்கிறது. உங்கள் ITI நண்பர் பற்றி சொன்னீர்கள். இன்று வாகனம் வீடு என்று நல்ல நிலையில் இருப்பதாகவும் சொன்னீர்கள். மிக்க மகிழ்ச்சி. உங்களின் நண்பர் தம் மகனுக்கும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில்தான் சீட் வாங்கியிருப்பார். தான் வளர்ந்த பிறகும் மீண்டும் மீண்டும் இட ஒதுக்கீட்டு சலுகையினை அனுபவிப்பது என்ன வகையில் நியாயம். அது போகட்டும், தான் பட்ட துன்பங்களை உணர்ந்து, தன் இனம் முன்னேறுவதற்கு என்ன செய்துள்ளார். தம் மகனுக்கு தம் சாதியிலேயே, மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள வீட்டில் பெண் எடுத்து அந்தக் குடும்பத்தை முன்னேற்ற நினைப்பாரா? நிச்சயம் தன் அந்தஸ்துக்கு, அது வேறு சாதியாக இருந்தாலும் பரவாயில்லை என்றுதான் பெண் எடுப்பார். (அதை நடிகர் வடிவேலு செய்திருந்தார் – தம் மகனுக்கு அவர் இனத்திலேயே மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள வீட்டில் வரதட்சனை இல்லாமல் பெண் எடுத்திருக்கிறார்). ஆக முன்னேறியவர் இட ஒதுக்கீட்டின் சலுகையால் இன்னும் முன்னேறிக் கொண்டே இருக்க வேண்டும்.. அரசாங்கமும் சலுகை கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.. இது என்ன நியாயம். 'பட்டேல்' எனும் உயர் சாதியில் பிறந்து விட்டதாலேயே 80% மதிப்பெண் எடுத்தும் ஒரு ஏழை கல்வி/வேலை கிடைக்காமல் இருக்கலாம், அதே சமயம் ஒருவர் நல்ல வசதியான நிலை அடைந்த பின்பும், இட ஒதுக்கீடு இருக்கிறது என்பதற்காக தொடர்ந்து தலைமுறை தலைமுறையாக அவர் குடும்பம் 40% மதிப்பெண் எடுத்தாலும் சலுகையினை அனுபவித்துக் கொண்டே இருக்க வேண்டுமா?. புதுச்சேரியில் கல்வி/வேலை வாய்ப்பில் உள்ளூர்(நேட்டிவ்) மற்றும் வெளியூர் (மைக்ரண்ட்) ‘அந்த’ பிரிவினருக்குள் சண்டை வழக்காடு மன்றம் வரை சென்றுள்ளது. அதாவது, புதுச்சேரியை பூர்வீகமாகக் கொண்டவர்களுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், தன் வகுப்பினராக இருந்தாலும் வந்து குடியேறியவர்களுக்கு தரக்கூடாது என்று சண்டை நடக்கிறது. வந்து குடியேறியவர்களும் தம் இனம் தானே, அவர்களும் முன்னேறட்டும் எனும் என்னமில்லை. அப்புறம் எப்படி தங்கள் இனம் உயர இவர்கள் பாடுபடுவார்கள். ஆக வளர்ந்தவன் தன் சாதியைப்பார்ப்பதில்லை. தான் வளர்வதற்கு தன் சாதியாக இருந்தாலும் விட்டுக் கொடுக்க மனசில்லை. மேலும் மேலும் இட ஒதுக்கீட்டு சலுகையை தானும் தன் குடும்பமும் அனுபவிக்க வேண்டும் என்று எண்ணுதல் தான் இட ஒதுக்கீட்டின் உட்பொருளா? சாதி பாகுபாடு பார்ப்பது மிகக் கொடியது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. என் குடும்ப நண்பர்களில் 'அந்த' வகுப்பைச் சார்ந்தவர்களும் இருக்கிறார்கள். நாங்கள் உறவு முறையில்தான் பழகி வருகிறோம். தீண்டாமைக் கொடுமை என்பது வேறு, இட ஒதுக்கீடு என்பது வேறு. இரண்டும் ஒன்றல்ல. 'மால்த்யூசின் மக்கள் தொகைக் கோட்பாட்டின்"படி மக்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டேதான் இருக்கும். அதற்காக இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் இட ஒதுக்கீடு இருந்துகொண்டேதான் இருக்க வேண்டுமா? இட ஒதுக்கீடு யாருக்கு என்பதை அரசு மறு ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. இல்லையென்றால் இன்று பட்டேல்கள், நாளை வேறு ஒரு வகுப்பினர். இது தொடர வேண்டுமா?

    ReplyDelete
  6. நல்ல பதிவு அருமையான தகவல் - வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை....ஊருக்கு வெளியே வாழ்ந்தவர்களை கல்வி ஊருக்குள் வாழ வழிவகுத்துள்ளது....இன்னுமும் தங்களின் சுய லாபத்திற்காக அடிமை படுத்துவது நடந்து கொண்டே தான் உள்ளது....
    புதுகை விழாக்குழு சார்பாக அன்புடன் வரவேற்கின்றோம்..

    ReplyDelete