நீண்ட
நாட்களுக்கு பிறகு ஒரு படத்தின் முதல் காட்சிக்காக அடித்துப் பிடித்து 09.30
மணிக்கே கிளம்பியது காவியத்தலைவன் படத்திற்காகத்தான்.
இப்பொழுது
வீட்டில் பாப்பா இருப்பதால் முன்பு போல் நினைத்தவுடன் கிளம்புவது எல்லாம் நடக்காத
காரியம். காலையிலேயே எழுந்து வீட்டம்மாவுக்கு வீட்டு வேலைகள் செய்து கொடுத்து
விட்டு தாஜா பண்ணி சினிமாவுக்கு கிளம்பினேன்.
திரையரங்கில்
முதல் வண்டியை நான் தான் பார்க் பண்ணினேன். அதுவே மிகவும் சந்தேகத்தை கிளப்பியது.
அது போல என்னுடன் காலை 10மணிக்காட்சி படம் பார்த்தவர்கள் 20 பேர் தான் இருக்கும்.
ஆனால்
வசந்தபாலனின் டச் தான் படத்தின் ஸ்பெஷலாக இருந்தது.
---------------------------------------------------------------------------
வசந்தபாலன்
படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.
அதிலும் தோத்தவனை நாயகனாக வைத்து அவர்
இயக்கிய வெயில் எனக்கு மிக
மிக நெருக்கமான படம். அந்த படத்தில்
வரும் பசுபதி கேரக்டர் கிட்டத்தட்ட
நானே தான். பிரார்த்தனா டிரைவ்
இன் தியேட்டரில் அந்த படத்தின் க்ளைமாக்ஸ்
நேரத்தில் நான் அழுத அழுகைக்கு
தியேட்டரில் அமர்ந்திருந்த எல்லோரும் என்னை ஆறுதல்படுத்தினர். காருக்குள்
கில்மா பண்ணிக்கிட்டு இருந்த ஜோடிகள் உள்பட.
அங்காடி
தெரு படமும் அப்படித்தான். நான்
படம் பார்த்து ஓவராக உணர்ச்சி வசப்பட்டு
சேர்மக்கனி ரொம்ப கஷ்டப்படுறா, நானே
கட்டிக்கிறேன்னு என் வீட்டம்மாக்கிட்டயே சொல்லி
டின்னர் சாப்பிடும் போது நடுமுதுகிலேயே மிதி
வாங்கினேன்.
காவல்
கோட்டம் நாவலை முன்பே படித்திருந்ததால்
அரவாண் படத்திற்கும் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால் முடிவு நேர்மாறாக இருந்தது.
இருந்தாலும் வசந்தபாலனின் மீதான ரசிப்புத்தன்மை கொஞ்சம்
கூட குறையவில்லை.
----------------------------------------------------------
படத்தின் எதிர்பார்ப்புகளுக்கு எனக்கான மிக
முக்கிய காரணம் நாடகம். என் வயதையொத்த பலபேருக்கே தெருவோர நாடகங்கள் பார்க்கும் வாய்ப்பு
கிடைத்திருக்காது. நான் சொல்வது எஸ். வி. சேகர், கிரேஸி மோகன் வகையறா நாடகங்களை அல்ல.
நான் வளர்ந்த திருவாரூர் பகுதிகளிலேயே 80களின்
இறுதியில் நாடகம் வழக்கொழிந்து விட்டது. அப்படியே சில இடங்களில் நடந்திருந்தாலும் எனக்கு
சிறு வயது என்பதால் அனுமதிக்க மாட்டார்கள்.
என் அம்மா வழி பாட்டி வீடு இருக்கும் நீடாமங்கலம்
பகுதிகளிலும், என் பெரியம்மா வீடு இருக்கும் புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி பகுதிகளிலும்
நடக்கும். சித்திரை திருவிழா காலங்களில் தவறாமல் எல்லா சுற்றுவட்டார கிராமங்களிலும்
நடக்கும் நாடகம், கரகாட்டம் எல்லாவற்றையும் பார்ப்பேன்.
இரண்டு இரவுகள் முழுக்க நடைபெறும் நாடகங்கள்
எனக்கு மிகவும் பிடித்தவை. நாடகங்களுக்கு இடையே வரும் பபூன் காமெடிகள் இன்று அபத்தமாக
தெரிந்தாலும் அன்று ரசித்து கைதட்டி கொண்டாடி மகிழ்ந்திருக்கேன்.
இன்று அந்த மாதிரி நாடகங்கள் காணாமல் போய்
விட்டன. முழு ராத்திரி கண்விழித்து பார்க்கும் பொறுமையும் மக்களுக்கு இல்லாமல் போய்
விட்டது. என்னைப் போன்ற நாடக ஆர்வலர்களுக்கு உள்ளுக்குள்ளேயே அந்த நாடக கலாரசிகன் உறங்கிப்
போய் விட்டான்.
ஆரூர் மூனா