Sunday, 2 August 2015

கையேந்திபவன்கள் - பழசு பிப்ரவரி 2013

சென்னைக்கு வந்த புதிதில் என் பட்ஜெட்டுக்கு பசியாற்றியது கையேந்திபவன்கள் தான். 1997ல் அப்ரென்டிஸ் படித்த காலக்கட்டத்தில் எனக்கு மாத ஊக்கத்தொகை ரூ.580/- தான். ஹாஸ்டல் இலவசம். மேற்கொண்டு வீட்டிலிருந்து அப்பா பணம் கொடுத்து அனுப்புவார்.


ஆனால் அந்த சமயம் எனக்கு சென்னையில் சினிமா பார்ப்பது பெரிய வேலையாக இருந்ததால் 10 நாட்களிலேயே கையிருப்புகள் கரைந்து விடும். பிறகு கையேந்தி பவன்களிலும் ஐசிஎப் திருமண மண்டபங்களிலும் தான் மாதம் ஓடும்.

அதிலும் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு சுவை நம்மை கட்டிப் போடும், அவற்றில் எனக்கு கிடைத்த அனுபவங்களை இனி பார்க்கலாம். இன்று கூட சாப்பாட்டு நேரம் வெளியில் இருந்தால் முக்கால்வாசி கையேந்தி பவன்களில் தான் சாப்பிடுவேன். சில நேரம் மட்டுமே ஹோட்டல்கள்.

அப்ரெண்டிஸ் காலகட்டத்தில் காலையில் 7மணிக்குள் இன்டைம் கார்டு அடிக்க வேண்டும். அதற்காக காலையில் சாப்பிடாமல் அரக்க பரக்க கிளம்பி வந்து கார்டு அடித்து விட்டு ப்ரேயர் முடிந்ததும் பக்கத்தில் இருக்கும் கையேந்தி பவனுக்கு தோசை சாப்பிட வருவோம். தோசை 3 ரூபாய் தான். திருப்தியாக சாப்பிட்டு விட்டு வகுப்பறைக்கு செல்வோம்.

மாசக்கடைசியில் தான் பில் செட்டில் செய்வோம். இன்று அந்த இடத்தில் இருந்த கடைகளெல்லாம் அகற்றப் பட்டு விட்டன. இன்று அந்த வழியில் செல்லும் போது நினைவுகள் எல்லாம் எனக்கு பின்னோக்கி செல்லும்.

வேலைக்கு செல்வதற்காக நான் 2001ல் சென்னைக்கு மீண்டும் வந்து இறங்கிய போது எனக்கு சம்பளம் 1800 ரூபாய். தங்குமிடம் கம்பெனி கொடுத்து விட்டது. ஆனால் அந்த சமயத்தில் தண்ணியடிக்கும் பழக்கம் வேறு தொற்றிக் கொண்டது. இந்த சம்பளத்தில் இவ்வளவையும் சமாளிக்க வேண்டும்.

பிறகென்ன மூன்று வேளையும் கையேந்திபவன் தான். அப்பொழுது காசி தியேட்டருக்கு எதிர் ரோட்டில் உள்ள கையேந்திபவன் தான் இரவு உணவுக்கு நான் செல்லும் இடம். இட்லியும் கருவாட்டு குழம்பும் சரியான காம்பினேஷன். பத்து இட்லிக்கு மேல் உள்ளே இறங்கும், ஆனால் பத்து ரூபாய் தான் செலவாகியிருக்கும்.

அதே போல் மதிய உணவுக்கு அசோக் பில்லர் பக்கத்தில் இருந்த கையேந்திபவன்கள் தான் இலக்கு. அன்லிமிட்டெட் சாப்பாடு 15 ரூபாய் தான். மே மாச மொட்டை வெயிலில் நின்று சுடச்சுட சாப்பாட்டில் மீன் குழம்பு ஊற்றி சாப்பிடுவது இருக்கே, உலகில் இதற்கு ஈடுஇணையாக எந்த டிவைன் சாப்பாடும் இருக்க முடியாது.

பிறகு சில வருடங்களில் மாநகராட்சி அந்த கையேந்திபவன்களை காலி செய்து விட்டது. மறுபடியும் சாப்பிட இடம் கிடைக்காமல் சில நாட்கள் அலைந்து கேகேநகர் செல்லும் சாலையில் எம்ஜிஆர் நகர் மார்க்கெட்டுக்கு எதிரில் இருந்த கையேந்திபவன்களுக்கு வாடிக்கையாளரானேன்.

அங்கு தோசையும் ஆப்பாயிலும் தான் ஸ்பெசல். சுடச்சுட தோசை மீது கறிக்குழம்பு ஊற்றி அதன் மேல் ஆப்பாயிலை வைத்து இரண்டையும் சமமாக பிய்த்து சாப்பிட்டால் ஆஹா. இதற்கு ஈடுஇணை எதுவும் இருக்க முடியாது.

2004ல் டில்லிக்கு சென்ற போதும் காலை சாப்பாடு கையேந்திபவனில் கச்சோரி தான். தொன்னையில் இரண்டு கச்சோரி வைத்து நடுவில் ஒட்டையைப் போட்டு அதனுள் இனிப்பு கார சட்னிகளை விட்டு ஊற வைத்து அடித்தால் தொன்னையில் தெரியும் பாருங்க அதுதான் கடவுள்.

அதுபோல 2005ல் திருவனந்தபுரத்திற்கு மாற்றலானேன். அங்கும் ஒரு கடையை காலை சாப்பாட்டிற்கு பிடித்தேன். அங்கு ஸ்பெசல் புட்டும் இதர சைட்டிஷ்களும் தான். பெரிய தட்டில் புட்டு வைத்து அதன் மேல் கடலைக்கறி ஊற்றி அதனுடன் தேங்காய் எண்ணெய்யில் பொறித்த டிபிக்கல் கேரளா அப்பளம் வைத்து அதனுடன் தேங்காய் எண்ணெய்யில் போட்ட ஆம்லெட் வைத்து மறுபுறம் கட்டன் சாயாவை வைத்து அடித்தால் சாயந்திரம் வரை பசிக்காது.

திருமணம் ஆகும் வரை எனக்கு வழக்கமான சாப்பாடுகள் கையேந்தி பவனில் மட்டுமே அமைந்தது. எவ்வளவு சம்பளம் உயர்ந்த போதிலும் நான் இந்த பழக்கத்தை மாற்றிக் கொள்ளவே இல்லை.

இப்பொழுது கூட வீட்டம்மா ஊருக்கு சென்றால் சந்தேகமின்றி என் சாய்ஸ் கையேந்திபவன் தான்.

ஆரூர் மூனா

வாஞ்சூர் - பழசு பிப்ரவரி 2013

காரைக்கால் நகர்ப்புற எல்லையோரம் உள்ள கிராமம் வாஞ்சூர். திருவாரூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி போன்ற பகுதிகளில் இருந்து குடிகார நண்பர்கள் பாண்டிச்சேரி மாநிலத்தில் சரக்கு விலை குறைவு என்பதனால் வாஞ்சூருக்கு தான் வருவர். அந்த ஊரில் உள்ள மக்கள்தொகைக்கு இரண்டு ஒயின்ஷாப்பே அதிகம். ஆனால் அங்கு நாற்பதுக்கும் மேற்பட்ட ஒயின்ஷாப்புகள் உண்டு என்றால் அந்த ஊர் எதற்கு பெயர் பெற்றது என்று நினைத்துப் பாருங்கள்.


கீழத்தஞ்சை பகுதியில் நண்பர்கள் ஒன்று கூடினால் பேசும் முதல் வார்த்தையே வாஞ்சூருக்கு போகலாமா என்று தான் இருக்கும். அந்தளவுக்கு விலை குறைவு. 10 பேர் போனால் 600 ரூபாய்க்கு நிறைபோதையுடன் வருவோம்.

எங்கள் பகுதியில் திருமணம் என்றால் முதல்நாளே கும்பலில் வெட்டியாக இருக்கும் இருவரை அழைத்து பணம் கொடுத்து விட்டால் 25 முதல் 30 புல் பாட்டில்கள் வரை வாஞ்சூரில் இருந்து வாங்கி வந்து விடுவர். பிறகென்ன கல்யாணம் முதல்நாள் இரவு மண்டபமே களைகட்டியிருக்கும். மறுநாள் காலை நண்பர்கள் விழித்தெழும் போது பெரும்பாலும் திருமணம் முடிந்திருக்கும்.

இப்படிப்பட்ட பெருமைக்குரிய வாஞ்சூரில் எங்கள் நண்பர்கள் குழாம் வழக்கமாக செல்லும் பார் ஒன்று உள்ளது. அதில் ஒரு சப்ளையர் பையன் வேலை பார்த்து வந்தான். நாங்கள் வாரம் இருமுறை வாஞ்சூர் செல்வதுண்டு. அவன் நன்றாக சப்ளை செய்வதால் எப்பொழுதுமே அதிகம் டிப்ஸ் கொடுப்பதுண்டு.

அவன் அந்த ஊரை சேர்ந்தவன் என்பதால் அவனுக்கு நாங்கள் வைத்த பட்டப்பெயர் வாஞ்சூர். நாங்கள் எப்பொழுது பாருக்கு வந்தாலும் எனது பேவரைட் சைட்டிஷ்ஷான முட்டை முந்திரி போட்டி மற்றும் கலக்கியை எனக்கு பக்காவாக செய்து கொண்டு வந்து வைப்பான்.

அதனாலேயே எனக்கு ரொம்ப நெருக்கமானான். அவன் என்னிடம் இருந்து பெரும் டிப்ஸே மாதம் 2000த்தை தாண்டும். பிறகு நான் சென்னைக்கு வந்த பிறகும் ஊருக்கு செல்லும் போதெல்லாம் வாஞ்சூருக்கு செல்வதால் பழக்கம் நீடித்து இருந்தது. என்னிடம் செல்நம்பர் வாங்கிக் கொண்டு அடிக்கடி போன் செய்து பேசுவான்.

ஒரு நாள் அசந்து தூங்கிக் கொண்டு இருக்கும் போது விடியற்காலை நாலு மணிக்கு போன் வந்தது. எடுத்து பேசினால் வாஞ்சூர் அண்ணே என்றான். என்னடா இந்த காலையில் என்று கடிந்து கொண்டதும் அவன் அழ ஆரம்பித்தான். என்னவோ ஏதோ என்று பயந்து அவனிடம் சமாதானமாக பேசின பிறகு தான் பேசினான். ஊரில் அப்பாவுடன் பிரச்சனை ஏற்பட்டு தனியாக கிளம்பி வந்து இருக்கிறான்.

பிறகென்ன நான் தங்கியிருக்கும் அறைக்கு அவனை வரவழைத்து ஒரு வீட்டில் டிரைவர் வேலைக்கு சேர்த்து விட்டேன். சில வருடங்கள் அங்கேயே தங்கியிருந்து சம்பாதித்து வந்தான். இடையில் அவன் வேலை பார்த்த வீட்டு பெண்ணையே காதலித்து இருக்கிறான்.

விஷயம் பெண்ணின் அப்பாவிற்கு தெரிய வந்ததும் முதலில் எதிர்த்து வந்தவர் இவர்களின் காதலின் தீவிரம் தெரிய வந்ததும் வேறு வழியின்றி திருமணத்திற்கு சம்மதித்து இருக்கிறார். அத்துடன் எனக்கும் அவனுக்குமான தொடர்பு நின்று விட்டு இருந்தது.

சென்ற வருடம் நான் மீண்டும் வாஞ்சூர் நண்பர்களுடன் சரக்கடிக்க பாருக்கு சென்றால் அங்கே இவன் சப்ளையராக வந்து ஆர்டர் கேட்டான். பிறகு என்னைப் பார்த்தவன் சத்தமின்றி அந்த இடத்தை விட்டு நகர்ந்தான். விரட்டிச் சென்று பிடித்து "என்னடா எப்படி இருக்க வேண்டியவன் நீ ஏன் இங்கு சப்ளையாராக வந்தாய் என்ன ஆனது" என்று கேட்டால் அழ ஆரம்பித்து விட்டான்.

பிறகு சமாதானப்படுத்தி இரண்டு ரவுண்டு அவனை சாப்பிட வைத்ததும் தான் உண்மை வெளிவந்தது. இந்த பையன் அந்த வீட்டில் ஒழுங்காக வேலை பார்த்து வந்தவன் சபலம் காரணமாக அந்த வீட்டு பெண்ணின் அம்மா குளிக்கும் போது எட்டிப் பார்த்து இருக்கிறான்.

இதை கண்டுபிடித்த அந்த அம்மா தன் வீட்டுக்காரனிடம் சொல்லி விட வாஞ்சூரானை வீட்டை விட்டு அவர் அடித்து விரட்டி விட்டாராம். ஒரு வீட்டில் மாப்பிள்ளையாக போக வேண்டியவன் சபலத்தினால் வாழ்க்கையை இழந்து மீண்டும் சப்ளையராக புறப்பட்ட இடத்திற்கே வந்து சேர்ந்தால் அவனை வெளங்காதவன் என்று சொல்லாமல் என்ன சொல்வது.


ஆரூர் மூனா

கடல் - பழசு பிப்ரவரி 2013

எப்பொழுதுமே எனக்கு வெள்ளிக் கிழமை யென்றால் எதாவது வேலை வந்து இடைஞ்சல் செய்து 11 மணிக்கு படம் பார்க்க முடியாமல் செய்து விட்டு பிறகு 12 மணி காட்சி AGS வில்லிவாக்கத்தில் தொங்குவதாகவே அமையும். ஆனால் இன்றோ 10 மணிக்கே வேலைகளை முடித்து விட்டு காத்திருந்தேன். நண்பன் அசோக் 11 மணிக்கு வந்தான்.


எந்த படம் என்று முடிவு செய்யாமல் இருவரும் சேர்ந்து AGS சென்றோம். கூட்டமேயில்லை. அந்த சமயம் ஒரு குழப்பம் வந்தது. கடல் பார்க்கலாமா இல்லை டேவிட் பார்க்கலாமா என்று ஆனால் 12 மணிக்காட்சி டேவிட் இல்லாததால் வேறு வழியின்றி கடலுக்கு செல்ல நேர்ந்தது. ஆனால் கடல் என்னை கவுத்தது தான் மிச்சம்.  இன்னைக்கும் எனக்கு ரூ.240/- அவுட்டு.

எனக்கு மட்டும் ஏண்டா இந்த மாதிரியெல்லாம் நடக்குது.

படத்தின் கதை பெரிசா சொல்லிக்கிற மாதிரியெல்லாம் இல்லை. அரவிந்தசாமியும் அர்ஜூனும் பாதிரியாராக பயிற்சியில் இருக்கிறார்கள். ஒரு பிரச்சனையால் எல்லாத்தையும் கைவிட்டு அர்ஜூன் வெளியேறுகிறார். அரவிந்தசாமியை எப்படியாவது பழிவாங்குவேன் என்று சவால் விட்டு செல்கிறார்.

அதே போல் பல வருடங்கள் கழித்து பெரிய மீசைக்காரராக ஆனதும் அரவிந்தசாமி பாதிரியாராக இருக்கும் ஊருக்கு வந்து அவரை பழிவாங்குகிறார். பாப்கார்ன் விக்கிறவர் வேண்டுகோளுக்கு இணங்க இடைவேளை விடப்படுகிறது.

அதன் பிறகு அரவிந்தசாமி அர்ஜூனை பழிவாங்கினாரா மன்னித்தாரா என்பதை பின்பாதியில் காட்டியிருக்கிறார்கள். இப்படியே படம் பார்த்தால் நமக்கு கடுப்படித்து விடுமே என்பதற்காக கெளதம் மற்றும் துளசியை வைத்து ஒரு காதல் எபிசோடை மேற்சொன்ன கதையுடன் கலந்து விட்டு இருக்கிறார்கள்.

மணி ரத்னம் படத்தில் எனக்கு பாடல் படமாக்கப்பட்ட விதம் மிகவும் பிடிக்கும். அதுவும் அலைபாயுதே படத்தில் பச்சைநிறமே பாடல் எத்தனை ஆயிரம் முறை பார்த்தேன் என்று எனக்கே தெரியவில்லை. ஆனால் அதே போல் இதிலும் முயற்சித்து இருக்கிறார்கள். ஆனால் எனக்கு ஆரம்பமே கடுப்பாகி விட்டதால் பிறகு படத்துடன் ஒன்ற முடியாமல் போய்விட்டது.

‘சாமர்த்தியக்காரர்களைக் கொன்று விட்டு நிம்மதியாக வாழ்வது சோம்பேறியின் பழக்கம். திறமைசாலியை பக்கத்தில் வைத்து வளர்த்துக் கொண்டே ஜாக்கிரதையாக ராஜ்ஜியம் வளர்ப்பது உஷாரான ஆசாமியின் பழக்கம், நான் உஷாரான ஆசாமி என்று அர்ஜூன் படத்தில் சொல்லுவார். நான் கூட கொஞ்சம் உஷாராகியிருந்தால் கொஞ்சம் தப்பித்து இருப்பேன். இப்ப ஙே என்று முழிக்கும்படி ஆகிவிட்டது.


கிறித்துவ இறையியலை மற்ற மதத்து மக்களுக்கு சற்று டீடெய்லாகவே விளக்குகிறார்கள். நமக்கு தான் ரசிக்கும் மனநிலை இல்லையே என்ன செய்ய.

படத்தின் மிகச்சிறந்த விஷயம் என்னவென்றால் அரவிந்தசாமியின் கம்பேக் மற்றும் கெளதமின் அறிமுகம் தான். அரவிந்தசாமி என்ன கிளாமருடே. இந்த வயதிலேயே நமக்கு ரசிக்கும் அளவுக்கு இருக்கே. வயசில எப்படியெல்லாம் பெண்கள் ரசித்து வைத்திருப்பார்கள். மச்சமுள்ள மனுசன்யா.

கெளதம் நன்றாக நடனமாடுகிறார். சண்டை போடுகிறார். ஓரளவுக்கு நடிக்க முயற்சித்து இருக்கிறார். ஒரு சாயலில் அலைகள் ஒய்வதில்லை காலத்து கார்த்திக்கை நினைவு படுத்துகிறார். வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டால் நல்ல எதிர்காலம் இருக்கிறது.

அர்ஜூன் எதற்கு இந்த நெகட்டிவ் கேரக்டரில் நடிக்க ஒத்துக் கொண்டார் என்றே தெரியவில்லை. எந்த வித சமரசமும் இல்லாத வில்லன் கதாபாத்திரம். இனி எல்லா இளம் ஹீரோக்களுக்கு வில்லனாக நடிக்கவே வாய்ப்பு வரும்.

ஹீரோயின் துளசிக்கு வயது 15 என்று பத்திரிக்கையில் பார்த்தேன். ஆனால் பார்த்தால் சத்தியமாக சொல்ல முடியாது. அந்த அளவுக்கு சரியான அளவில் நிறைந்து காணப்படுகிறார். இன்னும் கொஞ்சம் உடம்பை இளைத்தால் தமிழில் ஏகப்பட்ட வாய்ப்புகள் காத்திருக்கிறது.

அந்த கேரக்டருக்கு எதற்கு மோகன்பாபுவின் மகள் லக்ஷ்மி மஞ்சுவை நடிக்க வைத்தார்கள் என்றே தெரியவில்லை.

படத்தின் பலங்கள் ஒளிப்பதிவும் இசையும் தான். ராஜீவ் மேனன் கண்களுக்கு விருந்தளித்துள்ளார். எனக்கு பல இடங்களில் அவரது ஒளிப்பதிவு பிரமிக்க வைத்தது.

ஏ.ஆர்.ரகுமான் பற்றி நான் என்ன சொல்ல. மணிரத்னத்துடன் சேர்ந்தாலே பாடல்கள் தூள் டக்கர் தான். அது தான் இந்த படத்திலும் நடந்திருக்கிறது. மணிரத்னம் படங்களில் பொதுவாக சில விஷயங்கள் புரியாது. அதுதான் இந்த படத்திலும் நடந்திருக்கிறது.

மாடர்ன் ஆர்ட் என்றால் பெரும்பாலானோருக்கு புரியாது. ஆனால் அதன் மொழி புரிந்தவர்கள் ஆகா ஓகோ என புகழுவார்கள். அது போல் சாமானியான எனக்கு படம் பிடிக்கவில்லை. எனக்கு மட்டுமல்ல என்னுடன் படம் பார்த்த பெரும்பாலானோருக்கும் தான்.

ஆனால் சினிமாவின் மொழி அறிந்தவர்களுக்கு வேண்டுமென்றால் பிடிக்கலாம். என்னைப் பொறுத்த வரை என் டிக்கெட் காசு கடலில் கரைத்த பெருங்காயம்.


ஆரூர் மூனா

முதிர்கண்ணன்கள் - பழசு 2013

சென்னையின் பேச்சிலர் தங்கும் இடங்களில் நாம் விதவிதமான மனிதர்களை சந்திக்க நேரிடும். புதிதாக சென்னைக்கு வந்து வேலை தேடும் பட்டதாரிகள், கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், திரைப்பட வாய்ப்புகளுக்காக காத்துக் கொண்டு இருக்கும் விருச்சிககாந்த்கள், குடும்ப சூழ்நிலை காரணமாக தன்கையே தனக்குதவி என 40 வயதிலும் திருமணமாகாமல் வேலைக்கு சென்று கொண்டிருக்கும் முதிர்கண்ணன்கள் என வெரைட்டி, வெரைட்டி கதாபாத்திரங்கள் நிறைந்த வாழ்க்கை அது.


இன்றைய கட்டுரையில் நாம் பார்க்கப் போவது இந்த முதிர்கண்ணன்கள் பற்றி தான். எந்த ஹீரோயிசமும் பண்ணாத வாழ்வின் நிஜ ஹீரோக்கள் அவர்கள் தான். சிறுவயதிலேயே அப்பன் காசில் பைக் வாங்கி ரவுசு விட்டு ஹீரோயிசம் காட்டும் அரைவேக்காடுகள் வாழும் இந்த சென்னையில் கண்ணுக்கு தெரியாத தியாக உருவங்கள் முதிர்கண்ணன்கள் தான்.

முதலில் ஆளாக நாம் பார்க்கப் போவது சுந்தரேசனைப் பற்றி. அவரது ஊர் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கருங்கல். என்னுடன் 2001 காலகட்டத்தில் ரூம்மேட்டாக தங்கியிருந்தவர். அப்பொழுது அவருக்கு 35 வயதிருக்கும். குரோம்பேட்டையில் உள்ள தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார்.

ஐடிஐ முடித்தவர் என்பதால் சம்பளம் குறைவு தான். ஆனாலும் கிடைத்த சம்பளத்தை பெருமளவு ஊருக்கு அனுப்பி வைத்து விட்டு சொற்ப காசில் தான் சென்னையில் காலம் தள்ளுவார். காலை 10 மணி வேலைக்கு 7 மணிக்கே கிளம்ப வேண்டும். இரவு 10 மணிக்கு தான் திரும்ப வருவார். நாங்கள் எல்லாம் துணி துவைக்க ஆள் வைத்திருந்த போதும் அந்த காசையும் மிச்சப்படுத்த வேண்டி சொந்தமாகவே துவைத்துக் கொள்வார்.

ஊரில் நிறைய பேர் 100பவுன் நகையுடன் பொண்ணு தர காத்திருந்தும் வீட்டோடு மாப்பிள்ளையாக விருப்பமில்லாமல் குடும்பத்தின் நலன் வேண்டி எல்லாத்தையும் புறக்கணித்தவர். சனி இரவு நடக்கும் பார்ட்டியில் குடித்து விட்டு புலம்பும் போது தான் ஒரு வயது வந்த ஆண், பெண் துணையின்றி வாழ்வது சிரமம் என்பது புரியும்.

பிறகு நான் அந்த அறையிலிருந்து வெளியே வந்து விட்டேன். பத்து வருடம் கழித்து சென்ட்ரலில் அவரை சந்தித்தேன். ஆளே மாறியிருந்தார். முன்வழுக்கை விழுந்து கொஞ்சம் தொப்பை வேறு போட்டிருந்தார். பக்கத்தில் இருந்த பாரில் அமர்ந்து நெடுநேரம் பேசிக் கொண்டு இருந்தோம்.

துபாயில் வேலை செய்வதாகவும் இரண்டு தங்கைகளுக்கு திருமணமாகி விட்டது எனவும் கடைசி தங்கையின் திருமணத்திற்கு பத்திரிக்கை வைக்க வேண்டி சென்னை வந்ததாகவும் கூறினார். அடுத்த வருடத்தில் கண்டிப்பாக தனக்கு திருமணம் என்றும் கூறினார்.

எனக்கு பெருமையாக இருந்தது. எவ்வளவோ வாய்ப்புகள் இருந்தும் சற்றுகூட சலனப்படாமல் தங்கைகளுக்கு திருமணம் செய்து கொண்ட பின்பே தனக்கு திருமணம் என உறுதியாக இருந்த அவர் எனக்கு ஹீரோவாகவே தெரிந்தார்.

அடுத்தவர் நான் பணிபுரிந்த கம்பெனியில் சமையற்காரராக கேரளாவில் என்னுடன் பணிபுரிந்த தமிழர். மதுரைக்காரர். மலேசியாவில் ஒரு ஹோட்டலில் வேலை பார்த்து குடும்பத்தை கறையேற்றியவர். ஆனால் தனது இளமையை தொலைத்தவர். ஊரில் சொந்த வீடு கூட இருந்தது.

தம்பியை படிக்க வைத்து தங்கைக்கு திருமணம் செய்து வைத்து வீடு கட்டி முடித்ததும் வயது தாண்டியிருந்தது. இனிமேல் எங்க திருமணம் செய்வது என யோசித்து அந்த எண்ணத்தையே கைவிட்டவர். இரவானால் எங்களோடு தான் குடிப்பார். குழந்தை மனசுக்காரரான அவர் குடித்ததும் செய்யும் காரியங்கள் சிரிப்பை வரவழைக்கும். தனக்கு திருமணமாகவில்லையே என்ற வருத்தம் சிறிதும் இல்லாத நல்ல மனசுக்காரர்.

உண்மையில் நாம் நினைத்துக்கொண்டிருப்பது பெண்கள் தான் உணர்ச்சி மயமானவர்கள், குடும்ப பொறுப்பு உள்ளவர்கள், ஆண்கள் எல்லாம் வாழ்க்கையை அனுபவிப்பவர்கள். பொறுப்பற்றவர்கள். ஆனால் எத்தனை ஆண்கள் சென்னையில் கிடைக்கும் சிறு சம்பளத்திற்காகவும் வாய்ப்புக்காகவும் குடும்ப நிலையை கருத்தில் கொண்டு அவர்களது ஆசாபாசங்களை தியாகம் செய்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் தெரியுமா.

அவர்கள் போற்றப்பட தக்கவர்கள். ஆனால் அவர்கள் மீது வைக்கப்படும் பொதுவான குற்றசாட்டு அவர்கள் குடிகாரர்கள். சிகரெட் பிடிப்பவர்கள். இவை இரண்டும் தான் ஒருவரின் ஒழுக்கத்தின் அளவீடா. குடித்து விட்டு வம்பு வளர்க்கிற ஆளை விட்டு விடுங்கள். இவ்வளவு ஏக்கத்தையும் வருத்தத்தையும் மனதில் வைத்துக் கொண்டு சற்று நேர ரிலாக்சுக்காக குடித்து விட்டு வருபவர்களை எவனும் மனிதனாகவே மதிப்பதில்லை.

ஆனால் எந்த கெட்ட பழக்கமும் இல்லாமல் எல்லா துர்குணங்களும் உள்ள ஒருவனை கொண்டாடும் சமூகம் இது. உதாரணம் வேண்டுமா? காஞ்சியில் விக்ரகத்தின் முன் பெண்களை புணர்ந்த அர்ச்சகர் குடிக்கும் பழக்கம் சிகரட் பழக்கம் இல்லாதவர். நித்யானந்தா காபி டீ கூட குடிக்கும் பழக்கம் இல்லாதவர். ஆனால் அந்த புண்ணியவான்கள் செய்த காரியம் என்ன .

இது போல் குடும்பத்திற்காக இளமையை அழித்துக் கொண்டு கடமையில் கண்ணாக இருக்கும் இவர்கள் போற்றப்பட வேண்டியவர்கள் அல்ல. கும்பிடப் படவேண்டியவர்கள்.

ஆரூர் மூனா

டபுள் ஹீரோ சப்ஜெக்ட் - பழசு ஜனவரி 2013

பொதுவாக இந்திய சினிமாவில் இரண்டு கதாநாயகர்கள் இணைந்து நடிக்கும் படங்கள் பெரும்பாலும் பழிவாங்கும் கதையாகவே அமைந்து விடுவதன் மர்மம் தான் எனக்கு புரியவில்லை. மற்றமொழிகளில் இரண்டு நாயகர்கள் நடிக்கும் பழிவாங்கும் கதைகளில் இரட்டை வேடத்தில் நடித்து அசத்துபவர்கள் நமது தமிழ் நாயகர்கள் தான்.


நாயகர்களின் அப்பா துணிச்சலான கோழையாக இருப்பார். வில்லன் செய்யும் கொலையை பார்த்து விடுவார். நீதிமன்றத்தில் சாட்சி சொல்லும் ஹீரோக்களின் அப்பாவை சொல்லாதே என்று நீதிபதியின் முன்னாலேயே எச்சரிப்பார். அதனை பொருட்படுத்தாத அப்பா சாட்சி சொல்லி தண்டனை வாங்கி கொடுப்பார்.

தண்டனை பெற்ற வில்லன் ஜெயிலில் இருந்து தப்பித்து ஹீரோக்களின் அம்மா கண் முன்னாலேயே அப்பாவை கொன்று விடுவார். அந்த இடத்தில் வில்லன் சென்றதும் மகன்களை வைத்து சபதம் எடுக்கும் அம்மா ஒரு மகனை பொது இடத்தில் தொலைத்து விடுவார்.

இரண்டு மகன்களும் வளர்ந்து ஃபிகர்களை டாவடித்து பிறகு பாட்டுப்பாடி காதலித்து ஒரு சந்தர்ப்பத்தில் குடும்பப் பாட்டு பாடி ஒன்று சேர்வர். இருவரும் ஒன்று சேர்ந்து க்ளைமாக்ஸில் வில்லனை கதற கதற கொன்று வில்லனின் உடலை அம்மாவின் காலடியில் சமர்ப்பிப்பர்.

இந்திய சினிமாவில் வந்துள்ள 95 சதவீத படங்களில் இது தான் கதையாக இருக்கும். கொஞ்சம் அக்கா, தங்கச்சி கேரக்டர்கள் கூட சேர்ந்து சிறுசிறு மாற்றங்கள் அமைத்து ஒரு கற்பழிப்பு காட்சியை சேர்த்து வரும் படங்கள் கூட வெற்றி பெற்றதுண்டு.

இந்த இலக்கணத்தை உடைத்த படங்கள் வெகு சொற்பமே. இந்தியில் மாற்றி அமைத்த படம் கபி குஷி கபி கம். மூன்று பெரிய நாயகர்கள் நடித்தும் ஒரு ஆக்சன் காட்சி கூட அமைக்காமல் சென்டிமெண்ட் காட்சிகளாக  அமைத்து சூப்பர் ஹிட்டான படம் அது தான்.

அந்த படம் வந்த காலத்தில் எனக்கு ஒரு வார்த்தை கூட ஹிந்தி தெரியாது. என்னுடன் படம் பார்த்த சென்னை நண்பன் சந்தோஷ் வாரம் இரண்டு ஹிந்தி படங்களை பார்க்கும் வழக்கமுள்ளவன்.

ஒவ்வொரு படத்தையும் பார்த்து விட்டு வந்து ஆக்சன் சீன்வன்சுடன் படத்தின் கதையை விவரித்து சொல்லுவான். சந்தோஷ் சென்னையில் பிறந்து வளர்ந்ததால் பல மொழிகள் தெரிந்திருக்கிறது, நாம் கூட இங்கேயே வளர்ந்திருக்கலாம் என்று பொறாமைப்பட்ட காலங்கள் உண்டு.

கபி குஷி கபி கம் படம் பார்க்கும் போது அவனிடம் வரிக்கு வரி அர்த்தம் கேட்க சில நிமிடங்கள் சொல்லி வந்தவன் பிறகு கடுப்பாகி படத்தை பாரு என்று சொல்லி விட்டு அமைதியாகி விட்டான். நான் பாஷை தெரியாமலேயே பார்த்து ரசித்தேன்.

நான் பல மாநிலங்களில் சுற்றித் திரிந்து ஹிந்தியை கற்றுக் கொண்டு பல வருடங்களுக்கு பிறகு சென்னை வந்து செட்டிலானேன். ரங்க் தே பசந்தி படம் வெளியான சமயம் அவனை கூட்டிக் கொண்டு சத்யம் திரையரங்கிற்கு சினிமாவுக்கு போனேன்.

படம் ஆரம்பித்து நான் வசனங்கள் புரிந்து படி இடங்களில் சிரிக்கவே அவன் என்னிடம் வார்த்தைகளுக்கு அர்த்தம் கேட்டான். பிறகு தான் தெரிந்தது. அந்த நாதாரிக்கு ஒரு வார்த்தை கூட ஹிந்தி தெரியாது என்று. மற்றவர்கள் முன் பந்தா காட்ட வேண்டுமென்பதற்காகவே அந்த மாதிரி நடித்தான் என்று தெரிய வந்தது.

மறுநாள் இரவு நண்பர்கள் பலருக்கு போன் போட்டு பார்ட்டிக்கு கூப்பிட்டு சந்தோஷ் ஹிந்தி மேட்டரில் இத்தனை வருடங்களாக ஏமாற்றியதை போட்டுக் கொடுக்க அவனவன் சந்தோஷை போட்டு சாத்தினார்கள்.

அது போல தெலுகுக்கு வந்துள்ள டபுள் ஹீரோ டிரெண்ட் செட்டர் படம் சீதம்மா வகிட்லோ செருமல்லி செட்டு. தெலுகின் முன்னணி நாயகர்கள் வெங்கடேஷ் மற்றும் மகேஷ் பாபு நடித்து வந்துள்ள இந்த படத்தில் மருந்துக்கு கூட ஹீரோயிசம் இல்லை. சட்டை பட்டனை கழற்றி விட்டு திரியும் வெட்டி பந்தா இல்லை. கலர் பொடி வெடிக்கும் குத்து பாடல்கள் இல்லை.

படம் வரலாறு காணாத அல்லோலகல்லோல ஹிட். தெலுகு சினிமா கூட திருந்தத் தொடங்கியிருக்கிறது. ஆனால் அவர்களை விட சற்று உயர்ந்த ரசனையில் இருக்கும் தமிழ் சினிமா என்று பீற்றிக் கொண்டு இருக்கும் நாம் தான் அலெக்ஸ் பாண்டியனை இன்னும் திரையரங்குளில் ஒட விட்டுக் கொண்டு இருக்கிறோம்.




ஆரூர் மூனா

ஐ சப்போர்ட் கமலஹாசன் - பழசு ஜனவரி 2013

சின்ன வயதிலிருந்தே எனக்கு கமல்ஹாசனை பிடிக்காது. எந்த ஒரு குழுவிலும் ரஜினி ரசிகர்கள் மற்றும் கமல் ரசிகர்கள் என இரு பிரிவு இருக்கும். நான் ரஜினி ரசிகர் குழுவில் இருந்தேன். அந்த வயதில் எந்த காரணமும் இல்லாமல் ரஜினியை பிடித்ததனால் கமலை பிடிக்காது.


தளபதியும் குணாவும் ஒரே நாளில் வெளியான போது குணாவை மொக்கை என்று கிண்டல் செய்து எங்கள் தெருவில் போஸ்டர் எல்லாம் ஒட்டினோம். போஸ்டர் என்றால் காசு கொடுத்தா அடிக்க முடியும். நோட்டு புத்தகத்தில் இருந்து பேப்பரை கிழித்து அதில் எழுதி சோற்றுப்பருக்கைகளை கொண்டு ஒட்டுவோம்.

அதே போல் பாண்டியனும் தேவர் மகனும் ஒரே நாளில் வெளியான போது கமல் ரசிகர்களிடம் இருந்து அதே போன்றதொரு அவமானத்தை நாங்கள் திரும்ப வாங்கிக் கொண்டோம். எனக்கு கூட தேவர்மகன் அளவுக்கு பாண்டியன் சூப்பர் ஹிட்டாக அமையவில்லையே என்று அழுகையாக வந்தது.

பிறகு வயது ஏற ஏற மெச்சூரிட்டி வந்து எந்த படத்தை நாங்கள் மொக்கை என்று காலி செய்து கழுவி ஊத்தினோமோ அதே குணா எனது சிறந்த படங்கள் பட்டியலில் இடம் பிடித்தது. படத்தில் கமலின் உழைப்பு அசர வைத்தது.

அன்றும் இன்றும் என்றும் எனது பேவரைட் படம் அன்பே சிவம் தான். ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் இந்த படம் தான். ஆனால் அந்த படம் கூட சரியாக ஒடவில்லை. இன்று நமக்கு சரியான மொக்கை என்று நாம் நினைக்கும் கமல் படம் சில வருடம் கழித்து மறக்க முடியாத படமாக அமைகிறது.

இப்பொழுது விஸ்வரூபம் படத்திற்கு வருவோம். சாதாரணமாக எனக்கு இந்த படத்தில் எந்தவித எதிர்பார்ப்புமில்லை. எப்பொழுதும் படங்களை முதல்நாள் முதல் காட்சி பார்க்கும் நான் இந்த படத்திற்கு முன்பதிவே செய்யவில்லை. ஆனால் இந்த சூழ்நிலையில் நான் கமலை ஆதரிக்காவிட்டால் மனிதநேயமிக்கவனாக இருக்கமாட்டேன் என்று தோன்றியது.

அதற்காகத்தான் இந்த பதிவை எழுதுகிறேன். ஒரு படம் எடுத்து வெளியில் வந்து நல்லாயில்லா விட்டால் அதுவே ஆட்டோமெட்டிக்காக பெட்டிக்குள் போகப் போகிறது. அதுவும் கமலின் படங்களுக்கு இரண்டே நிலை தான். சூப்பர் ஹிட்டு அல்லது சூரமொக்கை. சீண்டாமல் விட்டிருந்தாலே அது பாட்டுக்கு வந்து போய் இருக்கப் போகிறது.

படத்தில் ஒரு சமூகத்தை சேர்ந்தவனை வில்லன் போல் காண்பித்தால் அந்த சமூகத்தை அவமானப்படுத்துவதாகும் என்று நீங்கள் நினைப்பது நகைப்புக்குரிய விஷயமாக இருக்கிறது. இதே கமல் தான் ஹேராம் படத்தில் ஒரு இஸ்லாமியனான ஷாருக்கானை நல்லவனாகவும் தீவிர இந்துத்வாவான கமலை கெட்டவனாகவும் சித்திரித்திருந்தார். அதற்காக இங்குள்ள இந்துக்கள் எல்லாம் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனாரா என்ன.

இத்தனைக்கும் படம் அட்டர் பிளாப். படம் பார்க்க போனவன் எல்லாம் இன்டர்வெல்லுடன் வெளியில் தெறிச்சி ஓடி வந்தான். சீண்டப்படாமல் போனதாலேயே அது புறக்கணிப்பட்டது. அது போல் இந்த படத்தையும் கண்டுகொள்ளாமல் இருந்தால் அதுவும் மொக்கையாக இருந்திருந்தால் படம் தோல்வியடைந்திருக்கும்.

இப்பொழுது வீணான பிரச்சனையை கிளப்பி படத்திற்கு ஏகப்பட்ட பப்ளிசிட்டியை கிளப்பி விட்டீர்கள். இது தேவையற்ற பிரச்சனை என்று நான் நினைப்பதால் கமல்ஹாசன் பக்கம் நான் நிற்கிறேன்.

இது நியாயமற்றது. ஒரு சிலர் படத்தை பார்த்து விட்டு தங்களது சமூகத்தை அவமானப்படுத்துகிறது என்று நினைத்தால் அது எப்படி சரியான கருத்தாக இருக்க முடியும். மற்றவர்களும் பார்த்து சொல்வது தானே நியாயமாக இருக்கும். ஒரு படத்திற்கு சென்சார் போர்டு சர்டிபிகேட் கொடுத்த பிறகு ஒரு மதத்தினை சார்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் செய்து படத்தினை வெளியிட விடாமல் தடுக்க முடியுமென்றால் எதற்கு அரசாங்கம். நிர்வகிக்க மக்கள் பிரதிநிதிகள் எதற்கு.

இடையில் ஒருவர் ப்ளஸ் விட்டு பொங்குகிறார். கமல்ஹாசன் முத்தக்காட்சியை வைத்து சமூகத்தை அவமானப்படுத்துகிறார் என்று. ஏனப்பா இவ்வளவு கட்டுப்பாடும் சம்பிரதாயங்களும் கொண்ட உன் சமூகத்தில் இருந்தே ஆர்யா படங்களில் முத்தக்காட்சியை வைக்கிறார். நீங்களும் தான் ரசிக்கிறீர்கள். சுத்தப்படுத்துவதை தங்களது இடத்தில் இருந்தே துவங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். முதலில் ஆர்யாவை மன்னிப்பு கேட்க வைத்து பிறகு கமல்ஹாசனிடம் பொங்கலை வைத்துக் கொள்ளவும்.

ஒரு மதத்தினை பின்பற்றும் நீங்கள் உங்கள் சமூகத்தை சேர்ந்த ஒரு சிலர் படத்தை பார்த்து விட்டு வந்து இது உங்கள் சமூகத்தை இழிவுபடுத்துகிறது என்று சொன்னால் அதை கேட்டு இணையத்தில் கண்டனம் தெரிவித்து இஷ்டத்திற்கு எழுதித் தள்ளுவது நியாயம் என்றால் ஒரு பகுத்தறிவுவாதியான நான் மற்றொரு பகுத்தறிவுவாதியான கமல்ஹாசன் ஒரு சமூகத்தை இழிவுபடுத்துவது மாதிரியான காட்சிகளை வைக்கமாட்டார் என்று நான் நம்பி அவரை ஆதரித்து பதிவு எழுதுவதும் நியாயம் தான்.

தமிழ்நாட்டுல மட்டும் தானே நீங்கள் ஆர்ப்பாட்டம் செய்கிறீர்கள். நான் ஆந்திராவுக்கு சென்று படம் பார்த்து விட்டு வந்தால் என்ன செய்ய முடியும். என்னைப் போல் பலர் காலைக் காட்சி பார்க்க ஆந்திரா கிளம்புகின்றனர். நகரியிலோ அல்லது புத்தூரிலோ பார்த்து விட்டு ஒரு மணிநேரத்தில் சென்னைக்கு திரும்பி விட முடியும். அநியாயமா ரஜினி ரசிகனான என்னை கமலுக்கு ஆதரவாக பதிவு போட வச்சிட்டீங்களே.

28ம்தேதி தடையை நீக்கினால் மறுபடியும் இரண்டாம் முறை பார்க்கப்போகிறேன். அவ்வளவு தான்.

படம் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கும் சினிமா ரசிகர்களில் ஒருவனான


ஆரூர் மூனா

பெரியமேடு பிரியாணியில் தில்லுமுல்லு - பழசு ஜனவரி 2013

ரொம்ப வருடங்களாக அதாவது கிட்டத்தட்ட 15 வருடங்களாக சென்னையில் பிரியாணி என்றால் என் முதல் சாய்ஸ் பெரியமேடு பிரியாணி தான். அதன் சுவையை அடிச்சிக்கவே முடியாது. இன்றும் கூட வெறும் 90 ரூபாய்க்கு நான்கு பெரிய பீஸ் மட்டனுடன் பிரியாணி கொடுக்கிறார்கள்.


எப்பொழுது சென்ட்ரல் பக்கம் வந்தாலும் வேலை முடிந்ததும் நடந்து வந்தாவது பெரியமேட்டில் பிரியாணி தின்று விட்டு பிறகு நடந்தே சென்ட்ரல் ரயில் நிலையத்தை அடைந்து ரயிலில் செல்வது வழக்கமாக வைத்திருந்தேன்.

நண்பர்கள் ஒன்று கூடி கெட்டூகெதர் பார்ட்டி குடும்பத்துடன் கொண்டாடினால் கூட விருந்துக்கு கிலோக்கணக்கில் இங்கிருந்து பிரியாணி வாங்கி கொண்டு போய் விழாவை சிறப்பிப்பது வழக்கம்.

நமது பதிவுலக நண்பர்கள் பலபேர் கூட பெரியமேடு பிரியாணி கடையின் வழக்கமான கஸ்டமர்களே. எந்தவித சர்ச்சையும் இன்றி இத்தனை நாட்கள் சென்று கொண்டிருந்த இந்த விஷயம் இரண்டு நாட்களாக போட்டு மனதை வருத்தப்பட வைத்துக் கொண்டு இருக்கிறது.


என்னுடைய நண்பனின் மாமா ஒருவர் விஜயவாடாவில் பிரியாணி கடை வைத்து நடத்தி வருகின்றார். திங்களன்று நண்பன் வீட்டில் அவரை பார்த்து அளவளாவிக் கொண்டு இருந்தேன். பேச்சு பல இடங்களில் சுற்றித் திரிந்து பிரியாணிக்கு வந்தது.

நான் பெரியமேடு பிரியாணியைப் பற்றி அவரிடம் பெருமையாக கூற அவரோ 90 ரூபாய்க்கு நான்கு துண்டு மட்டனுடன் பிரியாணி வாய்ப்பே இல்லையென்றும் நான் வேண்டுமானால் சாப்பிட்டுப் பார்த்து சொல்வதாக கூறினார்.

அவரை அழைத்துக் கொண்டு நான் வழக்கமாக பிரியாணி சாப்பிடும் கடைக்கு அழைத்துச் சென்றேன். அந்தக் கடை பெரியமேடு மசூதியின் எதிர்ப்புறம் உள்ள சந்தில் முதல்மாடியில் உள்ளது. தரைத்தளத்தில் லாட்ஜ் மற்றும் பார்சல் கட்டித்தருவது உண்டு.

எப்பொழுதும் கூட்டம் நிறைந்து காணப்படும் அந்த இடத்திற்கு நாங்கள் சென்று சாப்பிட அமர்ந்தோம். பிரியாணி இலையில் பறிமாறப்பட்டது. மட்டன் துண்டுகளை கையால் சோதித்தும் சாப்பிட்டும் பார்த்தவர் இது மட்டனே கிடையாது வீல் என்று கூறினார்.

வீல் என்ற வார்த்தைக்கு எனக்கு அர்த்தம் புரியவில்லை. பிறகு விளக்கம் வெளியில் வந்து கேட்ட பிறகு தான் சொன்னார். மாட்டுக் கன்றுக்குட்டி கறி தான் ஆங்கிலத்தில் வீல் என்று கூறினார்.எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

இது வழக்கமாக விஜயவாடாவில் நடைபெறும் ஒன்று தான் என்று சொன்னார். எலும்புத்துண்டுகள் மட்டும் மட்டனுடையது என்றும் கறித்துண்டுகள் எல்லாம் வீல் என்றும் அவை தெரியா வண்ணம் கலக்கப்படும் என்றும் சொன்னார்.

சரி இன்றும் மற்றொரு கடையில் சோதித்து பார்த்து விடலாம் என்று அதே சந்தில் முன்சொன்ன கடைக்கு முன்பு உள்ள மற்றொரு கடையில் இன்று சாப்பிட்டோம். அதையும் சாப்பிட்டுப் பார்த்து வீல் கறி என்றே சொன்னார்.

சொன்னவர் தனது வேலையை முடித்து விட்டு சத்தமில்லாமல் விஜயவாடாவுக்கு ரயிலேறி போய் விட்டார். கேள்விப்பட்ட நாங்கள் தான் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டு உள்ளோம். காலம்காலமாக சாப்பிட்டு வந்த கடையில் இந்தளவுக்கு டகால்டி நடக்கிறதா என்று தெரியவில்லை.

ஒரு வேளை அவர் சொன்னது பொய்யாகக் கூட இருக்கலாம் ஆனால் உண்மையாக இருந்தால் இது ஏமாற்று வேலையல்லவா. நண்பர்களே தங்களுக்கு இந்த அனுபவம் இருந்தால் பகிருங்கள். நான் சொன்னதில் தவறு இருப்பினும் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக் கொள்கிறேன்.

எது உண்மை என்று புரியாமல் மண்டை குழம்பி கிடக்கும்


ஆரூர் மூனா