Friday, 27 February 2015

காக்கி சட்டை - சினிமா விமர்சனம்

தமிழகத்தின் கடைக்கோடியில் உள்ள ஒரு சிறு நகரத்தில் படத்தை பார்த்தேன். சி சென்டரின் பல்ஸ் சட்டென தெரிந்து விடும் இடம் இது. இந்த ஊரில் விஜய் படமே ஆனாலும் ஃபுல் ஆகாது. காட்சி நேரத்திற்க்கு போய் டிக்கெட் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் இன்று காக்கிசட்டை படம் ஹவுஸ்புல். சிவகார்த்திகேயனின் மார்கெட் வேல்யூ என்னவென்பதை விவரிக்க இதை விட சிறந்த உதாரணம் தேவை இல்லை.


ஆர்கன் திருத்து செய்யும் மிகப் பெரிய அந்தஸ்தில் உள்ள கும்பலை ஒரு கான்ஸ்டபிள் ஒழித்துக் காட்டுவது தான் படத்தின் கதை. அதை இயல்பு மாறாமல், வரம்பு மீறாமல் சொன்ன விதத்தில் தான் படம் ஜெயிக்கிறது. சந்தேகமே இல்லாமல் படம் ஹிட் தான்.

ஒரு கமிஷனர் இடம் ஒரு கான்ஸ்டபிள் இப்படி கேள்வி கேக்க முடியுமா என்று எல்லாம் கேள்வி கேக்காமல் பார்த்தால் படத்தை அணு அணுவாக ரசிக்க முடியும்.


ஒரு படத்தின் திரைக்கதை கட்டுமானத்தை எப்படி கட்டுவது என்பதற்கு இந்த படத்தை உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். ஒரு காட்சி கூட, ஒரு நொடிக்கு கூட அலுப்பாக தெரியவில்லை. காமெடியோ, ஆக்ஷனோ சட்சட்டென காட்சிகள் அடுத்தடுத்து நகர்ந்து கொண்டே இருக்கிறது. அதற்கு நேர் மார் பாடல்கள், பாட்டு காட்சில ஆப்பரேட்டர் கூட வெளில வந்து தம் அடிக்கிறான்.

சிவகார்த்திகேயன், ஏற்கனவே நம்ம வீட்டு பிள்ளையாக இருந்தவர். அடுத்தடுத்த படங்களில் முன்னேறி செல்வது நமக்கு சந்தோஷத்தையே கொடுக்கிறது. பார்த்து ஜாக்கிரதையாக அடுத்தடுத்த படி முன்னேறி செல் ராசா. வாழ்த்துக்கள்.


அறிமுக காட்சியில் இவரும் இப்படி ஆகிட்டாரே என்று பதைபதைத்தாலும் அது கனவு என்று தெரிந்து ஆசுவாசப்படுகிறது மனசு. இயல்பாக காமெடியில் துவங்கி அப்படியே ஆக்ஷனுக்கும் பொருந்தி போகிறார். நடிப்பில் பல படிகள் முன்னேறி இருக்கிறார். இந்த ஊரில் மாவட்ட தலைமை, நகர தலைமை தொடங்கி ஏகப்பட்ட ராசிகள் மன்றங்கள் இவருக்கு இருக்கிறது. அடுத்த டார்கெட் விஜய் தான் போல.

ஸ்ரீ திவ்யா அழகு பதுமையா வந்து செல்கிறார். மேக்அப்பை கொஞ்சம் குறைத்துக் கொள்ளவும் மேடம். இவருக்கு கட்டவுட் எல்லாம் பார்த்தேன். ப்பா.

இமான் அண்ணாச்சி நடிக்கவும் செய்கிறார். அடுத்தடுத்து நல்ல படங்கள் அமைந்தால் பெரிய ஸோலோ காமெடியன் ஆகி விடுவார். பல காட்சிகளில் வாய்விட்டு சிரித்தேன்.

படத்தில் பிரபு, ராமதாஸ் முதல் கடைசி காமெடியன் சிங்கப்பூர் தீபன் வரை ரசிக்க வைக்கிறார்கள். 

படம் துவங்கி காமெடியில் சிரிக்க வைத்து அப்படியே ஒரு வழக்குக்குள் நுழைந்து பரபரப்பான ஆக்ஷன் த்ரில்லராக மாறி ரசிக்க வைக்கிறது. இந்த படத்தை பற்றி ரொம்ப பேசவேண்டாம். படத்தை தியேட்டரில் பார்த்து ரசியுங்கள். 

சூப்பர் ஹிட் படம் சிவகார்த்திகேயனுக்கு. நமக்கு சிறந்த பொழுதுபோக்கு படம். 

ஆரூர் மூனா 

Wednesday, 25 February 2015

பெரிய வேலைக்காரன்

இரண்டு மாதங்களுக்கு முன் எனது வெஸ்டிபுள் குரூப்புக்கு நான்கு கலாசிகள் இணைந்தனர். இருவர் மலையாளிகள், இருவர் ராஜஸ்தானிகள். நான் வெஸ்டிபுள் டோர் கேங் ஆள். இன்று ஒரு வேலையாக என் குரூப்பில் இருந்த என்னைத் தவிர மீதி நால்வரும் ஏதோ ஒரு எக்ஸ்பிரஸ்ஸில் ஏற்பட்ட பழுதை நீக்க வேண்டி எக்மோர் யார்டுக்கு சென்று விட்டனர். 


என்னுடன் அந்த நாலு கலாசிகளும் சேர்ந்து இன்று வெஸ்டிபுள் டோர் பழுது நீக்கும் பணிக்கு சென்றிருந்தோம். ஒரு வேலையை சற்று சீக்கிரமாகவே முடிக்க மற்றவர்கள் என்னை "சூப்பர் சார். அருமை, எப்படி இவ்வளவு சீக்கிரம் வேலையை முடிக்கிறீர்கள் நீங்கள் வராத அன்று உங்கள் குழுவில் வேலை பார்த்து இருக்கிறோம், மற்றவர்கள் வழவழவென்று வேலையை இழுப்பார்கள், நீங்கள் அரைமணியில் ஒரு கோச்சை முடித்து விட்டீர்கள்" என்று பாராட்டினார்கள், எனக்கு தலையில் கிரீடம் ஏறியது.

ஒரு கோச்சில் வேலையை முடித்து விட்டு அடுத்த கோச்சுக்கு சென்றோம். ரோலிங் ஷட்டரில் பெரிய பழுது இல்லை. ஆனால் ஷட்டரை ஏற்றி இறக்கும் போது ஒரு இடத்தில் எங்கோ உரசி சத்தம் வருகிறது. எங்கே உரசுகிறது என்று கண்டுபிடிக்க முடியவில்லை. மற்ற நால்வரும் என்னை பார்க்கிறார்கள். பழைய கேங்காக இருந்தால் எல்லோருக்கும் வேலை தெரியும். இன்றைய கேங்கில் நான் மட்டும் தான் அனுபவசாலி.

அடடா, இப்பத்தானே பெரிய வேலைக்காரன் என்று பெயர் வாங்கினோம். அதுக்குள்ள அசிங்கப் பட போறேனே என்று யோசனையாக இருந்தேன். என்ன பால்ட்டுனே பசங்கக்கிட்ட சொல்லாம அதை நகர்த்து கொஞ்சம் ஏத்து, அப்படி சுத்தியல்ல அடி என்று காரணமே இல்லாமல் வேலை வாங்கிக்கிட்டு இருந்தேன்.

சேரன் பாண்டியன்ல மெக்கானிசமே தெரியாம மோட்டாரை நோண்டுவாரே கவுண்டமணி, அந்த நிலைமையாகி போனது. எனக்கு. பெயிண்ட் டப்பா எடுத்து போட்டு மேலே ஏறி ரொம்ப சின்சியரா வேலை பாக்கிற மாதிரி கொஞ்ச நேரம் பாவ்லா பண்ணேன். 

இதுக்கு மேல சமாளிக்க முடியாதுங்கிற நிலைமை வந்தது. ஏதோ நினைப்புல ஸ்பிரிங்ல கொஞ்சம் ஆயில் போடுங்கப்பா என்று சொன்னேன். ஆயில் போட்டதுலேந்து சத்தம் வர்றது நின்னு போச்சி. எல்லாரும் சூப்பர் ஸார்னு கை கொடுத்து பாராட்டுனாங்க.

மறுபடியும் கிரீடம் தலைக்குப் போச்சி. நாம நல்ல வேலைக்காரனா இருக்கிறதை விட மத்தவங்களை நான் அப்படித்தான்னு நம்ப வைக்க ரொம்பத்தான் சிரமப்பட வேண்டியிருக்கு. ஒரே குஷ்டமப்பா.

ஆரூர் மூனா

Saturday, 14 February 2015

இந்தியா பாகிஸ்தான் - பாதி கட்டுரை

கிரிக்கெட் விளையாடும் டிவியில் பரபரப்புடன் மாட்ச் பார்ப்பதும் எனக்கு பழக்கமானது 1990ல் தான். அந்த காலகட்டத்திற்கு முந்தைய மாட்சுகள் பற்றி அண்ணன்மார்கள் எங்களுக்கு போதித்துக் கொண்டு இருப்பார்கள். 


அதில் முக்கியமானது ஒரு சார்ஜா கோப்பையில் கடைசி பந்தில் 4 ரன் எடுக்க வேண்டி இருந்த நிலையில் மியான்தத் ஆறு அடித்து வெற்றியை வசப்படுத்தியது. வெற்றியை எக்காளமாக கொண்டாடியது, அதை கேட்கும் போது ரத்தம் கொப்புளிக்கும். நரம்பு புடைத்துக் கொண்டு இருக்கும். இது போன்றதொரு தோல்வியை பாகிஸ்தானுக்கு பரிசளிக்கனும் என்று மனது துள்ளும்.

அந்த நேரம் தான் உலக கோப்பை தொடங்கியது. இந்தியாவுக்கு முதல் போட்டி ஆஸ்திரேலியாவுடன் நடந்தது. அதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே நாங்கள் போட்டியை காண தயாரானோம். தினமலரில் ஒவ்வொரு அணியின் வீரர்கள் பெயர் பட்டியலை வெளியிட்டு இருந்தது. வெறி கொண்டு படித்து அனைத்து அணி வீரர்களின் பெயரை மனப்பாடம் செய்து வைத்தேன். யாராவது அணியின் பெயரை சொன்னால் போதும் கடகடவென ஒப்பிப்பேன். அந்த நேரம் நடந்த ஏழாவது அரையிறுதி தேர்வில் நிறைய பாடங்களில் நான் பெயில்.


ஆஸ்திரேலியாவுடனான ஆட்டத்தில் இந்தியா ஒரு ரன்னில் தோற்றது. அந்த கடைசி பந்து இன்னும் நினைவில் இருக்கிறது. ஸ்ரீநாத் உயரே அடிக்க தேவையான ரன் எடுக்க ஓடி முடியாமல் போய் இந்தியா தோற்றது.

அடுத்த ஆட்டம் இலங்கையுடன், மழையின் காரணமாக கைவிடப்பட்டது. அதற்கடுத்த ஆட்டம் பாகிஸ்தானுடன் என்று நினைக்கிறேன், அல்லது அதற்கடுத்த ஆட்டமாகவும் இருக்கலாம், மேட்சுக்கு முதல் நாளே தயாராகி விட்டோம். எங்கள் வீட்டில் அப்போ ப்ளாக் அண்ட் ஒயிட் டிவி தான் இருந்தது. பார்க்க நல்லாயிருக்காது என்று இன்னொரு நண்பன் வீட்டில் ஜமாவை போட்டோம். 

ஆட்டம் தொடங்கியது, விசில்கள் பறந்தன. ஸ்ரீகாந்த் பந்துகளை வீணடித்து சராமாரியாக திட்டுகளை வாங்கினார். சச்சின் ஷாட்டுகளுக்கு கைதட்டல்கள் அதிர்ந்தன. மியான்தத் தவக்களை மாதிரி குதித்தபோது அந்த மவனே, இந்த மவனே என்று வசவுகள் வந்தது. 

ஆட்டம் முடிந்து கொண்டாட்டம் இரவு வரை தொடர்ந்தது. அந்த வயசுக்கு கொண்டாட்டம் என்பது தேன்மிட்டாயும், முறுக்கும், நிறைய அரட்டையும் தானே.

--------------------------------------

அடச்சே, நிறைய எழுதனும் என்று உட்கார்ந்தேன். முல்லை துக்கத்திலிருந்து எழ வீட்டம்மிணி என் கையில் கொடுத்து விட்டு சென்று விட்டார். அவளோ கீபோட்டு மவுஸ் எல்லாத்தையும் தள்ளி விட்டு மானிட்டரை எட்டி உதைத்து டெபிளை சுத்தம் செய்தாள். அரை மணி நேர  போராட்டத்திற்கு பிறகு அம்மிணி முல்லையை அழைத்து செல்ல, நான் தட்டச்ச அமர்ந்தால், ஙே, மைண்டு ப்ளாங்க் ஆகி விட்டது. 


எழுத எதுவும் வரவில்லை. சரி பதிவையே கைவிட்டு விடலாம் என்ற நினைத்தால், நாளை என்ன நாள் என்ற நினைப்பு வந்தது. இதனால் சொல்ல வருவது என்னவென்றால் நாளை நடக்க இருக்கும் இந்தியா பாகிஸ்தான் மேட்ச்சைப் பார்க்க இப்பவே தயார் ஆகிட்டேன். 1992, 1996, 1999, 2003, 2011 ஆண்டு உலகக் கோப்பையைப் போல் இந்த ஆண்டும் இந்தியா ஜெயிக்க வேண்டும்.

தேசியக் கொடியுடன், இந்தியா சீருடை டீசர்ட்டையும் தயார் செய்து வைத்து விட்டேன். நாளைக்கு ஒரு பீல் இருக்க வேண்டாமா, நீங்களும் ஆட்டத்தை அனுபவிக்க தயாராகுங்கள்.

சக்தே இந்தியா

ஆரூர் மூனா

Friday, 13 February 2015

என்டிஆரின் டெம்பர் - தெலுகு

இன்னிக்கி சினிமாவுக்கு போகும் எண்ணமெல்லாம் இல்லை. மதியம்  ஷிப்ட்டுக்கு தான் வேலைக்கு போகனும். காலையிலேயே இணையத்தில் மேஞ்சிக்கிட்டு இருந்தேன். டபக்குன்னு 9 மணிக்கு கரண்ட்டு போயிடுச்சி. இன்னிக்கி ஷட்டவுனாம். 


பொழுதை ஓட்டியாகனுமேன்னு வண்டியை எடுத்துக்கிட்டு கிளம்பினேன். தன் கடையில் பிஸியாக வேலை செய்து கொண்டிருந்தார் ஆர்.பி. ஆதித்யா என்னும் போலி பன்னிக்குட்டி. சினிமாவுக்கு போகலாம் என்று பிட்டு போட்டேன். தலைவர் அரைமணியில் ரெடியாகி வந்தார். 

அனேகன் போகும் எண்ணமில்லை. சரி நம்ம எண்டர்டெயினர் என்டிஆர் படம் ரிலீசாகுதே அது தான் டார்கெட்டு என்று முடிவு செய்து கேசினோவுக்கு வண்டியை கிளப்பினோம். அப்போதே மணி 11,15 ஆகிவிட்டு இருந்தது. பெரம்பூரில் இருந்து போவதற்குள் கண்டிப்பாக அரைமணிநேர படத்தை விட்டு விடுவோம் என்று தெரியும். பிறகு கங்காவில் காட்சி இருப்பதை அறிந்து அப்படியே ஒரு யுடர்ன் அடித்தோம். 


வண்டியை பார்க் செய்து விட்டு சாலையை கடந்தேன். ஒரு குரல் அழைத்தது. திரும்பினால் நம்ம சுகுமார் சுவாமிநாதன் தான் அழைத்தார். நலம் விசாரிப்புக்கு பிறகு பேசக் கூட நேரமில்லை, அவரோ எஸ்2வுக்கு அனேகன் படம் பார்க்க செல்லும் அவசரத்தில் இருந்தார். எனக்கும் படம் தொடங்கி விட்டிருந்தது. பிச்சிக்கிட்டோம்.

---------------------------------------------

விமர்சனம் 

சிறுவயதில் இருந்தே எல்லா தகடுதித்தம்களையும் கண்டு வளரும் என்டிஆர் ப்ராடுத்தனம் செய்து எஸ்ஐ ஆகிறார். ஐதராபாத்தில் லஞ்சம் வாங்கிக் கொண்டு கலாட்டாவாக இருந்து வரும் என்டிஆர் பிரகாஷ்ராஜின் தேவைக்காக விசாகப்பட்டினத்திற்கு டிரான்பர் ஆகிறார்.


அங்கும் லஞ்சம் வாங்கிக் கொண்டு வைசாக்கின் பெரிய தாதாவான பிரகாஷ்ராஜ் செய்யும் அட்டூழியங்களை கண்டு கொள்ளாமல் இருக்கிறார். பல பொய்களை சொல்லி காஜலை காதலிக்கிறார். ஒரு சமயம் காஜலை பிரகாஷ்ராஜ் ஆட்கள் தூக்கி வந்து கொல்ல முயற்சிக்கின்றனர். சண்டை போட்டு என்டிஆர் மீட்கும் போது ஆள் தவறி காஜலை தூக்கியது தெரிய வருகிறது.

அதிர்ச்சியடைந்த காஜல் உண்மையில் அவர்கள் கொல்ல இருக்கும் பெண்ணை காப்பாற்றும்படி என்டிஆரை நிர்பந்திக்கிறார். வேறுவழியில்லாமல் காப்பாற்றும் என்டிஆர் அதன் பின்விவரங்கள் அறிந்து திருந்துகிறார். 

பிரகாஷ்ராஜ் தம்பிகள் நால்வர் ஒரு பெண்ணை கற்பழித்து கொன்ற விவரம் அறிந்து அவர்களுக்கு எல்லா எதிர்ப்பையும் மீறி தண்டனை வாங்கித் தந்தாரா (சஸ்பென்ஸ் வச்சோம்ல)  என்பதே டெம்பர்.


தெலுகு படங்களில் லாஜிக் பார்ப்பது என்பது திருப்பதியில் மொட்டை அடிக்காத ஆளை தேடுவது போல. அதைத் தவிர்த்து தான் படங்களை விமர்சிக்கனும்.

பொதுவா பூரி ஜகன்னாத் படங்களில் வில்லன்களின் அடியாட்களை ஹீரோ கொல்வது சேட்டன்கள் கட்டன்சாயா சாப்பிடுவது போல நீக்கமற நிறைந்திருக்கும்.

அதுபோலவே பெரிய வசூல் ஸ்டார்களின் படங்களில் சவால்கள் எகனமொகனையாக இருக்கும். பெரிய மினிஸ்டரை எதிர்ப்பது, ஒரே நேரத்தில் நாலு பெரிய வில்லன் கூட்டத்தை சமாளிப்பது, நாலைந்து வழக்குகளை விசாரிப்பது, திறமையான இன்வெஸ்டிகேசன், இத்யாதி, இத்யாதி என நிறைய உண்டு.

எந்த சமயத்தில் எந்த வில்லனை எதற்காக அடிக்கிறார் என்று பார்க்கும் நாமும், அடிக்கும் ஹீரோவும் குழம்பி விடும் அபாயம் உண்டு. இதில் எல்லாத்தையும் விடுத்து வித்தியாசப்படுத்தி இருக்கிறார்கள்.

ஒரே வழக்கு, ஒரே வில்லன், பெரிய சண்டைகள் கிடையாது. ரத்தம் தெறிப்பதில்லை. முக்கியமான வில்லன் பிரகாஷ்ராஜை என்டிஆர் அடிப்பதற்காக தொடவே இல்லை.

படத்தில் சிக்ஸ்பேக் வைத்து அசத்தியிருக்கிறார் என்டிஆர். அதற்காக க்ளைமாக்ஸ் பைட்டில் வில்லன் சண்டையை கிழித்து சிக்ஸ்பேக் காட்டும் சாகசம் இல்லை. ஒரு பாட்டில் வெற்றுடம்புடன் நடந்து செல்கிறார். குறைவான ஹீரோயிசம் உள்ள படத்தில் நடித்ததற்காகவே என்டிஆரை பாராட்டலாம்.

ஆனால் அதையும் குறையில்லாமல் செய்து அசத்தியிருக்கிறார். பாடல்களில் வழக்கம் போல கலக்கலான நடனம், தியேட்டர் விசில் சத்தத்தில் கிழிகிறது.

காஜல் சினிமா ஹீரோயின் இலக்கணப்படி அரைக்கிறுக்காக வருகிறார். நாலைந்து பாடல்களில் நடனமாடுகிறார். க்ளைமாக்ஸில் செண்ட்டிமெண்ட் வசனம் பேசுகிறார். அவ்வளவுதான். 

படத்தில் சிறப்பான கதாபாத்திரம் என்றால் அது கிருஷ்ணமுரளியின் மூர்த்தி கதாபாத்திரம் தான். காந்தியவாதியான அவர் லஞ்சம் வாங்காத போலீஸ்காரர். என்டிஆர் லஞ்சம் வாங்கி வில்லன்களுக்கு துணையாக இருப்பதால் சல்யுட் செய்ய மறுக்கிறார்.

என்டிஆர் திருந்தி வில்லன் ஆட்களை போலீஸ்நிலையத்தில் வெளுத்து வாங்கும் போது கிருஷ்ணமுரளி சல்யுட் வைக்க தியேட்டர் கைதட்டலில் அதிர்கிறது.

எல்லா மசாலா தெலுகு படங்களைப் போல் இல்லாமல் சற்று குறைவான மசாலாவுடன் வந்திருப்பதால் படம் ரசிக்க வைக்கிறது. 

வில்லன்களுக்கு எதிரான ஆதாரங்கள் தொலைந்து போக தானே விட்னஸாக மாறும் அந்த ட்விஸ்ட் அடடா. பிறகு நீதிபதி தண்டனை வழங்குவதும் ஒரே நாளில் தூக்கு தண்டனை நிறைவேற்றப் படுவதும் வழக்கமான தெலுகு மசாலா.

லாஜிக் பார்க்காமல் இருந்தால் போரடிக்காமல் விசிலடித்துக் கொண்டே பார்க்க ஏற்ற படம் டெம்பர்.

ஆரூர் மூனா

Saturday, 7 February 2015

என்னை அறிந்தால்

சிறுகோவத்தை கைவிட்டு ஒரு வழியா படத்தை பார்த்தாச்சி. பின்னே என்னங்க ரஜினி படத்துக்கே டிக்கெட்டுக்கு 200 ஓவா கொடுத்துட்டு ஜீரணிக்காம புலம்பிக்கிட்டு திரிஞ்சேன். அஜித் படத்துக்கு 300 ஓவாங்கிறது அதிகம் தானே. தியேட்டர்ல முதல் காட்சிநேரம் வரை டிக்கெட் வித்துக்கிட்டு இருந்தாய்ங்களாம். அதெல்லாம் நமக்கெதுக்கு.


இன்னிக்கி வேலை முடிஞ்சி வரும் போது சகநண்பர் ஒருவர் படம் பார்க்கலாமா என்று கேட்டார். ஏஜிஎஸ்க்கு போனோம். டிக்கெட் கிடைத்தது. சரியான விலைக்கு டிக்கெட் எடுத்து படம் பார்த்தோம். வேலை சற்று கடுமையாக இருந்ததால் டயர்டில் கால் மணிநேரம் தூங்கிட்டேன். த்ரிஷா செத்த காட்சிக்கு பிறகு தான் எழுந்தேன். 

படத்தின் கதையெல்லாம் இதுவரை வந்து நூறு விமர்சனங்களிலும் உள்ளது. அதனால் அதெதுக்கு நமக்கு. நான் ரசிச்ச விஷயங்களையும் தோன்றிய சந்தேங்களையும் மட்டும் பார்ப்போம்.


இந்த கட்டுரைக்கும் வழக்கமாக நான் எழுதும் விமர்சனத்திற்கும் நிறையவே வித்தியாசம் இருக்கு. படம் பார்த்து விட்டு வந்ததும் பரபரவென்று கதையையும், நாயகன் நாயகியை பற்றி இரண்டு பாராவும், இசை, ஒளிப்பதிவு பற்றி சம்பிரதாயத்திற்கு இரண்டு பாராவும் போட்டு கடைசியில் ஒரு பஞ்ச் லைனையும் போட்டால் விமர்சனம் முடிந்து விட்டது.

எல்லா தரப்பு ரசிகர்களையும் தன்வசம் வைத்திருக்கும் அஜித்தின் அறிமுகம் மிகச்சாதாரணமாய் இருப்பதே பெரும் ஆச்சரியம். அதிலேயே தெரிந்து விடுகிறது இது இயக்குனரின் படம் என.

கௌதமின் காதல் எபிசோடுகள் எனக்கு மிகவும் பிடிக்கும். மின்னலே எனக்குள் ஏற்படுத்திய தாக்கத்தைப் பற்றி ஏழு எபிசோடுகள் எழுதலாம். எனது 20 வயதில் வந்த படம் அது. கம்ப்யுட்டர் எனக்கு அறிமுகமான காலம், படத்தின் புகைப்படங்களை கம்ப்யுட்டரில் பார்க்கலாம் என்று தெரிந்ததும் அப்போது தான், அப்படி பார்த்து ரசித்தது மின்னலே தான். பிறந்தநாள் என்று ரீமாசென்னை அழைத்துச் செல்வதும், கரண்ட் போன பின் வரும் இவன்யாரோ பாடலும் ஆயிரம் தபுசங்கரின் காதல் கவிதைகளுக்கு சமம். படத்தை விட்டு தள்ளி வந்து விட்டோம். இதைப் பற்றி பின்னொரு பதிவில் விளக்கமாக பார்ப்போம்.


காதல் காட்சிகளை எதிர்பார்த்து உட்கார்ந்தால் அனுஷ்காவுடனான காட்சிகள் சவசவவென்று இருந்தது. த்ரிஷா பிரசவ வலியில் ஆட்டோவில் அமரும் காட்சியில் கொட்டாவி வந்து அலுப்பிலேயே தூங்கிட்டேன்.

திடீரென்று மிரண்டு விழித்துப் பார்த்தால் த்ரிஷா மர்கயா. அப்புறமா உக்கார்ந்து பார்த்தா படம் புலிப்பாய்ச்சல் தான். 

அஜித்துக்கு இந்த மாதிரி படங்கள் தான் அமைய வேண்டும். இயல்புக்கு மாறாக வெரைப்பா கோட்டு மாட்ன அஜித் நமக்கு அலர்ஜி தான். எனக்கு ரெட்டைஜடை வயசு படத்துல வந்த அஜித் தான் பிடிக்கும்.அதை தாண்டி வித்தியாசம் வித்தியாசம் என்று வெகுஜன ரசிகனை விட்டு விலகியே போயிட்டார் அஜித். 


இந்த படத்தில் எல்லா வித கெட்டப்புகளும் அவருக்கு அம்சமாக பொருந்துகிறது. முறுகலான பாத்திரங்களை எல்லாம் கைவிட்டு நீங்கள் இயல்பாக நடித்தால் எல்லாத் தரப்பு ரசிகர்களையும் கைக்குள்ளேயே வைத்திருக்கலாம்.

அனுஷ்கா, த்ரிஷாவைப் பற்றியெல்லாம் ஒன்னும் சொல்வதற்கில்லை.

முக்கியமாக குறிப்பிட்டாக வேண்டிய ஒருவர் அருண்விஜய். எனக்கு அவரைத் தெரியும். நில்லுங்க, நில்லுங்க, இது வேற.

எல்லாருக்கும் அவரைத் தெரியும். ஆனால் என்னை அவருக்கு தெரியும். நான் 2001 முதல் 2007 வரை சென்னையில் ஈக்காட்டுத்தாங்கலில் கலைமகள் நகர் 3வது சாலையில் இருந்தேன். இதே தெருவில் தான் அவரும் இருந்தார். என் ரூமில் தங்கியிருந்த நண்பர்களுடன் தெருவில் கிரிக்கெட் விளையாடும் போது அவர் வெளியில் இருந்தால் எங்களுடன் விளையாடுவார். நன்றாக பேசுவார்.

அப்போதெல்லாம் இவருக்கு சினிமாவில் நல்ல எதிர்காலம் அமையவில்லையே என்ற வருத்தம் இருக்கும். எல்லாத்துக்கும் சேர்த்து இப்போ அறுவடை பண்ணிக் கொண்டு இருக்கார். நாயகனாக அவருக்கு தடையற தாக்க, வில்லனாக என்னை அறிந்தால், இந்த படங்கள் போதும் இவரின் எதிர்கால வளர்ச்சிக்கு.

அஜித்துக்கும் அருணுக்குமான ஆடுபுலி ஆட்டம் தான் படத்தின் முதுகெலும்பு, ஒருவர் சொதப்பியிருந்தாலும் காமெடியாகியிருக்கும். இருவருக்குமான தொலைபேசி உரையாடலில் அசந்து போய் கைதட்டினேன்.

நிறைய காட்சிகள் கௌதமின் பழைய படங்களை நினைவுப் படுத்துகிறது. 

இடைவேளை முடிந்து படம் தொடங்கியதில் இருந்து படம் முடியும் காட்சி வரை திரையில் இருந்து ஒரு வினாடி கூட கண்ணை எடுக்கவேயில்லை. பத்து நிமிடங்களில் இரண்டாம் பாதி முடிந்தது போல் இருந்தது. இது தான் இந்த படத்தின் வெற்றி.

வாய்ப்பு கிடைத்தால் இன்னொரு முறை படத்தை தியேட்டரில் பார்ப்பேன்.

ஆரூர் மூனா

Friday, 6 February 2015

வெள்ளிமூங்கா, ஒரு இனிய அனுபவம்

கடந்த வாரத்தில் ஒரு நள்ளிரவில் கொசுக்கள் திடீரென கடித்துத்துப்பி என் தூக்கத்தை கலைத்து எகிறிக் குதித்தன. இது போன்ற சமயங்களில் கண்விழித்தால் விடியும் வரை எனக்கு தூக்கம் வராது. வீட்டம்மாவும் செல்லமகளும் கொசுவலையில் சுகமாக தூங்க, தரையில் தூங்கியே பழக்கப்பட்ட நான், அன்றைய இரவை கழிக்க எழுந்து ஹாலுக்கு வந்து கணினியை முடுக்கினேன்.


சிலமணிநேரம் பேஸ்புக், கூகிள் பிளஸ், இத்யாதி வலைத்தளங்களில் உலாவிக் கொண்டிருந்த நான் யூடியுப் உள்ளே சென்று படங்களைத் தேட சிக்கியது வெள்ளிமூங்கா.

நிற்க. சத்தியமா விமர்சனம் பண்ணி உங்களின் கழுத்தை அறுக்கப் போவதில்லை. நான் படத்தில் ஆச்சரியப்பட்ட சில தருணங்களை மட்டும் உங்களுக்கு பகிர்கிறேன்.

கன்னாபின்னாவென்று ஏகப்பட்ட படங்களை பார்த்து பழகிய எனக்கு சின்ன சின்ன டிவிஸ்ட்களை முன்னாலேயே கணிக்கும் பழக்கம் உண்டு. அதுவும் 99 சதவீதம் சரியாகவே இருக்கும்.


படத்தில் காமெடியனாக வரும் அஜூ வர்கீஸ், தனது காதலியை கரெக்ட் செய்ய காதலியின் அப்பாவை பாம்பு கடித்து போது காப்பாற்ற செய்யும் அலப்பறை, உண்மையிலேயே புத்தம் புதிதாக ப்ரெஷ்ஷாக இருந்த நகைச்சுவை.

நான் கணிக்காத அல்லது கணிக்க முடியாத டிவிஸ்ட்டாக இருந்தது தான் அதன் பலம்.

அஜூ தனது காதலியை சைட் அடித்துக் கொண்டு இருக்கும் சமயம் காதலியின் அப்பாவுக்கு காலைப் பிடித்து அலற அங்கு செல்லும் அஜூ பாம்பு கடித்து விட்டதென்று கத்தி கூப்பாடு போட்டு, காதலி, காதலியின் அம்மா அப்பா எல்லோரையும் ஆஸ்பத்திரிக்கு கூப்பிடுவார். 


ஜீப்பில் காதலியை தன் அருகில் அமர வைத்து கதவோரம் அப்பாவை அமர வைத்து காதலியில் அப்பாவின் காலை வெளியில் நீட்டி வைத்து, அப்படி வெளியில் நீட்டப்பட்ட காலின் முனையில் சிகப்பு துணியை கட்டுவார். லாரிகளுக்கு வெளியே நீட்டிக் கொண்டு இருக்கும் இரும்புக் கம்பிகளில் கட்டுவார்களே அது போல. 

காதலியின் அம்மாவும் ஜீப்பின் பின்னே அமர வண்டி கிளம்பும். ஆஸ்பத்திரியில் ஐசியு வாசலில் அஜூவும் அவரது காதலியும் பதற்றத்துடன் நின்றிருக்க  வெளியே வரும் டாக்டர் காப்பாற்றி விட்டோம். இருந்தாலும் அதிகம் பதற்றப் பட்டதால் பீபி அதிகமாகி, மயக்கத்தில் இருக்கிறார். இரண்டு நாள் கழித்து தான் வீடு செல்ல முடியும் என்று சொல்லுவார்.

காமிரா அங்கிருந்து திரும்ப காதலியின் அப்பா காலில் கட்டுடன் நொண்டி நொண்டி நடந்து வந்துக் கொண்டு இருப்பார். காமிரா ஜூம் ஆகி உள்ளே செல்ல காதலியின் அம்மா ஐசியுவில் படுத்திருப்பார்.

உண்மையில் அவருக்கு காலில் முள் தான் குத்தியிருக்கும், அஜூ காதலியின் அப்பாவிடம் நல்ல பெயர் வாங்க காப்பாற்றுவது போல் சீன் போட அதனால் ஏற்பட்ட படபடப்பில் காதலியின் அம்மா பீபி அதிகமாகி மயக்கமாகி விடுவார். அதிலிருந்து அவரது காதல் புட்டுக்கும். நான் இப்படித்தான் இருக்கும் என்று நினைக்கவே இல்லை, அதனால் ரொம்பவே பிடித்து இருந்தது.

அது போலவே நாயகன் பிஜூமேனனுக்கு எம்எல்ஏ சீட் கிடைத்து தன் உள்ளூர் எதிரிகள் எல்லாம் அவரை தோற்கடிக்க நினைத்திருக்க, தேர்தலில் தான் தோற்று விட்டால் எம்பி சீட் கிடைத்து எம்பி ஆகப் போவதாக கிளப்பி விட்டு அதனால் எதிரிகளே அவருக்காக வேலை பார்த்து எம்எல்ஏ ஆக்குவது பட்டைய கிளப்புகிறது.

இதே போன்ற விஷயத்தை காதலிலும் செய்வது, உண்மையில் நாயகியின் அம்மா நாயகனின் பள்ளித் தோழி எனும் சுவாரஸ்யம், பேச்சுக்கு பேச்சு டெல்லியுடன் தொடர்பு என கிளப்பி விடுவது என படம் முழுக்க சுவாரஸ்யங்கள் விரவிக் கிடக்கிறது.

வாய்ப்பு கிடைத்தால் ஒரு முறை பார்த்து மகிழுங்கள்.

நான் படம் பார்த்து முடிக்கும் போது விடிந்தே விட்டது. அதற்கப்புறம் பத்து மணிவரை வரை தூங்கியது வேறு விஷயம்.

ஆரூர் மூனா

Monday, 2 February 2015

கிழிந்து போன இன்றைய நாளின் டயரி பக்கம்

ஏகப்பட்ட சிக்கல்களுக்கு தீர்வு கிடைக்க வேண்டி லோன் அப்ளை செய்திருந்தேன். அப்ளை பண்ணது சொசைட்டி அர்பன் பேங்க் லோன். அதுக்காக தாத்தாவை (லோன் அப்ளிகேசன், அதற்கான இணை டாக்குமெண்ட்கள் என்று பொருள் கொள்க, பின்னாடி தாத்தா வரும் போது தனித்தனியாக அறிஞ்சொற்பொருள் போட முடியாது) எடுத்துக்கிட்டு துணைக்கு குமார் என்பவரை அழைத்துக் கொண்டு கிளம்பினேன். 


குமாருக்கு ஒரு கிளைக்கதை உண்டு, எப்போ காரில் சென்றாலும் போகும் வழியில் சரக்கை போட்டுக் கொண்டு 100கிமீக்கு மேல் வேகத்தில் பறந்து உடன் செல்பவரையும் கதற வைப்பவர். நாலுமணி நேரத்தில் திருச்சி, ஆறு மணிநேரத்தில் மதுரை என கடந்ததை  மற்றவர்களிடம் சொல்லி பந்தா விட்டுக் கொண்டு இருப்பார்.

இன்று என் ஒட்டை டிவிஎஸ் விக்டரில் அமர்ந்து வந்தார். அயனாவரத்தில் வண்டியை முறுக்கி கட் அடித்து விரைந்தேன். ஓட்டேரி வந்ததும் வண்டியை நிறுத்த சொல்லி இறங்கி இனிமேல் இந்த வேகம் சென்றால் வண்டியில் வரமாட்டேன் என்று இரைந்தார். திருவிளையாடல் நடத்தி பாடம் புகட்டிய சந்தோஷத்துடன் வண்டியை மெதுவாக செலுத்தினேன். 


சென்ட்ரல் பக்கம் இருந்த சொசைட்டிக்கு சென்று தாத்தாவை கொடுத்தால் தாத்தாவுக்கு மூக்கில் முடி இல்லை என்று திருப்பிக் கொடுத்து விட்டார்கள். இன்னும் முடி முளைக்க ஒரு மாசமாகும். அது வரை கடன்காரர்களுக்கு என்ன பதில் சொல்வது யோசித்தேன். 

யார் கடன்காரன். கடன் கொடுத்தவனுக்கு, வாங்கியவன் கடன்காரன். வாங்கியவனுக்கு கொடுத்தவன் கடன்காரன். அவ்வளவு தான் வாழ்க்கை. அல்ப காரணத்தால் தாத்தா திருப்பி விடப்பட்டார் என்று சொன்னால் நம்பவா போகிறார்கள். ஆளுக்கு தகுந்த மாதிரி எதாவது காரணம் சொல்லி இந்த மாதம் முழுக்க ஓட்ட வேண்டியது தான். அதற்குள் தாத்தாவுக்கு மூக்கில் முடி முளைக்க எர்வாமார்ட்டினை தேய்க்க வேண்டியிருக்கும்.


கூட வந்த பாவத்துக்காக குமாருக்கு பிரியாணி வாங்கித் தரணும். பெரியமேடு பிரியாணி வேண்டாம் என்று சொல்லி விட்டார். தாசமக்கான் வந்து ஒரு கடையில் பீப் பிரியாணி, சுக்கா, கறிவடை சாப்பிட்டோம். 

அந்த கடை பிரமாதமாக இருக்கும் என குமார் பில்ட்அப் செய்து வலுக்கட்டாயமாக அழைத்து சென்றார். சுற்றி பீப்கறிக்கடைகள் சூழ அமைந்த பிரியாணி கடை அது. தக்காளிங்க, பொன்னி அரிசில பிரியாணி பண்ணியிருக்கானுங்க. நமக்கு பாஸ்மதியோ, சீரகசம்பாவோ இருந்தா தான் உள்ளே இறங்கும். கூட்டிட்டுப் போன குற்றத்துக்காக பல்லைக் கடிச்சிட்டு சாப்பிட்டு முடித்தேன். 


வெளியில் வந்ததும் திருநங்கைகள் சண்டை ஒன்று நடந்து கொண்டு இருந்தது. சண்டை விவரத்தையோ கண்ட காட்சிகளையோ வெளியில் சொன்னால் வாயில புண்ணு வந்துடும். இருந்தாலும் பரவாயில்லை என விவரித்தால் எனக்கு இருக்கும் மனநிலைக்கு ஆத்தா சரளமாக புழங்குவார்.

ஐ படத்துல அசிங்கமா காட்டிட்டானுங்க என்று சண்டை போடும் மகா ஜனங்களே அவர்கள் பொதுவில் எப்படி நாகரீகமா நடந்துக்கனும் என்பதை அவர்களுக்கு பாடம் எடுக்கவும்.

ஓட்டேரி பக்கமாக வந்தால் பொடிக்கடை ஸ்டாப்பிங் பக்கம் எல்லா குடிசை வீடுகளையும் இடித்து வைத்திருந்தார்கள். எப்படியும் அந்த பகுதி வாழ் மக்களை வெளியேற்றி சென்னைக்கு மிக அருகில் திருத்தணி பக்கமோ மாமண்டூர் பக்கமோ குடியேற்றி விடுவார்கள். எப்படியும் 100 வருடத்துக்கு மேல் அந்த பகுதி மக்கள் அங்கே வாழ்ந்திருப்பார்கள். ஒரே நாளில் எல்லாத்தையும் துடைத்து எறிந்து விட்டார்கள். வாழ்க ஜனநாயகம். 

இந்த ஊர் தன் அடையாளத்தை இழந்து புது வண்ணம் பூசிக் கொண்டு இருக்கிறது. இது நல்லதுக்கா. யாமறியோம் பராபரமே.

எல்லா இம்சைகளையும் கடந்து ஏரியா வந்து சேர்ந்தேன். முந்தைய நாட்களைப் போலவே இந்த நாளும் நாசமாய் முடிந்தது. நாளையிலிருந்து கடிவாளம் கட்டி தான் வெளியே செல்ல வேண்டும் போல.

வீட்டின் வெளியே "நான்" உடையை களைந்து விட்டு உள்ளே சென்றேன். வசந்தமுல்லை பொக்கை வாயில் சிரித்து தாவினாள். அட சொர்க்கம் இங்கே இருக்கிறது.

ஆரூர் மூனா

Sunday, 1 February 2015

தீபாவளி - திண்டாட்டத்தில் பயணிகள் - கொண்டாட்டத்தில் தனியார் பேருந்துகள் - பழசு

தீபாவளிக்கு ஊருக்கு போவதற்காக டிக்கெட் பதிவு செய்ய வேண்டியிருந்தது. செல்லும்நாள் தெரியாததால் முன்பே ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்யவில்லை. வரும் வெள்ளிக்கிழமை அன்று செல்வதாக திட்டமிட்டு பேருந்தில் முன்பதிவு செய்யலாம் என்று இருந்தேன். ஆனால் அரசுப்பேருந்தில் டிக்கெட் கிடைக்கவில்லை.

தனியார் பேருந்து என்றால் பணம் அதிகமாக கேட்பாங்களே என்று யோசித்து வேறு வழியில்லாமல் தனியார் பேருந்து நிலையம் சென்று திருவாரூர் செல்லும் தனியார் பேருந்தில் வெள்ளியன்று ஊர் செல் டிக்கெட் கேட்டேன். டிக்கெட் 600 ரூபாய் என்றான். எனக்கு பகீர் என்றது. டிக்கெட் விலை அதிகம் சொல்லுவான் என்று எதிர்பார்த்து சென்றிருந்தாலும் 600 ரூபாய் மிக அதிகம். இது வெறும் டீலக்ஸ் பஸ்ஸூக்குத் தான். அதுவே ஏசி பஸ் என்றால் 1000 ரூபாயாம். சாதாரண நாட்களில் அரசு டீலக்ஸ் பேருந்தில் 160 மட்டுமே கட்டணம். தனியார் பேருந்தில் 300 மட்டும். அதுவும் நான் முன்பதிவு துவங்கிய நாளிலிலேயே முன்பதிவு செய்ததால் டிக்கெட் விலை 600.இவர்கள் கடைசி நேரத்தில் விற்பதற்காக பாதி டிக்கெட்களை பதுக்கி வைத்திருப்பார்கள். கண்டிப்பாக அதன் விலை அன்று 1000க்கு குறையாமல் இருக்கும்.

இங்கிருந்து 320 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள திருவாரூருக்கு செல்வதற்கே இந்த நிலையென்றால் மதுரை, திருநெல்வேலி தாண்டி செல்பவர்களின் நிலையோ பரிதாபம் தான். ஒரளவுக்கு வசதியுள்ளவர்கள் எவ்வளவு விலையேற்றினாலும் தேவை கருதி கொடுத்து செல்வார்கள். குறைந்த சம்பளத்தில் வேலைக்கு சென்னையில் இருக்கும் பேச்சிலர்கள் என்றால் அரசுப்பேருந்தில் அடித்துப்பிடித்துக் கொண்டு நின்று கொண்டாவது செல்ல முயற்சிப்பார்கள்.

ஆனால் இந்த திருமணமாகி கைக்குழந்தையுடன் இருக்கும் கீழ் நடுத்தர வர்க்கத்து ஆண்களின் நிலை தான் இது போன்ற சமயங்களில் பரிதாபமாக இருக்கும். கையில் குழந்தை, குறைந்தது இரண்டு பேக்குகள் உடன் மனைவியுடன் பேருந்துக்காக அல்லாடும் போது மனதை என்னவோ செய்யும். அவர்களுக்கு முன்செல்வதற்கான திட்டமிடுதலும் இருக்காது. அதிக விலை கொடுத்து செல்லவும் முடியாது. பேருந்து நிலையத்தின் உள்நுழையும் முன்பே பேச்சிலர்கள் என்றால் முண்டியடித்து உள்ளே சென்று விடுவார்கள். குடும்பஸ்தர்களுக்கோ அதுவும் முடியாது. பிறகு விடியற்காலை எப்படியாவது ஒரு பேருந்தில் அடித்துப்பிடித்து நின்று செல்ல இடம் வாங்கி வீட்டிற்கு செல்லும் ஆயிரம் ஆண்களை நான் அறிவேன். அவர்கள் வீட்டிற்கு செல்லவும் மதியமாகி விடும். அதற்குள் பண்டிகையும் முடிந்திருக்கும். இந்தியனாக பிறந்ததற்கு அதுவும் தமிழனாக பிறந்ததற்கு அவர்களின் நிலை இப்படித்தான் இருக்கும்.

இதற்கு தீர்வு காண்பது யார்?

இது போன்ற பணடிகையன்று அதிக விலை நிர்ணயித்து கிடைத்த வரை அள்ளிவிட நினைக்கும் தனியார் பேருந்து முதலாளிகளை யார் கேட்பது.

தனியார் பேருந்து உரிமையாளர்களிடம் வாங்க வேண்டியதை வாங்கிக் கொண்டு கண்டுகொள்ளாமல் இருக்கும் மாநில அரசு ஊழியர்களை யார் தான் கேட்பது.

மொத்தமாக ரயில் டிக்கெட்டுகளை புக்கிங் செய்து பண்டிகைக்கு முன்தினம் அதிக விலைக்கு விற்கும் தரகர்களை யார் தான் கேட்பது.

ரயில் டிக்கெட் தரகர்களிடம் வாங்க வேண்டியதை வாங்கிக் கொண்டு கண்டுகொள்ளாமல் இருக்கும் மத்திய அரசு ஊழியர்களை யார் தான் கேட்பது.

இதற்கு கோபப்பட முடியாமல் குடும்பஸ்தனாகி அதிக விலை கொடுத்தாவது டிக்கெட் வாங்கி ஊருக்கு சென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் விளிம்பு நிலை தமிழன் ஆரூர் முனா

அனைத்துத் துறை HRDகளும் மனிதாபிமானமில்லாதவர்களா - பழசு

நான் ஏற்கனவே ஒரு கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிந்தவன். அங்கும் மற்ற துறையினரை விட இந்த HRDக்கள் மட்டும் லையில் கொம்பு முளைத்தது போல் நடந்து கொள்வர். பிரமோஷன், இன்க்கிரிமெண்ட், டிரான்ஸ்பர் பற்றி நாம் எந்த கோரிக்கை கொடுத்தாலோ அல்லது சந்தேகம் கேட்டாலோ ஏதோ அவர்கள் வேலையில் நாம் தலையிட்டு இடைஞ்சல் செய்தது போல நடந்து கொள்வர். இங்கு மட்டுமல்ல, எந்த ஐடி கம்பெனியிலும் அவர்கள் அப்படித்தான். சரி இவர்கள் தனியார் துறையில் அதிக சம்பளத்தில் இருப்பதனால் தான் இப்படி நடந்து கொள்கிறன்றனர் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன் நேற்று முன்தினம் வரை.

எனக்கு நேற்று முன்தினம் ரயில்வே வேலைக்கான சர்டிபிகேட் வெரிபிகேசன் சென்னை எழும்பூரில் உள்ள ஆர்.ஆர்.பி அலுவலகத்தில் நடந்தது. 12.45 மணிக்கு உள் செல்ல வேண்டும். என்னுடன் அதே நேரம் உள் செல்ல வேண்டியவர்கள் மொத்தம் 70 பேர். அவர்களில் பாதிக்கு மேற்பட்டவர்கள் வடமாநிலத்தவர்கள். அவர்கள் அனுபவ அறிவும் குறைவு தான். புது இடம் என்பதால் அவர்கள் விசாரித்து வரவே சில நிமிடங்கள் நேரமாகிவிட்டது. அப்படி வந்தவர்களை ரயில்வே HRDக்கள் உள்ளேயே அனுமதிக்க மறுத்து விட்டனர். அவர்கள் கெஞ்சிய பிறகு ஒருவாறாக திட்டிக் கொண்டே உள்ளே அனுமதித்தனர்.

கவுன்சிலிங் துவங்கியது. நான் ஒரு விஷயத்தில் சொதப்பி விட்டேன். அதாவது அவர்கள் மொத்தம் 3 போட்டோக்கள் கேட்டிருந்தனர். ஆனால் நான் 2 போட்டோ மட்டுமே கொண்டு சென்றிருந்தேன். அவர்களில் ஒருவரிடம் விஷயம சொல்லி பத்து நிமிடம் டைம் கொடுங்கள். நான் சென்று ஸ்டுடியோவில் எடுத்துக் கொண்டு வந்து விடுகிறேன் என்றேன். உடனே அவர் போட்டோ இல்லையா, வெளியே போ உனக்கு வேலையில்லை என்றார். என்னடா இது வம்பாகிவிடடது. அவ்வளவு சிரமப்பட்டு எழுதி வாங்கிய வேலை ஒரு போட்டோ குறைந்ததால் இல்லையென்கிறார்களே என்று கடுப்பாகி விட்டது. வேறு வழி இன்றி பேசாமல் அமர்ந்தேன்.

கவுன்சிலிங்கில் இவர்கள் வடஇந்தியர்களை படுத்தியபாடு இருக்கிறதே, இவர்களுக்கோ இந்தி சரிவர பேச வரவில்லை. வடஇந்தியர்களுக்கோ இந்தியை தவிர வேறு மொழி தெரியவில்லை. அவர்களை பாடாய்ப்படுத்தி விட்டனர். போட்டோ சரியில்லை, கையெழுத்து சரியில்லை, கைரேகை சரியில்லை என்று அவர்களை பயமுறுத்தி வந்தனர். இரண்டு மணி நேரம் கழித்து என் முறை வந்ததும் என் பெயர் சொல்லி அழைத்தனர். நான் அவர்கள் டேபிள் முன் உட்கார்ந்தேன். போட்டோ இல்லை என்று நான் கூறிய நபர் மற்றவர்களிடம் இவன் போட்டோ எடுத்து வரவில்லை என்ன செய்யலாம் என்று கேட்டுக் கொண்டிருந்தார். ஆனால் அவர்களில் மலையாளி ஒருவர் என்னுடைய புரொபைலை எடுத்து அதில் ஏற்கனவே நான் அப்ளை செய்யும் போது அனுப்பி இருந்த எக்ஸ்ட்ரா போட்டோவை கொடுத்து உபயோகப்படுத்திக் கொள்ளும்படி கூறினார்.

ஒரு வழியாக கவுன்சிலிங் முடித்து வெளிவந்தேன். இன்னும் ஒரு மாதத்தில் மெடிக்கல் டெஸ்ட்டுக்கான லெட்டர் வீட்டுக்கு வரும் என்று கூறி அனுப்பினர்.

நான் உள்சென்று அமர்ந்ததிலிருந்து என்னை அழைக்கும் வரை எனக்கு 2மணிநேரம் இருந்தது. என்னை வெளியில் அனுப்பியிருந்தால் நான் பக்கத்தில் இருந்த ஸ்டுடியோவில் போட்டோவை பிரிண்ட் எடுத்து அதிகபட்சம் 15 நிமிடத்தில் உள்ளே வந்திருப்பேன். அதை விட்டு என்னை 2மணிநேரமும் டென்ஷனில் நகம் கடிக்க வைத்தவர்களை என்னவென்று சொல்வது

ஏன்
இந்த HRDக்கள் மட்டும் இப்படி நடந்து கொள்கின்றனர். இந்த துறைக்கு வந்தால் சட்டென்று கொம்பு முளைத்து விடுமா என்ன


ஆரூர் முனா

காப்பியடிக்கும் பதிவர்களிடம் விசாரணை - பழசு

காப்பியடிக்கும் பதிவர்களிடம் விசாரணை என்று இப்போது ஒரு புது டிரெண்ட் துவங்கியுள்ளது. யார் ஏதாவது ஒரு புத்தகத்திலிருந்து மேற்கோள் காட்டி பதிவிட்டிருந்தாலோ அல்லது நாளிதழில் உள்ள கார்டூனை அதிலுள்ள குறைகளையோ அல்லது நமது கருத்தை பதிவிட்டாலோ சரி. உடனடியாக நீ காப்பியடிப்பவன். இந்த பதிவில் உள்ளது இந்த நாளிதழில் வந்துள்ளது என்று கூறி அனானிமஸ்ஸாக பின்னூட்டமிடுகிறார்கள். அடுத்தவர் குறையை சுட்டிக்காட்டும் அளவுக்கு சமூக பொறுப்புள்ளவன் என்றால் பெயரைப்போடு. இத்தனைக்கும் நான் எல்லாப்பதிவுகளையும் காப்பியடித்து போடுபவன் அல்ல. பத்தில் ஒன்று தான் இருக்கும். ஆனாலும் அதன் கீழ் நன்றி என்று எந்த பத்திரிக்கையோ அல்லது எழுதியவரின் பெயரைப் போட்டு விடுவேன்.

என்னால் ஒரு கவிதையை எழுத முடியாது. ஆனால் ரசிக்கத் தெரியும். ரசித்த கவிதையை என்னுடைய வலைப்பூவில் எழுதியவரின் பெயருடன் வெளியிட்டால் அது எப்படி காப்பி பேஸ்ட் ஆகும். அதற்கென்று வேறு நபர்கள் இருக்கிறார்கள். என்னுடைய விமர்சனத்தையே அப்படியே காப்பியடித்து தன்னுடைய வலைப்பூவில் வெளியிட்ட பதிவரையும் நான் அறிவேன். இது அதற்காக எழுதப்பட்டது அல்ல, குறைகளை சுட்டுக்காட்டும் கோமகன்கள் தன்னுடைய பெயரைப்போடவே தைரியமில்லாதவர்கள் எப்படி சரியானவர்களாக இருக்க முடியும்.


ஆரூர் முனா

பதிவிடுபவன் எல்லாம் முட்டாளா? - பழசு

எவன்டா இந்த பதிவ கண்டுபிடிச்சது. என் கண்ணுல மாட்டுனான்னா அவனை நானே கழுத்தறுத்து கொன்னுபோட்டுடுவேன். கொல செய்ய தூண்டுறவனுங்களா, என்ன கொடுமைங்கண்ணா இது. இதுல விஷேசம் என்னவென்றால் ஏதோ ஓரு நாள் இணையத்தில் தேடிய போது ஒரு நாள் சவுக்கு அண்ணனின் பதிவு கிடைத்தது, அவருடன் தொடர்ந்த போது கேபிள் அண்ணன், உண்மைத்தமிழன் அண்ணன், ஜாக்கி அண்ணன் ஆகியோரின் பதிவு எனக்கு கிடைத்தது. அவர்களின் பதிவை படித்த போது தமிழில் எழுதுபவர்கள் பற்றி புளங்காகிதம் அடைந்தேன். சில நாட்களுக்கு பிறகு நாமும் எழுதினால் என்ன என்ற எண்ணம் தோன்றியது. இது படிப்படியாக வளர்ந்து நாமும் எழுத வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. எல்லாம் ஒன்னு தான். சரி விடு.

ஐயா சாமி, எழுத்தாளர்கள் போல் என்னால் எழுத முடியாது. பதிவில் எழுதும் திறமையாளர்கள் போல் என்னால் எழுத முடியாது. ஏனென்றால் நான் படிப்பவன் மட்டுமே. இத்தனைக்கும் நான் ஒரு சவால் விடுகிறேன். யாராவது என்னைப்போல் தமிழ்ப்புத்தகங்களை படிப்பவர்கள் யாராவது இருந்தால் நான் அவர்கள் காலில் மண்டியிடுகிறேன். என்னிடம் உள்ள புத்தகங்கள் குறைந்தது 10000. ஆனால் இது எல்லாம் ஒரு நாளில் நடந்ததல்ல. நான் பத்து வருடங்களில் புத்தக கண்காட்சியில் சேர்த்தது.

ஆனாலும் ஒரு விஷயம் என்னவென்றால் மிகப்பெரிய பணக்காரனாக இருந்து ஒரே நாளில் பங்கு சந்தையில் ஒரு கோடிக்கு மேல் தங்கத்தில் விட்டவன் நான் . அதிலிருந்து மீளவே எனக்கு இரண்டு வருடம் பிடித்தது. அந்த இடைவெளியில் நான் இழந்தது பல லட்சம் ரூபாய்கள். எல்லாம் இழந்து ஊருக்கு போகும் போது கூட என்னுடன் வந்தது என் மனைவியுடன் சேர்த்து என் புத்தகங்கள் மட்டுமே,.

என்னால் மற்ற பதிவர்களின் பதிவை பாராட்டி அதன் மூலம் என் பதிவின் ஹிட் பெறவேண்டும் என்று நினைப்பவன் நான் அல்ல.

என்றாவது ஒரு நாள் இத்தனை புத்தகங்கள் படித்ததன் மூலம் நானும் ஓரு சவால் விடுகிறேன். என்னைப்போல் படித்துப்பாருங்கள். நீங்களும் ஒரு நாள் எழுத்தாளர் ஆவீர்கள் நன்றி.

ஆரூர் முனா

ஐகோர்ட்டில் மக்கள் இன்று கடும் அவதி - பழசு

என் அப்பா ரிடையர்மெண்ட் அமெளண்ட் செட்டில்மெண்ட் கேஸூக்காக ஊரிலிருந்து வந்திருந்தார். அவருடன் இதே பிரச்சனையில் பாதிக்கப்பட்டிருந்த என் அப்பாவுடன் வேலை பார்த்த இருவரும் வந்திருந்தார்கள். வழக்கறிஞர் என் அப்பாவை அவருடைய சேம்பருக்கு அழைத்திருந்ததால்,அவருடன் நான் இன்று சென்னை கோர்ட் வளாகம் சென்றிருந்தேன்.எஸ்பிளனேடு நுழைவாயில் வழியாக மட்டுமே பொதுமக்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

காலை 10 மணியிலிருந்து நுழைவாயிலில் காத்திருந்து அரை மணிநேரம் கழித்தே எங்களால் நுழைவாயிலை தாண்ட முடிந்தது. உள்ளே செல்லும் அனைவரையும் ஏதோ ஒரு ஐடிகார்டு காட்டினால் தான் உள்ளே அனுமதிக்கிறார்கள். உள்ளே சென்றதும் தீயணைப்பு அலுவலகம் மட்டும் வரை மட்டுமே பொதுமக்களின் டூவீலரை அனுமதிக்கிறார்கள். அங்கு வண்டியை பார்க் செய்து விட்டு உள்ளே செல்ல முயன்றால் அனுமதி சீட்டு தனியாக வாங்க வேண்டுமென்றும் அதற்கு ஒரு 4 சைஸ் பேப்பரில் அப்ளிகேசன் கொடுத்து அதனை நிரப்ப சொல்கிறார்கள். எங்களுக்கு வக்கீலின் போன் நம்பர் மட்டும் தெரியும் அவரின் ஐடி நம்பரெல்லாம் கேட்டு இருந்தது. நாங்கள் கோர்ட்டுக்கும் செல்லவில்லை. சேம்பருக்குள் சென்று எங்கள் வக்கீலை பார்த்து அவரிடம் உள்ள பாரத்தில் என் அப்பா ஒரு கையெழுத்து போட்டு விட்டு வர வேண்டும் அவ்வளவே.

வக்கீலுக்கு போன் செய்தால் அவர் எடுக்கவில்லை. என்னடா இது வம்பா போய் விட்டது. என் அப்பா இன்றிரவே திருவாரூருக்கு திரும்ப வேண்டும், நாளை அவருக்கு முக்கிய வேலை ஒன்று ஊரில் உள்ளது. ஒன்றும் புரியாமல் எங்கள் வழக்கறிஞருக்கு போன் செய்தே இரண்டு மணிநேரம் ஆகிவிட்டது. எங்களுக்கே இந்த நிலைமை, ஏதேதோ ஊர்களிலிருந்து அவ்வளவு விவரம் புரியாமல் எவ்வளவோ பேர் வந்திருந்து விழித்ததை பார்த்த போது வருத்தமாகத்தான் இருந்தது. பிறகு 12.30 மணியளவில் எங்கள் வக்கீல் போன் செய்து அவர் ஒரு கேஸ் விஷயமாக கோர்ட்டின் உள் இருந்ததால் போன் எடுக்க முடியவில்லை என்றும் தானே நுழைவாயிலுக்கு வந்து அழைத்து செல்வதாகவும் கூறினார். நான் மட்டும் வெளியில் நின்று கொண்டேன். அப்பா மற்றும் அவருடன் வந்திருந்த மற்ற இருவர் ஆகியோர் வக்கீலுடன் சேம்பர் உள் சென்றனர். வெளியில் நின்று கொண்டபடி மக்களை நோட்டம் விட்டு டைம்பாஸ் செய்து கொண்டிருந்தேன். அந்த சமயம் வெளியில் நூற்றுக்கணக்கானோர் பாரம் நிரப்பிக் கொண்டிருந்தனர். பாதிப்பேருக்கு விபரம் தெரியவில்லை. என்னால் முடிந்த அளவுக்கு குறைந்தது ஒரு இருபது பேருக்காவது பாரம் நிரப்பி கொடுத்தேன். அதற்குள் என் அப்பா வந்து விட்டார்.

இன்று தான் இந்த கெடுபிடிக்கு முதல் நாளாம், இது போன்ற கெடுபிடியையெல்லாம் கொஞ்சம் தளர்த்தி கொண்டு இருந்திருக்கலாம், அல்லது பாரம் நிரப்பும் இடத்தில் உதவிக்கென ஒரு ஐந்து பேரையாவது இருக்க வைத்திருந்தால் மக்களுக்கு உபயோகமாக இருந்திருக்கும். கோர்ட் என்பதே மக்களுக்காகத்தானே. அவர்களை தவிக்க விட்டு இந்த அளவுக்கு கெடுபிடி செய்தால் யாருக்கு என்ன பலன்.

பாதுகாப்பு முக்கியம் தான் இல்லையென்று சொல்லவில்லை. அதற்காக படிப்பறிவு குறைந்தவர்கள் அதிகம் இருக்கும் நாட்டில் இந்தளவுக்கு சிக்கலான வழிமுறைகள் தேவைதானா?


ஆரூர் முனா

வேட்பாளரிடம் சிக்கி நான் பட்ட பாடு - பழசு

எனது வீடு ஆவடி நகராட்சி 9வது வார்டில் வருகிறது. ஆனால் எனக்கு ஒட்டு திருவாரூர் நகராட்சி 13வது வார்டில் இருக்கிறது. ஓட்டு போட நான் திருவாரூர் செல்ல வேண்டும். ஆனால் அதே தேதியில் எனக்கு ஆர்.ஆர்.பி சென்னை அலுவலகத்தில் சர்டிபிகேட் வெரிபிகேஷன் உள்ளது. எனவே இந்த தேர்தலில் என்னால் ஓட்டு போட முடியாது. ஆனால் பாருங்கள் எனக்கு வந்த சோதனை. ஆவடி நகராட்சி கவுன்சிலர் வேட்பாளர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தினமும் ஓட்டு கேட்டு எனது வீட்டிற்கு வருகிறார்கள். வாசலில் இருந்து அழைக்கிறார்கள் என்பதற்காக சட்டையை போட்டு வந்து அவர்களிடம் பேசினால் அவர்கள் அண்ணே எங்கள் வேட்பாளருக்கே ஒட்டு போட வேண்டும் என்றும், எங்கள் சாலை மோசமாக இருப்பதால் கண்டிப்பாக நாங்கள் சரி செய்து தருகிறோம் என்றும் கூறி செல்கிறார்கள், ஒரு முறை அல்லது சில முறை என்றால் பரவாயில்லை. ஒரு மணிநேரத்திற்கு ஒரு குழு வந்து ஒட்டு கேட்கிறது. நான் அவர்களிடம் எனக்கு ஒட்டு இந்த தொகுதியில் இல்லை என்று சொன்னாலும் ஒட்டு கேட்பது ஓய்ந்தபாடில்லை. அதே குழு ஒரு மணிநேரம் கழித்து வந்து என்னிடம் வந்து மீண்டும் ஓட்டு கேட்கிறது. இதில் ஒருவர் இருக்கிறார், ஒவ்வொரு குழு வரும்போதும் அத்தனை குழுவிலும் அவர் இருக்கிறார். அவருடைய வேலை வாழ்க சொல்வது தான். இந்த தேர்தல் முடியும் வரை அவருக்கு நல்ல வருமானம் தான். என் மனைவியோ வேலைக்கு சென்று விடுவதால் அவள் இந்த தொல்லையிலிருந்து தப்பித்து விடுகிறாள். நான் வீட்டில் தனியாக இருப்பதால் மாட்டிக் கொள்கிறேன். தேர்தல் முடியும் வரை என் பாடு திண்டாட்டம் தான்.

ஆரூர் முனா

தவறவிட்ட பதிவர் சந்திப்பு - பழசு

இன்று காலை பிலாசபி பிரபாகரன் எனக்கு செல்லில் போன் செய்து இன்று மாலை பதிவர் சந்திப்பு இருப்பதாகவும் என்னை வரும்படியும் கூறினார். ஆனால் நான் என்ன செய்ய, முன்பே நான் என் அப்ரன்டிஸ் நண்பர்களுக்கு இன்று மதியம் நான் ஆர்.ஆர்.பி தேர்வில் தேர்ச்சியடைந்ததற்காக பார்ட்டி ஏற்பாடு செய்திருந்தேன். அது 12 மணியளவில் துவங்கியது. என் நண்பர்கள் கார்த்திக், கலாநிதி, சத்யா, தணிகா, மணி, ஜெகன், குட்டி, ஆனந்த் மற்றும் ரமணன் ஆகியோர் வந்திருந்தனர். துவங்கிய பார்ட்டி முடிய முடியவேயில்லை. மூணு மணிக்கு நான் பிரபாவுக்கு போன் செய்து என்னால் வரமுடியாது என்றும் அம்பத்தூரில் பார்ட்டி முடியவில்லை என்றும் கூறினேன். அவர் பரவாயில்லை என்றும முடிந்தவுடன் தனக்கு போன் செய்யும்படியும் கூறினார்.

கார்த்திக் நேரம் ஆக ஆக உளற ஆரம்பித்தான். பார்ட்டியில் கலாட்டா துவங்கியது. கடைசி வரை பார்ட்டி முடியவில்லை. சரி என்று பிரபாவுக்கு போன் செய்து வரமுடியவில்லை என்று கூறினேன். அவர் என்னை நாளை நடக்கும் இன்டிபிளாக்கர் கலந்துரையாரடலுக்கு வரும்படி கூறினார், ஆனால் என் அப்பா நாளை பகலில் திருவாரூரிலிருந்து ரயிலில் வருவதால் நான் எழும்பூரில் அழைத்து வர செல்ல வேண்டும் என்று கூறி வர முடியாததற்கான காரணத்தை கூறினேன். அவரும் ஒத்துக் கொண்டார்.

ஆனால் எனக்கு ஒரு ஆச்சரியம் என்ன வென்றால் நான் இது வரை பிலாசபி பிரபாகரனை நேரில் பார்த்ததில்லை. இன்று தான் எனக்கு போன் செய்து தான் என்னை விட சிறியவென்று கூறினார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

பரவாயில்லை, பதிவர்களே நாளை இன்டிபிளாக்கர் கருத்தரங்கில் ஒன்று கூடுங்கள்.

நான் அடுத்த சந்திப்பில் பதிவர்களை சந்திக்க வருகிறேன்,

நன்றி வணக்கம்

ஆரூர் முனா

உளவாளி ஜானி (Johny English Reborn)- திரைப்பட விமர்சனம் - பழசு

ஜானி இங்கிலீஷ் ரீபார்ன் படம் தமிழில் பார்க்கலாம் என்று இன்று மதிய காட்சி மினிமோட்சம் தியேட்டருக்கு சென்றிருந்தோம், ஒருவன் வருவதற்கு லேட் ஆகியதால் படம் போட்டு பதினைந்து நிமிடத்துக்கு பிறகு தான் உள் நுழைந்தோம். ஒரு டிக்கெட் ஐம்பது ரூபாய், சென்னையில் இவ்வளவு கம்மி விலையில் சினிமாவா என்று ஆச்சரியப்பட்டு உள்ளே சென்றால் தான் தெரிந்தது ஏன் ஐம்பது ரூபாய் என்று. படத்தில் க்ளாரிட்டியே இல்லை, ப்ரோஜக்டர் படு மோசம். ஒரு இருபது வருடத்துக்கு முன்பு டூரிங் டாக்கீஸில் படம் இப்படி தான் தெரியும். கஷ்ட காலம்டா சாமி.

சரி படத்தின் கதைக்கு வருவோம், ஜானி (ரோவன் ஆட்கின்சன்) ஒரு ரகசிய ஏஜெண்ட். அவரின் உதவியாளர் ஒருவர் பெயர் தெரியவில்லை. இருவரும் ஓரு மிஷன் காரணமாக ஹாங்காங் சென்று டெரரிஸ்ட் ஒருவரை சந்திக்கின்றனர், அவரிடம் ஒரு நாட்டின் அதிபரை கொலை செய்யும் திட்டம் பற்றி அறிகின்றனர், கொலை செய்வதற்குரிய ஆயுதத்தின் செயல்படுத்தும் சாவி மொத்தம் மூன்று பேரிடம் உள்ளது எனவும் அதில் ஒருவர் அந்த டெரரிஸ்ட் தான் எனவும் அறிகின்றனர். பேசிக்கொண்டிருக்கும் போதே ஒரு வில்லிக்கிழவியால் சுடப்பட்டு அந்த டெரரிஸ்ட் இறக்கின்றார். அந்த சாவி வில்லன் கையில் சிக்குகிறது. அவரது அரசாங்கத்திடம் திட்டு கிடைக்கிறது. மீண்டும் மற்ற இரண்டு சாவிகளை கைப்பற்றும் பொறுப்பு அவரிடம் கொடுக்கப்படுகிறது, இரண்டாவது ஆள் ஒரு ரஷ்யன் என்று விவரம் தெரிந்து ரஷ்யனிடம் இருந்து இரண்டாவது சாவியை கைப்பற்ற இருவரும் கால்ப் விளையாடுவது போல் சென்று அவருடன் விளையாடிக் கொண்டிருக்கும் போது அந்த ரஷ்யனும் வில்லிக்கிழவியால் சுடப்படுகிறார். அவரைக் காப்பாற்ற ஜானியும் அவரது உதவியாளரும் ஹெலிகாப்டர் எடுத்துக் கொண்டு செல்கின்றனர். வழியில் மூன்றாவது ள் ரகசிய ஏஜெண்ட்களில் ஒருவர் என்று விவரம் சொல்லி ரஷ்யன் செத்துப் போகிறார். அவரிடம் இருந்த சாவி ஜானியிடம் கிடைக்கிறது. அவர் நாட்டின் பிரதமருடன் நடக்கும் ரகசிய ஏஜெண்ட் குழு மீட்டிங்கில் மூன்றாவது ஆளை நாளைக்குள் கண்டு பிடிப்பதாக கூறுகிறார். ஜானியின் உதவியாளர் மூலம் அந்த வில்லன் யாரென்று தெரிகின்றது, ஆனால் அந்த வில்லன் முந்திக் கொண்டு ஜானி தான் அந்த ரகசிய ஏஜெண்ட் என்று அரசாங்கத்திடம் சொல்லி நம்ப வைக்கின்றார். நாட்டின் உளவுத்துறை அவரை துரத்துகிறது, அவர் அவர்களிடமிருந்து தப்பித்து தன் தோழியும் ரகசிய ஏஜெண்டுமான கதாநாயகியின் வீடடில் தஞ்சமடைகிறார். அவரிடம் உள்ள டாக்குமெண்டடுகளின் மூலம் வில்லன்களின் ஆயுதம் ஒரு மருந்து என்றும் அதை யார் உடம்பில் செலுத்துகிறோமோ அவர் வர்கள் சொல்படி நடப்பர் என்றும் அதன் மூலம் கொலை செய்யப்படுகிறது என்பதையும் அறிகின்றார். அவர்கள் அந்த நாட்டின் பெரிய பெண் அதிகாரி மூலம் அந்த நாட்டிற்கு வரும் வேறு நாட்டு அதிபைர கொலை செய்ய திட்டமிடுகின்றனர் என்பதையும் அறிகின்றார். அதை தடுக்க அவர் முயற்சிக்கும் போது அவரே தவறுதலாக அந்த மருந்தை குடித்து விடுகிறார். அதன் மூலம் ஜானியையே கொலை செய்ய அனுப்புகின்றனர். அவர் கொலை செய்தாரா இல்லை திட்டத்தை முறியடித்து வில்லன்களை பிடித்தாரா என்பதே படம். அப்பாடா.

மற்றவர்களெல்லாம் எப்படி விமர்சனம் எழுதுகிறார்களோ, படம் பார்த்து விட்டு வந்ததும் படத்தில் உள்ள கேரக்டர்களின் பெயர்களெல்லாம் மறந்து விடுகிறது, கஷ்டம்டா சாமி.

படத்தின் மூலமே ரோவன் ஆட்கின்சன் தான். காமெடி சான்சே இல்லை. நீண்ட நாட்களுக்கு தியேட்டரில் கண்ட்ரோல் செய்ய முடியாமல் விழுந்து விழுந்து சிரித்த படம் இது தான்.

ரஷ்ய வில்லனை காப்பாற்ற ஹெலிகாப்டர் எடுத்து ஆஸ்பத்திரி செல்லும் போது வழி தெரியாததால் சாலைகளின் ஊடாக ஹெலிகாப்டரை ஓட்டி செல்லும் போது சிரிப்பில் தியேட்டர் அதிர்கிறது. அதே போல் வில்லிக்கிழவி என்று நினைத்து ஒவ்வொரு முறையும் வேறு ஒரு கிழவியை பிடித்து அடிக்கும் போது சிரித்து வயிறு வலிக்கிறது. இன்னும் நிறைய காட்சிகள் படம் முழுவதும் உள்ளது, சொன்னால் பார்க்கும் போது உங்களுக்கு சுவாரஸ்யம் போய் விடும், எனவே அனைவரும் தியேட்டரில் சென்று பார்த்து விட்டு நன்றாக சிரித்து மகிழுங்கள்,

ஆரூர் முனா

சினிமா விமர்சனம் - பழசு

திரைப்படத்துக்கு விமர்சனம் எழுதுவதற்கு பதிலாக விவேக் சொன்ன மாதிரி கேரளாவுக்கு அடிமாடா போகலாம். என்னா பொழப்புடா இது, நம்ம கேபிள் அண்ணே, ஜாக்கி அண்ணே, சிபி அண்ணே மற்றும் பலர் எழுதும் விமர்சனங்களை பார்க்கும் போது நாமெல்லாம் செல்லாக்காசு போல் தோன்றும்.

இத்தனைக்கும் இத்தனை பதிவர்களுக்கு நான் சவால் விடுவேன். என்னைப்போல் சினமா பார்க்க இன்னொருவர் பிறந்து வரணும். உதாரணம் வேண்டுமா ஒரே நாளில் திருவாரூரில் மாணிக்கம், சிவசக்தி, மேட்டுக்குடி மற்றும் வேறு வேலையாக மதுரை சென்று அங்கு தேவர் பூஜையன்று வேறு வழியில்லாமல் வெளியில் வரமுடியாமல் இருந்த காரணத்தால் ஒரே நாளில் பார்த்த பாபா, பைவ் ஸ்டார், ரன் மற்றும் பல நாட்கள் பல படங்கள் என் நினைவில் இருக்கின்றன.

ஆனால் மேற்கூறிய சினிமா விமர்சன சீனியர்கள் போல் என்னால் சினிமா விமர்சன பதிவிட முடியாது. ஏனென்றால் எழுத்து என்பது என்னால் படிப்பது என்றளவில் இருக்கிறதே தவிர எழுதுவது என்பது இன்னும் நான் வளர்த்துக் கொள்ள வேண்டிய கலை, நான் இனிமேல் எழுதி எழுதி என்னை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

ஆனால் ஒன்று புரிகிறது, நான் எழுதியது இரண்டே இரண்டு சினிமா விமர்சன பதிவுகள் தான், ஆனால் இரண்டும் மொக்கை என எனக்கு தெரியும். ஆனால் என்னுடைய பலம் அதே நாளில் பதிவெழுதுவது ட்டும் தான். இந்த இரண்டு பதிவு நாட்களில் மட்டும் என் பிளாக் ஹிட்கள் தினம் 2000. மற்ற நாட்களில் 750 வருவதற்கு கூட முக்குகிறது. சரியோ தப்போ எவனோ பல கோடி செலவு செய்து எடுத்த படத்தை நான் எப்படி விமர்சனம் செய்யலாம் என்று யாராவது வீட்டில் வந்து அடிப்பார்களோ என்று யோசித்து இருந்த நாட்கள் எல்லாம் உண்டு. ஆனால் சுயநலமாக சொல்கிறேன், படத்தை வெளியான அதே நாளில் விமர்சனம் செய்தால் மட்டுமே ஹிட் கிடைக்கும். இப்படியெல்லாம் டகால்டி செய்தால் மட்டுமே ஹிட் கிடைக்கும். அது மட்டும் புரிகிறது.

சில சமயங்களில் எனக்கு நானே யோசித்து கொள்கிறேன். இப்படி நாலு பேரை ஏமாத்தி ஹிட்ஸ் வாங்குறது ஒரு பொழப்பா? ஆனா மற்றவர்களை பாரக்கும் போது எனக்கும் தேவைப்படுகிறது. ஒன்று மட்டும் உண்மை அரசியலில் மட்டுமல்ல பதிவுலகிலும் சாணக்கியத்தனம் செய்து பெரிய ஆள் ஆவதே பலரின் லட்சியம் என்று புரிகிறது. நானும் அவர்களுடன் சேர்ந்து கொள்கிறேன்.

இனிமேல் விமர்சனம் என்ற பெயரில் ஏமாற்ற போகும்

ஆரூர் முனா