Sunday 1 February 2015

என்னுடைய தேர்வை எனக்காக எழுதியது கடவுளா - பழசு

நான் சிறுவயதிலிருந்தே கடவுள் நம்பிக்கையில்லாதவன். இன்று வரை அப்படித்தான். எவ்வளவோ ஏற்ற, இறக்கங்கள் பார்த்த போதும் அதன் மீது கடவுள் மறுப்பு கொள்கையிலிருந்து சிறிதளவும் மாறாதவன்.

எனக்கு தற்பொழுது ரயில்வேயில் பொறியாளர் வேலை கிடைத்துள்ளது. விண்ணப்பம் செய்து, படித்து, தேர்வு எழுதி தற்பொழுது தேர்ச்சியடைந்தவனும் நான் தான். எனது முயற்சியால் தான் இது நடந்தது என்று நான் நம்புகிறேன். இப்பொழுது அதுவும் இன்று காலை முதல் ஒரு பிரச்சனை. என் மனைவி என் இஷ்ட தெய்வத்திடம் வேண்டியதால் தான் நான் தேர்ச்சியடைந்ததாக கூறுகிறாள். அதற்காக கடவுளுக்கு வேண்டுதல் நிறைவேற்ற வேண்டும் என்று கூறுகிறாள். ஊரிலிருந்து என் அம்மா போன் செய்து அவர்கள் இஷ்ட தெய்வத்திடம் மனமுருகி வேண்டியதால் தான் நான் தேர்ச்சியடைந்ததாக சொல்கிறார். எனது தோழியோ தான் இயேசுவிடம் பிரார்த்தித்ததால் தான் தேர்ச்சியடைந்தாக கூறுகிறாள். எனது நண்பன் சத்யாவோ தான் எனக்கு பத்து ரூபாய் கொடுத்து விண்ணப்பம் வாங்கி தந்ததால் தான் நான் தேர்ச்சியடைந்ததாக கூறுகிறான். அதற்காக பெரும் தொகையில் பார்ட்டியும் கேட்கிறான். எனது சித்தப்பா மகன் சீனுவோ நான் தேர்வு எழுத அவனது இருசக்கர வாகனத்தை எடுத்து சென்றதால் தான் தேர்ச்சியடைந்ததாக கூறுகிறான்.

அடக்கடவுளே

உண்மையில் நானாக தேர்வு எழுதவேயில்லையா, எனக்கு தேர்ச்சியடையும் அளவுக்கு தகுதியே இல்லையா, இவர்களுடைய பிரார்த்தனையால் தான் நான் என்னுடன் தேர்வு எழுதிய இருபதாயிரம் பேரில் முதல் 10 பேரில் ஒருவனாக வந்தேனா,

அய்யய்யோ என் மண்டை காய்கிறதே யாராவது நல்ல மனம் படைத்தவர்களே இதற்கு ஒரு வழி சொல்லுங்கப்பா

குழப்பத்துடன்

ஆரூர் முனா

No comments:

Post a Comment