Friday 13 February 2015

என்டிஆரின் டெம்பர் - தெலுகு

இன்னிக்கி சினிமாவுக்கு போகும் எண்ணமெல்லாம் இல்லை. மதியம்  ஷிப்ட்டுக்கு தான் வேலைக்கு போகனும். காலையிலேயே இணையத்தில் மேஞ்சிக்கிட்டு இருந்தேன். டபக்குன்னு 9 மணிக்கு கரண்ட்டு போயிடுச்சி. இன்னிக்கி ஷட்டவுனாம். 


பொழுதை ஓட்டியாகனுமேன்னு வண்டியை எடுத்துக்கிட்டு கிளம்பினேன். தன் கடையில் பிஸியாக வேலை செய்து கொண்டிருந்தார் ஆர்.பி. ஆதித்யா என்னும் போலி பன்னிக்குட்டி. சினிமாவுக்கு போகலாம் என்று பிட்டு போட்டேன். தலைவர் அரைமணியில் ரெடியாகி வந்தார். 

அனேகன் போகும் எண்ணமில்லை. சரி நம்ம எண்டர்டெயினர் என்டிஆர் படம் ரிலீசாகுதே அது தான் டார்கெட்டு என்று முடிவு செய்து கேசினோவுக்கு வண்டியை கிளப்பினோம். அப்போதே மணி 11,15 ஆகிவிட்டு இருந்தது. பெரம்பூரில் இருந்து போவதற்குள் கண்டிப்பாக அரைமணிநேர படத்தை விட்டு விடுவோம் என்று தெரியும். பிறகு கங்காவில் காட்சி இருப்பதை அறிந்து அப்படியே ஒரு யுடர்ன் அடித்தோம். 


வண்டியை பார்க் செய்து விட்டு சாலையை கடந்தேன். ஒரு குரல் அழைத்தது. திரும்பினால் நம்ம சுகுமார் சுவாமிநாதன் தான் அழைத்தார். நலம் விசாரிப்புக்கு பிறகு பேசக் கூட நேரமில்லை, அவரோ எஸ்2வுக்கு அனேகன் படம் பார்க்க செல்லும் அவசரத்தில் இருந்தார். எனக்கும் படம் தொடங்கி விட்டிருந்தது. பிச்சிக்கிட்டோம்.

---------------------------------------------

விமர்சனம் 

சிறுவயதில் இருந்தே எல்லா தகடுதித்தம்களையும் கண்டு வளரும் என்டிஆர் ப்ராடுத்தனம் செய்து எஸ்ஐ ஆகிறார். ஐதராபாத்தில் லஞ்சம் வாங்கிக் கொண்டு கலாட்டாவாக இருந்து வரும் என்டிஆர் பிரகாஷ்ராஜின் தேவைக்காக விசாகப்பட்டினத்திற்கு டிரான்பர் ஆகிறார்.


அங்கும் லஞ்சம் வாங்கிக் கொண்டு வைசாக்கின் பெரிய தாதாவான பிரகாஷ்ராஜ் செய்யும் அட்டூழியங்களை கண்டு கொள்ளாமல் இருக்கிறார். பல பொய்களை சொல்லி காஜலை காதலிக்கிறார். ஒரு சமயம் காஜலை பிரகாஷ்ராஜ் ஆட்கள் தூக்கி வந்து கொல்ல முயற்சிக்கின்றனர். சண்டை போட்டு என்டிஆர் மீட்கும் போது ஆள் தவறி காஜலை தூக்கியது தெரிய வருகிறது.

அதிர்ச்சியடைந்த காஜல் உண்மையில் அவர்கள் கொல்ல இருக்கும் பெண்ணை காப்பாற்றும்படி என்டிஆரை நிர்பந்திக்கிறார். வேறுவழியில்லாமல் காப்பாற்றும் என்டிஆர் அதன் பின்விவரங்கள் அறிந்து திருந்துகிறார். 

பிரகாஷ்ராஜ் தம்பிகள் நால்வர் ஒரு பெண்ணை கற்பழித்து கொன்ற விவரம் அறிந்து அவர்களுக்கு எல்லா எதிர்ப்பையும் மீறி தண்டனை வாங்கித் தந்தாரா (சஸ்பென்ஸ் வச்சோம்ல)  என்பதே டெம்பர்.


தெலுகு படங்களில் லாஜிக் பார்ப்பது என்பது திருப்பதியில் மொட்டை அடிக்காத ஆளை தேடுவது போல. அதைத் தவிர்த்து தான் படங்களை விமர்சிக்கனும்.

பொதுவா பூரி ஜகன்னாத் படங்களில் வில்லன்களின் அடியாட்களை ஹீரோ கொல்வது சேட்டன்கள் கட்டன்சாயா சாப்பிடுவது போல நீக்கமற நிறைந்திருக்கும்.

அதுபோலவே பெரிய வசூல் ஸ்டார்களின் படங்களில் சவால்கள் எகனமொகனையாக இருக்கும். பெரிய மினிஸ்டரை எதிர்ப்பது, ஒரே நேரத்தில் நாலு பெரிய வில்லன் கூட்டத்தை சமாளிப்பது, நாலைந்து வழக்குகளை விசாரிப்பது, திறமையான இன்வெஸ்டிகேசன், இத்யாதி, இத்யாதி என நிறைய உண்டு.

எந்த சமயத்தில் எந்த வில்லனை எதற்காக அடிக்கிறார் என்று பார்க்கும் நாமும், அடிக்கும் ஹீரோவும் குழம்பி விடும் அபாயம் உண்டு. இதில் எல்லாத்தையும் விடுத்து வித்தியாசப்படுத்தி இருக்கிறார்கள்.

ஒரே வழக்கு, ஒரே வில்லன், பெரிய சண்டைகள் கிடையாது. ரத்தம் தெறிப்பதில்லை. முக்கியமான வில்லன் பிரகாஷ்ராஜை என்டிஆர் அடிப்பதற்காக தொடவே இல்லை.

படத்தில் சிக்ஸ்பேக் வைத்து அசத்தியிருக்கிறார் என்டிஆர். அதற்காக க்ளைமாக்ஸ் பைட்டில் வில்லன் சண்டையை கிழித்து சிக்ஸ்பேக் காட்டும் சாகசம் இல்லை. ஒரு பாட்டில் வெற்றுடம்புடன் நடந்து செல்கிறார். குறைவான ஹீரோயிசம் உள்ள படத்தில் நடித்ததற்காகவே என்டிஆரை பாராட்டலாம்.

ஆனால் அதையும் குறையில்லாமல் செய்து அசத்தியிருக்கிறார். பாடல்களில் வழக்கம் போல கலக்கலான நடனம், தியேட்டர் விசில் சத்தத்தில் கிழிகிறது.

காஜல் சினிமா ஹீரோயின் இலக்கணப்படி அரைக்கிறுக்காக வருகிறார். நாலைந்து பாடல்களில் நடனமாடுகிறார். க்ளைமாக்ஸில் செண்ட்டிமெண்ட் வசனம் பேசுகிறார். அவ்வளவுதான். 

படத்தில் சிறப்பான கதாபாத்திரம் என்றால் அது கிருஷ்ணமுரளியின் மூர்த்தி கதாபாத்திரம் தான். காந்தியவாதியான அவர் லஞ்சம் வாங்காத போலீஸ்காரர். என்டிஆர் லஞ்சம் வாங்கி வில்லன்களுக்கு துணையாக இருப்பதால் சல்யுட் செய்ய மறுக்கிறார்.

என்டிஆர் திருந்தி வில்லன் ஆட்களை போலீஸ்நிலையத்தில் வெளுத்து வாங்கும் போது கிருஷ்ணமுரளி சல்யுட் வைக்க தியேட்டர் கைதட்டலில் அதிர்கிறது.

எல்லா மசாலா தெலுகு படங்களைப் போல் இல்லாமல் சற்று குறைவான மசாலாவுடன் வந்திருப்பதால் படம் ரசிக்க வைக்கிறது. 

வில்லன்களுக்கு எதிரான ஆதாரங்கள் தொலைந்து போக தானே விட்னஸாக மாறும் அந்த ட்விஸ்ட் அடடா. பிறகு நீதிபதி தண்டனை வழங்குவதும் ஒரே நாளில் தூக்கு தண்டனை நிறைவேற்றப் படுவதும் வழக்கமான தெலுகு மசாலா.

லாஜிக் பார்க்காமல் இருந்தால் போரடிக்காமல் விசிலடித்துக் கொண்டே பார்க்க ஏற்ற படம் டெம்பர்.

ஆரூர் மூனா

2 comments:

  1. எஸ்ஐ ஆவது எவ்வளவு எளிது...!

    ReplyDelete
    Replies
    1. அது தான் ஆந்திர ஆவக்கா ஸ்டைல் டிடி

      Delete