Saturday 7 February 2015

என்னை அறிந்தால்

சிறுகோவத்தை கைவிட்டு ஒரு வழியா படத்தை பார்த்தாச்சி. பின்னே என்னங்க ரஜினி படத்துக்கே டிக்கெட்டுக்கு 200 ஓவா கொடுத்துட்டு ஜீரணிக்காம புலம்பிக்கிட்டு திரிஞ்சேன். அஜித் படத்துக்கு 300 ஓவாங்கிறது அதிகம் தானே. தியேட்டர்ல முதல் காட்சிநேரம் வரை டிக்கெட் வித்துக்கிட்டு இருந்தாய்ங்களாம். அதெல்லாம் நமக்கெதுக்கு.


இன்னிக்கி வேலை முடிஞ்சி வரும் போது சகநண்பர் ஒருவர் படம் பார்க்கலாமா என்று கேட்டார். ஏஜிஎஸ்க்கு போனோம். டிக்கெட் கிடைத்தது. சரியான விலைக்கு டிக்கெட் எடுத்து படம் பார்த்தோம். வேலை சற்று கடுமையாக இருந்ததால் டயர்டில் கால் மணிநேரம் தூங்கிட்டேன். த்ரிஷா செத்த காட்சிக்கு பிறகு தான் எழுந்தேன். 

படத்தின் கதையெல்லாம் இதுவரை வந்து நூறு விமர்சனங்களிலும் உள்ளது. அதனால் அதெதுக்கு நமக்கு. நான் ரசிச்ச விஷயங்களையும் தோன்றிய சந்தேங்களையும் மட்டும் பார்ப்போம்.


இந்த கட்டுரைக்கும் வழக்கமாக நான் எழுதும் விமர்சனத்திற்கும் நிறையவே வித்தியாசம் இருக்கு. படம் பார்த்து விட்டு வந்ததும் பரபரவென்று கதையையும், நாயகன் நாயகியை பற்றி இரண்டு பாராவும், இசை, ஒளிப்பதிவு பற்றி சம்பிரதாயத்திற்கு இரண்டு பாராவும் போட்டு கடைசியில் ஒரு பஞ்ச் லைனையும் போட்டால் விமர்சனம் முடிந்து விட்டது.

எல்லா தரப்பு ரசிகர்களையும் தன்வசம் வைத்திருக்கும் அஜித்தின் அறிமுகம் மிகச்சாதாரணமாய் இருப்பதே பெரும் ஆச்சரியம். அதிலேயே தெரிந்து விடுகிறது இது இயக்குனரின் படம் என.

கௌதமின் காதல் எபிசோடுகள் எனக்கு மிகவும் பிடிக்கும். மின்னலே எனக்குள் ஏற்படுத்திய தாக்கத்தைப் பற்றி ஏழு எபிசோடுகள் எழுதலாம். எனது 20 வயதில் வந்த படம் அது. கம்ப்யுட்டர் எனக்கு அறிமுகமான காலம், படத்தின் புகைப்படங்களை கம்ப்யுட்டரில் பார்க்கலாம் என்று தெரிந்ததும் அப்போது தான், அப்படி பார்த்து ரசித்தது மின்னலே தான். பிறந்தநாள் என்று ரீமாசென்னை அழைத்துச் செல்வதும், கரண்ட் போன பின் வரும் இவன்யாரோ பாடலும் ஆயிரம் தபுசங்கரின் காதல் கவிதைகளுக்கு சமம். படத்தை விட்டு தள்ளி வந்து விட்டோம். இதைப் பற்றி பின்னொரு பதிவில் விளக்கமாக பார்ப்போம்.


காதல் காட்சிகளை எதிர்பார்த்து உட்கார்ந்தால் அனுஷ்காவுடனான காட்சிகள் சவசவவென்று இருந்தது. த்ரிஷா பிரசவ வலியில் ஆட்டோவில் அமரும் காட்சியில் கொட்டாவி வந்து அலுப்பிலேயே தூங்கிட்டேன்.

திடீரென்று மிரண்டு விழித்துப் பார்த்தால் த்ரிஷா மர்கயா. அப்புறமா உக்கார்ந்து பார்த்தா படம் புலிப்பாய்ச்சல் தான். 

அஜித்துக்கு இந்த மாதிரி படங்கள் தான் அமைய வேண்டும். இயல்புக்கு மாறாக வெரைப்பா கோட்டு மாட்ன அஜித் நமக்கு அலர்ஜி தான். எனக்கு ரெட்டைஜடை வயசு படத்துல வந்த அஜித் தான் பிடிக்கும்.அதை தாண்டி வித்தியாசம் வித்தியாசம் என்று வெகுஜன ரசிகனை விட்டு விலகியே போயிட்டார் அஜித். 


இந்த படத்தில் எல்லா வித கெட்டப்புகளும் அவருக்கு அம்சமாக பொருந்துகிறது. முறுகலான பாத்திரங்களை எல்லாம் கைவிட்டு நீங்கள் இயல்பாக நடித்தால் எல்லாத் தரப்பு ரசிகர்களையும் கைக்குள்ளேயே வைத்திருக்கலாம்.

அனுஷ்கா, த்ரிஷாவைப் பற்றியெல்லாம் ஒன்னும் சொல்வதற்கில்லை.

முக்கியமாக குறிப்பிட்டாக வேண்டிய ஒருவர் அருண்விஜய். எனக்கு அவரைத் தெரியும். நில்லுங்க, நில்லுங்க, இது வேற.

எல்லாருக்கும் அவரைத் தெரியும். ஆனால் என்னை அவருக்கு தெரியும். நான் 2001 முதல் 2007 வரை சென்னையில் ஈக்காட்டுத்தாங்கலில் கலைமகள் நகர் 3வது சாலையில் இருந்தேன். இதே தெருவில் தான் அவரும் இருந்தார். என் ரூமில் தங்கியிருந்த நண்பர்களுடன் தெருவில் கிரிக்கெட் விளையாடும் போது அவர் வெளியில் இருந்தால் எங்களுடன் விளையாடுவார். நன்றாக பேசுவார்.

அப்போதெல்லாம் இவருக்கு சினிமாவில் நல்ல எதிர்காலம் அமையவில்லையே என்ற வருத்தம் இருக்கும். எல்லாத்துக்கும் சேர்த்து இப்போ அறுவடை பண்ணிக் கொண்டு இருக்கார். நாயகனாக அவருக்கு தடையற தாக்க, வில்லனாக என்னை அறிந்தால், இந்த படங்கள் போதும் இவரின் எதிர்கால வளர்ச்சிக்கு.

அஜித்துக்கும் அருணுக்குமான ஆடுபுலி ஆட்டம் தான் படத்தின் முதுகெலும்பு, ஒருவர் சொதப்பியிருந்தாலும் காமெடியாகியிருக்கும். இருவருக்குமான தொலைபேசி உரையாடலில் அசந்து போய் கைதட்டினேன்.

நிறைய காட்சிகள் கௌதமின் பழைய படங்களை நினைவுப் படுத்துகிறது. 

இடைவேளை முடிந்து படம் தொடங்கியதில் இருந்து படம் முடியும் காட்சி வரை திரையில் இருந்து ஒரு வினாடி கூட கண்ணை எடுக்கவேயில்லை. பத்து நிமிடங்களில் இரண்டாம் பாதி முடிந்தது போல் இருந்தது. இது தான் இந்த படத்தின் வெற்றி.

வாய்ப்பு கிடைத்தால் இன்னொரு முறை படத்தை தியேட்டரில் பார்ப்பேன்.

ஆரூர் மூனா

3 comments:

  1. செம விமர்சனம் அண்ணே ! முதல்பாதியில எவ்வளவுதான் இழுத்திருந்தாலும் இரண்டாம்பாதி அத சமாளிச்சு காப்பாத்திடுது .

    ReplyDelete
  2. இயல்புக்கு மாறாக தானே எல்லோரும் 'லைக்'குகிறார்கள்...

    அருண்விஜய்க்கு வெற்றிகள் தொடரட்டும்...

    ReplyDelete