Friday 20 March 2015

1911 - ஜாக்கிசான் 100வது படம் - விமர்சனம் - 2011 பழசு

வர வர நான் எந்தப் படத்தையும் விமர்சனம் எழுதணும் என்பதற்காக போய் பார்த்தால் அந்தப்படம் மொக்கையாக போய் விடுகிறது. இதற்கு முதல் உதாரணம் வெடி இன்று ஜாக்கிசானின் 1911 திரைப்படம்.

படத்தைப் பற்றி சொல்வதானால் சீனர்களுக்காக, சீனாவைப் பற்றி, சீனர்களால், சீன மொழியில் எடுக்கப்பட்ட சீனத் திரைப்படம் இது. அவ்வளவே. முக்கியமான விஷயம் என்னவென்றால் இது ஜாக்கிசான் படமல்ல, இந்தப்படத்தில் ஜாக்கிசான் இருக்கிறார். மற்றப்படி இந்த திரைப்படத்தை புறக்கணிப்பது தான் இந்தியர்களான நமக்கு நல்லது.

கதை என்னவென்றால் வெளிநாட்டில் சுன்யாட்சன் என்பவர் சீனப்புரட்சிக்காக பணம் திரட்டுகிறார். அங்கிருந்து சீனாவி்ல் நடக்கும் புரட்சிக்கு ஜாக்கிசான் தலைமையேற்க வருகிறார். போர் நடக்கிறது. சீனாவின் ராணி சீனப்புரட்சியை ஒடுக்க இங்கிலாந்திடம் பணம் கடனாக கேட்கிறார். சுன்யாட்சன் இங்கிலாந்து சென்று சீனராணிக்கு பணம் தரக்கூடாது என்று வாதிடுகிறார். இங்கிலாந்து பணம் தர மறுத்து விடுகிறது.

சீனபுரட்சி சிப்பாய் கலகமாக வெடிக்கிறது. அவர்கள் அந்த நாட்டின் பாதிப்பகுதியை கைப்பற்றி விடுகிறார்கள். இதனால் வெளிநாட்டிலிருந்து சுன்யாட்சன் சீனாவுக்கு வருகிறார். பிறமாநிலங்களின் பிரதிநிதியுடன் கூடிப்பேசி தற்காலிக குடியரசுத் தலைவராக சுன்யாட்சன் பதவியேற்கிறார். மேலும் போர் வலுவடைந்து மொத்த சீனாவையும் கைப்பற்றுகிறார்கள். சுன்யாட்சன் சுதந்திரமாக தேர்தல் மூலம் குடியரசுத்தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமென்று பதவி விலகுகிறார். அவரின் பெருந்தன்மையை மக்கள் வரவேற்கிறார்கள். படம் முடிகிறது.

இதில் ஜாக்கிசான் நடித்திருக்கவே வேண்டாம். சுத்த வேஸ்ட். அவருக்கென்று நறுக்கான காட்சிகளே படத்தில் இல்லை. ஏதோ பத்தோடு பதினொன்றாகத்தான் படத்தில் அவர் உள்ளார். படத்தின் உண்மையான நாயகன் சுன்யாட்சனாக நடித்திருப்பவர்தான்.

இதை விடக் கொடுமை என்னவென்றால் படம் ஒரு கோர்வையாவே இல்லை. கடைசியில் ஜாக்கிசான் இருக்கிறாரா, செத்தாரா என்றே தெரியவில்லை. போரில் காயமடைகிறார். யாரோ ஒருவருடைய மனைவி அழுகிறார். சரி ஜாக்கிசான் செத்துவிட்டார் என்று நினைத்தால் கடைசியில் வருகிறார். அது படத்தின் எடிட்டிங் ஸடைலோ என்னவோ தெரியவில்லை ஆனால் எனக்கு புரியவில்லை.

அவர்கள் சீனாவைப் பற்றி புகழும் போதெல்லாம் நமக்கு கடுப்பாகத்தான் வருகிறது. போரில் கன்னாபின்னாவென்று செத்து விழுகிறார்கள். மீண்டும் வருகிறார்கள். ஒன்றும் புரியவில்லை. படமும் மிகவும் மெதுவாக செல்கிறது.

இதை விட கொடுமை என்னவென்றால் படம் துவங்கி சில நிமிடங்களிலேயே ஒருவர் தூங்கி குறட்டை விடுகிறார். தியேட்டரே சிரிக்கிறது. பிறகு அவரை எழுப்பி விட்டு படம் பார்த்தவர்கள் கமெண்ட் அடித்துக் கொண்டே படம் சென்றது, திடீரென்று இடைவேளை ஸ்லைடு போடுகிறார்கள். பிறகு படம் துவங்கியதும் மற்றொருவர் தூங்கி குறட்டை விட்டதும் தியேட்டரில் அவனவன் தலையில் அடித்துக் கொண்டு அவரையும் எழுப்பி விட்டனர்.

படம் மொத்தம் ஒன்றரை மணிநேரம் தான் ஒடுகிறது. கொடுத்த பணம் வேஸ்ட். இதற்கு பதில் வித்தகன் படமாவது போயிருக்கலாம். ஜாக்கிசானின் 100வது படம் என்று போஸ்டரில் போட்டே படத்தை ஒட்டப்போகிறார்கள். ஆனால் ஒன்று மட்டும் சொல்கிறேன், இது சத்தியமாக ஜாக்கிசான் படமல்ல. பொதுவாக சென்றால் சீன வரலாற்றை தெரிந்து வரலாம் அவ்வளவே.

நன்றி

ஆரூர் முனா

No comments:

Post a Comment