Friday, 20 March 2015

அறிஞர் அண்ணாவின் கடைசி நாள் - பழசு 2011

1969 ஜனவரி 31 அன்று அண்ணாவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. சற்று நேரத்தில், மூச்சு விட இயலாத நிலை ஏற்பட்டது. அதனால் இதயத்துடிப்பு நின்று விட்டது. உடனே, அவருக்கு செயற்கை முறையில் மூச்சு வரும்படி செய்தார்கள். அதைத் தொடர்ந்து, அவருக்கு மீண்டும் இதயத் துடிப்பு ஏற்பட்டது. நாடித்துடிப்பும், ரத்த அழுத்தமும் மீண்டும் பழைய நிலையை அடைந்தன. எனினும் "உணர்வு" முழு அளவில் திரும்பவில்லை. கவர்னர் உஜ்ஜல்சிங், திராவிடர் கழகத்தலைவர் ஈ.வெ.ரா.பெரியார், காமராஜர், சி.சுப்பிரமணியம், முஸ்லிம் லீக் தலைவர் காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப் மற்றும் அமைச்சர்கள் ஆஸ்பத்திரிக்குச் சென்று அண்ணாவைப் பார்த்தனர்.

பிப்ரவரி 1 அன்று "அண்ணாவின் கழுத்துக்கு அருகே மூச்சுக்குழாயில் டாக்டர்கள் ஒரு துளை போட்டு, அதில் குழாய் ஒன்றை அமைத்தனர். அந்தக் குழாய் மூலம் அண்ணா சுவாசிக்கத் தொடங்கவே, ஒரு நிமிடம் நின்று போயிருந்த இதயம் மீண்டும் இயங்கத் தொடங்கியது" என்று டாக்டர்கள் தெரிவித்தனர். "அண்ணாவுக்கு வயிற்றில் ஆபரேஷன் நடந்தபோது, இரைப்பை அருகில் வளர்ந்திருந்த கட்டியில் ரேடியம் ஊசிகள் வைக்கப்பட்டன. அந்த ஊசிகள் அதிகம் சக்தி வாய்ந்தவை. நோயை குணப்படுத்துவதற்காக, அந்த ஊசிகள் ரேடிய கதிர்களைப் பாய்ச்சிக்கொண்டு இருக்கின்றன. இதன் விளைவாகவே அவருடைய உடல் நிலை அவ்வப்போது பாதிக்கப்படுகிறது. ரேடியம் ஊசிகளின் வேலை முடிந்ததும், அவை சக்தியற்றவை ஆகிவிடும். அதன்பின், அண்ணா நன்கு தேறிவிடுவார்" என்று ஒரு டாக்டர் கூறினார். கவர்னர் உஜ்ஜல்சிங், காலையிலும், மாலையிலும் வந்து அண்ணாவைப் பார்த்தார்.

மாலை 6 மணிக்கு சுதந்திராக் கட்சித்தலைவர் ராஜாஜி வந்தார். ஐந்து நிமிடம் அண்ணா அருகில் இருந்தார். ஐ.நா.சபையின் பழைய இந்திய தூதர் ஜி.பார்த்தசாரதி, குன்றக்குடி அடிகளார் ஆகியோரும் அண்ணாவைப் பார்த்தார்கள். மத்திய அரசு உணவு மந்திரி ஜெகஜீவன்ராம், டெலிபோன் மூலம் அண்ணாவின் உடல் நிலை பற்றி விசாரித்தார். அமைச்சர்கள் இரவு பகலாக ஆஸ்பத்திரியில் இருந்து வந்தார்கள். அண்ணா குணம் அடைய தமிழ்நாடு முழுவதும் கோவில்களில் விசேஷ பிரார்த்தனைகள் நடந்தன. பிப்ரவரி 2_ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலையில், அண்ணாவின் உடல் நிலையில் சற்று முன்னேற்றம் காணப்பட்டது. அதனால் டாக்டர்களும், அமைச்சர்களும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர். ஆனால் இரவு 11_30க்கு பிறகு அவர் உடல் நிலை மிகவும் மோசம் அடைந்தது. டாக்டர் தீவிர சிகிச்சை அளித்தும் பயன் இல்லை. நாடித்துடிப்பு திடீர் என்று அதிகரித்தது. நள்ளிரவு 12_20 மணிக்கு (அதாவது 3_ந்தேதி அதிகாலை) உயிர் பிரிந்தது. அப்போது, அண்ணாவின் மனைவி ராணி அம்மாள் மற்றும் குடும்பத்தினர், அமைச்சர்கள் மற்றும் எம்.ஜி.ஆர். அங்கு இருந்தனர்.

"அண்ணா நம்மைப் பிரிந்து விட்டார்" என்று டாக்டர்கள் அறிவித்த போது, அவர்கள் கதறி அழுதனர். அண்ணா இறந்த ஐந்து நிமிடத்திற்கெல்லாம், ஆஸ்பத்திரிக்கு ஈ.வெ.ரா.பெரியார் வந்தார். அவருடன் மணியம்மையும் வந்தார். அண்ணா உடலைப்பார்த்து, பெரியார் கண்ணீர் விட்டார். அண்ணாவின் மரணச் செய்தியை, வெளியே கூடியிருந்த நிருபர்களிடம் அமைச்சர் நெடுஞ்செழியன் வந்து அறிவித்தார். அப்போது அவர் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது. அண்ணாவின் உடல் ஆஸ்பத்திரியில் இருந்து, அவர் வீட்டுக்கு எடுத்துச் செல்லப்படுவதற்காக, வெளியே எடுத்து வரப்பட்டது. அமைச்சர்கள் அழுதுகொண்டே உடன் வந்தனர். அண்ணாவின் உடல் `ஆம்புலன்ஸ்' காரில் ஏற்றப்பட்டு, நுங்கம்பாக்கத்தில் உள்ள அவர் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அண்ணாவின் உடல் ஒரு கட்டிலில் வைக்கப்பட்டது. நெடுஞ்செழியன், கருணாநிதி மற்ற அமைச்சர்கள், எம்.ஜி.ஆர். ஆகியோர் கண்ணீர் வடித்தபடி அருகில் அமர்ந்து இருந்தனர். சிவாஜிகணேசன், மனைவி கமலாவுடன் வந்தார். அண்ணா உடலைப் பார்த்து கதறி அழுதார்.

காமராஜர், சி.சுப்பிரமணியம், பக்தவச்சலம், சி.பா.ஆதித்தனார், ம.பொ.சிவ ஞானம் மற்றும் பல தலைவர்களும், பிரமுகர்களும் வந்து இறுதி மரியாதை செலுத்தினர். கவர்னர் உஜ்ஜல்சிங், மனைவியுடன் வந்தார். அண்ணா உடலைப் பார்த்ததும், கவர்னர் கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் வடிந்தது. கவர்னரின் மனைவி கதறி அழுதார். அண்ணாவின் உடல், அவர் வீட்டில் அரை மணி நேரம் வைக்கப்பட்டு இருந்தது. பிறகு, ராஜாஜி மண்டபத்துக்கு கொண்டு போகப்பட்டது. அங்கு, பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டது. அண்ணா மரணம் அடைந்ததால், அமைச்சரவையில் அவருக்கு அடுத்த இடத்தை வகித்த நெடுஞ்செழியனை தற்காலிக முதல்_அமைச்சராக கவர்னர் நியமித்தார். அண்ணா அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த எல்லா அமைச்சர்களும் அதே இலாகாக்களுடன் பதவியில் நீடித்தனர். அண்ணா இறுதி ஊர்வலத்தில் பங்கு கொள்ள தமிழ்நாடு முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான பேர், ரெயில்களிலும், பஸ்களிலும் சென்னைக்கு விரைந்தனர். மதுரையில் இருந்து சென்னைக்குப் புறப்பட்ட ஜனதா எக்ஸ்பிரசில், கூட்டம் அலைமோதியது.

ரெயில் பெட்டிகளில் இடம் இல்லாததால், பலர் ரெயில் பெட்டிகளின் கூரை மீது உட்கார்ந்து கொண்டனர். சிதம்பரத்துக்கு முன்னதாக உள்ள கொள்ளிடம் நிலையத்தை அதிகாலை நேரத்தில் அந்த ரெயில் அடைந்தபோது, கூட்டம் நிரம்பி வழிந்தது. "இந்தப் பகுதியில் உள்ள பாலங்கள் ஆபத்தானவை. கீழே இறங்கி விடுங்கள்" என்று சொல்லி ரெயில் பெட்டி உச்சி மீது இருந்தவர்களை இறக்கினார்கள். ஆனால், ரெயில் புறப்பட்டதும், எல்லோரும் மீண்டும் மேலே ஏறிக்கொண்டார்கள். கொஞ்ச நேரத்தில் கொள்ளிடம் ஆற்று இரும்புப் பாலம் வந்தது. அதன் மீது இரும்புச் சட்டங்கள் பொருத்தப்பட்டு உள்ளது. இதை, ரெயில் பெட்டி உச்சியில் இருந்தவர்கள் கவனித்தார்கள். பாலத்திற்குள் ரெயில் நுழைந்தபோது, தலையை குனிந்து கொண்டும், படுத்துக்கொண்டும் தப்பிவிட்டார்கள். ஆனால் சற்று தூரத்தில் வல்லம்படுகை என்ற இடத்தில், இதேபோன்ற இன்னொரு ஆற்றுப்பாலம் இருந்ததை அவர்கள் கவனிக்கவில்லை.

அந்த பாலத்துக்குள் ரெயில் நுழைந்தபோது உச்சி மீதும், படிக்கட்டுகளிலும், தொத்திக்கொண்டும் இருந்தவர்கள் இரும்புச் சட்டங்களில் பயங்கரமாக மோதி நசுங்கினார்கள். வேறு சிலர் பயந்து போய் ஆற்றில் குதித்தார்கள். இந்த விபத்தில் அந்த இடத்திலேயே 24 பேர் பலியானார்கள். 48 பேர் காயம் அடைந்தார்கள். காயம் அடைந்தவர்கள் சிதம்பரம் ஆஸ்பத்திரியிலும், கடலூர் ஆஸ்பத்திரியிலும் சேர்க்கப்பட்டார்கள். அவர்களில் 8 பேர் இறந்து போனார்கள். எனவே, சாவு எண்ணிக்கை 32 ஆக உயர்ந்தது. அண்ணா மறைந்தபோது, அவருடைய தாயார் பங்காரு அம்மாள் (வயது 80) காஞ்சீபுரத்தில் இருந்தார். கண் பார்வை மங்கிப்போயிருந்தது. காதும் சரியாகக் கேட்காது. அண்ணா மறைந்த சிறிது நேரத்தில், தமிழ்நாடு மேல்_சபை உறுப்பினர் அலமேலு அப்பாதுரை, காரில் காஞ்சீபுரத்துக்கு விரைந்தார். பங்காரு அம்மாளிடம் மகன் இறந்த செய்தியை தெரிவிக்காமல் "உங்கள் மகன் உங்களை பார்க்க விரும்புகிறார். வாருங்கள்" என்று கூறி சென்னைக்கு அழைத்து வந்தார்.

நுங்கம்பாக்கத்தில் உள்ள அண்ணாவின் இல்லத்தில், உடல் வைக்கப்பட்டு இருந்த அறைக்குள் பங்காரு அம்மாளை அழைத்து வந்து அருகில் உட்கார வைத்தனர். மகன் ஏன் பேசவில்லை என்று நினைத்த பங்காரு அம்மாள், இரு கைகளையும் நீட்டி "எங்கேயடா இருக்கிறாய் என் ராஜா" என்று கேட்டார். அங்கு அழுது கொண்டு இருந்த அண்ணாவின் மனைவி ராணி அம்மாள், மாமியாரின் கையைப் பிடித்து அண்ணாவின் உடல் மீது வைத்தார். பங்காரு அம்மாள் கைகளால் தடவிப்பார்த்துவிட்டு, "ஏன் ஜில் என்று இருக்கிறது" என்று பலமுறை கேட்டார். ஆனால் யாரும் பதில் சொல்லவில்லை. பிறகு ராஜாஜி மண்டபத்துக்கு உடலை எடுத்துச் செல்லும்போது, பங்காரு அம்மாளை மாடிக்கு அழைத்துச் சென்றுவிட்டனர். அண்ணா இறந்து போன செய்தி அப்போதும் அவரிடம் தெரிவிக்கப்படவில்லை

ஆரூர் முனா

No comments:

Post a Comment