Thursday, 12 March 2015

ஆப்பாயில் சாப்பிடுவது எப்படி

ஏழைகளின் அசைவம், பேச்சிலர்களின் பெருவிருந்து என்றழைக்கப்படும் முட்டை எத்தனை ரகங்களில் சாப்பிடப் பட்டாலும் ஆப்பாயிலுக்கு இருக்கும் மவுசே தனி.


எனக்கும் ஆப்பாயிலுக்குமான பந்தத்தை கொஞ்சம் விளக்கி விட்டு பிறகு சாப்பிடும் விதத்திற்கு போவோம்.

1997லேயே விட்டை விட்டு வெளியில் படிக்க வந்து விட்டாலும் படிப்பு முடியும் வரை சொந்த சமையல் தான், அதனால் வெளி உணவுகள் வழக்கமான ஒன்றாக இருந்ததில்லை. 2001ல் வேலைக்கு சேர்ந்த பிறகு மூன்று வேலையும் ஒட்டல் சாப்பாடு தான்.

ஈக்காட்டுதாங்கலில் பேச்சிலர் ரூமில் தங்கியிருந்தேன். காசி தியேட்டர் அருகில் இருந்த காசிபவனில் காலை டிபன், சென்னையில் சுற்றிக் கொண்டிருப்பதே வேலையாக இருந்ததால் மதியம் கிடைத்த இடத்தில் ஏதோ ஒரு சாப்பாடு என இருக்கும்.


இரவு உணவுக்கு முன்பு வழக்கம் போல மகாதியானத்தை முடித்து விட்டு ரோட்டோர இட்லி கடையில் இட்லியும் சுடச்சுட நாலு ஆப்பாயிலும் சாப்பிட்டால் தான் அன்றைய தினம் சுபமாக முடியும்.

கணக்கே இல்லாமல் எப்போதும் இரவு உணவுக்கு ஆப்பாயிலை வைத்து தான் மங்களம் பாடுவது அந்த காலக்கட்ட சுகம்.

2004 வீராணம் கூட்டுக்குடிநீர் திட்டத்திற்காக பம்மலில் தங்க நேர்ந்த போது நண்பர்கள் பட்டாளம் சற்று பெரியதாக விரிவடைந்தது. இரவானால் மகாதியானம், கூடவே கணக்கே இல்லாமல் ஆப்பாயில் என்றானது நிலைமை.

நாங்கள் சென்று பாரில் அமர்ந்ததுமே பத்து ஆப்பாயிலை வைத்து விட்டு தான் சப்ளையர் என்ன சார் வேணும்னு கேப்பான். ஒரு கட்டத்தில் ஆப்பாயில் வாங்கி கட்டுப்படியாகவில்லை என்பதால் ரெண்டு ட்ரே முட்டை வாங்கி நடுவில் கேஸ் அடுப்பை வைத்து ஆப்பாயில் போட்டுக் கொண்டே மகாதியானத்தை நடத்துவோம்.


அந்தளவுக்கு இருந்த ஆப்பாயில் மோகம், இப்போ நீர்த்துப் போனது தான் காலத்தின் கோலம். கட்டுரை இதைப் பற்றியதல்ல.

நான் சந்தித்தவர்களில் சிலர் விதவிதமாக ஆப்பாயிலை சாப்பிட்டு என்னை மெர்சலாக்கியதை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

நான் சுடச்சுட தட்டில் ஆப்பாயிலை வைத்ததும் அப்படியே லாவகமாக மடித்து ஒரு சொட்டு கூட கீழே சிந்தாமல் லபக்கென்று முழுங்குபவன். சூடு உள் நாக்கில் பட்டு, மூளையில் சுர்ரென்று ஏறி, கண்ணில் நீர் வந்தால் தான் ஆப்பாயிலுக்கு கொடுத்த காசு செல்லுபடியாகும் என்று நினைப்பேன்.

என் நண்பன் புல்லட் மணி என்றொருவன் இருக்கான். அவன் சாப்பிடும் விதம் வேற மாதிரி இருக்கும். சின்ன தட்டில் ஆப்பாயிலை வைத்ததும் ப்ளேட்டை அப்படியே கையில் எடுத்து சர்ரென்று வாயாலேயே மஞ்சள் கருவை மட்டும் உறிஞ்சி எடுத்து வாய் கொப்பளித்து முழுங்குவான், அதன் பிறகே மிச்சமிருக்கும் வெள்ளை ஆம்லெட்டை எடுத்து சாப்பிடுவான்.


கேசவன்னு ஒருத்தர் ராஜபாளையத்துக்காரர். சிவில் இஞ்சினியரா என்னுடன் வேலை பார்த்தார். மனுசன் பரோட்டாவும் ஆப்பாயிலும் சாப்பிடும் விதமே அலாதியாக இருக்கும்.

தட்ல ரெண்டு பரோட்டாவை பிச்சிப் போட்டு சால்னாவை சளும்ப ஊத்தி ஊற வைப்பார். ரெண்டு ஆப்பாயில் வந்ததும் சால்னாவை மட்டும் உறிஞ்சிக் குடிச்சிட்டு ரெண்டு ஆப்பாயிலையும் பரோட்டா மேல வச்சி மஞ்சள் கருவை லைட்டா கொத்தி விடுவார். 

அது வழியும் போது அப்படியே பரோட்டாவில் தொட்டு சாப்பிடுவார். பார்க்கும் போதே நாக்கில் எச்சில் ஊறும். நானும் ஒரு முறை முயற்சிக்கிறேன்னு சொல்லி சால்னாவை அளவுக்கு அதிகமா ஊத்தி குடிச்சி மறுநாள் பேதி புடுங்கிடுச்சி. அதோட அந்த பார்முலாவுக்கு குட்பை விட்டாச்சி.

குழைய வடிச்ச சோத்தை சட்டியில் போட்டு நிரம்ப ரசம் ஊத்தி அடுப்பாங்கறையிலேயே அமர்ந்து விடுவார் என் நீலா சித்தப்பா, சித்தப்பா பேரு நீலாவான்னு திகைக்க வேண்டாம். நீலகண்டனின் சுருங்கிய வடிவம் அது. நாலு முட்டையை எடுத்து சித்தி வரிசையாக ஆப்பாயிலை போடுவார்.

ஆப்பாயிலை ரசத்தின் மேல் போட்டதும் பொத்துவிட்டு ரசத்தில் மஞ்சக்கரு இறங்கும். அது சோத்தை தொடும் முன்பே கையில் வழித்து உள்ளே தள்ளுவார். அடஅடஅடா, அமிர்தமே வந்தாலும் இதன் சுவைக்கு பக்கத்தில் நிற்க முடியாது.

பார்த்தாலே நமக்கு வயிறு நிரம்பி விடும்.

பம்மலில் வீராணம் திட்டத்திற்காக இருந்தபோது என்னுடன் மராத்தியர்களும், தெலுகர்களும் தங்கியிருந்தனர்.அவரவர்கள் அவர்கள் மாநில சுவையை சாப்பாட்டில் சேர்த்துக் கொள்வார்கள். புரியவில்லையா, எல்லோருக்கும் பொதுவாக சோறு, சாம்பார், ரசம், காரக்குழம்பு தான். 

ஆந்திராக்காரன் அவனுக்கென்று தனியாக பருப்புப் பொடியும் கோங்குரா சட்னியும் வைத்து ஆந்திரா மீல்ஸ் ஆக்கிவிடுவான். மராத்தியன் பச்சை மிளகாயில் ஒரு தொட்டுக்க செய்வான். பச்சை மிளகாயை கீறி அதன் நடுவே உப்பு தடவி, கெட்டி புளித்தண்ணி தடவி எண்ணெய்யில் பொரித்து சைட்டிஷ் ஆக்கி சாப்பிடுவான்.

நான் ரெண்டு முட்டையுடன் கிச்சன் செல்வேன். அப்படியே ஆப்பாயில் போட்டு கொண்டு வந்து டேபிளில் அமர்ந்து சொள்ட்டி அடிப்பேன். அவனுங்க ஏக்கமா பாப்பானுங்க.

அவங்க ஊர்ல ஆப்பாயில்ங்கிற அயிட்டமே கிடையாது. ஊரெங்கும் பிரியாணி கடை உள்ள ஐதராபாத்தில் கூட ஆப்பாயில் கிடைக்காது. மகாராஷ்ட்ராவிலும் அப்படி தான். 

ப்ராஜக்ட் முடியும் தறுவாயில் லஞ்ச் நேரம். மராத்தியனும் ஆந்திராக்காரனும் ஆப்பாயில் வைத்து சாம்பார் சாதம் சாப்பிட, நான் கோங்குரா சட்னி, பொறிச்ச பச்சை மிளகாயுடன் லஞ்ச் சாப்பிட பழகியிருந்தேன். இந்தியண்டா.

ஆரூர் மூனா

8 comments:

  1. இப்படி பசியை கிளப்பி விட்டுட்டிங்களே
    நியாயன்மாரே

    ReplyDelete
    Replies
    1. ஆப்பாயில் சாப்பிட்டு பட்டைய கிளப்புங்க

      Delete
  2. அருமை சூப்பர் சார் இப்ப ஆப்பாயில் தமிழ்ல என்னான்னு சொல்வாங்க பார்ப்போம் :-)

    ReplyDelete
    Replies
    1. ஆம்லேட்டுக்கே இன்னும் பதில் தெரியாம முழிச்சிக்கிட்டு இருக்கேன்.

      Delete
  3. ரச மேட்டர் நவரசம் ராசா...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி, தன்யனானேன் அய்யா.

      Delete
  4. நானும் K7 மாதிரிதான்..... புரோட்டோவை மஞ்சள் கரு வழிந்தோட தொட்டு சாப்பிடுவேன்.....மிளகுத்தூள் தூக்கலாக சேர்த்து.........

    ReplyDelete