தீபாவளியாச்சே புதுப்படம் போகலாம் என்று முடிவு செய்து மிகவும்
எதிர்பார்ப்பை கிளப்பியதால் 7ம் அறிவு படத்துக்கு சென்றோம். திருவாரூரில்
டிக்கெட் விலை 200 ரூபாய். இதுக்கு சென்னையிலேயே படம் பார்த்திருக்கலாம்.
படத்துக்கு வருவோம்.
5ம்
நூற்றாண்டில் வாழ்ந்த போதிதர்மர் காஞ்சிபுரத்திலிருந்து சீனாவுக்கு
செல்கிறார். அங்கு சென்று சீன மக்களை மிகப்பெரும் நோயிலிருந்து
காப்பாற்றுகிறார். பிறகு அந்த மக்களுக்கு தற்காப்பு கலையை கற்றுக்
கொடுக்கிறார். அவர்களின் வேண்டுகோளிற்கிணங்க அங்கேயே சமாதியாகிறார்.
தற்காலத்திற்கு
கதை வருகிறது, சீனாவிலிருந்து ஒருவர் ஸ்ருதியை கொல்வதற்கு அந்த நாட்டு
அரசாங்கத்தால் அனுப்பப்படுகிறார். இங்கு, சென்னையில் சர்க்கஸ் கலைஞரான
சூர்யா ஸ்ருதியை காதலிக்கிறார். ஸ்ருதியோ சூர்யாவின் டி.என்.ஏ போதி
தர்மருடையது என்பதால் ஆராய்ச்சிக்காக அவரை சுற்றி வருகிறார். சீனாவின்
ஆபரேசன் ரெட் என்ற திட்டம் இந்தியாவில் துவங்கப்படுகிறது. அந்த திட்டம்
முறியடிக்கப்பட்டதா? வில்லனிடம் இருந்து ஸ்ருதியை சூர்யா காப்பாற்றினாரா?
போதிதர்மர் சூர்யாவுக்குள் வந்தாரா என்பதை திரையில் காண்க.
உண்மையில்
தமிழர்கள் பார்க்க வேண்டிய படம். எங்களூர் பாஷையில் சொல்வதானால் முதல்
பத்து நிமிஷத்துக்கே கொடுத்த காசு போய் விட்டது. சூர்யாவின் நடிப்பு
பிரமாதம். ஸ்ருதிக்கும் கொஞ்சம் வெயிட்டான கேரக்டர். அந்த நோக்கு
வர்மத்தின் மூலம் இந்தியர்களை சரமாரியாக சூர்யாவின் மீது ஏவும் காட்சியும்
அதற்கான பின்னணி இசையும் பிரமாதம். ஈழப்போரினைப் பற்றிய விளக்கம் எனக்கு
கண்ணில் நீரை வரவழைத்து விட்டது. ஆமாம் உண்மையில் வீரத்திற்கும்
துரோகத்திற்கும் வித்தியாசம் இருக்கிறது. ஈழத்தில் நடந்தது துரோகம்
என்பதற்கான விளக்கமும் சூப்பர்.
ஆனாலும் சில குறைகள்
இருக்கத்தான் செய்கின்றன. சராமரியாக வில்லன் போலீசாரை கொல்வதும் அதனை பல
நாட்களுக்கு அரசாங்கம் கண்டுகொள்ளாமல் இருப்பதும் இடிக்கிறது.
இருந்தாலும் பிளாஷ்பேக் காட்சிக்காகவும் உழைப்புக்காகவும் படத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்.
ஆரூர் முனா
--------------------------------
சமீப காலமாக தமிழகத்தில் ஒரு டிரெண்ட் நடந்து வந்தது.
அதாவது ஒரு படம் வெளியானால் அந்தப் படத்தில் நடித்த நடிகருக்கு வேண்டாத
ஆட்கள் மூலம் தியேட்டரில் வாய்மொழிப் பிரச்சாரம் மூலம் படம் படுதோல்வி
எனவும், பார்க்கவே முடியவில்லை என்றும் திரையரங்குகளில் பரப்புவது. இது
மட்டுமில்லாமல் எஸ்.எம்.எஸ் மூலம் தமிழகத்தின் அனைத்து பகுதி மக்களுக்கும்
படத்தை பற்றியும், அதில் நடித்த நடிகரைப் பற்றியும் கிண்டலாக செய்திகள்
அனுப்புவது. இதன் மூலம் சுமாரான படங்கள் கூட மக்கள் மத்தியில் படம் போர்
என பேச்சு அடிபடுவதால் பிளாப் ஆகின்றன.
இத்தனை நாட்களாக நடிகர் விஜய்யின் திரைப்படங்களுக்கு நடந்து
கொண்டிருந்தது, எனக்கு தெரிந்து இந்த டிரெண்ட் விஜய் நடித்த ஆதி படம்
மூலம் துவங்கியது என நினைக்கிறேன். அந்தப் படம் வெளியான சமயம் ஆதி படம்
காலி, தியேட்டரில் இலவசமாக டிக்கெட் கொடுத்து உள்ளே அனுப்புகின்றனர்
எனவும் பல தரப்பட்ட எஸ்.எம்.எஸ் கள் மற்றும் பார்வேர்ட் ஈமெயில்கள் மூலமும்
அனுப்பப்பட்டது.எப்பொழுதும் ஒரு படம் வெளியாகும் அன்றே பார்க்கும் நான்,
ஆதி படம் வெளியாகும் நாளுக்கு முதல் நாள் இது போன்ற ஒரு ஈ மெயில்
பார்த்ததனால் அந்தப் படத்தை தியேட்டரில் நான் பார்க்கவில்லை. பிறகு ஏதோ
ஒரு சானலில் தான் பார்த்தேன்.
பிறகு பல
படங்களுக்கு இது போல் நடந்தது. உதாரணத்திற்கு விஷாலின் சத்யம், விஜயின் பல
படங்கள், அஜித்தின் அசல் மற்றும் பல படங்கள். படம் நன்றாக இருக்கிறதோ
இல்லையோ இது போன்ற கீழ்த்தரமான மார்க்கெட்டிங்கினால் மொக்கைப் படங்களை
விடுங்கள், சுமாரான படங்கள் கூட ஓடவில்லை. இது போன்ற விமர்சனங்களால் நாம்
படம் பார்க்கும் கூட்டத்தில் பாதிப் பேரை வெளியேற்றி விடுகிறோம்.
அப்பொழுது எல்லாம் இவ்வளவு தூரம் நான் பதிவுலகில் இருந்தது கிடையாது.
அதனால் அதன் விவரம் எனக்கு அப்போது தெரியவில்லை. ஆனால் இன்று கண்கூடாக ஒரு
படத்திற்கு இது போன்று நடப்பதை பார்க்கிறேன். இத்தனைக்கும் நானும்
மொக்கப்படம் என்றால் கமெண்ட் அடிப்பதும் உண்டு, ஆனால் படம் பார்த்து
விட்டே அந்த காரியத்தை நான் செய்வேன்.
எனக்கு
நன்றாக தெரிகிறது, பெயர் குறிப்பிட விரும்பவில்லை, சில பதிவர்கள் படம்
பார்க்கவேயில்லை. ஏற்கனவே படம் பார்த்து விட்டு விமர்சனம் வந்துள்ள சில
வலைப்பூக்களில் இருந்து விமர்சனங்களை படித்து விட்டு அப்படியே ஒரு
பார்வேர்ட் பதிவு இட்டிருக்கிறார்கள். ஏனென்றால் 7ம் அறிவைப் பற்றி
விமர்சனம் போட்டால் ஹிட் கிடைக்கும் என்பதற்காகவே. பல வலைப்பூக்களை
எடுத்துப் பாருங்கள் ஒருவர் சுமார் என்பார், அடுத்தவர் ரொம்ப சுமார்
என்பார். அதற்கடுத்தவர் போர் என்பார். அதற்கடுத்தவர் படு போர் என்பார்.
இது தான் 7ம் அறிவு படத்தின் விமர்சனத்தில் நடந்துள்ளது.
7ம்
அறிவு படத்தை எடுத்துக் கொள்ளுங்கள். படம் நாம் எல்லாம் எதிர்ப்பார்த்த
அளவு இல்லை. ஏ.ஆர்.முருகதாஸோ அல்லது சூர்யாவோ படம் வெளிவருவதற்கு முன்
கூறியபடி இது ஒன்றும் பார்த்தே தீர வேண்டிய படமெல்லாம் ஒன்றும் இல்லை.
ஆனால் அதே சமயம் பார்க்கக்கூடாத படமும் அல்ல. எதிர்ப்பார்ப்பின்றி போனால்
சுமாராக இருக்கு என்று சொல்லுமளவுக்கு பார்க்கக்கூடிய படம் அவ்வளவே.
ஆனால்
இந்தப்படத்திற்கும் உள்குத்து வேலைகள் படம் வெளியாவதற்கு முன்பே துவங்கி
விட்டன. போதி தர்மர் தமிழரே இல்லை எனவும், அவர் ஒரு மந்திரவாதி எனவும்.
படம் படு மொக்கை எனவும் ஏகப்பட்ட ஈமெயில்கள் எனக்கு தீபாவளிக்கு முதல்
நாளே வரத்துவங்கி விட்டது. இதை விட மோசம் படம் வெளியான அன்று 200
ரூபாய்க்கு விற்ற தியேட்டர்காரர்கள் மறுநாளே 50 ரூபாய்க்கு விற்றால் தான்
திரையரங்கம் நிறையும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டது தான். எங்கள் ஊரிலும் இது
நடந்தது, அதனால் எனக்கு தெரிய வந்தது.
நான் ஒன்றும் சூர்யா ரசிகர் மன்ற தலைவனோ அல்லது காசு வாங்கிக் கொண்டு இந்தப்படம் பற்றி பிரச்சாரம் செய்பவனோ அல்ல. இத்தனை நாள் எனக்கு தெரியாமல் இருந்தது. இந்தப் படத்திற்கு என் கண் முன் நடக்கிறது. அதை உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன் அவ்வளவே.
No comments:
Post a Comment