Friday 20 March 2015

வ.சோ.ஆண்கள்.மேல்நிலைப்பள்ளி, திருவாரூர் - பழசு 2011

நான் படித்த பள்ளி வடபாதிமங்கலம் சோமசுந்தரம் ஆண்கள்.மேல்நிலைப்பள்ளி, திருவாரூர்.எனது போதி மரம். ஆறாம் வகுப்பிலிருந்து 12ம் வகுப்பு வரை அங்கு தான் படித்தேன். கல்வியாண்டு 1990 - 1997 வரை. திருவாரூரில் கமலாலயம் தென்கரையில் இந்த பள்ளி அமைந்துள்ளது. பள்ளியின் ஆண்டுகாலம் நூறாண்டுக்கும் மேல். பள்ளி துவங்கிய போது பள்ளியின் பெயர் போர்டு ஹை ஸ்கூல். எனது பள்ளியின் முன்னாள் மாணவர்கள் கலைஞர் மு. கருணாநிதி, பேராசிரியர் க.அன்பழகன், முரசொலி மாறன் ஆகியோர். மற்றபடி சொல்லிக்கொள்வது போல் நான் தான் (போதும்டா உன் சுயபுராணம், ஸ்கூலைப் பத்தி மட்டும் சொல்லு).

எனக்கு வீடு வடக்கு வீதியில் இருந்தது. அங்கிருந்து வெட்டவாசப்படி வழியாக பெரிய கோயிலின் உள் நுழைந்து கமலாம்பாள் சன்னதி வழியாக மேலவீதி நுழைவாயிலின் வழியாக வெளி வந்து கமலாலய படிக்கட்டின் வழியாக நடந்து சென்று முராசன்ஸ் பிள்ளையார் சன்னதியில் மேல் ஏறி பள்ளிக்கு செல்வோம். ஆறு மற்றும் ஏழாம் வகுப்புகளில் இது நடந்தது. எட்டாம் வகுப்பு தொடங்கியதும் என் அப்பா எனக்கு சைக்கிள் வாங்கிக் கொடுத்தார். அதன் பள்ளி இறுதி வகுப்பு முடியும் வரை சைக்கிள் பயணம் தான். ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை வகுப்பாசிரியர் திரு. மகாதேவன் அவர்கள். அவருக்கு ஒரு பட்டப் பெயர் உண்டு அது மணியடிக்கும் முன் வரும் மகாதேவன். அதாவது பள்ளி துவங்கும் நேரம் காலை மணி 10, ஆனால் அவர் 9.30 மணிக்கே வகுப்புக்கு வந்து பாடம் எடுப்பார். பள்ளி மைதானத்தில் பே பே, கிரிக்கெட் மட்டும் தான் விளையாட முடியும். மற்ற பள்ளிகளுக்குரிய எந்த விளையாட்டுகளும் அதாவது வாலிபால், பேஸ்கட் பால் மற்றும் எந்த விளையாட்டுகளும் எங்களுக்கு கி்டையாது. பெரிய கோயிலின் வெளி பிரகாரத்தில் தான் பள்ளி இல்லாத நாட்களில் கிரிக்கெட் விளையாடுவோம். அந்த வயதிற்குரிய குறும்பு அவ்வளவே.

ஒன்பதாவது மற்றும் பத்தாவது வகுப்புகளில் எனக்கு வகுப்பாசிரியராக இருந்தவர் P.G. சுப்பிரமணியன், அந்த காலக்கட்டம் தான் பெண்கள் பற்றிய ஈர்ப்புகளும் அவர்களைப் பற்றிய ரகசிய பேச்சுகளும் துவங்கிய காலம், சைட் அடிப்பதில் துவங்கி பலான புத்தகம் படிப்பது வரை அறிந்து கொண்ட காலம். அப்பொழுது செங்கம் தியேட்டரில் ஜாக்கிசானின் ஆபரேசன் காண்டர் என்றொரு படம் வந்தது. அந்தப்படத்தில் ஒரு நொடிக்காட்சியில் ஒரு பெண்ணின் பின்புறத்தை துணியில்லாமல் காண்பிக்கிறார்கள் என்று முதல் நாள் தனது அண்ணனுடன் சென்று பார்த்து வந்த சேத்தமடையான் சொன்னான். பிறகென்ன வகுப்பில் இருந்த தினேஷ், பிரகாஷ் மற்றும் நான் ஆகியோர் ஒரு திட்டமிட்டோம்.

முதல் முறையாக ஒரு பெண்ணின் பின்புறத்தை துணியில்லாமல் திரையில் பார்க்க ஆசைப்பட்டதால் வந்த வினை இது. அப்பொழுது 12ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடந்து கொண்டிருந்ததால் காலையில் பள்ளி விடுமுறை, மதியம் மட்டுமே பள்ளி உண்டு. மறுநாள் வீட்டில் காலை எங்கள் டியூசன் ஆசிரியரின் வீட்டில் ஆண்டு விழாவுக்காக பெஞ்சு நகர்த்த வேண்டியிருக்கிறது. அதனால் நான் டியூசன் சென்று அதனை முடித்து விட்டு 1மணிக்கு வீட்டிற்கு வந்து சாப்பிட்டு விட்டு பள்ளிக்கு செல்கிறேன் என்று என் அம்மாவிடம் கூறி விட்டு நாங்கள் மூவரும் சினிமாவுக்கு 11மணி காட்சிக்கு சென்று விட்டோம். படம் துவங்கியவுடன் கரண்ட் போய் விட்டது. அந்த தியேட்டரில் ஜெனரேட்டர் கிடையாது. வேறு வழி அந்த சீனை பார்த்தே ஆக வேண்டுமென்று தியேட்டரிலேயே அமர்ந்திருந்தோம். 12.30 க்கு தான் கரண்ட் வந்தது. அந்த சீன் வரும் வரை போக கூடாது என்று முடிவு செய்து அமர்ந்து விட்டோம். படம் முடியும் போது மணி 2. வீட்டிற்கு வந்தால் அம்மா மட்டும் தான் இருந்தார். உள்ளே சென்றதும் முதல் பளார் விழுந்தது, எங்க பொறுக்கிட்டு வந்த என்றார். என்னம்மா ஆச்சு என்றேன். இரண்டாவது பளார். ரைட்டு எஸ்கேப்பாகனும் என்று நினைத்து பள்ளிக்கு நேரமாகி விட்டது கிளம்பனும் என்று கிளம்பி விட்டேன். பள்ளிக்கு சென்றால் என் வகுப்பாசிரியர் வகுப்பில் அழுது கொண்டிருந்தார். நான் உள்ளே சென்றதும் நான் உன்னை என் வீட்டிற்கு வர சொன்னேனா என்றார். இல்லை என்று சொல்வதற்கு முன் அவரிமிருந்து பளார் விழுந்தது. அவ்வளவு தான் அரைமணிநேரத்திற்கு என்னை சாத்திவிட்டார். எனது பெஞ்ச்சை பார்த்தேன் என்னுடன் படம் பார்த்த தினேஷூம் பிரகாஷூம் சிரித்து கொண்டிருந்தனர். அன்று முழுவதும் என்னை முட்டி போட சொல்லி விட்டார். எனக்கு ஒன்று மட்டும் புரியவேயில்லை. என் அம்மா எதற்கு அடித்தார். வகுப்பாசிரியர் எதற்கு அடித்தார். என்னுடன் படம் பார்தத இருவரும் எப்படி தப்பித்தனர். மாலை வரை முட்டி போட்டு அமர்ந்திருந்தேன். மண்டைக்குள் குடைந்தது காரணம் என்ன என்று. பள்ளி முடிந்ததும் வெளியில் வந்து வகுப்பாசிரியரின் பக்கத்து வீட்டுக்காரனும் என் வகுப்பு தோழனுமான ராமலிங்கத்திடம் கேட்டேன். அப்பொழுது தான் எனக்கு புரிந்தது. நான் அம்மாவிடம் 1மணிக்கு வருகிறேன் என்று சொல்லியிருந்தேன். ஆனால் தியேட்டரில் அமர்ந்திருந்ததால் போகவில்லை. 01.30 மணிக்கு அலுவலகத்திலிருந்து சாப்பிட வந்த என் அப்பாவிடம் அம்மா என்னைக் காணும் என்று சொல்லி அழ அப்பா என் ஆசிரியரின் வீட்டிற்கு 10 பேருடன் சென்று என் செய்தாய் என் மகனை என்று மிரட்டியிருக்கிறார். பயந்து போன ஆசிரியர் தான் அழைக்கவேயில்லை என்பதை சொல்லியிருக்கிறார். அத்துடன் என் அப்பா அலுவலகம் சென்று விட்டிருக்கிறார். இதுவரை இருவரிடம் வாங்கியாகிவிட்டது. அடுத்தது அப்பா தான். ஆனால் அவர் காட்டுத்தனமாக அடிப்பாரே என்று பயம் வேறு. சாயந்திரம் முழுவதும் பயந்து கொண்டே வீட்டின் மொட்டை மாடியில் அமர்ந்திருந்தேன். என் அப்பா வந்தார்...

எங்கள் வீ்ட்டில் ஒரு மரக்கட்டில் உண்டு. வீட்டின் கூடத்தின் மூலையில் அது இருக்கும். என்னை தரதரவென்று இழுத்து கட்டிலின் கீழ் தள்ளி விட்டார். அவர் கையில் கிரிக்கெட் பேட். கட்டிலின் கீழிருந்து வெளியேற அனைத்து பக்கமும் அடைபட்டிருந்தது. கட்டிலின் கீழ் என்னை குறி வைக்காமல் அவர் பாட்டுக்கு பேட்டை வீசுகிறார். நான் எந்த பக்கம் சென்றாலும் அடி விழுகிறது. அரைமணிநேரம் அடித்து நொறுக்கி விட்டு சென்று விட்டார். பாவம் அவருக்கு கை வலித்திருக்கும் போல. உடம்பு முழுக்க காயம் வீட்டிலும் யாரும் மருந்து போடக்கூட தயாரில்லை. இரவெல்லாம் அழுது கொண்டே யோசித்தேன். எப்படிடா அப்பாவுக்கு கட்டிலின் அடியில் விட்டு விளாச யோசனை வந்தது. நாமோ அவர் எப்படி அடித்தாலும் இரண்டாவது அடிக்குள் வீட்டை விட்டு வெளியில் ஒடி விடலாம் யோசித்து வைத்திருந்தோமே. கரெக்டாக கட்டிலின் கீழ் லாக் ஆகி விட்டோமே என்று. வீட்டில் அனைவரும் என்னுடன் சரியாக பேச 15 நாட்கள் ஆனது.

ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புகளில் நான் தான் வகுப்புத் தலைவன். அது வரை எங்கள் பள்ளியில் Sports Activities என்பதே இல்லாமல் இருந்தது. திரு. இளங்கோவன் அவர்கள் பள்ளிக்கு உடற்கல்வி ஆசிரியராக வந்து சேர்ந்தார். அதன் பிறகு தான் முதல்முறையாக பள்ளிக்கென ஹாக்கி டீம் உருவாக்கப்பட்டது. நான் தான் ஜூனியர், சீனீயர் இரண்டு டீம்களிலும் கோல் கீப்பர். ஏனென்றால் வயது இரண்டுக்கும் சரியாக இருந்தது, உருவமும் கடாமுடாவாக இருந்தது. அது வரை ஹாக்கியை டிவியில் மட்டுமே பார்த்திருந்த நாங்கள் பயிற்சி செய்ய ஆரம்பித்தோம். டீமில் இருந்த அனைவரும் புதியவர்கள். அதுவரை விடிந்தே எழுந்த நான் ஆசிரியரின் கண்டிப்பால் காலை 4 மணிக்கே எழுந்து திருவாரூர் தெப்பக்குளமான கமலாலயத்தை சுற்றி ஒட ஆரம்பித்தேன். குழுவில் இருந்த அனைவரும் தான். ஒரு முறை சுற்றவே 1.5 கி.மீ வரும். ஆறு ரவுண்டு கண்டிப்பாக ஒடவேண்டும். அதன் பிறகு அங்கிருந்து நேராக திரு.வி.க கலைக்கல்லூரி மைதானத்திற்கு சென்று பயிற்சி. 11 மணி வரை விளையாடி விட்டு வீட்டுக்கு வந்தால் சராசரியாக நான் முப்பது இட்லி தின்பேன். இப்பொழுதெல்லாம் நாலுக்கு மேல் சாப்பிட முடியவில்லை. எல்லாம் காலம்.

நாங்கள் விளையாட்டு குழுவில் இருந்ததால் பள்ளிக்கு மதியம் அரை நாள் சென்றால் போதும். மூன்று மாதம் பயிற்சிக்கு பிறகு டிவிசனல் லெவல் போட்டிகள் துவங்கியது. ஜூனியர் அணிக்கான போட்டி எங்கள் பள்ளி அணிக்கு எதிராக மன்னார்குடி பின்லே பள்ளி அணி களமிறங்கியது. 0-1 என்று தோல்வி. சில நாட்களுக்கு பிறகு சீனியர் அணிக்கான போட்டி எதிரணி மன்னார்குடி நேஷனல் பள்ளி அணி. அதில் குறிப்பிட்ட நேரத்தில் இரு அணிகளும் கோல் அடிக்காததால் பெனால்டி ஷூட்டில் எனக்கு அடிபட்டதால் எனக்கு பதில் கணேஷ் என்ற நண்பன் கோல் கீப்பராக இருந்தான். அதிலும் 0-1 என்ற கணக்கில் தோல்வி. அத்துடன் பள்ளி விளையாட்டு முடிவுக்கு வந்தது.

அதிலும் ஒரு கலாட்டா நடந்தது. எங்கள் பள்ளிக்கும் பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கும் ஒரே மேனேஜ்மென்ட் தான். அந்த பள்ளியில் உள்ள ஹாக்கி டீம் தமிழ்நாடு லெவலில் சாம்பியன். நாங்களோ முதல் முதலாக விளையாடுபவர்கள். எங்கள் பள்ளியின் தாளாளர் ஒரு யோசனை சொன்னார். இந்த பசங்களுக்கு பெண்கள் அணியுடன் விளையாட வைத்தால் நல்ல பயிற்சி கிடைக்கும் என்று. பசங்களுக்கோ ஒரு பக்கம் பெண்களுடன் விளையாடுவதனால் கடுப்பும் அதே சமயம் கிளுகிளுப்புமாக இருந்தது. போட்டி கல்லூரி மைதானத்தில் துவங்கியது. அந்த சமயத்தில் நான் எனது டீம் புல்பேக் போசிசனில் இருந்த சிவக்குமாரிடம் சத்தமாக ஒரு பெண்ணை பற்றி வில்லங்க கமெண்ட் அடிக்க அது பெண்கள் அணியின் ஆண் கோச்சுக்கு கேட்டு விட்டது. என்னை நோக்கி கோபத்துடன் நடந்து வந்தார்.

No comments:

Post a Comment