நேற்று ஆங்கிலப்படம் ஒன்று நண்பனின் வீட்டில் டிவிடியில் பார்க்க நேர்ந்தது. துவங்கிய சில நிமிடங்களிலேயே படத்துடன் நான் ஒன்றி விட்டேன். ஒரு போரின் உண்மை சம்பவம். இந்தப்படம் 2001ல் வந்தது. பிலடெல்பியா என்கொயரர் கட்டுரைகள் மற்றும் மார்க் பெளடன் எழுதிய புத்தகத்தின் ஒரு தொடரை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட ஒரு அமெரி்க்க ராணுவ நடவடிக்கையின் உண்மை சம்பவம் பற்றிய படம் இது.
சோமாலியா நாட்டில் நடந்த உள்நாட்டுப்போரை கட்டுப்படுத்த சென்ற ஐநா அமைதிகுழுவில் அமெரிக்க ராணுவம் ஒரு ஆபரேஷனை அக்டோபர் 3, 1993 அன்று 100க்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் ஹெலிகாப்டர், ராணுவ வண்டிகள் ஆகியவற்றுடன் செய்ய திட்டமிடுகிறது. அதாவது தீவிரவாத குழுவின் இரண்டு அரசியல் தலைவர்கள் ஒரிடத்தில் சந்திக்க வருகிறார்கள் என்ற தகவல் ரகசியமாக கிடைக்கிறது. அவர்கள் இருவரையும் பிடிக்க ராணுவ தலைவர் மற்ற நாட்டு படையினருக்கு தெரியாமல் திட்டமிடுகிறார்.
சரியான நேரத்தில் படைகள் கிளம்புகின்றன. ஆனால் அவர்கள் நகரை வந்தடையும் முன் சோமாலிய போராளிகளுக்கு தகவல் சென்று சேர்ந்து விடுகிறது. எனவே அவர்களும் ஊர் முழுவதும் படையை திரட்டி அமெரிக்க ராணுவதத்தினரை எதிர்க்க ஆயத்தமாகின்றார்கள். அமெரிக்கப்படை இலக்கிற்கு வந்து சேர்ந்தவுடன் சண்டை துவங்குகிறது. அரசியல் கைதிகளை ஏற்றிய வண்டி தப்பித்து நகரைத் தாண்டி அமெரிக்கன் கேம்ப்புக்கு வந்து சேர்ந்து விடுகிறது.
சண்டை தீவிரமடையும் போது அமெரிக்காவின் இரண்டு பிளாக் ஹாக் உலங்கு வானூர்திகள் சோமாலிய போராளிகளால் சுட்டு வீழ்த்தப்படுகிறது. சண்டை இரவு வரை நீடிக்கிறது. அமெரிக்க ராணுவத்தினர் பலர் கொல்லப்படுகின்றனர். அமெரிக்க ராணுவம் வேறு வழியில்லாமல் பக்கத்தில் இருக்கும் பாகிஸ்தான் ராணுவ படைகளிடம் உதவி கேட்கிறது. அவர்கள் வந்து மீதமுள்ள அமெரிக்க ராணுவத்தினரை காப்பாற்றி செல்வதே கதை. படத்தின் முடிவில் இந்த போரின் இறுதியாக 1000 சோமாலியர்களும் 19 அமெரிக்க ராணுவத்தினரும் இறந்ததாக சொல்லப்படுகிறது. மனதை கனக்க வைக்கிற போர் இது.
இது போல் நடக்கக்கூடாது என்று என் மனமும் நினைவும் சொல்கிறது. கண்டிப்பாக இது வரை யாரும் பார்க்காமல் இருந்தால் பார்க்க வேண்டிய படம் இது.
அந்த போர்க்காட்சி இப்பொழுது வரை என் நினைவில் நிற்கிறது. முதல் உலங்கு வானூர்தி வீழ்த்தப்படும் போது மனது பதபதைப்பாகிறது. இரண்டாவது உலங்கு வானூர்தி வீழ்த்தப்பட்டதும் இன்னும் கனக்கிறது. நாம் இந்தியன் என்ற போதிலும் படத்தில் கொத்து கொத்தாய் செத்து மடியும் எதிரிகள் சோமாலியர்கள் என்றாலும் செத்து விழும் ஒவ்வொரு அமெரிக்க ராணுவ வீரர்களை பார்க்கும் போதும் கனக்கிறது.
இப்படித்தானே சோமாலியர்களைப் போல ஒவ்வொரு ஈழத்தமிழர்களும் வீழ்ந்திருப்பார்கள். கண்டிப்பாக படத்தைப் பாருங்கள். உங்களுக்கும் வலிக்கும். படம் அமெரிக்கனின் பார்வையில் சொல்லப்பட்டிருக்கிறது. அதுதான் வருத்தம்.
இதுபோல் தமிழீழப்போரை படமாக எடுத்தால் தான் ஈழப்போரின் வலி நமக்கு புரியும் என்று நினைக்கிறேன். இந்தப்படத்தைப் பாருங்கள். தம் நிலத்தை வீழ்த்தக்கூடாது என்ற சோமாலியர்களின் பதபதைப்பு புரியும்.
ஆரூர் முனா
பழைய நினைவுகளை அசைப்போட வைத்தது உங்கள் பதிவு
ReplyDelete