Friday 20 March 2015

போராளி - பழசு 2011

போராளி கண்டிப்பாக இந்த ஆண்டின் மிகச்சிறந்த படம், வெற்றிப்படமும் ஆகும் அதில் எந்தவித சந்தேகமுமில்லை. பொதுவா வலைப்பதிவர்களில் சிலர் படம் வெளியான அன்றே படத்தைப் பார்த்து விட்டு விமர்சனம் எழுதுவர். நானும் அப்படித்தான். இன்று அதற்காகவே காலை 08.30 சிறப்புக்காட்சிக்கு சென்று படத்தைப் பார்த்து விட்டு விமர்சனம் எழுதினால் நிறைய ஹிட் கிடைக்கும் என்பதற்காகவே சென்றேன். ஆனால் படத்தைப் பார்த்து விட்டு 11.00 மணிக்கு வெளியில் வந் நான் ஆசை தீராமல் விமர்சனம் எழுதாவிட்டால் கூட பரவாயில்லை என்று மீண்டும் 11.15 காட்சியையும் பார்த்து விட்டு வந்துள்ளேன். கண்டிப்பாக நாளையும் சென்று பார்ப்பேன். ஞாயிறன்று கண்டிப்பாக குடும்பத்துடனும் செல்வேன்.

ஒரு படம் எவ்வளவு சூப்பர் ஹிட் படமாக இருந்தாலும் ஏதோ ஒரு நிமிடம் அல்லது ஒரு நொடி அல்லது ஒரு துளியாவது கண்டிப்பாக போர் அடிக்கும். ஆனால் இந்தப்படத்தில் அப்படி ஒரு வாய்ப்பே இல்லை. படம் துவங்கியவுடன் சீட் நுனிக்கு வந்தால் படம் முடியும் வரை நம்மை அப்படியே உட்கார வைத்து விடுகிறார்கள்.

சரி படத்தின் கதைக்கு வருவோம். 10ம் வகுப்பு பெயிலான நரேஷூம் 6ம் வகுப்பை பாதியில் விட்ட சசிக்குமாரும் வேலைதேடி சென்னை வருகின்றார்கள். நண்பன் கஞ்சா கருப்பு வீட்டில் தங்குகிறார்கள். ஒரு பெட்ரோல் பங்கில் வேலை கிடைக்கிறது. எதிர் வீட்டில் இருக்கும் சுவாதி உதவி செய்த காரணத்தால் சசிக்குமாரை நேசிக்கத் தொடங்குகிறார். பெட்ரோல் பங்கில் உடன் வேலைப்பார்க்கும் ஒரு பெண்ணை நரேஷ் ஒரு தலையாக காதலிக்கிறார். சம்பளம் போதாமல் இவர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு நிறுவனத்தை துவக்குகிறார்கள். அது சிறிது சிறிதாக வளர்ந்து அதே பெட்ரோல் பங்கில் அலுவலகம் ஆரம்பிக்கும் அளவுக்கு வளர்ந்து செட்டிலாகிறார்கள். எல்லாம் நன்றாக போய்க்கொண்டிருக்கும் போது ஒரு கும்பல் இவர்களை தேடி வருகிறது. இவர்கள் தப்பிக்கிறார்கள். ஏன் தப்பிக்கிறார்கள், யார் அவர்கள், வில்லன் கும்பலை சசிக்குமார் குரூப் சமாளித்து வாழ்க்கையை எதிர்கொள்கிறார்களா என்பதை திரையில் காண்க.

எத்தனை முறை வேண்டுமானாலும் இநதப்படக்குழுவைப் பாராட்டலாம். இன்னும் என் மனதில் படம் பற்றிய சிந்தனை தான் ஓடிக்கொண்டிருக்கிறது.

சசிக்குமார் மிகச்சரியாக பாத்திரத்திற்கு பொருந்துகிறார். இயல்பாக நடிக்கிறார். தன்னம்பிக்கையுடன் கூடிய கதாபாத்திரம். சில நாட்களாக மனம் சரியில்லாமல் இருந்த எனக்கு அந்த கதாபாத்திரம் தான் தன்னம்பிக்கையை ஊட்டியுள்ளது. இந்த படத்தில் நடித்ததற்காகவும், தயாரித்ததற்காகவும் தலை வணங்கி பாராட்டுகிறேன்.

நரேஷ் துடிப்பாகவும் நகைச்சுவையுடனும் நடித்துள்ளார். நாக்கை கடித்துக் கொள்ளும் போது கண்கலங்க வைக்கிறார். காதலுக்காக அவர் முயற்சிக்கும் ஒவ்வொரு காட்சியும் சிரிப்பை வரவழைக்கிறது. கவிதை சொல்லும் போது இரண்டு புள்ளி ஒரு ஆச்சரியக்குறியுடன் நம் மனதில் அமர்ந்து கொள்கிறார்.

சுவாதி நீண்ட இடைவெளிக்குப் பின் தமிழ்த்திரையில் தோன்றுகிறார். பார்க்க அட்டகாசமாக உள்ளார். எப்பொழுதும் சிடுசிடுவென இருக்கும் கதாபாத்திரம். விபத்தில் சிக்கி சசிக்குமாருடன் மருத்துவமனையில் உரையாடும் போது அவரின் சிடுசிடுப்பின் காரணம் தெரிகிறது.

கஞ்சா கருப்பு நன்றாக நடித்துள்ளார். அவரது காட்சிகள் படம் முழுவதும் வருவது போல் அமைக்கப்பட்டிருக்கிறது. வீட்டுக்காரராக வரும் ஞானசம்பந்தன், எப்பொழுதும் மனைவியுடன் சண்டைப் போட்டுக் கொண்டிருக்கும் படவா கோபி, வில்லத்தனத்துடன் தோன்றும் நமோ நாராயணன் ஆகியோரும் உள்ளனர். படத்தின் வெற்றி என்பது கிளைமாக்ஸில் வில்லன்களை சசிக்குமார் அடிக்கும் போது நாமும் சேர்ந்து அடிக்கிறோம். அந்த அளவுக்கு நம்மை படத்துடன் ஒன்றிணைத்து விடுகிறார் இயக்குனர் சமுத்திரக்கனி.

இன்னும் சொல்வதற்கு நிறைய உள்ளது, கூறினால் மீதி கதையும் சுவாரஸ்யமான காட்சிகளையும் சொல்லி விடுவேனோ என்ற பயத்தில் இத்துடன் முடிக்கிறேன். இது போன்ற படத்தினை திரையரங்கிற்கு சென்று பார்த்து வெற்றிகரமாக ஒடவைப்பது சினிமா ரசிகர்களின் கடமை. கண்டிப்பாக அனைவரும் குடும்பத்தோடு திரையரங்கு சென்று பாருங்கள்.

போராளி - இந்த ஆண்டின் மிகச்சிறந்த வெற்றிப்படம். இதை நான் மட்டும் சொல்லவில்லை. என்னுடன் இரண்டு காட்சிகளாக படம் பார்த்த ரசிகர்களின் ஒட்டு மொத்த மனநிலை இதுதான்.


ஆரூர் முனா

No comments:

Post a Comment