Friday, 20 March 2015

சரக்கடித்த மச்சானுடன் நான் பட்ட பாடு - 2011 பழசு

என் மச்சான் பெண்ணின் திருமணத்திற்கு பத்திரிக்கை சென்னையில் வைப்பதற்காக மற்றொரு மச்சான் சதீஷ், அவனுடன் மற்றொரு நண்பன் கலை ஆகியோர் நேற்று வீட்டிற்கு வந்திருந்தார்கள். எனது மச்சான் சதீஷ் ஊரில் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகளுக்கு தகப்பனாகி விட்டபடியாலும் தற்போது நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் வென்று ஊராட்சி மன்ற துணைத்தலைவராகி விட்டதாலும் கெளரவத்திற்காக அவன் ஊரில் குடிப்பதில்லை (நல்லவன் வேஷம்).

கலையை வீட்டிலேயே விட்டு விட்டு நானும் அவனும் பைக்கில் நேற்று காலை புறப்பட்டு போரூரில் மூன்று இடங்கள், வளசரவாக்கம், நுங்கம்பாக்கம், மணலி மாத்தூர், வியாசர்பாடி, பெரம்பூர் இடங்களில் எல்லாம் உள்ள எங்கள் சொந்தக்காரர்கள் வீட்டில் பத்திரிக்கை வைத்து முடிக்க மதியம் மணி 03,00 ஆகி விட்டது. இன்னும் சாந்தோம், திருவான்மியூர், பெசன்ட் நகர் ஏரியாக்களில் பத்திரிக்கை வைப்பது பாக்கியிருந்தது.

ஆனால் மதியம் சாப்பிட வேண்டுமென்பதற்காகவும், எனது மனைவிக்கு டைபாய்டு ஜூரத்திற்காக ஊசி போட அவளை அழைத்துக் கொண்டு கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவமனைக்கு 05.00 மணிக்கு செல்ல வேண்டியிருந்ததால் மீண்டும் அம்பத்தூருக்கு திரும்பினோம். வரும் வழியில் மிகவும் களைப்பாக இருக்கிறது. எதாவது பாரில் சரக்கடிக்கலாம் என்று கூறினான். சரி என்று எனது வீட்டிற்கு மிக அருகாமையில் உள்ள பாருக்கு சென்று அங்கிருந்து வீட்டில் இருந்த கலைக்கு போன் செய்து பாருக்கு வரும்படி கூறினோம். அவனும் வந்தான்.

நான் அவனிடம் நான் மருத்துவமனைக்கு செல்ல வேண்டியிருப்பதால் குடிக்கவில்லை. நீங்கள் இருவரும் குடியுங்கள் என்று கூறினேன். சரி என்று அவர்கள் குடிக்க ஆரம்பித்தார்கள். அவர்களுக்கு ஆப் உள்ளே இறங்கியதும் நானும் குடிக்க வேண்டும் என்று ரகளை செய்தார்கள். என்னடா இது வம்பாகி போய் விட்டதே, நான் மருத்துவமனைக்கு 05.00 செல்ல வேண்டுமென்று கூறினேன். அவனோ நீ செல்ல இன்னும் 2 மணிநேரமிருக்கிறது. இப்போது பீர் குடி, இல்லையென்றால் எங்களை அவமானப்படுவது போல் இருக்கும் என்று வம்பு செய்தான். சரி என்று ஒரு பீர் வாங்கி நான் குடிக்க அவர்கள் மேலும் ஒரு ஆப் குடித்தார்கள்.

வீட்டிற்கு சாப்பிட போனால் சண்டை வரும் என்று அருகில் உள்ள பிரியாணி கடைக்கு சாப்பிட சென்றோம். நானும் சதீஷூம் ஒழுங்காக சாப்பிட எங்களுடன் வந்த கலை பாதி பிரியாணி சாப்பிட்ட போது கடையின் உள்ளேயே வாந்தியெடுக்க ஆரம்பித்தான். ஆரம்பித்தது தகராறு. அவனை வெளியில் கொண்டு வந்து ஒரு கேன் மினரல் வாட்டர் வாங்கி அவனை கழுவி விட்டு கடைகாரர்கள் சத்தம் போட்டதால் நான் கடையில் இவன் எடுத்த வாந்தியை மீதமுள்ள தண்ணீரில் கழுவி விட்டு இருவரையும் பைக்கில் ஏறுங்கள் என்று கூறி தட்டுத்தடுமாறி வீட்டிற்கு கொண்டு வந்து போட்டேன். என் மனைவியோ மருத்துவமனைக்கு செல்லும் நேரத்தில் இதெல்லாம் தேவையா என்று ஒரே சத்தம் போட்டாள். பிறகு அவளை சமாளித்து விட்டு இருவரையும் வீட்டில் படுக்கச் சொல்லி விட்டு நான் மனைவியை அழைத்துக் கொண்டு மருத்துவமனை சென்றேன்.

இரவு 07.00 மணிக்கு நான் மருத்துவமனையில் இருந்த போது சதீஷ் போன் செய்து நான் கிளம்புகிறேன் என்றான். அவனிடம் திருமணத்திற்காக நான் ஊருக்கு வருவேன், கண்டிப்பாக திருமணத்தில் குடித்து விட்டு உன் மேலேயே வாந்தியெடுக்கிறேன் என்று கலாய்த்து விட்டு பக்கத்து வீட்டில் சாவி கொடுத்து செல்லும்படி கூறினேன். அவர்களும் கிளம்பி விட்டார்கள். இப்பொழுது என் முறை, டிசம்பர் 5ம் தேதி நான் அவர்கள் ஊரான மன்னார்குடி அருகில் உள்ள மேலவாசல் சென்று நன்றாக குடித்து விட்டு கலாட்டா செய்வேன் என்று இப்போதே சபதம் செய்து விட்டேன்.



ஆரூர் முனா

No comments:

Post a Comment