Saturday 21 March 2015

என்டி ராமாராவ் கடைசி நாட்கள் - பழசு 2012

ஆந்திர மாநில முன்னாள் முதல் மந்திரியும், தெலுங்குப் பட உலகின் முடிசூடா மன்னருமான என்.டி.ராமராவ், மாரடைப்பால் காலமானார். என்.டி.ராமராவ், தெலுங்கு பட உலகில் வெற்றிக்கொடி நாட்டியபின், அரசியலில் புகுந்து பல சாதனைகளை படைத்தார். இரண்டாம் மனைவி லட்சுமி சிவபார்வதியின் தலையீட்டால் ஆட்சியை இழந்து தனிமைப்படுத்தப்பட்டார். மருமகன் சந்திரபாபு நாயுடு முதல் மந்திரி ஆனார்.

ஐதராபாத் நகரில் பஞ்சாராஹில்ஸ் பகுதியில் உள்ள தனது வீட்டில் மனைவி லட்சுமி சிவபார்வதியுடன் வசித்து வந்தார். 76 வயது ஆனபோதிலும் உடலை கட்டுக்கோப்பாக வைப்பதற்காக ராமராவ் தினசரி உடற்பயிற்சி செய்வது வழக்கம். அதுபோல 18.1.1996 அன்று காலையிலும் அவர் உடற்பயிற்சிக்கு தயார் ஆனார்.

அந்த சமயத்தில் என்.டி.ராமராவுக்கு திடீர் என்று மாரடைப்பு ஏற்பட்டது. நெஞ்சு வலிப்பதாக தெரிவித்தார். அவரை படுக்கை அறைக்கு அழைத்துச் சென்று ஓய்வெடுக்க வைத்தனர். டாக்டர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே டாக்டர்கள் விரைந்து வந்து படுக்கையில் இருந்த என்.டி.ராமராவை பரிசோதித்துப் பார்த்துவிட்டு, அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதை கேட்டதும் சிவபார்வதி கதறி அழுதார். என்.டி.ராமராவின் உடல் வீட்டின் தாழ்வாரத்தில் கொண்டு வந்து வைக்கப்பட்டது.

ராமராவின் மரணச் செய்தி கிடைத்ததும் மருமகனும், முதல் மந்திரியுமான சந்திரபாபு நாயுடு வீட்டிற்குச் சென்று அஞ்சலி செலுத்தினார். மூத்த மருமகன் வெங்கடேசுவரராவ் மற்றும் மகன்கள், மகள்கள் குடும்பத்தினரும் விரைந்து சென்றனர். என்.டி.ராமராவ் உடலைப் பார்த்து கண்ணீர் விட்டனர். ஆந்திர கவர்னர் கிருஷ்ணகாந்த், அரசியல் கட்சித் தலைவர்கள், நடிகர் நடிகைகள் என்.டி.ராமராவ் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். ராமராவ் உடல் அருகே சிவபார்வதி கண்ணீர் சிந்தியபடி சோகமே உருவாக அமர்ந்திருந்தார்.

என்.டி.ராமராவ் மரணச் செய்தி ஐதராபாத் நகரில் காட்டுத்தீ போல பரவியது. ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் சாரை சாரையாக என்.டி.ராமராவ் வீட்டிற்கு வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். அவர்களில் பலர் துக்கம் தாங்காமல் கதறி அழுதனர். பெண்கள் தரையில் விழுந்து அழுது புரண்டனர். ஐதராபாத் நகர் மட்டுமின்றி ஆந்திர மாநிலமே சோகத்தில் மூழ்கியது.

பின்னர் என்.டி.ராமராவ் உடல் வீட்டில் இருந்து ஆம்புலன்ஸ் வேனில் ஏற்றப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக லால்பகதூர் ஸ்டேடியத்துக்கு எடுத்து செல்லப்பட்டது. தொண்டர்களும், ரசிகர்களும் பின்தொடர்ந்து சென்றனர். அங்கு விசேஷ மேடை அமைத்து என்.டி.ராமராவ் உடல் வைக்கப்பட்டது. ஏராளமான ஆண்களும், பெண்களும் நீண்ட வரிசையில் நின்று இறுதி அஞ்சலி செலுத்தினர்.

என்.டி.ராமராவ் மறைவு செய்தியை கேட்டு பிரதமர் நரசிம்மராவ் அதிர்ச்சி அடைந்தார். விசேஷ விமானம் மூலம் ஐதராபாத் புறப்பட்டு வந்து அஞ்சலி செலுத்தினார். சிவபார்வதிக்கும், ராமராவின் குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார். ராமராவின் மகனும், போக்குவரத்து மந்திரியுமாக இருந்த ஹரிகிருஷ்ணா வெளிநாட்டில் இருந்தார். ராமராவ் மரண செய்தி கிடைத்ததும் அவர் தனது சுற்றுப்பயணத்தை ரத்து செய்து விட்டு, ஐதராபாத் திரும்பினார்.

தமிழக கவர்னர் சென்னா ரெட்டி, பாராளுமன்ற சபாநாயகர் சிவராஜ் பட்டீல், முன்னாள் பிரதமர்கள் வி.பி.சிங், சந்திர சேகர், முதல் மந்திரிகள் தேவேகவுடா, ஜோதிபாசு, லல்லுபிரசாத் யாதவ், மனோகர் ஜோஷி, பா.ஜனதா தலைவர் எல்.கே.அத்வானி, வ.கம்ï னிஸ்டு தலைவர் இந்திர ஜித்குப்தா, ஜனதா தள தலைவர் எஸ்.ஆர்.பொம்மை, பிஜ× பட்நாயக், நடிகர்கள் சசிகபூர், நாகார்ஜ×னா, கிருஷ்ணா, டைரக்டர்கள் டி.ராமா நாயுடு, தாசரி நாராயணராவ் உள்பட திரளானபேர் அஞ்சலி செலுத்தினார்கள்.

மறுநாள் (19ந்தேதி) பிற்பகல் இறுதி ஊர்வலம் புறப்பட்டது. ராமராவின் உடல் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வண்டியில் வைக்கப்பட்டது. தலைப்பகுதியில் அவருடைய படமும், முதல் மனைவியின் படமும் வைக்கப்பட்டு இருந்தன.

ராமராவின் தலைப்பகுதியில் மூத்த மருமகன் வெங்கடேசுவரராவும், கால் பகுதியில் சந்திரபாபு நாயுடுவும் அமர்ந்து இருந்தனர். லட்சுமி சிவபார்வதியும் அலங்கார வண்டியில் ஏறி, ராமராவ் உடல் அருகே அமர்ந்தார். இதை பார்த்ததும் அருகில் நின்று கொண்டிருந்த ராமராவின் மகன்களான ஹரிகிருஷ்ணாவும், நடிகர் பாலகிருஷ்ணாவும் ஆவேசத்துடன் சென்றனர். சிவபார்வதிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஹரிகிருஷ்ணாவின் ஆதரவாளர்கள் சிவபார்வதியை பிடித்து கீழே தள்ளினார்கள். இதனால் அவமானமும், துயரமும் அடைந்த சிவபார்வதி கண்ணீர் விட்டு கதறி அழுதார்.

இறுதி ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று புத்த பூர்ணிமா வளாகத்தை அடைந்தது. அங்கு ராமராவின் உடல், "சிதை"யின் மீது வைக்கப்பட்டு இறுதிச்சடங்குகள் நடந்தன. பின்னர் சிதைக்கு ராமராவின் மூத்த மகன் ஜெயகிருஷ்ணா தீமூட்டினார். ஆந்திர மாநில போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் 21 குண்டுகளை சுட்டு அஞ்சலி செலுத்தினர்.

ராமராவ் மறைவுக்கு பிறகு லட்சுமி சிவபார்வதி "என்.டி.ஆர். தெலுங்கு தேசம்" Linkஎன்ற கட்சியைத் தொடங்கி தேர்தலில் குதித்தார். ஆனால் அரசியலில் அவரால் காலூன்றி நிற்க முடியவில்லை. தேர்தலில் அவருடைய கட்சி தோல்வி அடைந்தது. சமீபத்தில் நடந்த தேர்தலில் போட்டியிட்டு சிவபார்வதி "டெபாசிட்" இழந்தார்.

No comments:

Post a Comment