Friday 20 March 2015

கடுப்பாகிப் போன பேருந்து பயணம் - பழசு 2011

மிக நெருங்கிய சொந்தக்காரர் வீட்டு திருமணத்திற்காக நானும் என் மனைவியும் சனியன்று சென்னையிலிருந்து புறப்பட்டு திருவாரூர் சென்று, அங்கிருந்து எனது பெற்றோருடன் இணைந்து மன்னார்குடி சென்று திருமணத்திலும், புதன் அன்று பட்டுக்கோட்டையில் நடைபெற்ற வரவேற்பு மற்றும் கறிவிருந்தில் பங்கேற்று இன்று காலை தான் சென்னை வந்ததன் பயண கட்டுரை தான் இது. அனைத்து உணர்ச்சிகளும் கலந்த தொகுப்பு என்றும் வைத்துக் கொள்ளலாம். பயணத்திலும் விருந்திலும் பரபரப்பாக இருந்ததால் ஊரில் என்னால் பதிவிட முடியவில்லை.

சனியன்று சென்னையிலிருந்து திருவாரூர் செல்வதற்காக ஏற்கனவே டிராவல்ஸ்ஸில் (பெயர் வேண்டாம் தெரிந்தால் நாளைக்கு ஏண்டா பதிவில் டிராவல்ஸ்ஸின் பெயர் போட்டாய் என்று சொந்தக்கார பயலுவ சண்டைக்கு வருவானுங்க) போன் மூலம் புக் செய்திருந்தேன். ஆனால் அந்த சமயம் போன் அட்டெண்ட் செய்த அந்த நாதேரி சரக்கடித்திருந்ததால் என்னுடைய பெயரில் டிக்கெட் புக் செய்ய மறந்து விட்டிருந்தது. பின்னால் தான் அது எனக்கு தெரிய வந்தது.

இரவு 09.30 மணிக்கு பேருந்து என்பதால் நான் இரவு 09.15 மணிக்கு சென்று டிக்கெட் கேட்டேன். அப்போது தான் இவர்கள் என் பெயரில் டிக்கெட் புக் செய்யவேயில்லை என்று தெரிய வந்தது. மறுநாள் கல்யாண நாளாக இருந்ததினால் வேறெந்த தனியார் பேருந்திலும் டிக்கெட் கிடைக்கவில்லை. சிறிது நேரம் முயற்சித்து விட்டு பிறகு அரசுப் பேருந்து நிலையத்திற்கு சென்று பேருந்து கிடைக்குதா என பார்க்கலாம் என்று அங்கு நடந்து சென்றோம். ஆட்டோக்காரரை கேட்டால் பாலம் வரை சென்று திரும்ப வேண்டியிருக்கும் அதனால் வர முடியாது என்று கூறி விட்டார் (நன்றி : கேரளாக்காரன்).

அரசுப் பேருந்து நிலையத்திற்கு இத்தனை லக்கேஜூடன் நடந்து சென்று பார்த்தால் ஒரு பேருந்திற்கு 200 பேர் என கூட்டம் அலைமோதுகிறது. சரி நேரடியாக திருவாரூருக்கு டிக்கெட் கிடைக்காது என்று முடிவு செய்து வேறெந்த வழியாகவும் ஊருக்குள் சென்று விடலாம் என்பதால் மயிலாடுதுறைக்கோ, கும்பகோணத்திற்கோ அல்லது நாகப்பட்டினத்திற்கோ பேருந்தில் சென்று விடலாம் என்று பார்த்தால் அந்தப்பேருந்துகளிலும் கூட்டம் அலைமோதியது, மணி வேறு 11.00 மேல் ஆகிக்கொண்டிருக்கிறது. அப்பொழுது ஒரு பேருந்து உள்நுழைந்தது. திருச்சி வழியாக தஞ்சாவூர் செல்லும் பேருந்து அது. அதில் டிக்கெட் கிடைத்தது. சரி 06.00 மணிக்கு தஞ்சாவூர் சென்றாலும் திருவாரூருக்கு 08.00 மணிக்கெல்லாம் சென்று விடலாம் என்று முடிவு செய்து ஏறி விட்டோம்.

மதுராந்தகம் சென்றதும் வண்டி பஞ்சர். ஒரு மணி நேரம் ஓட்டுனரும் நடத்துனரும் மிகவும் சிரமப்பட்டனர். ஏனென்றால் ஜாக்கி மிகவும் டைட்டாக இருந்ததாம். ஒரு வழியாக டயரை மாற்றி வண்டியை அங்கிருந்து எடுத்த போது மணி விடியற்காலை 03.00. விக்கிரவாண்டி தாண்டி வண்டி சென்று கொண்டிருந்த போது மறுபடியும் வண்டி நின்றது. 20 நிமிடங்களாக வண்டியை எடுக்கவில்லை, மணியாச்சே என்ன்வோ என்று இறங்கிப்பார்த்தால் மறுபக்கம் உள்ள டயரும் பஞ்சர். வண்டியில் ஸ்பேர் டயர் கிடையாது.

மறுபடியும் வண்டி பஞ்சரான போது ஸ்டெப்னி டயரும் இல்லாததால் பேருந்தில் இருந்த மக்கள் புலம்ப ஆரம்பித்து விட்டனர். அரைமணிநேரம் கழித்து பஞ்சரான பேருந்தின் சகடெப்போ வண்டி ஒன்று வந்தது. ஒட்டுனர் அந்த வண்டியை நிறுத்தி அதன் ஸடெப்னியை கடனாக வாங்கிக் கொண்டனர். மறுபடியும் டயரை மாற்றி வண்டியை எடுக்கும் போது மணி விடியற்காலை 05.30.

திருச்சி வர 08.30 ஆனது. அதற்குள் எனது அப்பா போன் செய்து "என்ன லேட் ஆகிறது. நீ வந்தவுடன் நாம் அனைவரும் சேர்ந்து காலையிலேயே மன்னார்குடி செல்ல வேண்டும், நானும் அம்மாவும் காலையிலேயே கிளம்பி உனக்காக காத்திருக்கிறோம். உனக்கு பொறுப்பேயில்லையா? விருந்தினர்கள் நாம் வரவில்லையேன்றால் கோபித்துக் கொள்வார்கள், இந்த பயணம் முன்பே திட்டமிட்டது தானே, ஒரு பேருந்து பிடித்து வர கூட உனக்கு திறமையில்லையா" என்று சத்தம் போட்டார். என்னடா வம்பாகி விட்டது என்று நினைத்துக் கொண்டேன். தஞ்சாவூர் வர 10.00 மணியாகி விட்டது. மீண்டும் அப்பா போன் செய்து சத்தம் போட்டார். எல்லாம் என் நேரம் நேரம் என்று வாங்கிக் கொண்டு அங்கிருந்து திருவாரூர் செல்லும் பேருந்தில் ஏறி திருவாரூர் வர 12.30 ஆகி விட்டது. அதற்குள் என் அப்பாவிடமிருந்து மூன்று முறை திட்டும் வாங்கியாகி விட்டது.

வீட்டிற்குள் சென்றால் அப்பா எதும் பேசாமல் கிளம்பி காரில் ஏறி அமர்ந்து அமர்ந்து கொண்டார். அம்மாவிடம் நிலையை எடுத்து சொல்லி அவர்களை முன்னே செல்லும் படியும் நானும் என் வீட்டம்மாவும் மாலை புறப்பட்டு வருகிறோம் என்றும் கூறினேன். அம்மாவும் கிளம்பியதும் தூங்கி எழுந்து பைக்கிலேயே நானும் என் மனைவியும் மன்னார்குடி சென்றோம். அங்கோ அத்தனை சொந்தக்காரர்களிடமும் திட்டு வாங்கி மனைவியை பெண் உறவினர்கள் வசம் விட்டு விட்டு நான் வெளியில் வந்து ஏற்கனவே இந்த திருமணத்திற்காக சென்னை வந்து என்னை குடித்து விட்டு கலாட்டா செய்த மாமன் மகனான சதீஷை தேடினேன். ஆள் இல்லை.

சாப்பாட்டு கூடத்திற்கு சென்றேன். என் அப்பா சமையல் நிர்வாகத்தை கவனித்துக் கொண்டிருந்தார் உடன் எனது சித்தப்பா அசோக், அவர் திருச்சியிலிருந்து வந்திருந்தார். அவர்கள் இருவரும் மதியத்திலிருந்தே சோமபானத்தில் இருந்தனர். அப்பா அங்கு சென்ற என்னை பாரபட்சமில்லாமல் கன்னாபின்னாவென்று திட்டினார். எல்லாம் என் நேரம் என்று வாங்கிக் கொண்டு அப்பாவை சமாதானம் செய்து விட்டு மீண்டும் மண்டபத்தில் நுழைந்தேன்.

அதற்குள் மண்டபத்தில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கூட்டம் கூட ஆரம்பித்தது. இரவு மாப்பிள்ளை அழைப்பு துவஙகியதால் பெண் உறவினர்கள் அனைவரும் கோயிலுக்கு ஊர்வலத்தில் சீர்வரிசை தட்டுடன் நடந்து செல்ல ஆரம்பித்தனர். அப்பொழுது வரை சதீஷ் என்னிடம் மாட்டவில்லை. போன் செய்தாலும் எடுக்கவில்லை. மாப்பிள்ளை அழைப்பு முடிந்து மேடையில் மணப்பெண்ணும் மாப்பிள்ளையும் இருக்க அனைவரும் பந்திக்கு செல்ல ஆரம்பித்தனர். 09.00 மணிக்கு சதீஷ் மண்டபத்தின் உள் நுழைந்தான். அவனைக்கூட்டிக் கொண்டு சரக்கடிக்கலாம் என்று முடிவு செய்து மண்டபத்தின் வெளியில் வந்தேன்.

அதற்குள் அம்மா வெளியில் வந்து நானும் என் மனைவியும் மீண்டும் இரவு திருவாரூர் செல்ல வேண்டும் என்றும் காலை திருமணத்திற்கு வரும் போது வீட்டில் உள்ள நெக்லஸ் ஆரம் எடுத்து வர வேண்டும் என்றும் கூறினார்கள். மனைவியுடன் பைக்கில் தூரம் செல்ல வேண்டியிருந்ததால் பார்ட்டியை தவிர்த்து சாப்பிட வந்தேன். மற்ற மச்சான், சகோதரர்கள் சரக்கடிக்க சென்று விட்டனர். சாப்பிட்டு விட்டு வீட்டிற்கு கிளம்பினேன். மறுநாள் மீண்டும் மன்னார்குடி வந்தேன். திருமணம் முடிந்தது. நீண்ட நாள் இடைவெளிக்கு பிறகு நிறைய உறவினர்களையும் நண்பர்களையும் சந்தித்தேன். அவர்களுடன் அளவளாவியது மிகுந்த சந்தோஷத்தை கொடுத்தது.

அதில் மூத்தாக்குறிச்சான் என்று எங்களால் அழைக்கப்படும் (பெயர்க்காரணம் : அவனது பூர்வீக ஊர் மூத்தாக்குறிச்சி) செந்திலை 10 வருடங்களுக்கு பின் சந்தித்தேன். நானும் அவனும் பால்ய வயதிலிருந்தே நெருங்கிய நண்பர்கள் தூரத்து உறவினரும் கூட. இடையில் அவன் வெளிநாடு சென்று விட்டதால் பார்க்க முடியாமல் போய் விட்டது. 11 வருடத்திற்கு முன் என் மச்சான் சதீஷ் திருமணத்தில் நடக்கும் நண்பர்கள் பார்ட்டிக்காக நாங்கள் இருவரும் வாஞ்சூர் சென்று 25 புல் பாட்டில்கள் (அது காரைக்கால் பக்கமிருக்கும் பாண்டிச்சேரி மாநில எல்லைக்குட்பட்ட கிராமம். எங்கள் பகுதியில் திருமணம், பார்ட்டி என்றால் சரக்கு அங்கு விலை குறைவாக கிடைக்கும் என்பதால் மொத்தமாக வாங்கி வருவது எங்கள் பகுதியில் சாதாரணமான விஷயம்) வாங்கி வரும் போது போலீஸிடம் மாட்டி இரண்டு மொத்து வாங்கிய பிறகு எனது மாமா அந்த ஸடேஷனில் ஏட்டாக இருக்கிறார் என்று கூறிய பிறகும் எங்களிடம் காசு வாங்கிக் கொண்டு வெளியில் விட்டதை யாரிடமும் சொல்லக் கூடாது என்று மறைத்த கதையை பேசி சிரித்துக் கொண்டிருந்தோம்.

அவன் சபரிமலைக்கு மாலை போட்டிருந்தான். அதனால் அன்று சோமபான விருந்தில் அவன் கலந்து கொள்ளாமல் விரைவாக வெளியேறி விட்டான். மீண்டும் பொங்கல் சமயத்தில் சந்தித்து பார்ட்டி வைப்பதாக திட்டம், பார்ப்போம். திருமணத்தன்று மறுவீட்டு அழைப்புக்காக மாப்பிள்ளை ஊரான தம்பிக்கோட்டை செல்ல வேண்டியிருந்ததால் கண்டிப்பாக யாரும் சரக்கடிக்க கூடாது என மணப்பெண்ணின் சித்தப்பாவான பிரபாகரன் அத்தான் கூறி விட்டார். எனவே நாங்கள் நல்லப்பிள்ளைகளாக சாப்பிட்டு விட்டு மீண்டும் மண்டபம் வந்து உறவினர்களிடம் பேசிக் கொண்டிருந்தேன்.

ஆனால் தம்பிக்கோட்டையில் நடந்ததோ...

கல்யாணம் முடிந்து புதுமண தம்பதிகள் மாப்பிள்ளை வீட்டுக்கு பாலும் பழமும் சாப்பிட வேண்டும் என்ற சம்பிரதாயத்திற்காக தம்பிக்கோட்டையில் உள்ள மணமகன் வீட்டுக்கு சென்றனர். உடன் சொந்தக்காரர்கள் குழுவும் சென்றோம். அங்கு சென்றதும் மாப்பிள்ளையின் சகோதரர் குடிகார குழுவுக்கு தனியாக சமிஞ்சை கொடுத்தார். நாங்கள் நால்வர் (நான், என் அத்தை மகன் சதீஷ், சித்தப்பா நீலா, தூரத்து உறவினரும் நண்பருமான சரவணன்) நைசாக நழுவி பின்புறமுள்ள தோப்பிற்கு சென்றோம். அங்கு மாப்பிள்ளையின் சகோதரர் கையில் ஐந்து கலயத்துடன் நின்றிருந்தார். அருகில் சென்று பார்த்தால் அனைத்திலும் பனங்கள். அதனை வாங்கி சுவைத்தால் அடடே என்னே அருமை. பனங்கள் உடன் சைடிஷ்ஷாக திருக்கை கருவாடு வறுவல். அன்றைக்கு சொர்க்கம் அங்கு தான் இருந்தது. கிட்டத்தட்ட ஆறு வருடங்களுக்கு பிறகு கள் அதுவும் சுண்ணாம்போ, மாத்திரையோ சேர்க்காத சுத்தமான பனங்கள். அரை மணிநேரம் அனைத்தையும் முடித்த பிறகு, ஆஹா அந்த அனுபவத்தை சொல்ல முடியாது, நீங்கள் அனுபவிக்கனும். சம்பிரதாய விழா முடிந்த பிறகு நாங்கள் அனைவரும் அங்கிருந்து கிளம்பினோம். மன்னார்குடியில் உள்ள மணப்பெண் வீட்டிற்கு வந்தோம்.

அன்று இரவு அந்த வீட்டில் முதல் இரவுக்கான ஏற்பாடுகள் நடந்தது. வீட்டில் அதிகளவில் வாண்டுகள் இருந்ததாலும், அவர்கள் வேண்டுமென்றே மணப்பெண்ணையும் மாப்பிள்ளையும் கலாய்த்துக் கொண்டிருந்த காரணத்தால் பெரிய அத்தான் அவர்கள் அனைவரையும் காரில் அள்ளிப்போட்டுக் கொண்டு திருவாரூருக்கு சென்று சினிமா பார்த்து வரும்படி கூறினார். அனைவரையும் அழைத்துக் கொண்டு நால்வர் குழு கிளம்பினோம். திருவாரூர் நடேஷ் தியேட்டருக்கு வந்து டிக்கெட் வாங்கி டிரைவருடன் நிற்கச்சொல்லி விட்டு நாங்கள் கிளம்பினோம். மணி அப்போதே 09.45. எனவே சரக்கை வாங்கி அரை லிட்டர் பெப்ஸியில் ஒரு ஆப் வீதம் கலந்து கொண்டு தியேட்டருக்குள் எடுத்துச் சென்றோம்.

படம் துவங்கியதும் நாங்கள் ஆரம்பிக்க, இந்த சின்னப்பசங்க இருக்கானுங்களே எல்லாம் பிஞ்சிலேயே பழுத்தது போல ஐந்து நிமிடத்திலேயே கண்டுபிடித்து விட்டார்கள். நாங்கள் மிக்ஸ் செய்து சரக்கடித்து கொண்டிருப்பதை. அவனுங்க வீட்டில் சொல்லி விடுவேன் என்று பயமுறுத்தியதால் அந்த பசங்களுக்கு ஐநூறு ரூபாய் பணம் கொடுத்து ஏதேனும் திங்க வாங்கிக்கங்கடா என்று தான் சொன்னேன். தியேட்டரில் உள்ள அனைத்து திண்பன்டங்களையும் வைத்துக் கொண்டு தின்றார்கள். ஆனாலும் ஏற்கனவே நான்கு முறை தியேட்டரிலேயே பார்த்தும் எனக்கு கொஞ்சமும் அலுக்காத படம் என்பதால் போராளி ஐந்தாவது முறையாக அங்கு அரங்கேற்றமானது. படம் முடிந்ததும் திரும்பவும் மன்னார்குடி வந்து பசங்களை வீட்டில் இறக்கி விட்டு நால்வர் குழு அருகில் உள்ள மேலவாசலுக்கு அத்தை வீட்டில் உறங்க சென்றோம். என் மனைவி மற்றும் பெற்றோர் மன்னார்குடியிலேயே தங்கி விட்டனர்.

அங்கிருந்து செல்லும் வழியில் சரக்கு போதவில்லை என்பதால் மீண்டும் பேருந்து நிலையம் அருகில் வந்தோம். சதீஷ் அங்கு ஹோட்டல் வைத்திருப்பதால் அவனுக்கு ஏரியா அத்துப்படி. எங்களை அங்கேயே நிற்கச்சொல்லி விட்டு அவர் காரில் சென்று 10 நிமிடம் சென்று வந்தான். கையில் முழு நெப்போலியன் சிரித்தார். பிறகு மேலவாசலுக்கு சென்று நெப்போலியனை கொன்று விட்டு படுத்தோம்.

விடிந்ததும் எழுந்து மன்னார்குடி வந்து என் குடும்பத்தாரை அழைத்துக் கொண்டு திருவாரூர் வந்து சேர்ந்தேன். மறுநாள் பட்டுக்கோட்டையில் மாப்பிள்ளை வீட்டாரின் சார்பில் கறிவிருந்து இருந்தது. மறுநாள் என் குடும்பத்துடன் மன்னார்குடி சென்று மனைவியையும் பெற்றோரையும் அங்கு ஏற்கனவே தயாராக இருந்த பெரிய குழுவுடன் இணைத்துக் விட்டு நான் நால்வருடன் விலகினேன். பிறகென்ன வழக்கம் போல் கிளம்பும் போது VSOபிரகாஷை கொன்று செல்லும் வழியில் வடசேரியில் அதே நண்பர் கிடைக்காததால் நெப்போலியனை கொன்று பட்டுக்கோட்டை சென்றோம். அங்கு அருமையான கறிவிருந்து நடந்து கொண்டிருந்தது. மட்டன் பிரியாணி, சிக்கன் 65, சிக்கன் குருமா, நண்டு பிரட்டல் முட்டை மசாலா. ஆஹா. ஏற்கனவே இருவரை கொன்றதால் சாப்பாடு அருமையாக இருந்தது. விருந்தை முடித்து அங்கிருந்து அனைவரிடமும் விடைபெற்று மீண்டும் திருவாரூர் வந்து அன்றிரவே கிளம்பி சென்னை வந்து சேர்ந்தோம்.

என்ன தான் நாம் பிழைப்புக்காக வெவ்வேறு ஊர்களில் வாழ்ந்து வந்தாலும் இதுபோன்ற விஷேசங்களுக்காக ஒன்று கூடும் போது தான் தெரிகிறது. உண்மையான மகிழ்ச்சி என்பது உறவினர்களுடன் இருக்கும் போது தெரிகிறது. இது போன்ற மகிழ்ச்சிகள் தான் மனிதன் என்னும் மிருகத்தை மனிதனாக நடமாட உந்தித் தள்ளிக் கொண்டிருக்கிறது. திருமணத்திற்கு முன்பெல்லாம் நான் அநேக விஷேசங்களுக்கு செல்ல மாட்டேன். நான் வேலை பார்த்தது ஒரு தனியார் கட்டுமான நிறுவனம். அதன் பொது மேலாளார் எனக்கு தீபாவளி, பொங்கலுக்கு கூட விடுமுறை கொடுக்க மாட்டார். என் பெற்றோர் மட்டும் செல்வர். இப்பொழுது குடும்பஸ்தன் என்பதால் அனைத்து குடும்ப விஷேசங்களுக்கும் சென்றாக வேண்டிய கட்டாயம். ரொம்ப நெருக்கமாக இல்லாமல் சிறிது இடைவெளி விட்டு சந்திப்பதனால் கூட உறவினர்களுடன் நெருக்கம் அதிகமாக காரணமாக இருக்கலாம்.

நண்பர்களுடன் இருக்கும் போது மகிழ்ச்சி அது வேறு விதமாக இருக்கும். அது பாதுகாப்பில்லாதது. வண்டியை வேகமாக ஒட்டத்தூண்டும். ஆற்றில் டைவ் அடிக்கும் போதும். உள்நீச்சல் அடிக்கும் போதும் குடித்து விட்டு கலாட்டா செய்யும் போதும் பிறகு யோசித்து பார்த்தால் மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் உறவினர்களுடன் இருக்கும் போது வரும் மகிழ்ச்சி பாதுகாப்பானது. இதுக்கு மேல் சொன்னால் எனக்கே நெஞ்ச நக்குற மாதிரி இருக்கு, எனவே இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

நன்றி

ஆரூர் முனா

No comments:

Post a Comment