2003 - 04ல் சென்னை வீராணம் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் போது அந்த காண்ட்ராக்ட் நிறுவனத்தில் நான் நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்த சமயம் நடந்த சம்பவம்.
பொதுவாக கட்டுமான பணியில் இருப்பவர்களைப் பற்றி மற்ற துறை நண்பர்கள் வாத்துக்கூட்டமும் நீங்களும் ஒண்ணுதாண்டா என்றே கிண்டல் செய்து கொண்டு இருப்பார்கள். அதாவது ஒரு புராஜக்ட் முடிந்ததும் அடுத்த புராஜக்ட்டுக்காக வேறொரு ஊருக்கு இடம் மாறுவதை குறித்து சொல்வது. நண்பர்களாயிற்றே என்று பல்லைக் கடித்து பொறுத்துக் கொள்வேன்.
அது போலவே வீராணம் திட்டத்தில் தாம்பரம் போரூர் பைபாஸ் சாலையில் குழாய்கள் அமைப்பதற்காக ஒரு டீம் ஆந்திராவில் உள்ள ஸ்ரீக்காகுளத்தில் இருந்து சென்னை வந்து சேர்ந்தது. அவர்களுக்காகவும் தற்காலிக அலுவலகம் அமைக்க வேண்டியும் பம்மலில் ஒரு பெரிய பங்களா டைப் வீடு வாடகைக்கு எடுக்கப்பட்டது.
பம்மல் அலுவலகத்திற்கு உட்பட்ட டீமில் பாதிக்கும் மேல் ஸ்ரீக்காகுளம் பகுதியில் முன்பே ஒரு டீமாய் பணிபுரிந்த குழுவினர்கள் தான். 20 மராட்டியர்களும் சொற்பமாய் தமிழர்களும் இடம் பெற்று இருந்தோம். வீராணம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கடைசி காலக்கட்டத்தில் வேலைகள் கடுமையாக இருந்தது. குறிப்பிட்ட வேலைநேரம் என்பது முடிவே கிடையாது என்று நிறுவனத்தில் சார்பில் அறிவுறுத்தப்பட்டதால் எல்லா பொறியாளர்களும் ஒரு நாளைக்கு 18 மணிநேரமாவது சைட்டில் இருக்கும்படி ஆனது.
24 மணிநேரமும் எல்லோரும் ஒன்றாகவே இருக்கும்படி ஆனதால் நட்புக்குள் நெருக்கம் அதிகரித்தது. ஆனால் சின்னச் சின்ன பிரச்சனைகளும் ஆரம்பித்தது. இவ்வளவு பேர் ஒன்றாக இருந்தாலும் அனைவருக்கும் சேர்த்து ஒரு கேன்டீன் தான் அமைக்கப்பட்டு இருந்தது. நிர்வாகப் பொறுப்பு தமிழர்கள் வசம் இருந்தது.
காலை உணவாக இட்லி, தோசை, பொங்கல் என நாங்கள் தீர்மானித்து உணவுகள் பறிமாறப்பட்டு வந்தது. சில வாரங்களுக்கு பிறகு மராட்டியர்கள் காலை உணவாக பொகா தான் வேண்டும் என்று பிரச்சனை செய்தார்கள். பொகான்னா ஒன்னுமில்லைங்க. அவல் உப்புமாவை ஒரு ரகமாக செய்வார்கள். மராட்டியம், மத்திய பிரதேசம் பகுதிகளில் அது தான் காலை பிரதான உணவு. ஆந்திராக்காரன் அவன் பங்குக்கு பெசரட்டு தான் வேண்டுமென்று என்று பிரச்சனை செய்து கொண்டு இருந்தான்.
எல்லா பிரச்சனைகளும் காலை உணவில் ஆரம்பித்து இரவு உணவு வரை நடந்து கொண்டு தான் இருந்தது. ஆனால் இரவு நேர மகா தியானங்கள் எல்லா பிரச்சனைகளையும் மறக்க வைத்து நட்பை பலப்படுத்திக் கொண்டு இருந்தது.
சுதந்திர தினம் பற்றி பேச்சு வந்தது. ஒரு நாள் நிறை போதையில் கொண்டையா எனும் பொறியாளர் ஸ்ரீக்காகுளத்தில் செய்தது போல் இனிமேல் நாம் வாரம் ஒரு நாள் சுதந்திர தினம் மேற்கொள்ள வேண்டும் என்று பிரகடனம் செய்தான். நாமளும் மப்பில் ஆப்பாயில் மேல் சத்தியமெல்லாம் செய்தாயிற்று. அதன் அர்த்தம் என்னவென்றே தெரியாமல்.
மறுநாள் சனிக்கிழமை குளித்து உடை மாற்றி ரூமில் இருந்து வெளியே வந்தால் வர்றவனையெல்லாம் செக் செய்து கொண்ருந்தார்கள், ஸ்ரீக்காகுளம் புராஜக்ட்டில் ஏற்கனவே இருந்த தெலுகுகாரர்கள். என்னவென்று பார்த்தால் வாரம் ஒரு நாள் சுதந்திரமாக இருக்க வேண்டுமாம். அதாவது வெறும் சட்டை பேண்ட் மட்டும் தான். உள்ளே எதுவும் போடக் கூடாதாம்.
அடப்பாவிகளா என்று ரெண்டு வாரம் சனிக்கிழமை பக்கம் அவனுங்கங்களை தவிர்த்து விட்டு அதிகாலை கிளம்பி ஏதாவது காரணம் சொல்லி திருக்கழுக்குன்றத்தில் இருந்த புராஜக்ட் ஹெட் ஆபீஸ்சுக்கு போய் ஏமாற்றிக் கொண்டு இருந்தேன்.
ஒரு சனிக்கிழமையன்று மாட்டிக் கொண்டேன். காலையில் கிளம்பும் முன்னே பிடித்துக் கொண்டார்கள். டேய் வேண்டாம்டா, அசிங்கம்டா, விடுங்கடா என்று கெஞ்சிப் பார்த்தேன். மிரட்டிப் பார்த்தேன். ஒன்னும் வேலைக்காகலை. வேற வழியில்லாமல் நானும் சுதந்திர தினத்தில் பங்கு பெற வேண்டியதாயிற்று.
நாம் எல்லோரும் வீடு விட்டு மாநிலம் விட்டு வேறொரு இடத்தில் வாழ்கிறோம், இந்த மாதிரி எதாவது கிண்டலாக செய்து அதை நாம் ஒற்றுமையாக ஏற்றுக் கொண்டால் நட்பு பலப்படும், ஹோம் சிக் வராது என்று அதை இதை சொல்லி தொடர வைத்தார்கள். நாளாக நாளாக நல்லாத்தான் இருந்தது. என்ன சனிக்கிழமையா பார்த்து டார்க் கலர் பேண்ட் தான் போட்டாகனும். இல்லைனா உச்சா போயிட்டு ......
சனி வந்தால் கிண்டலும் கேலியும் மகிழ்ச்சியும் கூடியது. குழாய் பதிக்கப்படும் சாலையில் சுதந்திர தினம் கொண்டாடுபவர்கள் சந்தித்துக் கொண்டால் ஒரு குதி குதித்துக் காட்ட வேண்டும். எதுவும் போடவில்லை என்பதற்காக குறியீடாம். எல்லாம் செஞ்சோம் ஜாலியாக அந்த வயதில்.
எல்லாம் நன்றாகத்தான் போய்க் கொண்டு இருந்தது. அதற்கும் வில்லங்கம் வந்தது. ஒரு விபத்து வடிவில். எங்களுடன் இந்த குழுவில் வசந்த் என்று ஒரு பையன் சிவில் இஞ்சினியராக இருந்தான். பழனியை சேர்ந்தவன்.
பஜாஜ் எம்80 வண்டியில் சைட்டுக்கு போய் விட்டு திரும்பும் வழியில் டாடா 709 வண்டியில் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டு விட்டது. போனில் விவரம் வந்து நான் உடனடியாக அங்கு சென்றேன். வசந்துக்கு இரண்டு கால் தொடைகளிலும் எலும்பு முறிவு ஏற்பட்டு இருந்தது. உடனடியாக காரில் ஏற்றி அவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம்.
மருத்துவரும் செவிலியர்களும் அவனைச் சுற்றி இருந்தனர். மருத்துவர் என்னை அழைத்து அவன் பேண்ட்டை மெதுவாக கழட்டச் சொன்னார். வசந்தோ எனக்கு உள்ளே எதுவும் போடவில்லை என சைகை செய்தான்.
கடைக்கு போய் ஒரு லுங்கியை வாங்கி வந்து அதனை சுற்றி பிறகு பேண்ட்டை கழற்ற முற்படும் போது மருத்துவர் கேட்டார் என்னப்பா ஜட்டி போடலையா.
சுற்றியிருந்தவர்கள் கொல்லென சிரித்து விட அசிங்கமாக போய் விட்டது. நாளைக்கு எனக்கு எதாவது நடந்தால் கூட எனக்கும் இது தான் நிலையா என்று யோசித்தேன். பட்டென்று வண்டியை எடுத்து நான் மட்டும் தனியே எங்கள் கெஸ்ட் அவுசுக்கு சென்று எல்லாத்தையும் மாட்டி கொண்டு தான் திரும்ப மருத்துவமனைக்கு சென்றேன்.
சுதந்திரமாவது வெங்காயமாவது. மானம் தான் முக்கியம்
ஆரூர் மூனா