Sunday 2 August 2015

பிரபல பின்னூட்டப் புலி பதிவராவது எப்படி - பழசு மார்ச் 2013

புதிதாக பதிவு எழுத வந்திருக்கும் பதிவர்களுக்கு உபயோகமாக இருக்குமே என்று முதலில் பிரபல பதிவராவது எப்படி என்ற பதிவை நமது தோத்தவண்டா வலைத்தளத்தில் பார்த்திருப்பீர்கள்.


அதற்கு அடுத்த கட்டமாக இலக்கிய ஒளிவட்ட பதிவராவது எப்படி என்றும் பார்த்திருப்பீர்கள். இவற்றை பயன்படுத்தி தமிழின் முன்னணி பதிவராக உருவெடுத்திருக்கும் பதிவுலக நண்பர்களே அடுத்த கட்டமாக பின்னூட்ட புலியாவது எப்படி என்று இந்த கட்டுரையில் உங்களுக்கு விளக்குகிறேன்.

இதனை பயன்படுத்தி நீங்கள் புலி மட்டுமல்ல மாட்டும் எலிகளையும் அடித்து விளையாடலாம். இதற்கு நீங்கள் பார்க்கப் போவது முதல் பாடம். நாம் எல்லோருக்கும் போய் பின்னூட்டம் போடுவது பற்றி பிறகு பார்க்கலாம்.

நாம் என்று பதிவு எழுதுகிறோமோ அன்று யாரெல்லாம் பதிவு எழுதியிருக்கிறார்களோ அவர்களது பதிவில் போய் மொக்கையாக ஒரு பின்னூட்டம் இட வேண்டும். அடுத்த பின்னூட்டமாக இன்று என் வலையில் என்று போட்டு தங்களது பதிவை பகிர வேண்டும்.

இந்த கட்டத்தில் நாம் கொஞ்சம் உசாராக இருக்க வேண்டும். ஏனென்றால் இது கொஞ்ச காலத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும். அதன்பிறகு மற்றவர்கள் கடுப்பாகி நம்மை திட்டி விட வாய்ப்புண்டு. அவர்கள் அந்த கட்டத்திற்கு வருவதை அறிந்தவுடன் நாம் அவர்களுக்கு இது போன்ற டெம்ப்ளேட் கமெண்ட் போடுவதை நிறுத்தி விட வேண்டும்.

அடுத்ததாக ஓட்டுக்கு பின்னூட்டம். ஒரு 10 பேரை தேர்வு செய்து கொள்ள வேண்டும். இவர்களுக்கான தகுதிகள் பதிவை ரசிக்கும்படி எழுதத் தெரியாமல் பிரபலப்படுத்த மட்டுமே தெரிந்தவர்கள். இதற்கு நீங்கள் ரொம்ப சிரமப்பட வேண்டியதில்லை. ஏதாவது ஒரு பதிவரை மட்டும் பிடித்தால் போதும் அவருக்கு வரும் பின்னூட்டத்தின் மூலமாகவே மற்ற பதிவர்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

இந்த பத்து பேருடைய பதிவும் எப்படியும் சொல்லிக் கொள்வது போல் இருக்காது. ஆனாலும் டெம்ப்ளேட்டாக அருமை, அசத்தல், தொடருங்கள் நன்றி என்று கமெண்ட் போட வேண்டும். பிறகு அவர்களுக்கு ஒரு ஓட்டு போட்டு த.ம 4, கூ.பி 201 என்று பின்னூட்டத்தில் அறிவித்து விட வேண்டும்.

இவ்வாறு செய்தால் அவர்களுக்கு நீங்கள் பின்னூட்டமும் ஓட்டும் போட்டது தெரிந்து அவர்களும் இது போலவே உங்களுக்கும் ஓட்டு போடுவார்கள். நீங்கள் சற்று பிரபலமாவீர்கள். ஆனால் இதிலும் ஒரு பிரச்சனை சில நாட்களில் இந்த குழுவைத் தவிர மற்ற பதிவர்களுக்கு நீங்கள் ஜல்லியடிக்கும் பார்ட்டி என்று தெரிந்து விட வாய்ப்புண்டு. இருந்தாலும் அவற்றையெல்லாம் உதறி விட்டுக் கொண்டால் பின்னூட்ட புலி தான்.

மூன்றாவது பாடம் ஆங்கிலத்தில் பின்னூட்டமிடுவது இந்த வகைப் பதிவரின் பெயரை மட்டும் நான் தைரியமாக சொல்லலாம். நான் என்ன செய்தாலும் பொறுத்துக் கொள்ளும் நெருங்கிய நண்பர் அவர். இந்த கமெண்ட் மட்டும் அலை பேசியில் இருந்து போட வேண்டும்.

அவ்வளவு என்பதைக் கூட Avvvvvvvvvvalavvvvvvu என்று போட வேண்டும், படிக்கிறவன் டென்சனாக வேண்டும். இதை படிக்க முடியாமல் ஆக்ஸ்போர்ட் டிக்ஸ்னரியை தேடி ஓட வேண்டும். இதனால் உங்கள் பின்னூட்டத்தை பார்த்த பிறகு பதிவெழுதியவர் கதற வேண்டும்.

அடுத்த பாடம் வம்பிழுப்பது. இதற்கு முதல் வேலையாக அண்ணாச்சி கடைக்கு போய் விளக்கெண்ணெய் வாங்கி வர வேண்டும். கண்ணில் இரண்டு சொட்டு விட்டுக் கொண்டு பதிவினை படிக்க வேண்டும். ஒரு பிழை காண நேர்ந்தால் அதனை குறிப்பிட்டு கிண்டலாக பின்னூட்டமிட வேண்டும்.

அவருக்கு கோவம் வந்து விளக்கம் கொடுக்கும் போது ஹி ஹி என்று இளித்து விட்டு ஜகா வாங்கி விட வேண்டும். எழுத்துப்பிழைக்கு இதற்கு மேல் வாக்குவாதம் செய்ய வேண்டாம்.

இது கடைசி மற்றும் முக்கிய பாடம், பிரபல பதிவர்களை குறி வைக்க வேண்டும். அவர்கள் போடும் எல்லாப் பதிவுக்கும் கண்டனப் பின்னூட்டம் போட வேண்டும். சினிமா விமர்சனம் போட்டிருந்தால் அதில் போய் "உனக்கு படம் பார்க்கவே தெரியவில்லை, அட்டு விமர்சனம்" என்று போட வேண்டும்.

அவர்கள் கடுப்பாகி பதில் அளித்தால் மறுபடியும் கோவப்படுத்துவது போல் பதிலளிக்க வேண்டும். பிறகு அந்த பின்னூட்டத்தையெல்லாம் ஸ்கிரீன் ஷாட் எடுத்து நாம் ஒரு பதிவு போட்டு ஹிட்ஸ் தேத்த வேண்டும். சண்டை போட்டே பரபரப்பான பதிவர் ஆகி விடலாம்.



ஆரூர் மூனா

No comments:

Post a Comment