Sunday, 2 August 2015

திருவாரூர் பயணம் - பழசு பிப்ரவரி 2013

ஆறு நாட்களாக திருவாரூரில் ஜாகை, இன்று இரவு தான் சென்னைக்கு கிளம்புகிறேன். ஒரு முக்கிய கல்யாணம், மிக முக்கிய சாவு என ஆறு நாட்களும் ஒரு நிமிடம் கூட ஓய்வெடுக்க முடியாத அளவுக்கு பிஸியோ பிஸி. நாளை சென்னை வந்து இரண்டு நாட்கள் ஒய்வெடுத்தால் தான் உடம்பு சமநிலைக்கு வரும் போல.
ஒன்று விட்ட சகோதரனுக்கு திருமணம், மணப்பெண் எங்க ஊர் என்பதாலும் திருமணத்தை முன்நின்று முடித்தவர் என் அப்பா என்பதாலும் அனைத்து திருமண வேலைகளையும் நாங்களே பார்க்க வேண்டியதாயிற்று.
நாம் சரக்கடிக்காமல், சரக்கடித்த பசங்களுடன் ஒன்று சேர்ந்து திருமணத்திற்கு முன்தின பேச்சிலர் பார்ட்டியை அட்டெண்ட் செய்வதில் இருக்கும் கடுப்பு இருக்கே, அப்பப்பா அதை சொல்லி மாளாது. சில்வண்டு வரைக்கும் ஊறுகாய் எடுத்துத் தரச் சொல்லி கொடுக்கும் டார்ச்சர் இருக்கிறதே, தொண்டை வரைக்கும் கெட்ட வார்த்தைகள் வந்து நிற்கிறது.

விடியற்காலை நாலு மணி வரை குடித்தவனுங்கள் எல்லாம் அதன் பிறகு நகர்வலம் வர ஆரம்பிக்க அதில் சிலரை போலீஸ் விசாரித்து கொண்டிருந்தது. பிறகு அங்கு சென்று விளக்கம் கொடுத்து அவர்களை மீட்டு வந்து அறைக்குள் அடைப்பதற்குள் டங்குவார் அறுந்து விட்டது.
எல்லாரையும் ரூமுக்குள் அடைத்து விட்டு நான் வந்து வீட்டில் படுக்கும் போது மணி 5. 6 மணிக்கெல்லாம் திருமணத்திற்கு செல்ல தயாராக வேண்டுமென்று எழுப்பி விட்டார்கள். திருமணத்திற்கு கிளம்பிக் கொண்டு இருக்கும் போது ஊரிலிருந்து போன் வந்தது என் தாத்தா (அம்மாவின் அப்பா) இறந்து விட்டாரென.

பிறகு அம்மாவை மட்டும் காரில் ஊருக்கு அனுப்பி வைத்து விட்டு மற்றவர்கள் எல்லாம் திருமணத்திற்கு சென்றோம். அப்பா முன்நின்று நடத்தி வைக்கும் திருமணமென்பதால் தாலி கட்டும் வரை மண்டபத்தில் இருந்து விட்டு பிறகு நாங்களெல்லாம் கிளம்பி தாத்தா ஊரான நீடாமங்கலம் அருகில் இருக்கும் ஆதனூருக்கு சென்றோம்.
தாத்தா பாட்டிகளில் மிச்சமிருந்த கடைசி நபர் இறந்து விட்டார். இனி யாரும் கிடையாது. கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு பிறகு ஊருக்குள் சென்றேன். கடைசியாக நான் வளர்ந்த கிராமத்தை கண்கலங்க பார்த்துக் கொண்டே சென்றேன்.
என் தாய்மாமா மொத்தம் 4 பேர். இவர்களில் மூவருடன் பேச்சு வார்த்தை கிடையாது என்பதால் ஊர்பக்கம் வருவதே நின்று விட்டு இருந்தது. தாத்தாவிற்கு காரியங்கள் நடைபெறும் வரை இருந்து விட்டு சுடுகாட்டில் கொள்ளி வைத்ததும் அப்படியே திருவாரூருக்கு கிளம்பி வந்தாச்சு.
நேற்று காலை பால் தெளிப்பு. நானும் தம்பியும் மட்டும் சென்றோம். சுடுகாட்டிற்கு சென்றுவிட்டு பால் தெளிப்பு முடிந்ததும் அப்படியே கிளம்பி விட்டோம். 
நேற்று மதியம் ஒன்று விட்ட தம்பியின் திருமணம் முடிந்து பெண் வீட்டில் கறிவிருந்து. சிலபல குடிகள், சண்டைகள், சமாதானங்களுக்கிடையே பிரியாணியை ருசித்து விட்டு வீட்டுக்கு வந்தாச்சு. 
இன்று பட்டுக்கோட்டையில் மணமகன் வீட்டில் கறிவிருந்து. கிளம்பிக் கொண்டு இருக்கிறேன். அங்கு செட்டிநாட்டு சமையல், அதையும் வெளுத்து வாங்கி விட்டு திரும்ப திருவாரூருக்கு வரவேண்டும். இரவு ரயிலில் கிளம்பி சென்னைக்கு வந்து வழக்கமான வாழ்க்கை முறைக்கு பழக இரண்டு நாள் ஆகி விடும்.
இது போன்ற திருமணங்கள், சாவுகள், கொண்டாட்டங்கள், சின்னச் சின்ன சண்டைகள் தான் இன்னும் என்னைப் போன்ற மனிதர்களை வாழ்வியலுடன் பிணைத்து வைத்திருக்கிறது. இல்லையென்றால் ரோபோ வாழ்க்கை தான் வாழ்ந்தாக வேண்டும்.
அறியாத தகவலையும் அரிய புகைப்படத்தையும் தேடி நீங்கள் வந்தால் அது படிப்பவர்களை உள்ளே வர பிரபல பதிவர்கள் செய்யும் முயற்சி என்பதை நான் சொல்லி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா என்ன.


ஆரூர் மூனா

No comments:

Post a Comment