Sunday 9 August 2015

கதறக் கதற பாதி வரை பார்த்த தமிழ் - பழசு ஏப்ரல் 2013

கடந்த சனியன்று திருமதி தமிழ் படத்திற்கு போவதற்காக முன்பே சிவா என்னிடம் கேட்டுக் கொண்டார். நானும் கேட்ட சமயத்தில் வேலை இல்லாததால் ஒத்துக் கொண்டேன். மறுநாள் என் தம்பி ஒரு வேலை காரணமாக சனியன்று திருவாரூரிலிருந்து வருவதாக தகவல் வந்தது.


இருந்தாலும் சிவாவுக்காக காலையில் அந்த வேலையை வைத்துக் கொண்டு மதியம் சினிமாவுக்கு போகலாம் என்று முடிவு செய்தேன். வெள்ளியன்று மேலும் ஒருவர் திருவாரூரிலிருந்து வருவதாக தெரிய வரவே சிவாவுக்கு போன் போட்டு இன்னும் ஒரு டிக்கெட் கூடுதலாக எடுக்க வேண்டும் என்றேன்.

சிவாவோ சீனு முன்பே டிக்கெட் எடுத்து விட்டான். வேணுமென்றால் நாம் கவுண்ட்டரில் நேரடியாக டிக்கெட் எடுத்துக் கொள்ளலாம் என்றார். அதன் படி முடிவு செய்து சனியன்று நானும் இன்னும் இரு தம்பிகளும் திருநின்றவூர் சென்று அந்த வேலையை முடிக்கவே 12.30 ஆகி விட்டது.

ஊரிலிருந்து வந்தவர்களோ திருவாரூரில் குடிக்க குடும்பத்தினர் தடா போட்டிருப்பதால் கண்டிப்பாக இங்கு குடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். வேறு வழியில்லாமல் நானும் இணைந்து திருநின்றவூரிலேயே ஒரு அளவுக்கு சுருதி ஏற்றிக் கொண்டோம். அங்கிருந்து ரயிலில் ஏறி சென்ட்ரலில் இறங்கும் போது 2.30 ஆகியிருந்தது.

எங்களுடன் நண்பன் அசோக் இணைந்து கொண்டான். சுருதி இறங்கிப் போனதால் மீண்டும் ஏற்ற வேண்டும் என்று அடம் பிடிக்கத் தொடங்கினர். சென்ட்ரலில் இருந்து கால் டாக்ஸி பிடித்து ராயப்பேட்டை மணிக்கூண்டு அருகில் இறங்கிக் கொண்டு மறுபடியும் கச்சேரி ஆரம்பித்தது. செல்வின் போன் செய்து இருப்பிடம் அறிந்து எங்களுடன் இணைந்து கொண்டார்.

எல்லாத்தையும் முடித்து விட்டு திரையரங்கு செல்வதற்குள் படத்தை போட்டிருந்ததால் பதிவர் குழுவினர் படம் பார்க்க உள்ளே சென்றிருந்தனர். ஏகப்பட்ட போதையுடன் ஐவர் குழு (நான், செல்வின், என் தம்பி பிரபு, ஒன்று விட்ட தம்பி மணி, நண்பன் அசோக்) உள்ளே நுழைந்தோம்.

இரண்டு டிக்கெட் கூடுதலாக எடுத்தோம். படம் போட்டு 15 நிமிடம் கழித்து நுழைந்த எங்களுக்கு B வரிசை. இரண்டு நாட்களுக்கு முன்பு முன்பதிவு செய்த குழுவுக்கு D வரிசை. என்ன வாழ்க்கைடா இது.

நுழைந்ததும் நான் பார்த்த காட்சி பாதி போதையை சர்ரென இறக்கி விட்டது. பின்னே உடல் முழுவதும் சேற்றை பூசிக் கொண்டு ராஜகுமாரன் பஞ்ச் டயலாக் பேசியதை பார்த்ததும் இறங்கவில்லையென்றால் போதைக்கு என்ன மரியாதை.

முன் வரிசையில் பதிவர் குழு அமர்ந்திருக்க பின் வரிசையில் ஐவர் குழு அமர்ந்திருந்தது. போதை இறங்கியதும் அனைவருக்கும் பசிக்க ஆரம்பித்தது. கூட இருந்தவர்கள் தாறுமாறாக கத்தத் தொடங்கினார்கள்.

படம் போட்டு 15 நிமிடம் கழித்து தான் உற்று நோக்கினேன். தியேட்டரில் அமர்ந்திருந்தவர்களில் பாதிப் பேர் மட்டையாகி இருந்தார்கள். மீதி பேர் தனிமை தேடி வந்த காதல் ஜோடிகள்.

அரைமணி நேரத்தில் என்னுடன் வந்திருந்தவர்கள் படம் பார்த்த கடுப்புடன் பசியும் சேர்ந்து கொள்ள சத்தம் போட ஆரம்பித்தார்கள். என்னை நாலு நாள் பட்டினி கூட போடு ஆனால் படத்தை விட்டு வெளியேறலாம் என்று கெஞ்ச ஆரம்பித்தார்கள்.

ஐவர் குழுவில் மூவரை மட்டும் வெளியேச் சொல்லி விட்டு நானும் செல்வினும் மட்டும் அமர்ந்து படம் பார்க்க ஆரம்பித்தோம். அவர்கள் விட்டால் போதுமென்று காலில் விழுந்து வெளியேறி வெறியை தீர்க்க ஸ்பென்சர் பிளாசாவில் உள்ள பாருக்குள் தஞ்சமடைந்தார்கள்.

அதன் பிறகு தான் எனக்கு சோதனையே ஆரம்பித்தது. பின்னே படத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்தால் என்ன ஆகும். ராஜகுமாரன் பீடி அடித்து கறுத்துப் போன அந்த உதட்டில் என் தலைவன் ராமராஜனை விட இரண்டு மடங்கு உதட்டுச்சாயம் பூசிக் கொண்டு வந்தால் என்ன நடக்கும், எனக்கு ஏழரை தான் தொடங்கும்.

கத்தினேன், கதறினேன் அரங்கில் கேட்பாரில்லை. பின்னே நான் மட்டும் வெளியே சென்று விட்டால் அவர்களின் கொடுமையை பங்கு போடுவது யார். என்னுடன் வந்தவர்கள் சந்தோஷமாக ஸ்பென்சரில் அனுபவித்துக் கொண்டிருக்க நான் மட்டும் விழி பிதுங்கி இருந்த கொடுமையை யாரிடம் சொல்லி கதற.

இன்டர்வெல் விட்டதும் ஒரே தாவில் வெளியில் வந்தோம். எங்களைத் தவிர வேறு யாரும் அரங்கை விட்டு வெளியே வரவில்லை. படம் பார்த்த பாதிப்பு தான். நாங்கள் மட்டும் குரூப் போட்டோ எடுத்துக் கொண்டு இருந்தோம். நானும் செல்வினும் தான் சற்று டரியலாக இருந்தோம்.

போட்டோ செஷன் முடிந்ததும் நானும் செல்வினும் வெளியேறுவதாக சொல்ல எங்களுடன் வெளியில் வருவதாக கணேஷூம், அரசனும் சொன்னார்கள். ஆனால் எங்களை கட்டுப்படுத்த முடியாத சிவா அவர்கள் இருவரையும் கதறக் கதற உள்ளே இழுத்துச் சென்றார்.

அந்தகூபம், கும்பிபாகம் போன்ற தண்டனைகளை அனாயசமாக தாண்டிய  நான் இந்த கொடுமையை தாங்க முடியாமல் நெருப்பில் விழுந்த புழுவைப் போல் துடித்ததை ரசித்த சிவா எங்கிருந்தாலும் வாழ்க.

ஆரூர் மூனா

No comments:

Post a Comment