Sunday 9 August 2015

மாமா பொண்ணுங்க எல்லாம் தேவதைகளே - பழசு ஏப்ரல் 2013

2003ல் நண்பன் சாம்பு சுமதியை அழைத்துக் கொண்டு சென்னையில் நான் இருந்த பேச்சுலர் ரூமுக்கு வந்தான். சாம்பு எனது பள்ளிக்கால நண்பன். சுமதி அவன் மாமன் மகள். எனக்கு கூட பள்ளிக் காலத்திலிருந்தே தோழி தான்.


சிறுவயதில் எப்பொழுதும் சண்டைப் போட்டுக் கொண்டு இருந்த இருவரும் காதலித்து அந்தஸ்து பேதம் காரணமாக ஊரை விட்டு ஓடி வந்தது எனக்கு பெரும் ஆச்சரியம் தான். அம்பத்தூர் பதிவு அலுவலகத்தில் திருமணம் செய்து வைத்தேன்.

ஊருக்கு திரும்பி சொந்தமாக ஜெராக்ஸ் கடை வைத்தவன் இன்று பிளக்ஸ் கடை, ரீசார்ஜ் கடை என ஏகத்துக்கும் வளர்ந்து விட்டான். ஆனால் பயந்தாங்கொள்ளியான அவன் தைரியமாக ஊரை விட்டு ஒடி வந்தது பற்றி ஒரு போதைப்பின்னரவில் கேட்ட போது சொன்னான் "என் மாமா பொண்ணு தேவதைடா".

இது சாம்புவுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் உண்டு. பால்ய வயதில் ஒரு பெண்ணை கிளர்ச்சி காரணமாக சைட் அடிப்பதற்கும் பிறந்த காலத்திலிருந்து ஆண் பெண் வித்தியாச மில்லாமல் விளையாடி சண்டை போட்டு பிறகு கிண்டல் பேச்சை மட்டும் வளர்த்து பதிண்வயதில் சைட் அடிக்கும் போது கிடைக்கும் இன்பமே அலாதி தான்.

எனக்கு பாமா என்றொரு மாமன் மகள் இருந்தாள். கிராமத்தில் இருந்த அவள் வீட்டுக்கு விடுமுறைக்கு செல்லும் போது எல்லாம் அவளுடன் தான் விளையாடுவேன். நொண்டி ஆட்டம், கண்ணாமூச்சி முதல் விவரம் அறியா அப்பா அம்மா விளையாட்டு வரை.

அந்த வயதிலும் எனக்கு அவளைப் பற்றி தான் கனவு வரும். எங்கு சென்றாலும் நாங்கள் ஒன்றாகவே சுற்றித் திரிந்தோம். திடீரென ஒரு நாள் மாமாவுக்கு அத்தைக்கும் சண்டை வந்து அத்தை குழந்தைகளை தூக்கிக் கொண்டு அவரது அம்மா வீ்ட்டிற்கு சென்று விட்டது.

பல நாட்கள் அவளது நினைவு வந்து நாள் செல்ல செல்ல அவளது நினைவே மறந்து விட்டது. 20 வருடம் கழித்து என் வீட்டு பாட்டி இறந்த போது சாவு வீட்டிற்கு வந்திருந்தாள் தன் குழந்தையை தூக்கிக் கொண்டு. அவளது தாய் மாமனுக்கே திருமணம் செய்து வைத்து விட்டார்களாம். வருத்தத்தில் இரண்டு நாட்கள் குடித்துக் கொண்டே இருந்தேன்.

எனக்கு பெரிய மாமன் மகள் ஒருத்தி இருந்தாள். என்னை விட 8 வயது பெரியவள். அவளுக்கு அம்மா கிடையாது. என் வீடு இருந்த தெருவிலேயே அவர்கள் வீடும் இருந்தது. என் அம்மாவுடன் அரட்டை அடித்துக் கொண்டு எப்பொழுதும் எங்கள் வீட்டிலேயே இருப்பாள். நாள் பள்ளிக்கு சென்று வந்தால் என்னை வம்பிழுப்பது மட்டுமே அவளது வேலை.

எனக்கு பத்து வயது இருக்கும் போது தான் எங்கள் வீட்டில் கேரம் போர்டு விளையாடுவோம். அதை விளையாடவென்றே ஒரு கூட்டம் எங்கள் வீட்டில் ஜெ ஜெ வென்று இருக்கும். ஒவ்வொரு ஆட்டத்திலும் நாளும் அவளும் மட்டுமே நிரந்தரமாக இருப்போம், மற்றவர்கள் மட்டும் சுழற்சி முறையில்.

அவள் விளையாடுவது பார்க்கவே அவ்வளவு அருமையாக இருக்கும். ஆள்காட்டி விரலை கட்டை விரலால் பிடித்துக் கொண்டு மூன்று விரல்களையும் தூக்கிக் அடிப்பதை பார்க்கவே அவ்வளவு ஆசையாக இருக்கும். ஆனால் அதற்கு மேல் எனக்கு விவரம் தெரியாது.

ஒரு நாள் அம்மாவுடன் அவள் பேசிக் கொண்டு பயிறு உடைத்துக் கொண்டு இருக்கும் போது அம்மா பசிக்கிறது என்று அழுது ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்த போது என்னை கட்டிக் கொண்டு "என்னைக் கல்யாணம் பண்ணிக்கோடா நான் உனக்கு சமைத்துப் போட்டுக் கொண்டே இருப்பேன்" என்றாள். எனக்கு அம்மா கொண்டு வந்த சாப்பாடு முக்கியமாக இருந்ததால் போடி என்று திட்டி விட்டு வந்து விட்டேன்.

சில வருடங்களுக்கு பிறகு அவளுக்கு ஒரு அமெரிக்க மாப்பிள்ளையுடன் திருமணம் நிச்சயமானது. திருமணத்திற்கு பிறகு சமைக்க வேண்டியிருக்கும் என என் அம்மாவிடம் சமையல் கற்று வந்தாள்.

ஒரு நாள் என் அம்மாவிடம் ஏன் அத்தை எனக்கு முன்பே செந்திலை பெத்திருந்தால் நான் கல்யாணம் பண்ணிக் கொண்டு உங்களுடனே இருந்திருப்பேனே என்று கிண்டல் செய்யவும் என் அம்மா போடி குந்தாணி என்று கிண்டல் செய்தார்கள். எனக்கு 12 வயது என்பதால் நடந்தது புரிந்ததும் புரியாதுமாகவே இருந்தது.

திருமணம் முடிந்த அன்று என் வீட்டுக்கு வந்து எங்கள் வீட்டு பூஜையறையில் தம்பதி சகிதம் விழுந்து வணங்கினார்கள். நான் கொல்லைப்புறத்தில் நண்பர்களுடன் கபடி விளையாடிக் கொண்டு இருந்தேன். அனைவரும் சாப்பிட்டு விட்டு தாம்பூலம் போட்டுக் கொண்டு இருந்த போது பூஜையறையில் உள்ள ஒரு பொருளை எடுக்க வேண்டி என்னை அழைத்தாள் அவள்.

விளையாடிக் கொண்டு இருந்த நானும் பூஜையறையில் உள்ள பொருளை எடுப்பதற்காக உள்ளே வந்தேன். யாருமில்லாத அந்த சமயம் அலமாரியில் பின்னே அழைத்துச் சென்று என்னை கட்டிப் பிடித்து அழுது விட்டு நீ எனக்கு முன்பு பிறந்து என்னை கல்யாணம் செய்து கொண்டிருக்கலாமே என்று சொல்லி விட்டு கன்னத்தில் முத்தமிட்டு சென்று விட்டாள்.

எனக்கு அப்பொழுது ஒன்றுமே புரியவில்லை. சற்று நேரம் அவள் அழுததற்காக மட்டும் வருந்தி விட்டு கபடி விளையாட சென்று விட்டேன். நாட்கள் செல்லச் செல்ல தான் அவளின் உணர்வுகள் எனக்கு புரியவந்தது. அவளுக்கு ஆறுதல் சொல்லித் தேற்றக் கூட விவரமில்லையே என்று எனக்குள் கோவம் ரொம்ப வருடங்களுக்கு கனன்று கொண்டிருந்தது.

அதன் பிறகு சில நாட்கள் கழித்து தான் எனக்கு இன்னொரு விஷயம் புரிந்தது. அவளுக்கு அந்த எண்ணம் ஏற்பட காரணம் நான் மட்டுமல்ல. தாயில்லாத அவள் வாழ தேடிய வீட்டில் தேடியது என் தாயைப் போல இன்னொருவரும் கூட என்று.

இன்று எங்கோ கண்காணாத தேசத்தில் இருக்கும் அவள் மீது இன்று கூட எனக்கு காதல் உண்டு. அது மனம் சார்ந்தது. இன்று கூட உரக்கச் சொல்வேன் எல்லாருக்கும் மாமன் பொண்ணுங்க தேவதைகள் தான்.

 ஆரூர் மூனா

No comments:

Post a Comment