இந்த படத்தை நான் எப்பவோ பார்த்தாச்சு. ஆனால் படத்தின் விமர்சனம் போட
நேரம் தான் அமையவில்லை. இந்தவார கோட்டாவுக்கு படம் பார்க்க இன்று
காலையிலேயே ராம்கோபால் வர்மாவின் மும்பை அட்டாக் பற்றிய 26/11 படத்திற்கு
போகலாம் என்று எண்ணியிருந்தேன்.
ஆனால் இன்று காலை என்னையும் ஒரு பெரிய மனுசன் என்று நம்பி ஒரு பெரிய வேலை ஒப்படைக்கப்பட்டது. எனவே இந்த வார திரை விமர்சனம் கேன்சல். இப்பொழுது அந்த வேலையைப் பபற்றி சொல்லக்கூடாது. சுவாரஸ்யமான அதன் தொகுப்பை அடுத்த வார இறுதியில் பகிர்கிறேன். எனவே இப்பொழுது நேரம் இருந்ததனால் இந்த படத்தினை மனசுக்குள் ஒரு ஓட்டு ஓட்டி விமர்சனம் எழுதுகிறேன்.
இரண்டு ஆக்சன் ஹீரோக்களை வைத்து என்னவெல்லாம் செய்திருக்கலாம்.
முதல் கதையாக இவர்களுக்கு ஒரு தங்கச்சி, அந்த பெண்ணை ஒரு குடிகார சந்தேக பேர்வழிக்கு கட்டிக் கொடுக்கிறார்கள். அவன் கொடுமைப்படுத்தி சூடு வைக்கிறான். அண்ணன் தம்பிகளில் ஒருவர் சாப்ட் பார்ட்டி அவர் செண்ட்டிமென்ட்டான ஆள். அவர் தங்கச்சியை நினைத்து அழுது அழுது வரும் தாய்மார்களை கதறி அழ வைக்கிறார்.
மற்றொருவர் கோவக்கார அண்ணன். தங்கச்சியை அடித்தவர்களை தட்டிக் கேட்க அந்த வீட்டுக்கு சென்று தங்கச்சியின் மாமனார், மாமியார், ஒன்னு விட்ட ஓரகத்தி, அவர்கள் வீட்டு நாய் ஆகியவற்றை பொட்டு பொரட்டி எடுக்கிறார். இறுதியில் அந்த குடும்பமே சேர்ந்து தங்கச்சியை கொன்று விடுகிறது.
அண்ணன் தம்பிகள் ஒன்று சேர்ந்து அந்த குடும்பத்தையே கொன்று தங்கச்சி பிணத்துடன் சேர்த்து எரிக்கிறார்கள். போலீஸ் கைது செய்கிறது. இருவரும் கைவிலங்கை சூரிய வெளிச்சத்திற்கு முன்னே கையை உயர்த்தி காட்டுகிறார்கள். படம் நிறைவு பெறுகிறது. படம் சில்வர் ஜூப்ளி தான்.
இன்னொரு கதை இருக்கிறது. சிறு வயதிலேயே சகோதரர்களின் அப்பாவை வில்லன்கள் கொன்று விடுகிறார்கள். அம்மாவுடன் சகோதரர்கள் ரயிலில் ஊரை விட்டு போகும் போது ஒருவன் தொலைந்து போய் விடுகிறான். மற்றொரு சிறுவன் அம்மாவை அழைத்துக் கொண்டு வெளியூர் சென்று நல்லவனாக வளர்கிறான்.
தொலைந்து போனவன் ஒரு ஊரில் பசியால் வாடி வேறு வழியில்லாமல் ரெளடியாகிறான். நல்லவன் சாம்பார் போல் வளர்கிறான். ஒரு கால கட்டத்தில் இருவருக்கும் இரண்டு ஹீரோயின்களுடன் தனித்தனியே காதல் ஏற்படுகிறது.
பிறகு ஊட்டி மலையில் ஓரு குழியைத் தோண்டி அதில் ஓரு நாட்டு வெடியை வைத்து அதன் மீது கலர் கலராக கோலமாவு பரப்பி விட்டு அதனை வெடிக்கச் செய்து நடனமாடி டூயட் பாடலாம். கிளைமாக்ஸூக்கு முன்னர் ஓரு குடும்பப் பாடலில் இருவரும் ஒன்று சேர்கிறார்கள்.
பிறகு வில்லன் அவர்களின் அம்மாவை கடத்தி சென்று விடுகிறான். இருவரும் ஓரு ஓப்பன் ஜூப்பில் ஜெயிக்கப் பிறந்தவர்கள் என்று பாட்டுப் பாடி வில்லன் இடத்திற்கு சென்று ஏகப்பட்ட சண்டைகளுக்கு பிறகு ஒன்று சேர்ந்து நடுவில் அம்மா இரு பக்கமும் ஹீரோக்கள் அதன் பிறகு ஹீரோயின்கள் என போஸ் கொடுக்க படம் முடிகிறது.
ஆனால் பாருங்கள் இந்த படத்தில் ஓரு சீரியஸ் சண்டைக் காட்சிக்கூட கிடையாது. உண்மையாக இரு சகோதரர்களுக்கிடையே இருக்கும் ஈகோ, பாசம், விட்டுக் கொடுத்தல் என எல்லாமே வெகு இயல்பாக படமாக்கி இருக்கிறார்கள். சற்று நெருங்கிப் பார்த்தால் நமது சகோதரர்கள் போல் தோன்றுவது தான் படத்தின் வெற்றிக்கு அடிநாதம்.
உண்மையிலேயே நம்ப முடியாமல் கண்களை கசக்கி விட்டு பார்க்கிறேன். படத்தில் இருவருக்கும் நான் முந்தி, நீ முந்தி என்ற போட்டி கிடையாது. விட்டுக் கொடுத்து நடித்து அசத்தியிருக்கிறார்கள். படத்தில் இருவருக்கும் சரி பங்கு பிரித்து கொடுக்கப்பட்டு இருக்கிறது.
இது போன்ற ஒரு அப்பா நமக்கு கிடைக்க மாட்டாரா என்று ஏங்க வைக்கிறார் பிரகாஷ்ராஜ். எதையும் பாசிட்டிவாக எடுத்துக் கொள்ளும், எல்லோரையும் விகல்பமில்லாமல் நல்லவர் என நம்பும் பாஸிட்டிவான அப்பா. போன வாரம் கூட சொன்ன பேச்சு கேட்கவில்லை என என்னை நாயே என்று திட்டிய என் அப்பாவை நினைத்துப் பார்த்தேன். ம்ஹூம் இது எல்லாம் சினிமாவில் மட்டுமே சாத்தியம் போல.
அஞ்சலி குடும்பப் பாங்கான கதாபாத்திரத்தில் அசத்துகிறார். அவரைப் பெண் பார்க்க வெளி ஆள் வந்திருக்கும் போது வெங்கடேஷ் அவரை அழைக்கக்கூடாது என்று வேண்டும் இடத்தில் எனக்கு இது போல் ஒரு அத்தைப் பொண்ணு இருந்திருக்கக்கூடாதா என ஏங்க வைக்கிறார்.
சமந்தா அழகாக இருக்கிறார். அழகாக ரொமான்ஸ் செய்து அழகு பொம்மையாக வந்து போகிறார். அவ்வளவே. பாடலுக்கு மட்டுமே பயன்படுத்தியிருக்கிறார்கள்.
ஒரு கல்யாண ரிசப்சனுக்கு டக் இன் செய்து வந்து மிகவும் சிரமப்பட்டு அமர்ந்து இயல்பாக இருக்க முடியாமல் நெளிந்து வளைந்து இருந்து விட்டு ரிசப்சன் முடிந்ததும் வெளியில் வந்து டக் இன்னை அவசரமாக எடுத்து விட்டு தம் பற்ற வைக்க எடுக்கும் போது இயல்பான நான் பலமுறை சந்தித்திருக்கும் நண்பர்களை நினைவுப் படுத்துகிறார்.
வெங்கடேஷ் என் தம்பியைப் போல் சட்டு சட்டென கோவப்படும் பிறகு அதற்காக வருத்தப்படும் இளைஞராக நடித்து அசத்தியிருக்கிறார். அதுவும் எதற்கெடுத்தாலும் ஏய் என அஞ்சலியை அழைப்பதும் ஒரு நாள் அஞ்சலியை மற்றொருவர் பெண் பார்க்க வந்திருக்கிறார் என அறிந்து அதே இடத்திலும் ஏய் என அழைத்து தன் விருப்பத்தை தெரியப்படுத்தும் போதும் என் தம்பியை நினைவுபடுத்துகிறார்.
அம்மா சற்று தள்ளி டம்ப்ளரில் காப்பியை வைத்து விட்டு போக அதை கையில் தான் கொடுக்க வேண்டும் என்பதற்காக டம்ளரை இங்கு வா, இங்கு வா என மகேஷ் அழைப்பது எனக்கு மிகவும் பிடித்த சீன். பாட்டியுடன் மிக இயல்பாக நெருக்கமாக இருப்பதும் கிண்டல் செய்வதும், அடிக்கடி கடித்து விளையாடுவதும் எனக்கு கூட இது போல் ஒரு பாட்டி இல்லையே என ஏங்க வைத்தது.
இடைவேளை சற்று தாண்டியதும் அழ ஆரம்பித்த நான் படம் முடியும் வரை அழுகையை நிறுத்தவில்லை. எனக்கும் என் தம்பிக்கும் இருக்கும் நெருக்கத்தை நான் இன்னும் பலப்படுத்த வேண்டும் நினைக்க செய்த இந்த படம் நிஜமாகவே என் நெஞ்சில் நீங்கா படம் தான்.
ஆரூர் மூனா
No comments:
Post a Comment