Sunday 9 August 2015

தொழிற்சங்க அங்கீகார தேர்தலின் களேபரங்கள் - பழசு 2013

இன்றைய பதிவில் போட்டோக்கள் தான் அதிகமாக இருக்கும். நண்பர்கள் பொறுத்துக் கொள்ளவும்.


ரயில்வேயில் தொழிற்சங்க அங்கீகார தேர்தல் அடுத்த வாரம் நடைபெறுகிறது. பிரச்சார களம் அனல் பறக்கிறது. எங்களது தொழிற்சாலையை பொறுத்த வரை இரண்டு தொழிற்சங்கங்களுக்கு தான் அங்கீகாரம் கிடைக்கும். அதற்கான தேர்தலில் SRMU, SRES, DREU, AIOBC, RLLF, SRAU போன்ற தொழிற்சங்கங்கள் மோதுகின்றன.


கடும்போட்டி இருப்பது SRMU, SRES, DREU வுக்கு இடையே தான். சென்ற முறை நடந்த தேர்தலில் நூற்றாண்டு பாரம்பரியமிக்க காங்கிரஸின் SRES-ஐ வீழ்த்திவிட்டு கம்யூனிஸ்ட்களின் DREU வெற்றி பெற்றது. SRMU தனிப்பெரும் தொழிற்சங்கமாக வெற்றி பெற்றது.


இடையில் ஏற்பட்ட அதிருப்திகளின் காரணமாக தொழிலாளிகளிடையே DREUவுக்கு ஆதரவு குறைந்திருப்பது தெரிகிறது. எனவே இம்முறை போட்டி கடுமையாக இருக்கிறது. மற்ற யூனியன்கள் அதைத் தர்றேன், இதைத் தர்றேன் என்று போட்டி போட்டுக் கொண்டு இருக்க இன்று கூட DREU வாசலில் உண்டியல் குலுக்கி அதில் வசூலான தொகையை வைத்து தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறது.


கடந்த 10 நாட்களாக தினமும் பிரியாணியாக தின்று பிரியாணியைக் கண்டாலே வெறுப்பாக இருக்கிறது. இன்னும் எட்டு நாட்களை பிரியாணியுடன் தான் ஓட்ட வேண்டும். நமக்கு ஒரு காரியம் ஆக வேண்டுமென்றால் நாம் யூனியனைத் தேடிப் போன காலம் போய் இன்று எனக்கு ஒரு தேவையென்றால் யூனியனின் முக்கிய பிரதிநிதிகளே தேடி வந்து தீர்த்து செல்கின்றனர்.


இந்த கூத்து எல்லாம் இன்னும் எட்டு நாட்களுக்கு மட்டும் தான். அதன் பிறகு நம்மை சீண்டுவதற்கு கூட ஆள் கிடையாது என்று நன்றாகவே தெரியும். இன்று கூட ஒரு தொழிற்சங்கம் மதியம் வேலை நேரம் முடிந்ததும் ஒரு பிரச்சாரக் கூட்டமும் கூட்டம் முடிந்ததும் பிரியாணியும் உண்டு என்று அறிவித்தது.


கூட வேலை பார்ப்பவர்கள் கூட தேர்தலுக்காக லீவு போட்டு விட்டு வேலை செய்கிறார்கள். என் கூட வேலை பார்க்கும் சோமுவுக்கு வேலையே போஸ்டர் ஒட்டுவது தான். காலை முதல் அவரை பசையும் கையுமாக தான் பார்க்க முடியும்.

இதை விட கொடுமை சொந்த செலவில் குட்டித் தலைவர்கள் வைத்துக் கொள்ளும் பேனர்களை கண்ணால் பார்ப்பது தான். ஒருவர் இருக்கிறார். அவரது பேனரைப் பார்த்தால் தலை கிர்ரென்று சுத்தும். இருக்கும் பத்து விரல்களுக்குள் அவர் போட்டிருக்கும் மோதிரம் மட்டும் முப்பதை தாண்டும்.


என் சக நண்பர் இம்மானுவேல் இன்னும் அதிகமாக டீ ஸ்டாண்டுகளில் மொத்தமாக டீயை விலைக்கு வாங்கி அனைவருக்கும் இலவசமாக டீ கொடுக்கும்படி செய்வார். ஆனால் டீ வாங்குபவர்கள் எங்கள் ஓட்டு ....... யூனியனுக்கே என்று சொல்லிச் செல்ல வேண்டும். அவனவன் ஐந்து முறை கூவி விட்டு கணக்கு வழக்கில்லாமல் டீயடிப்பார்கள்.

இன்று எங்கள் செக்சன் முழுவதும் கடும் கூட்டம். பேச வந்த தலைவர்களை யாரும் சட்டைப் பண்ணவில்லை. வந்தவர்கள் எல்லோர் கண்ணும் பிரியாணியில் தான் இருந்தது. நட்சத்திர பேச்சாளர் கடைசியில் பேசும் போது பிரியாணியை வழங்க ஆரம்பித்து விட்டனர்.


அதுவரை கட்டுக் கோப்பாக இருந்த கூட்டம் அப்படியே பிரியாணியுடன் தெறித்து கிளம்பியது. பிரியாணி வினியோகம் நிமிடத்தில் முடிந்து போனது. பேச்சாளர் முன்பே பசியில் இருந்த ஊழியர்கள் பிரியாணியை பிரித்து சாப்பிட ஆரம்பித்தார்கள். பேச்சாளருக்கு கடுப்பு. 
ஆனால் இந்த சமயத்தில் காண்பித்தால் ஓட்டு விழாது என்பதால் சிவாஜி ரேஞ்சுக்கு நடித்துக் கொண்டே பேச்சைத் தொடர்ந்தார். கூட்டமும் பிரியாணியை தின்று கொண்டே பேச்சைக் கேட்டது தான் சுவாரஸ்யம்.

ஆரூர் மூனா

No comments:

Post a Comment