Sunday 9 August 2015

திருவாரூரும் ஹோம்சிக்கும் - பழசு ஏப்ரல் 2013

பனிரெண்டாம் வகுப்பு வரை திருவாரூரில் படித்தேன். அங்கு ஓவராக ஆட்டம் போட்டதால் இனி திருவாரூரில் வைத்திருந்தால் பையன் வெளங்க மாட்டான் என்று என் குடும்பமே திட்டமிட்டு என்னை சென்னைக்கு நாடு கடத்தியது. அதுவரை குடும்பத்தில் என்னைக் கண்டால் யாருக்குமே பிடிக்காது.


திருவாரூரில் விளமல் தியாகராஜ நகர் பேருந்து நிறுத்தம் தான் எங்களது ஏரியா. காலையில் 6 மணிக்கே எழுந்து நிறுத்தத்தில் அமர்ந்தால் 6.30 மணிக்கு வேலைக்கு செல்லும் யாமினி முதல் 09.30 மணிக்கு வேலுடையார் பள்ளிக்கு செல்லும் ரோஜா வரை வழியனுப்பி வைத்து விட்டு தான் வீட்டுக்கு வருவேன்.

அடுப்படியில் டிபன் இருக்கும். நானே போட்டுக் கொண்டு சாப்பிட வேண்டும். சாப்பிட்டதும் ஒரு தூக்கம் போட்டு விட்டு மதியம் சாப்பாட்டையும் ஒரு கட்டி விட்டு கிரிக்கெட் விளையாட கிரவுண்டிற்கு சென்றால் இருட்டும் வரை விளையாடி விட்டு மறுபடியும் பேருந்து நிறுத்தத்திற்கு வந்து சரக்கை வைத்துக் கொண்டு உட்கார்ந்தால் 12 மணி வரை கதைகளும் பஞ்சாயத்துகளும் ஒடும்.

அதன் பிறகு வீட்டிற்கு சென்று படுப்பேன். தினமும் அம்மாவிடமும் அப்பாவிடமும் வசவுகள் தான். அதுவும் என் அப்பாவுக்கு என்னைப் பார்த்தால் வில்லன் போலவே இருக்கும். என்னைப் பார்த்தால் ஒரு ஆக்சன் காட்சியை நிகழ்த்தி விட்டு அரைகிலோ அறிவுரையும் விலையில்லா பொருளாக தந்து விட்டு தான் கடந்து செல்வார்.

ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாத பெற்றோர் என் மாமாவிடம் ஒரு சதியாலோசனை செய்து சென்னையில் அப்ரெண்டிஸ் நுழைவுத் தேர்வு எழுத அனுப்பி வைத்தனர். எனக்கு கூட ஊர்பாசமெல்லாம் இல்லாமல் இந்த வீட்டை விட்டு வெளியேறினால் போதும் என்றே தேர்வு எழுதினேன்.

அதில் தேர்ச்சி பெற்று சென்னையில் சேர்ந்ததற்கு பிறகு தான் ஒரு விஷயம் தெரிய வந்தது. நான் மட்டும் தான் இங்கிருக்கிறேன், என் உயிர் திருவாரூரிலும் வீட்டிலும் தான் இருக்கிறது என்பதை. எந்தநேரமும் வீட்டு நினைவு ஊர் நினைவு தான். ஒவ்வொரு சனியன்று மதியம் பாரிமுனை பேருந்து நிலையத்திற்கு சென்று திருவாரூர் செல்லும் பேருந்திற்குள் ஏறியதும் தான் முகமே மலர்ச்சியாகும்.

எப்படியும் ஒரு தெரிந்த முகமாகவது பேருந்தில் தென்பட்டு விடும். பிறகு அவர்களுக்கு கதைத்துக் கொண்டே சென்றால் நேரம் போவதே தெரியாது. பேருந்து சன்னாநல்லூர் தாண்டியதும் எனக்கு ஒரு ஊர் வாசனை அடிக்கும். அப்போதே ஊரில் இறங்கி விட்டது போன்ற உணர்வு ஏற்பட்டு விடும்.

கல்லுபாலத்தில் இறங்கியதும் நண்பர்கள் குழாம் கண்ணுக்கு தென்பட்டு விடும். பிறகென்ன அப்படியே பேருந்து நிறுத்தம் சென்று கூத்தடித்து விட்டு வீட்டுக்கு செல்ல 12 மணியாகி விடும். ஞாயிறு விழித்ததும் வீட்டை விட்டு வெளியே செல்ல மாட்டேன். வீட்டின் மீது எனக்கிருந்த பிரியம் அதனை பிரிந்தது தான் தெரிய வந்தது.

எனக்கென அறை, எனக்கென டிவி, எனக்கென பிரத்யேக சமையல் ஞாயிறு மாலை வந்ததும் உற்சாகம் வடிந்து சோகம் அப்பிக் கொள்ளும். 7.30 மணிக்கு செல்லும் திருவள்ளுவர் பேருந்தில் அப்பா டிக்கெட் வாங்கித் தருவார். பிரிய மனமில்லாமல் வீட்டை விட்டு வெளியேறுவேன்.

இரவு முழுவதும் கண்விழித்துக் கொண்டே சோகத்துடன் பயணமாவேன். சென்னையிலிருந்து திருவாரூருக்கு நொடிப் பொழுதில் செல்லும் பயணம் திருவாரூரிலிருந்து சென்னைக்கு பயணமாகும் போது மணிக்கணக்கில் நீளும்.

சென்னைக்கு வந்ததும் ஹாஸ்டலில் மனமே ஒட்டாது. மீண்டும் சனி எப்போது வரும் என்றே மனது கணக்கு போடும். சனியன்று உற்சாக பயணம். ஞாயிறு இரவன்று சோக பயணம் என்றே ஆறு மாதம் சென்றது.

சென்னையில் என்னுடன் படித்துக் கொண்டு இருந்த நண்பர்களுடன் நட்பு இறுகியது. வாரம் ஒரு முறை சென்று கொண்டிருந்த நான் மாதம் ஒரு முறை பயணிக்கலானேன்.  சென்னைக்கு திரும்ப வரும் பயணம் கூட வருத்தங்களை ஏற்படுத்தவில்லை.

மூன்றாம் ஆண்டில் திருவாரூருக்கு செல்வதே சுத்தமாக குறைந்து போயிருந்தது. சென்னை அதை விட அதிக உற்சாத்தை தந்ததே காரணம். முதல் வருடம் சாப்பாடு ஒத்துக் கொள்ளாமல் இருந்த காலம் போய் வெந்தது வேகாதது எல்லாத்தையும் திங்க உடல் மாறியிருந்தது.

என்னை ஒரு காலத்தில் வில்லனாக பார்த்துக் கொண்டிருந்த என் அப்பா நான் திருவாரூருக்கு வருவதே இல்லை என வருத்தப்பட்டு கடிதம் எழுதிய சம்பவம் கூட நடந்தது. படித்து முடித்து விட்டு ஹாஸ்டலை காலி செய்து திருவாரூக்கு செல்ல மனமில்லாமல் நண்பர்களை கட்டிப் பிடித்துக் கொண்டு எழும்பூர் ரயில் நிலையத்தில் கதறியழுதேன்.

ஊரில் சென்று அம்மாவிடம் நான் அழுததை சொன்னதும் சிரித்துக் கொண்டே சொன்னார். "நீ படிக்கப் போகும் போது திருவாரூரிலிருந்து போக மாட்டேன் என்று அழுதாய். இன்று சென்னையை விட்டு வர மனமில்லாமல் அழுகிறாய். ஒரு நாள் எல்லாமே பழகிப் போகும் " என்று.

ஆரூர் மூனா

No comments:

Post a Comment