சென்ற வாரம் யுகாதி அன்று விடுமுறை என்பதால் புல் ரெஸ்ட் என்று முடிவு
செய்து காலை 9 மணிக்கும் தூங்கிக் கொண்டு இருந்தேன். தூக்கத்தை கலைத்து
அலைபேசி ஒலித்தது. திட்டிக் கொண்டே போனை எடுத்தேன். நண்பன் ஆனந்த்
போனில் அழைத்தான்.
ஆனந்த் ஐசிஎப்பில் வேலை பார்க்கிறான். என்னுடன் அப்ரெண்டிஸ் படித்தவன். என்னடா என்று கேட்டேன். விடுமுறை என்பதால் பயங்கரமாக போரடிப்பதாகவும் எங்காவது வெளியில் போகலாம் கிளம்பு என்றான். ஆஹா ஒரு நாளை காலி பண்ண முடிவெடுத்து விட்டான் என்று திட்டிக் கொண்டே கிளம்பினேன்.
கிளம்பும் வரை எந்த படம் என்று முடிவெடுக்கவில்லை. மவுண்ட் ரோடு போவோம், எந்த படத்திற்கு டிக்கெட் கிடைக்கிறதோ அந்த படத்தை பார்க்கலாம் என்று முடிவானது. தேவிக்கு சென்றோம். இந்த நேரத்திற்கு ஜிஐ ஜோ மட்டுமே அந்த நேரத்திற்கு பொருத்தமாக இருந்தது.
தேவி தியேட்டரை பற்றி சில விஷயம் சொல்ல வேண்டும். ஒரு காலத்தில் சென்னையில் முதல் தர திரையரங்கம் என்றால் அது தேவி தான். குப்பை படத்தை போட்டால் கூட அது வாரநாட்களாக இருந்தாலும் கூட ஹவுஸ்புல் ஆகிவிடும்.
நான் சென்னைக்கு வந்து முதன் முதலில் பார்த்த படம் தேவிபாரடைஸில் இந்தி பர்தேசி, ஷாருக்கான் நடித்தது. அதுவரை டப்பா தியேட்டரில் மட்டுமே படம் பார்த்து வந்த நான் முதன் முதலாக டிடீஎஸ் தொழில்நுட்பத்தில் இந்த படத்தை பார்த்து பிரமித்துப் போனேன். அப்படிப்பட்ட தேவி திரையரங்கம் தற்போது காத்து வாங்கிக் கொண்டு இருக்கிறது. இருப்பதிலேயே மிகச்சிறிய திரையரங்கான தேவிகலாவில் பாதி அளவு கூட அரங்கு நிரம்பவில்லை.
ஜிஐ ஜோ ரைஸ் ஆப் தி கோப்ரா படத்தின் இரண்டாம் பாகம். முதல் பாகம் நான் பார்க்கவில்லை. இரண்டாம் பாகம் வியக்கவைத்தலுடன் கூடிய சுமார் ரகம். ஜிஐ ஜோ ஒரு அமெரிக்காவின் ரகசிய அதிரடிப் படை. இவை பயன்படுத்தும் கருவிகள் எல்லாம் அதிநவீன தொழில்நுட்பம் கொண்டவை. சில கருவிகள் உண்மையிலேயே பயன்பாட்டில் இருந்தாலும் மற்றவை சிறப்பான அறிவியல் கற்பனைகள்.
படம் பாகிஸ்தான் பிரதமர் கொலையில் ஆரம்பிகிறது. பாகிஸ்தானில் அரசியல் சூழல் அபாயகரமாக இருப்பதால் அந்த நாட்டின் இரண்டு அணு ஏவுகணைகளை மீட்டுவர ஜிஐ ஜோக்கள் உத்தரவிடப் படுகிறார்கள். அணுகுண்டுகளை ஒரு அதிரடிக்கு பிறகு கைப்பற்றும் ஜோக்கள் பாலைவனத்தில் அணுகுண்டுகளை ஒப்படைக்க காத்திருக்கிறார்கள்.
இரவில் நடக்கும் எதிர்பாரா தாக்குதலில் ஜோக்கள் அனைவரும் கொல்லப்படுகின்றனர். எப்படியோ தப்பும் ராக், லேடி ஜோ , பிளின்ட் ஆகிய மூன்று ஜோக்களும் பழிவாங்கி உலகத்தை எப்படி காப்பாற்றுகிறார்கள் என்பதே கதை.
மனித உடல் சக்தியை பலமடங்கு கூட்டும் ஒரு கவச உடை, விமானத்தை கூட வீழ்த்தும் அல்ட்ரா சோனிக் துப்பாக்கிகள், காமிரா மூலம் படமெடுத்து பிரீஸ் செய்து படத்தில் குறிவைத்து சுட்டால் குறியை தப்பாமல் தாகும் துப்பாக்கி என பட்டையை கிளப்பும் ஆயுதங்கள் ரசிகர்களை ஈர்க்கின்றன.
பாகிஸ்தானில் எதிரிகள் இவர்களது இடத்தை அழிக்க முற்படும் போது மூவரும் ஒரு கிணற்றில் பாயும் காட்சியை நன்றாக படமாக்கி இருக்கிறார்கள். பயர்பிளையாக வரும் ரே ஸ்டீவென்சன் பயன்படுத்தும் நானோ ஈக்கள் எதிரிகளின் இடத்தில் ஊடுருவி வெடித்து பெரும் நாசத்தை உண்டு பண்ணுவது நன்றாக இருக்கிறது.
அப்புறம் இவர் தனது பைக்கை உயர எழுப்பி பல பாகங்களாக பிரித்து சிறையை வெடிக்க செய்வது எல்லாம் அதி பயங்கர கற்பனை. ஸ்ட்ராம் ஷாடொ நின்ஜா பாணி சண்டை படத்திற்கு வலுவை சேர்க்கிறது. இவரின் உடலை ஒரு பாடி பாக்கில் வைத்து மலை உச்சியில் இருந்து கயிற்றில் அனுப்பி ஸ்நேக் ஐசும் ஜின்க்சும் செய்யும் மலைச்சிகர சண்டை காட்சி அருமை.
கிளைமாக்ஸில் புதிய ஆயுதம் ஒன்றை விண்வெளியில் இருந்து அனுப்பி லண்டனை அழிக்கிறார்கள். கோப்ரா தப்பிசெல்ல உலகை காக்கிறார்கள் ஜோக்கள். அப்படின்னா அடுத்த பார்ட் தயாராகிறது என்று அர்த்தம்.
படத்தின் பலமே ராக் தான். தேவிகலாவில் மட்டுமே சாதாரணமாக இருக்கையில் உட்கார்ந்தால் கூட பின்னால் இருப்பவருக்கு திரையை மறைக்கும் அளவுக்கு சீட்டிங் இருக்கிறது. மற்ற திரையரங்குகளில் 3டி கண்ணாடியை இலவசமாக கொடுக்கும் போது இவர்கள் மட்டும் 30 ரூபாய் வசூலிக்கிறார்கள். என்ன கணக்கோ தெரியவில்லை.
வெளியில் வந்ததும் நல்ல பசி வேறு. அப்படியே கோபாலபுரம் சார்மினார் பிரியாணி கடைக்கு வண்டியை விட்டு திருப்தியான பிரியாணியை ஒரு கட்டு கட்டி விட்டு தான் கிளம்பினோம். படத்தை விட நன்றாக இருந்தது. சார்மினார் பிரியாணி தான்.
ஆரூர் மூனா
No comments:
Post a Comment