Friday, 7 August 2015

ஸ்ரீமந்துடு - மகேஷ் பாபு - தெலுகு

ஒரு படம் பார்ப்பதற்கு முன்பு அதாவது முதல் நாள் இரவில் இருந்தே படத்தை பற்றிய நினைப்பு நமக்குள் ஊற்றெடுக்கும். நமக்கு பொதுவாக ரஜினி படம் ரிலீசாகும் முதல் நாள் இப்படித்தான் உணர்ச்சி பிரவாகமாக இருப்பேன். அதே போல் நேற்று இரவு இருந்தது. 


எனக்கு மிகவும் பிடித்த நடிகர் மகேஷ்பாபு தான். சும்மா மற்றவர்கள் சொல்வது போல் பார்மாலிட்டிக்கு சொல்வது இல்லை. ரஜினிக்கு அப்புறம் எனக்கு பிடித்த நடிகர் மகேஷ் பாபு தான். முராரி படத்தில் ஆரம்பித்தது அந்த ரசிப்புத் தன்மை. எத்தனை முறை முராரி படத்தை பார்த்திருப்பேன் என எனக்கே தெரியாது. அந்த ரசிப்புத் தன்மை இன்று வரை குறையவே இல்லை. மேன்லினஸ் என்று ஒன்று இருக்கிறது. ஆண்மையுடன் திரிவது என்று பொருள் கொள்க. விக்ரம், பிரபாஸ் பார்த்தால் அப்படி இருக்கும். அந்த மேன்லினஸ் கொஞ்சம் அதிகமாக இருப்பது மகேஷிடம் தான்.

படம் பக்கா தெலுகு மசாலா பேக்கேஜ். இதை மீறி யோசிக்க கூடாது. ஹீரோ என்ட்ரி சாங்க் அதிரி புதிரி சண்டையுடன் இன்ட்டர்வெல். இன்டர்வெல் முடிந்து பத்தாவது நிமிடம் காதல் டூயட் என எல்லாமே சரியான விகிதத்தில் பொருந்தியிருக்கிறது. 


ஆயிரம் கோடி மதிப்புள்ள கான்ட்ராக்ட் கம்பெனியின் முதலாளி ஜெகபதிபாபுவின் மகன் மகேஷ் பாபு. சொத்தையும் கம்பெனியையும் நிர்வகிக்கும் ஆர்வமில்லாமல் இருக்கிறார். பணத்தை விட மனிதர்களுக்கே முக்கியத்துவம் தருகிறார். 

தன் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஒர்க்கர்களுக்காக எல்லா உதவியும் செய்கிறார். அதே போல் ஒத்த சிந்தனையுடைய ஸ்ருதியை சந்திக்கும் மகேஷ் அவர் மேல் காதல் கொள்கிறார். காதலை வெளிப்படுத்தும் தருணம் மகேஷ் பெரும் கோடீஸ்வர் என ஸ்ருதிக்கு தெரிய வருகிறது. 

ஆதிக்க மனப்பான்மை வில்லன்களால் நாசமாகிப் போன ஊரில் இருந்து  வெளியேறியவர் ஜெகபதி பாபு என்று மகேஷ் தெரிந்து  கொள்கிறார். அந்த காரணத்தினாலேயே ஸ்ருதி மகேஷை புறக்கணிக்கிறார். 


சுற்றுலாவுக்கு சென்று வந்து கம்பெனியின் நிர்வாகத்தை ஏற்றுக் கொள்வதாக சொல்லி விட்டு அந்த கிராமத்திற்கு வருகிறார். தான் யார் மகன் என்ற உண்மையை சொல்லாமல் ஊருக்கு நல்லது செய்கிறார். அந்த செயல்கள் வில்லன்களுக்கு இடைஞ்சலை கொடுக்க மகேஷை கொல்ல முயற்சிக்கிறார்கள்.

வில்லன்களை வீழ்த்தி ஊரை காப்பாற்றினாரா, ஸ்ருதியுடனான காதல் என்னவானது, இறுதியில் மகேஷ் என்ன தொழில் செய்கிறார் என்பதே ஸ்ரீமந்துடு படத்தின் கதை.

மகேஷ் பாபு செம ஹாண்ட்சம்மாக இருக்கிறார். முழுக்கை டீசர்ட்டையும் ஜீன்ஸையும் மட்டும் போட்டுக் கொண்டு ரசிகர்களின் மனதை அள்ளுகிறார். அந்த லுங்கியை மடித்துக் கட்டி நடந்து வரும் போது கூட செம மாஸாக இருக்கிறது. 


ஸ்ருதிக்கு வெறுமனே ரெண்டு சாங், ஒரு குத்துப் பாடல் என்றில்லாமல் நடிக்கக் கூடிய கேரக்டர், பிரமாதமாக செய்திருக்கிறார். அதே போல் ஆட்டத்திற்கும் குறைவில்லை.

ஜெகபதி பாபு கூட நன்றாக நடித்து இருக்கிறார். வழக்கம் போல் ஒப்புக்கு சப்பாணி கேரக்டர் என்று நினைத்தேன். ஆனால் அவரின் ப்ளாஷ்பேக் மற்றும் இறுதிப் பகுதியில் செண்ட்டிமெண்ட் ஆகிய இடங்களில் தனித்து தெரிகிறார்.

ராமராம எனும் ஹீரோ அறிமுகப் பாடல் பிரமாதமாக இருக்கிறது. ரிங் டோனாகவே போட்டு விட்டேன். இன்னொரு பாடல் கூட நன்றாக இருக்கிறது. ஆனால் வரிகள் தான் மறந்து விட்டது. ஹிஹி.

கிராமத்திற்கு கௌம்பி போகும் போது வில்லன்கள் வேறொரு நபரை கொல்ல இவர் செல்லும் பேருந்தை நிறுத்த மகேஷ் சென்று வில்லன்களை வீழ்த்தி பேருந்தில் பயணிக்கும் ஆக்சன் படத்திற்குரிய பக்கா இன்டர்வெல் பிளாக். அதே போல் வில்லனின் அடியாட்கள் புஜபல பராக்கிரமத்தோடு ஓடி வர நடுவில் மகேஷ் சைக்கிளில் வரும் காட்சி தெறி மாஸ்.  

ரூரல் டெவலப்மெண்ட் என்ற ஒரு கோர்ஸ் எவ்வளவு தாக்கத்தை உண்டாக்கும் என்பது படம் பார்க்கும் போது புரிகிறது. சினிமாவுக்கே உரிய மசாலாத்தனங்கள் இருந்தாலும் அனைத்தும் ரசிக்கக் கூடிய அளவிலேயே அமைந்துள்ளன. 

சண்டைப் பிரியர்களுக்கு ஏற்ற அருமையான படம் ஸ்ரீமந்துடு.

ஆரூர் மூனா

4 comments:

  1. அருமையான விமர்ச்சனம் ..

    ReplyDelete
  2. அட்ட்ெஅடடே

    ReplyDelete
    Replies
    1. விஷ்வா பாய். ஆகயா, சப்லோக் சலேஜாயியே

      Delete