Sunday, 9 August 2015

உதயம் - பழசு ஏப்ரல் 2013

இன்று இரண்டு படங்கள் ரீலீசாகும் போது பிரபலமானவர்கள் நடிக்கும் படத்துக்கே முதலில் கவனம் செல்லும். அதுபோல் ராதாமோகன் இயக்கத்தில் இன்று வெளியாகும் கெளரவம் படத்திற்கு தான் முதல் கவனம் சென்றது. ஆனால் அதை மீறி இந்தப் படத்திற்கு தான் முதலில் செல்லனும் என்று தோன்ற வைத்தது வெற்றி மாறனின் பங்களிப்பு தான்.


வெற்றி மாறனின் பெயருக்காகவே அரங்கு முக்கால்வாசி நிறைந்திருந்தது. அந்த எதிர்பார்ப்பை கொஞ்சம் கூட ஏமாற்றாமல் வந்திருக்கிறது உதயம் NH4.

கல்லூரியில் படிக்கும் நாயகனும் நாயகியும் காதலிக்கிறார்கள். பெரிய அரசியல்வாதியான நாயகியின் அப்பா காதலை பிரிக்க நினைக்கிறார். நாயகியும் நாயகனும் ஒரு நாள் பெங்களூரை விட்டு கிளம்பி நண்பர்களின் உதவியுடன் சென்னைக்கு ஒடி வருகிறார்கள்.

அவர்களை நாயகியின் அப்பாவின் சார்பாக ஒரு உதவி கமிஷனர் துரத்துகிறார். அந்த நாளில் காலையிலிருந்து இரவு 12 மணி வரை நடக்கும் சம்பவமே கதை.

படம் துவங்கியதும் தெரியவில்லை. இடைவேளை வந்ததும் தெரியவில்லை. மறுபடியும் துவங்கியதும் தெரியவில்லை, படம் முடிந்ததும் தெரியவில்லை. பரபரவென திரைக்கதையமைத்து நம்மை அதற்குள் கட்டிப் போட்டு படத்தை முடித்து நம்மை அனுப்பி விடுகிறார்கள்.

சித்தார்த் இந்த வயதிலும் சரியாக கல்லூரி மாணவன் கதாபாத்திரத்திற்கு பாந்தமாக இருக்கிறார். நன்றாக நடிக்கிறார். சூப்பர் ஹீரோயிசம் காட்டி எதிரியை வீழ்த்தாமல் இயல்பாக மனிதனுக்கே உரிய பலவீனங்களுடன் சண்டையிடுகிறார். பல கல்லூரிப் பெண்கள் இவர் திரையில் தோன்றும் காட்சியில் விசிலடித்து தங்களின் ஆதர்ச நாயகனை கொண்டாடியது வியப்பாக இருந்தது.

ஹீரோயின் அஷ்ரிதா ஷெட்டி அழகாக மட்டும் இல்லாமல் கொஞ்சம் நடிக்கவும் செய்கிறார். இன்னும் இரண்டு படங்கள் சரியாக அமைந்தால் இவர்தான் அடுத்த ஆண்டு கோலிவுட்டின் கனவுக்கன்னி. நானே திரையில் ஹீரோயினைப் பார்த்து கொஞ்சம் ஜொள்ளு விட்டேன்.

கே கே மேனன் தமிழுக்கு புதுசு. ஆனால் நான் இவரை இதற்கு முன்பு RGVயின் சர்க்கார் படத்தில் பார்த்திருக்கிறேன். இயல்பான வில்லத்தனத்தில் அசத்தியிருப்பார். அமிதாப்பின் மூத்தமகனாக வந்து அவரை கொல்லப்பார்க்கும் கதாபாத்திரம் அது.

இந்த படத்தின் பெரும்பலம் அவர் தான். பரபரப்புக்கிடையில் மனைவியிடமும் மகனிடமும் இயல்பாக பேசி சமாதானம் செய்யுமிடம் சூப்பர். அதுபோல் நூல் இடைவெளியில் கிடைத்த துப்புகளை வைத்து நாயகனை நெருங்குமிடத்திலும் அசத்தியிருப்பார்.

நண்பர்களாக வருபவர்களில் கார்த்திக் சபேஷ் சூப்பராக செய்திருக்கிறார்.

படம் துவங்கும் போது பல இடங்களில் டயலாக் நான் ஸிங்க்காக இருந்ததும் பயந்து விட்டேன். அடடா டப்பிங் படத்துக்கு வந்து விட்டோமோ என்று. பிறகு நேரம் செல்லச் செல்ல டயலாக்குள் சிங்க்கிற்குள் வந்து விட்டது.

ஏன் வெற்றி மாறன் ஸ்பெஷல் என்பதற்கு பல இடங்களில் சான்று இருக்கிறது. ஒரு இடத்தில் கூட தேவையில்லாத டயலாக் கிடையாது. தேமே என்று நின்று கொண்டிருக்கும் கேரக்டர் கிடையாது.

ஐஎம்இஐ நம்பரையும் சிம்கார்டையும் வைத்துக் கொண்டு போலீஸ் ஒருவனது இடத்தை தெரிந்து கொள்ள வைக்கும் இடத்தில் அட போட வைக்கிறார்கள். இன்னும் பல இடங்களில் இன்ட்ரஸ்ட் இன்வெஸ்டிகேசன் இருக்கிறது. அவற்றையெல்லாம் படத்தில் பாருங்கள்.

படத்தின் முக்கிய பலமே இயல்பான வசனம் தான். பெங்களூர்க்காரன் எப்படி கடித்து கடித்து தமிழ் பேசுவான் என எனக்கு தெரியும். அதை அப்படியே பிடித்து படத்தில் வசனங்களை அமைத்திருக்கிறார் வெற்றி மாறன். என் வீட்டம்மா கூட ஒரு காலத்தில் அப்படிதான் பேசிக் கொண்டு இருந்தார். இப்பொழுது தமிழில் செய்யுள் இயற்றும் அளவுக்கு மாறிவிட்டார் என்பது வேறு விஷயம்.

பாடல்களில் ஏற்கனவே இரண்டு டிரெய்லர்களில் கேட்டு பழக்கப்பட்டவையாதலால் பார்க்கவும் இயல்பாக பிடிக்கிறது. இயல்பாக ஒன்றிரண்டு வசனங்களில் தட்டிப் போகும் நகைச்சுவையும் நன்றாக இருக்கிறது.

கிராமத்திலிருந்து வந்த பையன்கள் சென்னையில் வாழ சிரமப்படலாம் என்றால் கூட பரவாயில்லை. சென்னையிலிருந்து வந்த பையன்கள் பெங்களூரின் லைப் ஸ்டைலுக்கு மாற சிரமப்படுகிறார்கள், சுமாராய் உடை அணிகிறார்கள் என்பது தான் நம்ப சிரமமாய் இருக்கிறது.

நானெல்லாம் சென்னையின் காஸ்ட்லியான பாருக்கு சென்றிருந்தாலும் சில சமயம் பப்புக்கு சென்றிருந்தாலும் இது போன்ற பப்பை எங்குமே பார்த்ததில்லை. ஹீரோ முதல் ஹீரோயின் வரை சமரசமே இல்லாமல் தண்ணியடிக்கிறார்கள்.

மங்களூரில் முத்தலிக் பப்பில் அடாவடி செய்ததை புத்திசாலித்தனமாக படத்தில் பொருத்தமான இடத்தில் நுழைத்திருக்கிறார்கள். பெண்கள் ஸ்மோக்கிங் ஏரியாவில் சகஜமாக தம்மடிக்கிறார்கள். பெங்களூரு மேற்கத்திய நாடுகளில் இருக்கிறதோ என்ற சந்தேகம் கூட எழுகிறது.

படத்தில் சொல்லிக் கொள்வது போல் இருக்கும் ஒரே ஒரு மைனஸ் என்னவென்றால் இடைவேளைக்கு பிறகு வரும் காதல் காட்சி ப்ளாஷ்பேக்கில் சற்று தொய்வு விழுகிறது. இருந்தாலும் சட்டென்று முடிந்து விடுவதால் பெரிய குறையாக தெரியவில்லை.

மொத்தத்தில் எப்பொழுது துவங்கியது முடிந்தது என்றே தெரியாத சூப்பர் ஜர்னி இந்த உதயம்.

ஆரூர் மூனா

No comments:

Post a Comment