Sunday, 2 August 2015

எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம் - பழசு பிப்ரவரி 2013

எல்லா வேலைகளிலும் இந்த கேட்டகிரி உண்டு. உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால் மன்னன் படத்தில் வரும் கவுண்டமணி கேரக்டர். எந்த வேலைக்கும் முன்அனுபவமில்லாமல் அதிர்ஷ்டத்தில் அந்த வேலைக்கு வந்து தகுதியுடன் வந்தவர்களை இளக்காரத்துடன் வேலை வாங்குபவர்கள் இந்த கேட்டகிரிகாரர்கள் தான்.


முதல் உதாரணமாக என்னையே எடுத்துக் கொள்ளலாம். கம்ப்யூட்டர் தெரியும் என்ற தகுதியுடன் ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தேன். அதில் நன்றாக வேலை செய்ததால் சென்னை மண்டல அலுவலகத்திற்கு மாற்றலானேன்.

அங்கு வந்ததும் தான் என் லட்சணம் எனக்கே தெரிய வந்தது. நான் டெண்டரிங் பிரிவில் உதவியாளாராக இருந்தேன். ஒருநாள் எங்கள் அலுவலகத்தில் வேலை பார்த்த கம்ப்யூட்டர் டைப்பிஸ்ட் வேலைக்கு வராததால் என் நிர்வாக அதிகாரி ஒரு லெட்டரை எழுதி என்னிடம் தட்டச்சு செய்து தரும்படி கொடுத்தார்.

கையெழுத்து ஆங்கிலத்தில் சேர்த்து சேர்த்து எழுதப்பட்டு இருந்ததனால் எனக்கு சரிவர புரியவில்லை. என்னிடம் அவர் "புரிகிறதா" என்று கேட்ட போது திட்டுவாரோ என்ற "பயத்தில் எல்லாம் புரிகிறது சார், நான் அடித்து தருகிறேன்" என்று கூறி அடித்துக் கொடுத்து விட்டு மதிய உணவு சாப்பிட மெஸ்ஸூக்கு சென்று சாப்பிட்டு விட்டு வந்து பார்த்தால் அவரே லெட்டர் பேடில் கையால் எழுதிக் கொண்டு இருந்தார்.

என்னவென்று கேட்டால் என்னைப் பார்த்து கையெடுத்து கும்பிட்டு விட்டு "லெட்டரில் பிழைகள் இருந்து பார்த்திருக்கிறேன். பிழையான லெட்டரே இன்று தான் பார்க்கிறேன், போதுமடா சாமி, உன் ஆங்கிலத்தில் தீயை வைத்துக் கொளுத்த" என்று சத்தம் போட்டார். அன்று தான் என் ஆங்கில அறிவு அலுவலகத்தில் மற்றவர்களுக்கெல்லாம் தெரிய வந்தது.

பிறகு என்ன கொஞ்ச நாள் பீட்டர்மேன் என்றே மற்றவர்களால் கிண்டலுடன் அழைக்கப்பட்டேன். இந்த தவறுகளை புரிந்து சரியான முறையில் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய எனக்கு ஒரு வருடம் தேவைப்பட்டது.

நான் தான் இப்படி என்றால் இந்த விஷயத்தில் எனக்கு தாத்தாவெல்லாம் இருக்கிறார்கள் என்பதை பிறகு தான் கண்டு கொண்டேன்.

என் நண்பன் ஒருவன் சந்தோஷ் என்று இருந்தான். படிக்கும் போது நாங்களலெல்லாம் தமிழ்படத்திற்கு மட்டுமே கட்டடித்து செல்வோம். ஆனால் அவன் மட்டும் எல்லா ஹிந்தி படத்துக்கும் செல்வான். ஈகா தியேட்டர் அவனுக்கு மாமியார் வீடு போல. படம் பார்த்து விட்டு எல்லோருக்கும் கதை சொல்வான்.

தில்வாலே துலானியே லே ஜயேங்கே படத்தினை 50 முறைகளுக்கு மேலும் குச் குச் ஹோத்தா ஹை படத்தை 25 முறைகளுக்கு மேல் பார்த்து சாதனை படைத்தவன். அதனாலேயே எங்கள் குரூப்பில் அவனுக்கு தனி மதிப்பு இருந்தது.

நானும் அவனும் லகான், கபி குஷி கபி காம் படத்தை சேர்ந்து பார்த்தோம். படங்களில் எனக்கு வசனத்தில் சந்தேகம் ஏற்படும் போதெல்லாம் அவனை கேட்பேன். சிலவற்றுக்கு விளக்கங்கள் சொல்லுவான் பலவற்றிற்கு கோவப்படுவான். "படம் பார்க்கும் போது இடையில் உன் சந்தேகங்களுக்கு பதில் சொன்னால் என்னால் படத்தை கவனிக்க முடியாது" என்று சத்தம் போடுவான்.

அதன் பிறகு நான் டெல்லிக்கும் ஐதராபாத்திற்கும் வேலைக்கு சென்று சில வருடங்கள் தங்கியிருந்து ஹந்தி நன்றாக பேசக் கற்றுக் கொண்டு சென்னைக்கு மாற்றலான போது அவனை சந்தித்து சினிமாவுக்கு போகலாம் முடிவு செய்து முன்னாபாய் எம்பிபிஎஸ் படத்திற்கு போனோம். அதுவரை அவனிடம் எனக்கு ஹிந்தி தெரியும் என்று சொல்லவில்லை.

படம் துவங்கியதும் படத்தின் காமெடி காட்சிகளுக்கு நான் மட்டும் சிரிக்கிறேன். அவன் தேமே என்று உக்கார்ந்து இருந்தான். எனக்கு புரியவில்லை, ஏன்டா சிரிக்கவில்லை என்று கேட்டால் இல்லடா இது ஜோக்கே இல்லை என்றான். எனக்கு சந்தேகம் தோன்றியது. பிறகு அவனிடம் ஒரு காட்சிக்கு விளக்கம் கேட்ட போது சம்மந்தமில்லாமல் வேறு ஒரு அர்த்தம் சொன்னான்.

பிறகு தான் புரிந்தது. இவனுக்கு ஒரு வார்த்தைக்கு கூட அடர்த்தம் தெரியாது என்று. வெளியில் வந்து மூஞ்சியிலேயே குத்தினேன் இத்தனை வருடங்களாக என்னை ஏமாற்றி வந்திருக்கிறானே என்று. நான் நண்பர்களிடம் சொல்லி கிண்டல் செய்ய ஆரம்பித்தேன். அன்றிலிருந்து அவன் ஹந்தி படம் பார்க்க போவதே கிடையாது.

என்னுடன் இம்மானுவேல் என்று ஒருவர் வேலை பார்த்து வந்தார். வேலை முடிந்து அரட்டை துவங்கியதும் அவர் பேச்சு மட்டும் தான் பெரியதாக இருக்கும். எல்லா விஷயங்களும் தனக்கு மட்டுமே தெரிந்ததாக காட்டிக் கொள்ளுவார். மற்றவர்கள் அவர் பேசுவதை வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

ஒரு முறை கார்களுக்கு FCக்கு அனுப்புகிறோம் அல்லவா, FC என்றால் என்னவென்று கேட்டார். மற்றவர்கள் ஒன்றும் தெரியாமல் முழிக்கவே இம்மானுவேல் FC என்றால் புல் செக்கப் என்றார். அப்பவே தெரிந்து விட்டது அவர் ஏகாம்பரம் தான் என்று. பிறகு நான் மற்றவர்களிடம் FC என்றால் பிட்னெஸ் சர்ட்டிபிகேட் என்று விளக்கிச் சொல்லவே அன்றிலிருந்து அவர் தான் எங்களுக்கு காமெடி பீஸ்.

நான் பணிபுரிந்த கம்பெனியில் ரங்காச்சாரி என்ற ஒரு பெரியவர் புதிதாக வேலைக்கு சேர்ந்தார். நாங்கள் அப்போது குடி பற்றி பேசிக் கொண்டு இருக்கும் போதெல்லாம் தான் ஒரு பயங்கரகுடிகாரர் என்று முக்கால் தனியாக அடித்து வண்டி ஓட்டுவேன் என்றெல்லாம் சொல்லுவார்.

நாங்களும் ரங்கா பெரிய குடிகாரர், நம்மளுடன் சேர்ந்து குடித்தால் நம் சரக்கையெல்லாம் காலி செய்து விடுவார் எனவே நாம் அவரை விட்டே குடிப்போம் என்று முடிவு செய்து அவரை கழற்றி விட்டே குடித்து வந்தோம். பிறகு ஒரு நாள் கம்பெனி பார்ட்டியில் சேர்ந்து குடிக்கும் அனுபவம் கிட்டியது. மனிதர் முதல் லார்ஜை கிளாஸில் எடுத்து வந்து சுவைத்தார்.

பத்து நிமிடம் ஆனதும் ரங்கா பிளாட் ஆகி விட்டார். மகனே அன்று முதல் நாங்கள் குடிக்கும் போதெல்லாம் அவரையும் அழைத்துக் கொண்டு போய் மூடி அளவுக்கு ஊற்றி ஏத்தி விட்டு வேடிக்கை பார்ப்பது தான் பொழுது போக்கு. இந்த மேட்டரில் இவர் தான் ஏகாம்பரம் என்று நான் சொல்லத்தான் வேண்டுமோ.


ஆரூர் மூனா

No comments:

Post a Comment