இது மாநிலத் தலைவர்களையோ மாவட்ட செயலாளர்களையோ பற்றிய பதிவல்ல. என்றாவது
அரசியலில் பெரிய ஆளாகி விட வேண்டும் என்ற எண்ணத்தில் அரசியலில் முடிந்த வரை
அந்த அளவுக்கு நேர்மையாக இருந்து இன்று வரை போராடி வரும் நான் அறிந்த
அரசியல்வாதிகளின் அறிமுகம்.
முதல் அரசியல்வாதி சம்பந்தம் மாமா. அவர்கள் வீட்டில் நாங்கள் வெகுநாட்கள் குடியிருந்ததால் நான் இவரை மாமா என்றே கூப்பிடுவேன். இன்று வரை எங்கள் வீட்டில் எந்த விஷேசம் என்றாலும் முடிவு வரை இருந்து எல்லாத்தையும் முன்னின்று செய்பவர் இவர் தான்.
எனக்கு விவரம் தெரிந்த வயதில் எனக்கு கை சின்னத்தை சட்டையில் குத்தி பிரச்சாரத்திற்கு அனுப்பி விட்டவர். 87களில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் அவர் 13வது வார்டு வேட்பாளர். அப்பொழுது பம்பரம் சின்னத்தில் போட்டியிட்டார்.
எனக்கு எட்டு வயதில் பம்பரம் சின்னம் ஸ்டென்சிலையும் நீலக்கலர் சுண்ணாம்பு டப்பாவையும் கையில் எடுத்துக் கொண்டு வடக்கு வீதியில் அனைவரின் வீட்டு வாசலிலும் பம்பரம் சின்னத்தை வரைவது என் வேலை. அந்த தேர்தலில் வெற்றியும் பெற்றார். பிறகு காங்கிரஸில் இருந்து வாழப்பாடி காங்கிரஸை விட்டு பிரிந்து சென்ற போது இவரும் பிரிந்து சென்று மீண்டும் வந்து இன்று திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் செயலாளர்.
ஆனால் காங்கிரஸில் மட்டும் தான் நகர செயலாளருக்கு இருக்கும் மதிப்பு மா.செவுக்கு கிடையாது. என்னா கணக்கோ தெரியவில்லை. எனக்கு தெரிந்து கோஷ்டி அரசியல் செய்யாமல் யாரையும் ஏமாற்றாமல் 25 வருடங்களாக வளரும் அரசியல்வாதி.
அடுத்தவர் மற்றொரு மாமா A.D.மூர்த்தி. சிவாஜியின் வெறித்தனமான ரசிகரான இவர் அவர் கட்சி ஆரம்பித்த போது கடும் செலவு செய்து 1989 தேர்தலில் தமிழக முன்னேற்ற முன்னணி வெற்றி பெற உழைத்தார்.
எல்லாம் வீணாகப் போனது. ஆனாலும் அடங்காமல் சிவாஜி ஜனதா தளத்திற்கு போன பிறகு இவரும் போனார். நகை வேலை செய்யும் அவர் கட்சிக்காக நல்ல வருமானம் வந்த கடையை இழந்தார். சிவாஜி அரசியலை விட்டு ஒதுங்கியதும் இவரும் சில காலம் ஒதுங்கியிருந்து விட்டு வை.கோவின் மேல் நம்பிக்கை வைத்து மதிமுகவில் சேர்ந்தார்.
இன்று மதிமுகவின் மாவட்ட பிரதிநிதி. கட்சியும் வளரவில்லை. இவரும் வளரவில்லை. எப்படியாவது வைகோ முதல்வராகி விடுவார் என்று நம்பும் அப்பாவி அரசியல்வாதி.
அடுத்ததாக என் நண்பனின் அப்பா, நீடாமங்கலத்திற்கு அடுத்த கிராமமான சித்தமல்லி தான் அவர்களது ஊர். அந்த ஊரின் அரசியல் களம் அவரது சைக்கிள் கம்பெனி தான். அரசியல் பேசுவதற்கென்றே அங்கீகாரம் பெற்ற இடம்.
கம்யூனிஸ்ட்டை சேர்ந்த அவர் உலகப் பொருளாதாரம் வரை பிரித்து பேசுவார். நமக்கு தான் ஒன்னும் புரியாது. நான் முதன் முதலில் மூலதனம் புத்தகத்தை அவரது கடையில் தான் பார்த்தேன். கேரள அரசியலை தஞ்சை பக்கமுள்ள குக்கிராமத்தில் அமர்ந்து அலசி எடுப்பார்.
பேசிப் பேசி கடைசியில் கடை தான் இல்லாமல் போனது. நல்லக்கண்ணு வரை 20 வருடங்களுக்கு முன்பு இருந்த பெரிய கம்யூனிஸ்ட்காரர்கள் வந்து போன இடம் கடைசியில் சைக்கிள் கடை நசிந்து போய் இன்று கூலி வேலைக்கு போய்க் கொண்டு இருக்கிறார்.
எப்பொழுதாவது ஒரு மேடையை கண்ட சந்தோஷத்துடன் ரஷ்ய அரசியலையும் மேற்கு வங்காளம் அரசியலையும் பேசுவார். அவர் சந்தோஷப்பட வேண்டும் என்பதற்காக மட்டுமே நான் காது கொடுத்து கேட்பேன். ஏன் அரசியலில் வளராமலே போனார் என்று தான் புரியவில்லை.
அடுத்தது என் நண்பன் குடவாசலை சேர்ந்த கணேசன். மேடையைக் கண்டால் எனக்கு சிறுவயதில் இருந்தே உதறும். பேச்சுப் போட்டியில் மேடைக்கு போய் படித்ததை மறந்து ஓ என்று அழுதது கூட உண்டு. அவனோ மேடையை பார்த்ததும் காஜலை கண்ட பிலாசபி பிரபாகரனைப் போல் குஷியாகி விடுவான்.
பாரபட்சமில்லாமல் எல்லாக் கட்சி மேடையிலும் குக்கிராமங்களில் பேசுவது அவன் வழக்கம். கட்சித் தலைவர்கள் வரும் வரை மேடையை கட்டிப் போடும் பேச்சு அவனது. என்ன ஒரு கட்சிக்கும் விசுவாசமில்லாமல் போனதால் கடைசி வரை அங்கீகாரம் கிடைக்காமல் போய் குடும்ப சூழ்நிலைக்காக திருப்பூரில் பனியன் கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டு இருக்கிறான்.
கடைசியாக என் மச்சான் சதீஸ் குமார். ஹோட்டல் தொழிலில் வெற்றிக் கொடி நாட்டிய பிறகு அரசியல் ஆசை வந்து போன முறை நடந்த உள்ளாட்சித் தேர்தலில் மேலவாசல் கிராமத்தில் நடந்த கவுன்சிலர் தேர்தலில் அதுவும் குடியிருக்கும் தெருவில் தோற்றுப் போய் கொஞ்ச நாள் அரசியல் துறவறம் பூண்டிருந்தான்.
பிறகு இந்த உள்ளாட்சித் தேர்தல் வரும் முன்னரே உள்ளூரில் ஆட்களை திரட்டி தன்வசப்படுத்தி ஒரு வழியாக ஜெயித்து விட்டான். பிறகு மற்றொரு அரசியலை நடத்தி மேலவாசல் கிராமத்தின் ஊராட்சி மன்ற துணைத் தலைவர். அது மட்டுமில்லாமல் அதிமுகவில் ஏதோ ஒரு பதவியில் இருக்கிறான்.
எப்படியும் வளர்ந்து இன்னும் பத்து வருடத்தில் அதிமுக சார்பில் மன்னார்குடியில் போட்டியிட்டு சமஉ ஆகும் ரகசிய ஆசையில் இருக்கும் என் மச்சான் ஜெயிப்பானா என்பதை காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
சதீஸூக்கு மட்டும் : டேய் மச்சான் இதைப் படித்து என்னை வெளுக்கும் எண்ணம் வந்தால் நான் ஊருக்கு வரும் வரை காத்திருக்கவும். சபையில் காறித்துப்பி மானத்தை வாங்க வேண்டாம். மீ பாவம் மச்சான்.
ஆரூர் மூனா
No comments:
Post a Comment