Sunday, 2 August 2015

புதிய பதிவர் பிரபலமாக - பழசு பிப்ரவரி 2013

முதலில் வலைத்தளம் துவங்க வேண்டும். பின்ன என்ன பொட்டிக்கடையா துவங்க வேண்டும் என்று நீங்கள் கேட்பது மைண்ட் வாய்ஸில் கேட்கிறது. இருந்தாலும் முறையாக சொல்லித்தர வேண்டியது ஒரு சக பதிவனின் கடமையல்லவா. பின்ன எப்படி புதியவர்களை என் சார்பு ஆளாக உருவாக்குவது.

சுயநலம் என்று நினைக்கத் தோன்றுதோ, இல்லை இது பொதுநலம் கலந்த சுயநலம். எப்படி தடாகத்தில் இருக்கும் அழுக்குகளை மீன்கள் தின்று சுத்தப்படுத்துகின்றனவோ அது போல என் சார்பு ஆள் என்பது போல் தங்களை உருவாக்காவிட்டால் நீங்கள், அடுத்த ஏரியாவுக்கு சென்று என்னையே பொலி போட தற்கொலைப்படையாக மாற வாய்ப்புள்ளதால் முன்பே உசாராகி நண்பனாக்கி பக்கத்தில் உக்கார வைத்து விட வேண்டும். இது தான் நான் தங்களுக்கு கற்று தரும் பால பாடம்.
தெரிந்த பதிவர், தெரியாத பதிவர் போன்ற எந்த பாகுபாடும் இல்லாமல், தமிழ், தெலுகு, மலையாளம் போன்ற மொழி பாகுபாடு பார்க்காமல் எல்லா பதிவருக்கும் பாலோயராக சேர வேண்டும். ஒரு நாளைக்கு நூறுக்கு குறையாமல் பாலோயர் ஆவதை வழக்கமாக கொண்டால் தங்களுக்கு 10 பாலோயர் கிடைப்பது நிச்சயம்.
அது மாதிரி நல்ல பதிவு, மோசமான பதிவு என்ற வித்தியாசம் பார்க்காமல் எல்லா பதிவிலும் சூப்பர், அருமை, த.ம 112, கூ.பி 210 என சாத்வீக பின்னூட்டங்களை தொடங்க வேண்டும்.
இதுவரை நீங்கள் செய்தது சாத்வீக முறை, அடுத்தது பிரச்சோதகம், மெதுவாக ஒட்டகம் கூடாரத்தினுள் தலையை விடுவது போல் ஆரம்பிக்க வேண்டும். 

சினிமா, சாப்பாடு, மதம் போன்றவற்றில் எதாவது எழுத தொடங்க வேண்டும். 
முதலில் சினிமாவுக்கு வருவோம். நாம் படம் வெளியாகும் நாளன்று அரை நாள் விடுப்பு எடுத்துக் கொள்ள வேண்டும். அதுவும் மாற்றான், கடல் போன்ற படங்கள் வெளியாகும் நாள் அன்று விடுமுறை எடுத்து சினிமா விமர்சனம் எழுதினால் ஹிட்ஸ்கள் அள்ளும்.
திரையரங்கிற்கு போகும் போதே லேப்டாப் எடுத்து செல்லுதல் நலம். சிபி செந்தில் குமார் போன்றவர்கள் படம் முடியும் முன்னே வெளியில் வந்து தோராயமாக க்ளைமாக்ஸ் முடிவு செய்து டைப்ப ஆரம்பித்து விடுவதால் தங்களுக்கு ஹிட்ஸ் சற்று குறையும்.
திரைப்படத்தை பற்றிய எந்த தொழில்நுட்ப அறிவும் தேவையில்லை. சுமாராக நாமே ஒளிப்பதிவு சூப்பர், இசை பரவாயில்லை, படத்தொகுப்பு அருமை என அடித்து விட வேண்டும்.
அவ்வளவு தான், நீங்கள் ஒரு கட்டத்தை தாண்டி விடுவீர்கள். ஹிட்ஸ் வர ஆரம்பித்து விடும். அதற்காக நாம் அப்படியே விட்டு விட முடியாது. அடுத்த கட்டத்திற்கு நகர ஆரம்பிக்க வேண்டும்.
சாப்பிடும் உணவகங்களை பற்றிய பதிவுகளை எழுத துவங்க வேண்டும். அதற்கு நான் பெரிதாக எழுதத் தெரிய வேண்டிய அவசியமில்லை. ஆனால் அதற்கு முக்கிய விஷயமாக கேபிளிடம் இருந்து டிவைன் என்ற வார்த்தையை கடன் வாங்கிக் கொள்ள வேண்டும். எல்லா வாக்கியத்துக்கும் டிவைன் என்று போட்டு முடிக்க வேண்டும்.
உதாரணமாக கடைக்குள் நுழைந்தேன் டிவைன். டேபிளில் அமர்ந்து மெனு கார்டை எடுத்தேன் டிவைன். சாப்பாடு சூடாக இருந்ததால் ஊதி ஊதி சாப்பிட்டேன் டிவைன் இப்படி.
அதற்காக நாம் சாப்பிடும் உணவின் சுவையை சொல்ல வேண்டிய அவசியமே கிடையாதே. நமக்குத்தான் இட்லிக்கு மாவு அரைத்த மாவுக்கு உப்பு போடாமல் இட்லி சுட்டுக் கொடுத்தால் கூட வாயை மூடிக் கொண்டு சாப்பிடும் ஆள் ஆச்சே. அதனால் என்ன பிரச்சனை.
நம்ம கோவைநேரம் ஜீவாவைப் போல் தட்டில் உணவை நாலு ஆங்கிள்களில் போட்டோவாக எடுக்க வேண்டும். பிறகு பில் பேப்பரை ஒரு போட்டோ எடுத்து பதிவில் போட்டு விடவும். முடிந்தால் வீடு திரும்பல் மோகன் அண்ணனைப் போல் சமையற்காரர், காலி தட்டு, டேபிள் சேர், விளையாடிக் கொண்டு இருக்கும் குழந்தைகள் என புகைப்படம் எடுத்து பதிவில் போட்டால் ஹிட்ஸ் அள்ளும்.
அவ்வளவுதான் நீங்கள் ஒரளவுக்கு பிரபலமான பதிவராகி விட்டீர்கள். அடுத்தது பயானகம். தங்களைப் பார்த்தால் எல்லா பதிவரும் பயப்பட்டு ஒதுங்க வேண்டும். இதற்கு நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய துறைகள் சரக்கும், மதமும். நாம கட்டிங்கிற்கு மட்டையாகும் ஆளாக கூட இருக்கலாம். ஆனால் நீங்கள் புல்லடித்து மவுண்ட் ரோட்டில் பைக்கில் நூறு கிலோ மீட்டர் வேகத்தில் சென்றதாக பதிவில் போட வேண்டும்.
மற்றொரு குடிகார பதிவரிடம் ஓப்பனாக சரக்கு அடிப்பதைப் பற்றி சாட் செய்ய வேண்டும். அப்போது தான் ஒரு குடியை வெறுக்கும் மதவாத பதிவர் அந்த சம்பாஷணையை போட்டோஷாட் எடுத்துப் போட்டு உங்கள் மானத்தை வாங்குவார். பிறகு நீங்கள் சண்டைக்கு போய் அவர் சட்டையையும் கிழித்து விட்டு உங்களது சட்டையையும் கிழித்துக் கொள்ளவும். பிறகு பதிவுலகில் நீங்கள் தான் அசைக்க முடியாத நாயகர்.
இன்னும் எழுதலாம் தான், ஆனால் இதற்கே என் சட்டை கிழிபடும் நிலை உள்ளதால் இத்துடன் முடித்துக் கொள்கிறேன். இந்த பதிவில் கிழிக்கப்பட்ட சட்டையின் எண்ணிக்கையை வைத்து இதே மேட்டரை சற்று விரிவாக எழுதுகிறேன்.
ஆரூர் மூனா

No comments:

Post a Comment