Sunday 9 August 2015

கம்ப்யூட்டர் கோர்ஸ் படித்த போது - பழசு ஏப்ரல் 2013

2000த்தில் அப்ரெண்டிஸ் முடித்ததும் திருவாரூர் திரும்பி வந்தேன். அப்பொழுது ரயில்வே மிகுந்த நட்டத்தில் இருந்ததால் அப்ரெண்டிஸ் முடித்தவர்களை பணிக்கு எடுப்பது தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தார்கள்.


அடுத்தப்படியாக வேலைக்கு சேர்வதற்கு டிகிரி படிக்க முடியாது வயது அப்பொழுதே 21 ஆகி விட்டிருந்தது. ஏதாவது கம்ப்யூட்டர் கோர்ஸ் சேர்ந்தால் முடியும் என்று ஆனது. அதுவரை கிட்டத்தில் மட்டுமல்ல தொலை தூரத்தில் இருந்தும் கம்ப்யூட்டரை பார்த்தறியாதவன் நான்.

நான் திருவாரூர் திரும்பிய போது டிகிரி முடித்த நண்பர்களும் திருவாரூர் திரும்பினார்கள். ஒரு வெட்டி ஆபீசர்கள் குழு உருவானது. சென்னையில் சுற்றியிருந்ததால் இன்னும் கொஞ்சம் கிரிமினல் அறிவு கூடுதலாக இருந்தது.

ஒரு நாள் அப்பா ரசாபாசமாக திட்டிவிட ரோசம் அதிகமாகி ஏதாவது செய்தாக வேண்டும் என்று ஒரு பெரிய கம்ப்யூட்டர் நிறுவனத்தில் ஜாவா கோர்ஸ் சேர்ந்தேன். கொஞ்சம் கூட கம்ப்யூட்டர் அறிவு இல்லாத என்னிடம் சென்னை நண்பன் ஒருவன் ஜாவா படித்தால் 7000 சம்பளத்தில் சென்னையில் வேலை கிடைக்கும் என்று சொல்லியிருந்ததால் நான் அந்த கோர்ஸில் சேர்ந்தேன்.


அது மிகவும் தரம் குறைவான இன்ஸ்டிடியூட். வாத்தியார்களே கம்ப்யூட்டர் அறிவில் மிகவும் குறைந்தவர்களாக இருந்தார்கள். நான் மட்டுமே வயதில் பெரியவனாக இருந்தேன். என்னுடன் ஜாவா கோர்ஸில் சேர்ந்தவர்கள் எல்லாம் கல்லூரியில் B.scயும், BEயும் படித்துக் கொண்டிருந்த பெண்களும் பையன்களும்.

அது மின்னலே படம் வெளியாகி இருந்த சமயம், அதுவரை போஸ்டரில் திரைப்படங்களின் ஸ்டில்களை பார்த்துக் கொண்டிருந்த நான், மின்னலே படத்தின் ஸ்டில்களை பிரமித்து போய் இருந்தேன். பேஸிக் கம்ப்யூட்டர் நாலெட்ஜ் கூட இல்லாமல் நேரடியாக 'C' கோர்ஸ் படித்துக் கொண்டு இருந்த அறிவாளி நான்.

வகுப்பறையில் நான் கடைசியாக உட்கார்ந்து பேந்த பேந்த விழித்துக் கொண்டு இருப்பேன். மற்ற மாணவர்கள் எல்லாம் ஓவராக சந்தேகம் கேட்டும் பில்ட்அப் கொடுத்தும் அசத்திக் கொண்டு இருப்பார்கள்.


'C' கோர்ஸ் முடிந்ததும் ஒரு மாதிரி தேர்வு நடந்தது. வகுப்பிலேயே நான் தான் கடைசி மதிப்பெண். எதாவது புரிந்தால் தானே நல்ல மதிப்பெண் பெறுவதற்கு, எல்லா பெண்களும் முட்டாளான என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டே இருந்தார்கள்.

அடுத்தது 'C++' கோர்ஸிலும் இதே நிலைமை தான். என்னடா செய்வது நம்ம மரமண்டைக்கு ஒன்னும் புரியமாட்டேங்குதேன்னு புலம்பி புலம்பி தினமும் சரக்கடிச்சது தான் மிச்சம். என்னுடன் கூட சரக்கடிப்பவனுக்கு கம்ப்யூட்டரில் ஆனா ஆவன்னா கூட தெரியாது. நான் புலம்புவதை பார்த்து ஙே வென விழிப்பார்கள்.

என்னுடன் படித்த பெண்களில் சிலர் பயங்கர பீட்டராக இருந்தனர். உள்ளே வரும்போதே ஹாய்டா என்று மற்றவர்களை அழைத்துக் கொண்டு தான் உள்ளே வருவார்கள். வகுப்பறையில் வந்ததும் முடித்தவரை கற்றுக் கொடுப்பவரிடம் சந்தேகமாக கேட்டுத் தள்ளுவார்கள். ப்ராக்டிலில் கூட நல்ல கம்ப்யூட்டரில் உட்கார்ந்து கொண்டு நமக்கு டொக்கு கம்ப்யூட்டரை தள்ளி விடுவார்கள்.


எனக்கோ பயங்கர கடுப்பு. எப்படியாவது இவளுங்களை மூக்குடைத்து விட வேண்டும் என்று ஒரு திட்டம் தீட்டினேன். அதற்கேற்றாற் போல் அந்த நிறுவனத்தில் ஒரு செயல்பாடு அமைந்தது.

ஜாவா கோர்ஸ் தொடங்கியது. ஆனால் தொடங்கிய நாள் முதல் எனக்கு மட்டுமே நல்ல கம்ப்யூட்டர் கிடைத்தது. தேர்வும் தொடங்கியது. தேர்வு முடிந்து எப்படியும் சென்னையில் வேலை கிடைத்து விடும் என்று நம்பினேன்.

ஆனால் நான் ஜாவா முடிப்பதற்குள் அது அவுட்டாகி அடுத்ததாக C Sharp என்று ஒன்று வரப் போவதாகவும் அதனை ஈடுகட்ட Advance Java படிக்க வேண்டும் என்றும் சொன்னார்கள். என்னடா இது வம்பாகிப் போச்சே என்று அதற்கும் பீஸ் கட்டினேன்.

ஜாவா முடிந்து ரிசல்ட் வந்தது. என்னுடன் படித்த எல்லாப் பெண்களும் பையன்களும் முதல்இடத்தையும் டிஸ்டிங்சனையும் எதிர்பார்த்து பரபரப்புடன் காத்திருக்க நான் மட்டும் சந்தோசமாக கலாட்டா செய்து கொண்டிருந்தேன்.

ரிசல்ட் வந்தது. எல்லாரும் சுவற்றில் முட்டிக் கொண்டு இருந்தார்கள். ஒரு பெண் தேம்பித் தேம்பி எல்லாம் அழுது கொண்டிருந்தார். இருவர் கோவத்துடன் வகுப்பை விட்டே வெளியேறினார்கள்.

ஜாவா முடித்தவர்களில் ஒருவர் கூட Advance Java படிக்க சேரவில்லை. ஏனென்றால் நான் தான் வகுப்பில் முதல் மாணவனாக தேறியிருந்தேன். எல்லோரும் மெடிக்கல் மிராக்கிள் என்று சொல்ல ஆரம்பித்தார்கள்.

ஆனால் எனக்கு மட்டும் தான் நடந்தது தெரியும். கட்டுரையில் முன்பாக நிறுவனத்தில் ஒரு செயல்பாடு அமைந்தது என்று எழுதியிருந்தேன் அல்லவா. அது என்னவென்றால் இதற்கு முன் இருந்த Faculty வேலையை விட்டு வெளியேறினார். அதற்கு பதிலாக சேர்ந்தவர் அது என்ன ர்ர்ருரு, சேர்ந்தவன் என் நெருங்கிய நண்பன் தினேஷ்.

அவன் B.Sc கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்து விட்டு வேலைக்கு சேர்ந்தான். அவன் வேலைக்கு சேர்வது எனக்கு முன்பே தெரிந்ததால் இந்த பெண்களை கலாட்டா செய்ய வேண்டி நாம் இருவரும் நண்பர்கள் என இன்ஸ்டிடியுட்டுக்கு தெரிய வேண்டாம் என்று அவனிடம் சொல்லி விட்டேன்.

அது போலவே முதல் மதிப்பெண் வேண்டுமென்று பரிட்சைக்கு முதல் நாள் ஒரு புல் பாட்டிலை வாங்கிக் கொண்டு அவனுக்கு தியானபுரம் கேட்டைத் தாண்டி ஒரு பம்புசெட்டில் பார்ட்டி வைத்தேன் என்பதை இங்கு குறிப்பிட வேண்டுமோ.

ஆனால் கடைசிவரை நான் படித்த அந்த படிப்பை வைத்து பத்து பைசா கூட சம்பாதிக்கவில்லை என்பது வேறு விஷயம். 

ஆரூர் மூனா

No comments:

Post a Comment