Sunday 2 August 2015

வாஞ்சூர் 2 - பழசு பிப்ரவரி 2013

ஏற்கனவே படித்த மாதிரி இருக்கே என்று நீங்கள் நினைக்கக்கூடாது. ஏற்கனவே நான் எழுதியது வாஞ்சூர் பற்றி. இந்த கட்டுரை வாஞ்ஜூர் என்று அழைக்கப்படும் ஒரு தூய கடவுள் பக்தனைப் பற்றி.


இவனும் அதே வாஞ்சூரை சேர்ந்தவன் தான். ஆனால் பிழைப்பதற்காக நீடாமங்கலம் அருகில் இருக்கும் ஆதனூர் என்ற கிராமத்திற்கு வந்து செட்டிலானவன். என் தாத்தா ஊர் அது என்பதால் எனக்கு பழக்கமானவன் அவன். என்னை விட வயதில் பெரியவன்.

ஆள் நல்ல சிகப்பாக இருப்பான். நீண்ட நரைத்த முடி தாடி வைத்திருப்பான். எங்கள் தோட்டத்திற்கு அடுத்த தோட்டம் அவனுடையது. எல்லோரும் வயலில் நெல் போட்டிருந்தால் அவன் மட்டும் கரும்பு போடுவான். மற்றவர்கள் தாளடியில் கரும்பு போடும் போது அவன் மட்டும் நெல்லைப் போட்டிருப்பான்.

வயதில் பெரியவரை அவன் இவன் என்று பேசுகிறானே என்று யாரும் தப்பாக நினைக்க வேண்டாம். அவன் வயசு வித்தியாசம் பார்க்காமல் என் செட்டு நண்பர்களுடன் தான் வயலில் சாராயம் குடிப்பான். எங்களுடன் சேர்ந்து சைட் அடிப்பான். பிறகு எங்கிருந்து அவனை நான் மதிப்பது.

இந்த பதிவை நான் எழுதுவதற்கு காரணம் மேற்சொன்னது எல்லாம் அல்ல. அவன் கடவுள் பக்தி என்ற பெயரில் அடிக்கும் அட்டகாசத்தைப் பற்றி தான். இவனது குலதெய்வம் ஆதனூர் அருகில் உள்ள கீழப்பட்டு என்ற கிராமத்தில் இருக்கிறது. அதன் பெயரை நான் குறிப்பிட்டால் நான் அவன் சாமியை அவமதிக்கிறேன் என்று போஸ்டர் ஒட்டுவான்.

சொந்தமாக எழுதி போட்டால் கூட பரவாயில்லை, நாளிதழ்களில் வந்த விஷயத்தை எடுத்து தலைப்பு மட்டும் "மற்ற சாமி கும்பிடுபவர்கள் எல்லாம் பயங்கரவாதிகள்" என்று போட்டு போஸ்டர் ஒட்டுவான்.

அவன் போஸ்டரை படிக்கும் மற்றவர்களுக்கெல்லாம் நன்றாகத் தெரியும். இவன் ஒரு வெளங்காதவன். சொந்த சரக்கில்லா காலி பெருங்காய டப்பா என்று. ஆனால் அவனது குலதெய்வத்தை கும்பிடும் சிலர் வந்து ஆமாம் பயங்கரவாதிகளுடன் பழகக்கூடாது என்று போஸ்டரில் எழுதி வைத்து செல்வார்கள்.

இவனுக்கு ஒரு குலதெய்வம் இருப்பது போல் தான் எனக்கும் இருக்கிறது. அவன் கும்பிடுவது போல் தான் நானும் கும்பிடுகிறேன். ஆனால் கீழப்பட்டில் இருப்பது மட்டும் சாமியாம். நெடுவாக்கோட்டையில் இருப்பது கல்லாம். என்ன கொடுமை சார் இது.

என்னுடன் எங்கள் குலதெய்வம் கோயில் இருக்கும் நெடுவாக்கோட்டைக்கு வருவான். சாமியாடி வந்து குறி சொல்லும் போது என் அருகில் வந்து இவன் மேல் சாமியே இறங்கவில்லை. நடிக்கிறான் என்று கலாட்டா செய்வான்.

அதே போல் நான் அவனது கோயில் கடாவெட்டுக்கு சென்று இதே போல் சாமியாடியை கலாய்த்தால் எங்கள் சாமியை திட்ட நீ யாரடா. வெளியில் போடா என்று கோயிலை விட்டே விரட்டுவான். என்னவோ இவன் தான் கோயிலுக்கு சொந்தக்காரன் மாதிரி.

உண்மையில் அந்த கோயிலின் நிர்வாகியே என் குடும்ப நண்பராக இருப்பார். அவரே இதனை பொருட்படுத்த மாட்டார். இவனோ கோயிலுக்கு போவதே திருவிழாக் காலங்களில் தான், இந்த காமெடி பீஸை நினைத்து எனக்கு பயங்கர சிரிப்பாக இருக்கும்.

சொந்த சரக்கு இருக்கிறவனே அமைதியாக இருக்கும் போது இவன் ஒரு காப்பிபேஸ்ட் போஸ்டர். இவனுக்கு எதுக்கு இந்த வீராப்புன்னு தான் தெரியலை. கருமம் புடிச்சவன் குளிச்சிருக்கவே மாட்டான். ஆனால் வெளியில் வரும்போது நல்லா செண்ட் அடிச்சு நெத்தியில் திருநீறு பட்டை அடித்து தான் வெளியில் வருவான்.

ஒரு முறை நாங்கள் எல்லாம் கிரிக்கெட் விளையாடிக் கொண்டு இருந்தோம். இந்த காமெடி பீஸு வந்து எங்களுடன் இணைந்து விளையாடியது. இவனது அணியில் ஆடியவர்கள் எல்லாம் ரன் அடித்து நல்ல ஸ்கோர் எடுத்திருந்தனர். ஆனால் நம்ம வாஞ்ஜூர் டக்அவுட் ஆகியிருந்தான்.

ஆனால் எங்களிடம் வந்து "நான் விளையாடியதால் தான் இவ்வளவு ஸ்கோர் எடுக்க முடிந்தது. நீங்கள் எல்லாம் தோற்கப் போகிறீர்கள்" என்று எகத்தாளம் பாடிக் கொண்டிருந்தான். நாங்கள் பேட்டிங் ஆரம்பித்ததும் ஆறு ஓவரிலேயே ரன்களை அடித்து ஜெயித்து விட்டோம்.

அப்பக்கூட தாங்கள் விளையாடிய அணி தோற்றது தெரியாமல், "நாங்கள் தான் ஜெயித்தோம், ஆனால் எதிரணியினர் எங்களை விட அதிக ரன்கள் எடுத்து தோற்றனர்" என்று போஸ்டர் ஒட்டிய அறிவாளி.

இவனது பிரச்சனையே இவனது குணாதிசியம் தான். இவனுக்கு கடவுள்பக்தி அதிகமாக இருக்கலாம். அதற்காக மற்றவர்கள் பக்தியில் குறைந்தவர்கள் என்று நினைப்பது அறிவீனம் என்று தெரியாதவன். அது மட்டுமில்லாமல் அடுத்தவர்கள் வீட்டு சுவரில் அனுமதியின்றி தங்கள் குலசாமி தான் உயர்ந்தது என்று போஸ்டர் ஒட்டி சென்று விடுவான்.

ஒரு முறை எங்கள் வீட்டு சுவற்றில் போஸ்டரை ஒட்டி விட்டு சென்றான். மறுநாள் நான் காண்டாகி அவனை வூடு கட்டியதெல்லாம் பெரிய கதை. நான் கூட தான் சாமி கும்பிடுகிறேன், அதற்காக பொதுவெளியில் வந்து நான் வீரனார் பக்தன் என்று நெத்தியில் பச்சைக் குத்திக் கொண்டு திரிவதில்லை.

யாரைப் பார்த்தாலும் ஜெய்ஸ்ரீராம் என்று கூறியே வணக்கம் சொல்லுவான். ஒரு முறை போதையில் அவனைப் பிடித்து "ஏண்டா படவா வணக்கம் என்று நல்ல தமிழில் சொல்லலாம் அல்லவா. எதுக்கு நான் இந்த பிரிவை சேர்ந்தவன் என்று மற்றவர்கள் அறிய ஜெய்ஸ்ரீராம் என்று சொல்கிறாய்" என்று ரைடு விட்டும் பார்த்து விட்டேன், திருந்த மாட்டேன் என்கிறான்.

பக்தியும் பசி போன்ற உணர்வு தான் என்பதை உணர்ந்து கொண்டால்  மற்றவர்களுடன் எந்த உரசலும் ஏற்படாது. இந்த அறிவு கூட இல்லாத இவனை வைத்துக் கொண்டு இனி காலம் தள்ளுவது ரொம்ப சிரமம் என்றே நினைக்கிறேன்.


ஆரூர் மூனா

No comments:

Post a Comment