சில சமயங்களில் இயற்கை நமக்கு சிக்னல் கொடுக்கும். இது தவறு என்றால் அந்த
இடத்திற்கு போகாத படி தடங்கல்களை ஏற்படுத்தும். நல்லவிஷயம் என்றால்
தடங்கல் வருவது போல் இருந்தாலும் காப்பாற்றி குறிப்பிட்ட இடத்திற்கு நம்மை
கொண்டு போய் சேர்க்கும்.
இது போல் இன்று நான் வேலைப்பளு குறைவாக இருந்ததால் ஒன்பதுல குரு சினிமாவுக்கு போக வேண்டும் என்று முடிவெடுத்து அசோக்கிடம் சொல்லிய பிறகு ஓர பெரிய வேலை பெண்டிங் இருக்கும் வண்டி டிராபிக் என்று 11 மணிக்கு உயரதிகாரி போனில் அழைத்து தெரியப்படுத்தினார்.
என்னடா முதல் காட்சி மிஸ் ஆகி விடும் போல இருக்கே, இருந்தாலும் முயற்சிப்போம் என்று அரக்க பரக்க வேலைகளை தொடங்கி செய்து கொண்டு இருக்கும் போது தொழிற்சாலை முழுவதும் பவர் கட். பொதுவாக ரயில்வே தொழிற்சாலைகளில் பவர் கட் வரவே வராது.
எனக்கான சோதனை இது என்று தேற்றிக் கொண்டு வெல்டிங்கைத் தவிர மற்ற வேலைகளை முடித்து விட்டு கரண்ட் வந்ததும் அந்த வேலையையும் முடித்து விட்டு வீட்டு வரும்போது மணி 1.30. அடுத்த ஆட்டத்திற்காவது போகலாம் என்று முடிவெடுத்து அசோக்கை 2.45 மணிக்காட்சிக்கு கொளத்தூர் கங்கா திரையரங்கிற்கு வரச்சொன்னேன்.
சரியாக மற்றொரு நண்பன் சத்யா 2.15 மணிக்கு போனில் அழைத்து ஓரு முக்கியமான கொட்டேஷன் அடித்து தரவேண்டும் என்று கேட்டான். அவனுக்காக அதனையும் அடித்து மெயிலில் அனுப்பி விட்டு பார்த்தால் மணி 2.50. இத்தனை தடங்கல்களையும் தாண்டி படத்திற்கு போய் தான் ஆவேன் என முடிவெடுத்து திரையரங்கிற்கு போனேன்.
பைக் பார்க்கிங்கிற்கு 20 ரூபாய் வாங்கினார்கள். நல்லாயிருங்கடா என சாபம் கொடுத்து 3.00 மணிக்கு திரையரங்கினுள் போய் அமர்ந்தால் இயற்கை என்னை இந்த கொடுமையை காண வேண்டாம் என்று எவ்வளவு எல்லாம் தடுத்திருக்கிறது என்று அப்போது தான் புரிந்தது.
படத்தின் கதை என்ன? கல்லூரி காலத்தில் மிகவும் சந்தோஷமாக இருந்த நான்கு நண்பர்கள் திருமணத்தினால் மிகவும் பாதிக்கப்பட்டு அதனால் வீட்டை விட்டு வெளியேறி பழைய பேச்சிலர் வாழ்க்கைக்கே போகலாம் என்று கூடிப் பேசி முடிவெடுக்கிறார்கள். அதன்படி பெங்களூரு வந்து தங்கும் இடத்தில் லட்சுமிராயை கண்டு ஜொள்ளு விட்டு அதன் விளைவுகளை அனுபவித்து குடும்ப வாழ்க்கையே மேல் என்று திரும்பவும் மனைவியிடம் வந்து சேருகிறார்கள்.
கேட்பதற்கு கொஞ்சம் சுமாராக இருப்பது போல் இருக்கும் இந்த கதையை இப்படிச் சொல்லித்தான் இயக்குனர் தயாரிப்பாளரிடம் படத்திற்கான அனுமதியை பெற்றிருப்பார் என நினைக்கிறேன். ஆனால் அதனை படமாக கொடுக்கும் போது சொம்மா சொழ்ட்டி சொழ்ட்டி அடித்திருக்கிறார்கள். எனக்கு நவத்துவாரங்களிலும் ரத்தமாக வழிகிறது.
நான்கு ஐந்து கதாநாயகி வாய்ப்பு தேடி வந்த பெண்களை இயக்குனர் கில்மாவுக்கென தேர்ந்தெடுத்து அவர்களுக்கு நாயகிகள் வேஷம் கட்டி சம்பந்தமில்லாமல் படமெடுத்து தயாரிப்பாளர் தலையில் மிளகாய் தோட்டத்தையே அரைத்திருக்கிறார்.
உன்னாலே உன்னாலே மற்றும் ஜெயம்கொண்டான் படங்களில் வினய்யை பார்த்த போது சிறந்த நடிகர் தமிழுக்கு கிடைத்திருக்கிறார் என நினைத்தேன். ஆனால் மிரட்டல் மற்றும் ஒன்பதுல குரு படங்களில் நடித்த பிறகு தான் இவரின் படம் தேர்ந்தெடுக்கும் திறமை தெரிகிறது.
ஒரு காலத்தில் கங்கா, வெற்றி விக்னேஷ் என்று சில மொன்னை நடிகர்கள் சில படங்களில் கதாநாயகனாக நடித்து பிறகு காணாமல் போனார்கள். அவர்கள் இடத்தை நிரப்ப இப்பொழுது வினய் வந்திருக்கிறார் என நினைக்கிறேன். டயலாக் பேசும் போது வாயை டாய்லட் பேசின் மாதிரியே திறந்து வைத்திருக்கிறேன். சீக்கிரம் தமிழ் சினிமாவை விட்டு காலி பண்ணுங்க சாமி.
அடுத்த கதாநாயகனாக அரவிந்த் ஆகாஷ். எப்படிப்பட்ட நடிகராக வந்திருக்க வேண்டியவர் தெரியுமா இவர். காதல் சாம்ராஜ்யம் என்று ஒரு படம் பஞ்சு அருணாச்சலம் தயாரிப்பில் அகத்தியன் இயக்கத்தில் தயாரானது. அதில் வெங்கட் பிரபு, சரண், யுகேந்திரன் மற்றும் பலர் நடித்திருந்தனர்.
அந்த படத்தில் இவர் தான் கதாநாயகன். கோடம்பாக்கம் பாலத்தில் அந்த படத்திற்கொன வைக்கப்பட்டிருந்த பேனரைப் பார்த்து வியந்திருக்கிறேன். ஆனால் படம் முடிவடைந்த நிலையில் சில பிரச்சனைகள் காரணமாக படம் வெளிவரவே இல்லை. பிறகு எப்படியோ தட்டுத்தடுமாறி சில படிகள் மேலே ஏறியவர் இந்த படத்தினால் மீண்டும் சரக்கென்று துவங்கிய இடத்திற்கே வந்து விட்டார்.
சத்யன் இவர் கூட பெரிய கதாநாயகர்கள் நடிக்கும் படங்களில் நடிக்கும் போது தான் மிளர்கிறார். இந்த படத்தில் நம்மளை போட்டு சொறிகிறார். இருந்தாலும் இந்த படத்தில் நடித்திருக்கும் நடிக பட்டாளங்களில் இவர் மட்டுமே கவனம் ஈர்க்கிறார்.
பிரேம்ஜி இந்த படத்தில் எதற்கு என்றே தெரியவில்லை.மொக்கையாக சில காட்சிகள் வந்து குரங்கு சேஷ்டைகள் செய்து நம்மை கடுப்பேற்றி விட்டு போகிறார். அவரு ஆளும் மண்டையும் காது கடுக்கனும் கொலைவெறியாக்குகிறது.
படத்தில் பளிச்சென கைதட்டலும் விசிலும் வாங்குவது மூவர் மட்டுமே. அவர்கள். லட்சுமிராய், மந்த்ரா அப்புறம் சோனா.
லட்சுமிராய் படத்தில் அடக்கமான பெண்ணாக வந்து சில காட்சிகளில் ஜொள்ளு விட வைத்து விட்டு கிளைமாக்ஸில் டைட் பேண்ட் போட்டு கவுட்டியில் கட்டி வந்த மாதிரி நடந்து வரும் போது நான் டிக்கெட்டிற்கு கொடுத்த காசு பகபக வென்று பத்தி எரிவது போல் தோன்றுகிறது.
அதை விட மகா அவஸ்தை சத்யனின் மாமியாரான மந்த்ரா கராத்தேயில் பிளாக் பெல்ட் பெற்றவராம். அதை வைத்து கிளைமாக்ஸில் ஒரு கிளுகிளு சண்டைக்காட்சி வேறு.
டேய் இவ்வளவு காசை வச்சிக்கிட்டு இப்படி ஒரு படத்தை எடுக்க எப்படி மனசு வந்தது உங்களுக்கு. பாவம்யா அந்த தயாரிப்பாளர், கிளுகிளுப்பை கூட்டி எடுத்தால் படத்திற்கு செலவு செய்த காசை எடுத்து விடலாம் என யாரோ அவருக்கு சொல்லியிருப்பார்கள் போல.
என்னைப் போன்ற ரசிகர்கள் எல்லாம் இந்த தமிழ் சினிமாவுக்கு செய்யும் நல்ல காரியம் என்னவென்றால் இது போன்ற படங்களை புறக்கணிப்பது தான். சும்மா கூப்பிடுவானுங்க படத்திற்கு போயிடாதீங்க. அடிச்சுக்கூட கூப்பிடுவாங்க படத்திற்கு போயிடாதீங்க. ஆயிரம் ரூபாய் காசு கூட கொடுக்கிறேன்னு கூப்பிடுவாங்க அப்பக்கூட இந்த படத்திற்கு போயிடாதீங்க.
ஒன்பதுல குரு - 3மணிக்கு என்னைபுடிச்ச சனி
ஆரூர் மூனா
No comments:
Post a Comment