Sunday 2 August 2015

ஒல்லியாகலாம் - பழசு மார்ச் 2013

பதிவு எழுத வந்த காலங்களில் இருந்து நான் பயன்படுத்தி வந்த யுனிகோட் ரைட்டர் திடீரென இயங்காமல் போகவே சில நாட்கள் பதிவு எழுத முடியாமல் தவித்தேன். பிறகு நிலைத்தகவலை பதிவிலும் முகநூலிலும் பகிர்ந்த பின்பு நண்பர்கள் பலரும் வந்து புதிய யுனிகோட் ரைட்டர் பற்றிய தகவலை பகிர்ந்து எனக்கு உதவினார்கள். அதன் மூலம் நான் சிற்சில தடுமாற்றங்களுடன் எழுதத் தொடங்கி இப்பொழுது பழகி விட்டது. உதவிய நண்பர்களுக்கு நன்றி.

-----------------------------------------

பிறந்ததிலிருந்தே குண்டாகவே இருந்து விட்டேன். அவ்வப்போது குண்டாக இருப்பது பற்றிய தாழ்வு மனப்பான்மை வந்து போகும். அப்படி வரும் சமயங்களில் விடியற்காலை எழுந்து திருவாரூர் கமலாலய குளத்தை நான்கு ரவுண்டு ஓடி வருவேன். பதினைந்து நாட்களில் ஆர்வம் குறைந்து விட்டு விடுவேன்.


திருமணத்திற்கு சில மாதம் முன்பு உடலை எப்படியாவது குறைக்க வேண்டும் என்று விடாப்பிடியாக முடிவு செய்து அண்ணாநகரில் இருக்கும் தல்வாக்கர் ஜிம்மில் சேர்ந்தேன். அவர்கள் எந்த பகுதியில் எந்த அளவுக்கு குறைய வேண்டும் எவ்வளவு கிலோ குறைய வேண்டும் என்று கேட்டு உடற்பயிற்சி அட்டவணை போட்டுக் கொடுத்தார்கள். ஒரு வருட கட்டணம் 50,000 ரூபாய்.

அங்கு இருந்த டயடீசியன் என்ன சாப்பிட வேண்டும் என்று ஒரு சார்ட் போட்டுக் கொடுத்தார். அவற்றினை பார்த்தால் ஒரு மனிதன் செய்யவே முடியாத அளவுக்கு ஒரு அட்டவணை. அதுவும் அந்த உணவுபொருட்களை செய்து கொடுப்பதற்கே ஒரு சமையற்காரர் வேண்டும். இத்தனைக்கும் நான் பாச்சிலர் ரூமில் தங்கியிருந்தேன்.

சார்ட்டை பார்த்தால் மயக்கமே வந்து விடும். காலையில் ஜிம்முக்கு செல்வதற்கு முன்பு வெதுவெதுப்பான குடிநீர் இரண்டு டம்ளர், ஜிம்முக்கு சென்று வந்த பிறகு ஒரு கப் ஓட்ஸ், அல்லது இரண்டு இட்லி அல்லது ஒரு தோசை. தேங்காய் சட்னி கூடாது. பருப்பு கூடாது.

பதினொரு மணிக்கு மோர், மதிய சாப்பாடு ஒரு கப் சாதம், ஒரு கப் காய்கறிகள், நான்கு மணிக்கு நான்கு மேரி பிஸ்கட்டுடன் ஓரு பிளாக் டீ. ஏழு மணிக்குள் சப்பாத்தி இரண்டு எந்த உணவும் வறுக்கப்படக் கூடாது, பொறிக்கப்படக் கூடாது. தேங்காய் எந்த உணவிலும் சேர்க்கப்படக் கூடாது. அவ்வளவு தான் டயட்.

நானோ சாயந்திரம் டீக்கு சைடாக முழு தந்தூரி கோழியை முழுங்கும் ஆள். மதிய சாப்பாட்டை 3 மணிக்கு சாப்பிடும் பழக்கமுள்ளவன், இரவு சாப்பாட்டை 11 மணிக்கு முன்பாக சாப்பிட்டதாக வரலாறே கி்டையாது அதுவும் குவார்ட்டர் உடன் தான்.

பேச்சிலர் ரூமில் இருக்கும் நான் இந்த டயட் சார்ட் உணவுகளை எங்கே போய் செய்ய, ஒரு வெறியில் முயற்சித்தேன். எடையும் வலுவான உடற்பயிற்சியினாலும், டயட்டினாலும் குறைந்தது. ஆனால் எனக்கு எந்த நேரமும் பசியாகவே இருக்கும்.

ஓட்ஸை பார்த்தால் கொலை கடுப்பாகும். காய்கறிகள் மட்டும் தின்று தின்று கொம்பு முளைக்காதது தான் குறை. இரண்டு மாதம் 15 கிலோ குறைந்தேன். ஆனால் கண்ணெல்லாம் கறுப்பு விழுந்து, டொக்கு மாதிரி ஆகிவிட்டேன்.

இரண்டு மாதங்களுக்கு பிறகு ஊருக்கு சென்றால் என் அப்பா ரெய்டு விட்டார் "இந்தளவுக்கு மோசமான நிலையில் நீ உடலை குறைக்க வேண்டிய அவசியமே இல்லை. ஒழுங்காக ஜிம்முக்கு போவதை கைவிடு, குண்டாக இருப்பது பரம்பரை உடல்வாகு" என்று. அதோடு விட்டவன் தான்.

அதன்பிறகு முடிந்த அளவுக்கு சாப்பாட்டு அளவை மட்டும் தான் குறைத்திருந்தேன். உடல் பருமனை குறைக்க முயற்சிக்கவே இல்லை. என் சக ஊழியர் ஒருவர் 120 கிலோ எடை இருந்து இப்பொழுது 80 கிலோவாக குறைந்து விட்டார். அவரிடம் எடை குறைந்த காரணத்தை கேட்ட போது அக்குபஞ்சர் மூலமாக குறைத்ததாக கூறினார்.

அது மட்டுமில்லாமல் என்னையும் கூட்டிப் போவதாகவும் நானும் எடை குறைந்து விடுவேன் என்று நப்பாசை காட்டினார். நானும் ரொம்ப நாட்களாகவே மறுத்து வந்தேன். ஒரு நாள் வீட்டம்மாவிடம் இந்த விஷயத்தை சொல்லப் போக அவரும் என்னை அங்கு போகச் சொல்லி கட்டாயப்படுத்தினார்.

வேறு வழியில்லாமல் இன்று அவருடன் அந்த அக்குபஞ்சர் மருத்துவமனைக்கு சென்றேன். உள்ளே ஏற்கனவே கூட்டம் நிரம்பி வழிந்தது. குறைந்தது 100 பேர் இருக்கும். என் நண்பர் முன்பதிவு செய்திருந்ததால் நாங்கள் உடனடியாக அக்குஹீலரை சந்தித்தோம்.

நான் இதுவரை முன்பின் அக்குபஞ்சர் ட்ரீட்மெண்ட் பார்த்தது இல்லை. என்ன மாதிரி மருத்துவம் செய்வார்கள் என்பதே தெரியாது. அக்குஹீலர் முன் அமர்ந்து என்ன செய்யப் போகிறாரோ என்று யோசித்தேன்.

என் கையில் ஒரு நிமிடம் இரண்டு இடங்களில் நாடி பார்த்தார். அவ்வளவு தான். தினமும் இரண்டு வேளை மட்டும் சாப்பிடுங்கள், பால் தயிர் வேண்டாம், பதினைந்து நாட்கள் கழித்து வந்து பார்க்கவும் என்று சொல்லி அனுப்பி விட்டார். நூறு ரூபாய் கட்டணம்.

எனக்கு ஒன்றுமே புரியவில்லை. நண்பரிடம் விசாரித்த போது அவர் உன் கையைப் பிடித்து அதில் இரண்டு நரம்புகளை ஓரு நிமிடம் நிறுத்தி பிறகு விடும் போது ரத்த ஓட்டம் சீராகி உடல் எடை குறையத் தொடங்கும் என்றார்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை. அவனவன் உடல் எடையை குறைக்க காலங்கார்த்தால உயிர விட்டு ஓடிக்கிட்டு இருக்கான். இது என்னடானா கையை பிடிக்கிறார். அவ்வளவு தான். பதினைந்து நாள் கழித்து மீண்டும் கையை பிடிப்பாராம்.

டயட்டும் கிடையாது. உடற்பயிற்சியும் கிடையாது. ஆனால் எடை குறையுமாம். எனக்கு ஒன்னும் புரியலை. பதினைந்து நாள் கழித்து பார்த்து தான் முடிவு செய்ய முடியும்.

ஆரூர் மூனா

1 comment:

  1. did your weight reduced by the acupuncture method? - kannan

    ReplyDelete