Sunday, 2 August 2015

வெக்கப்படாத வாலிபர் சங்கம் - பழசு பிப்ரவரி 2013

அது ஒண்ணும் பெரிய சங்கதியில்லை. சாப்பிடுவதற்காக நாக்கை தொங்கப் போட்டு யார் வீட்டிலும் வெக்கப்படாமல் சாப்பிடுவோர் சங்கம் ஒன்று அமைத்து இருந்தால் அதற்கு நான் தான் அதன் ஒருங்கிணைப்பாளராக இருந்திருப்பேன்.


படிக்கும் காலத்தில் இருந்தே சாப்பாடு ருசிக்கு ப்ரியனாக இருந்தேன். ருசிக்காக கடைகளில் சாப்பிடுவது குறைவாக இருக்கும். சாதாரண சாம்பாரில் கூட வீட்டுக்கு வீடு கைப்பக்குவம் மாறும். அதனாலேயே மதிய உணவுவேளைகளில் என்றுமே என் வீட்டு சாப்பாட்டை நான் சாப்பிட்டதே கிடையாது.

என் டிபன் பாக்ஸை மற்றவர்களுக்கு கொடுத்து விட்டு நண்பர்களது டப்பாவை காலி செய்வதிலேயே குறியாக இருப்பேன். அதுவும் என் நண்பன் நஜிமுதீன் டப்பாவைத்தான் முக்கிய குறியாக வைப்பேன். ஏனெனில் மாதத்தில் முக்கால்வாசி நாள் அவன் பிரியாணி தான் கொண்டு வருவான்.

படிப்பதற்காக சென்னை வந்த பிறகு தேடல் இன்னும் அதிகமாகியது. ஏனென்றால் சென்னையில் நான் சொந்தமாக சமைத்து சாப்பிட வேண்டிய சூழல். அதுவரை எனக்கு சமையல் என்றால் என்னவென்றே தெரியாது. சுமாராக பெயருக்கு சமைத்து டப்பாவில் கொண்டு சென்று நண்பர்களுக்கு கொடுத்து விட்டு நான் அவர்களுடைய சாப்பாட்டை சாப்பிடுவேன்.

மிளகுத்தூள் தூக்கலாக போட்டு என் அம்மா வைக்கும் இட்லிசாம்பாருக்கு ஒரு சுவை இருக்கும். இட்லிகளை சாம்பாரில் போட்டு பிசைந்து காலி செய்து விட்டு கடைசியாக சாம்பாரை தட்டில் ஊற்றி குடிக்கும் அளவுக்கு பிரியன். அதே போல் என் அப்பாவின் நண்பரின் மனைவி வைக்கும் கல்யாண வீட்டு சாம்பார் என்றால் கூடுதலாக இரண்டு இட்லிக்களை உள்ளே தள்ளுவேன்.

அதே போல் என் மாமி சமைக்கும் உருளை மற்றும் காரட் போட்டு வைக்கும் இட்லிசாம்பாருக்கோ ருசி வேறு மாதிரி இருக்கும். யார் வீட்டுக்கு சாப்பிடும் நேரத்தில் போனாலும் யோசிக்கவே மாட்டேன். தட்டை வைத்து இரண்டு இட்லிக்களை சாப்பிட்டால் தான் மனசு நிறையும்.

வீராணம் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் பணிபுரிந்த போது என்னிடம் தொழிலாளர்களாக பீகாரிகள் இருந்தனர். அவர்கள் வைக்கும் சப்பாத்திக்கும் டாலுக்கும் பொருத்தமோ பொருத்தம். என்னதான் நாம் முயற்சித்தாலும் அந்த சுவையை நம் வீட்டு ஆட்களால் கொண்டு வரவே முடியாது.

அது போல் கண்டெய்னர் லாரி ஓட்டுபவர்கள் லாரியிலேயே சொந்தமாக சமைத்து சாப்பிடுவார்கள். வித்தியாசமாக உப்புமா செய்து அதனுடன் வாழைப்பழத்தை தொட்டுக் கொண்டு சாப்பிடுவர். காலைநேரம் என்றால் முதல் பிளேட் உப்புமா நான் தான் சாப்பிடுவேன்.

ரைத்தா என்றால் அதுவரை வெறும் வெங்காயத்தை தயிரில் போட்டு சாப்பிடுவது தான் என்று நினைத்திருந்த நான் நண்பன் சந்தோஷ் வீட்டில் வெள்ளரி போட்டு ஒரு ரைத்தாவும் பீட்ரூட் போட்டு ஒரு ரைத்தாவும் சாப்பிட்ட போது ரைத்தாவில் வெரைட்டிகள் புரிந்தது.

மராட்டிய நண்பர்கள் எப்பொழுதும் சாப்பாடு சாப்பிடும் போது பச்சை மிளகாயின் நடுவே உப்பை வைத்து எண்ணெய்யில் பொறித்து சைட்டிஷ்ஷாக வைத்து சாப்பிடுவதை பார்த்து நானும் ஒரு நாள் முயற்சித்தேன். கூடுதலாக இரண்டு கவளம் சாதம் உள்ளே சென்றது.

மிளகு பொங்கல் மிகவும் பிடிக்கும். அதுவரை முழு மிளகு போட்டு தான் பொங்கல் சாப்பிட்டு வந்தேன். ஒரு முறை நண்பன் தணிகா வீட்டில் மிளகை உரலில் லேசாக இடித்து போட்டு செய்த பொங்கலின் சுவை அமிர்தம். என்னா இன்னோவேட்டிவ்.

அம்மா இராலுடன் சுரைக்காய் போட்டு செய்யும் கூட்டு இட்லிக்கு தொட்டுக் கொள்ள அருமையாக இருக்கும். அதுபோல வாழைக்காயுடன் சுண்டைக்காய் போட்டு செய்யும் கூட்டு கூட இட்லிக்கு அருமையோ அருமை.

படிக்கும் போது தோழி பரிமளா அவர்கள் வீட்டில் இருந்து முள்ளங்கி சட்னி வைத்து எடுத்து வருவார். அதுவரை அப்படி ஒரு சட்னி கேள்விப்பட்டிராத நான் சாப்பிட்டுப் பார்த்ததும் நேரே சைக்கிள் எடுத்து அவங்க வீட்டுக்கு போய் பரிமளாவின் அம்மாவிடம் செய்முறை கேட்டு தெரிந்து வந்தேன்.

பிறகு என்ன என் கைவண்ணத்தில் அதே முறையில் கத்திரிக்காய் சட்னி, கேரட் சட்னி முட்டைகோஸ் சட்னி வரை செய்து பார்த்து விட்டேன். சில சட்னிகள் நன்றாக இருக்கும், பல சட்னிகள் கன்றாவியாக இருந்தது தான் நிஜம். என்னால் எங்கள் வீட்டில் உள்ளோரும் இந்த கொடுமையை அனுபவித்தனர்.

மீன் குழம்பு, இதற்கு வகைகளே சொல்ல முடியாது. ஒவ்வொருத்தரின் கைப்பக்குவத்திற்கும் ஒரு ருசி இருக்கும். புளி அதிகம் போட்டு செய்யும் தமிழ்நாட்டு மீன்குழம்புகள் ஒரு வகையாக இருந்தால் தேங்காய் அதிகம் போட்டு செய்யும் கேரள மீன் குழம்பு வேறொரு வகையாக இருக்கும். அதுவும் கப்பாவுடன் மீன் குழம்பு போட்டு சாப்பிடும் போது அதன் சுவை சொல்லவே முடியாது. ருசித்து பார்த்து முடிவு செய்யுங்கள்.

இவ்வளவு சாப்பாடு சொல்கிறேனே அவையனைத்தும் சமைக்கும் வீடுகளுக்கு சாப்பிடும் நேரத்தில் சென்றால் சாப்பிடு என்று யாரும் ஓரு வார்த்தை சொல்ல வேண்டியது இல்லை. நானே அமர்ந்து தட்டில் போட்டு சாப்பிட்டு விடுவேன். பிறகு நான் தான் வெக்கப்படாத வாலிபர் சங்கத்திற்கு தலைவராக முடியும். வேறு யாரப்பா, இருக்கிறார் இது போல் சாப்பிட.

இவையனைத்தும் உச்சம் ஐதராபாத்திற்கு சென்று பிரியாணி சாப்பிட்டது தான். அது 2003 ஆண்டு இருக்கும். நண்பன் எட்வினுடன் விமான நிலையம் அருகில் உள்ள கண்டோண்ட்மெண்ட் மைதானத்தில் சரக்கடித்துக் கொண்டு இருந்தோம். அதிகமாக சரக்கடித்த பிறகு நிதானம் தவறி உடனடியாக பிரியாணி சாப்பிட வேண்டும் அதுவும் ஐதராபாத் பிரியாணி தான் சாப்பிட வேண்டும் என்று முடிவு செய்தோம்.

இருவரும் பைக்கை விமான நிலைய நிறுத்தத்தில் விட்டு விட்டு டெக்கான் விமானத்தில் டிக்கெட் எடுத்து ஐதராபாத் இரவு 11 மணிக்கு சென்று செகந்திராபாத்தில் பாரடைஸ் பிரியாணி கடையில் சாப்பிட்டு விடியற்காலை பார்சலுடன் சென்னை வந்து வேலைக்கு சென்றோம்.

இந்த செயலுக்கான பணத்தை கிரெடிட் கார்டிலிருந்து எடுத்து விட்டு பிறகு மாதா மாதம் அந்த பணத்தை கட்டுவதற்கு நான் பட்ட சிரமம் எனக்குத்தான் தெரியும். எல்லாம் ருசி படுத்தும் பாடு.

 
ஆரூர் மூனா

No comments:

Post a Comment