Sunday 9 August 2015

திருவாரூரில் பிறந்த கர்நாடக சங்கீதம் - பழசு ஏப்ரல் 2013

கர்நாடக சங்கீதத்திற்கு மூத்தவர்கள் மும்மூர்த்திகள் என்று அழைக்கப்படும் தியாகராஜ சுவாமிகள், சியாமா சாஸ்திரிகள், முத்துசாமி தீட்ஷிதர் ஆகியோர் திருவாரூரில் பிறந்து வளர்ந்தவர்களே.


பிற்காலத்தில் அவர்கள் திருவையாற்றில் தங்கியிருந்து பாடல்களை இயற்றினர். அங்கேயே ஜீவசமாதியும் அடைந்தனர். இவர்களின் நினைவாக திருவையாற்றில் இப்பொழுது கூட மும்மூர்த்திகள் திருவிழா நடப்பதுண்டு.

திருவையாறு அளவுக்கு திருவாரூரில் அவ்வளவு சிறப்பாக மும்மூர்த்திகள் விழா நடந்தது கிடையாது. இதற்கு காரணம் திரு. கருப்பையா மூப்பனார் அவர்கள் தான். அவரது கர்நாடக சங்கீத ஆர்வத்தினாலும் அவரது செல்வாக்கினாலும் திருவையாற்றில் மிகச்சிறப்பாக நடத்திக் காட்டினார்.

ஆனால் திருவாரூரில் அந்த அளவுக்கு கர்நாடக சங்கீதத்தில் ஆர்வமுள்ள பெரியவர்கள் யாருமில்லாததால் அந்த அளவுக்கு சிறப்பாக நடப்பதில்லை. திருவாரூரில் பிறந்து வளர்ந்தவர்கள் எல்லோரும் திராவிட கழகத்தின் கீழ் செயல்பட ஆரம்பித்ததனால் தான் என்று நினைக்கிறேன்.

ஆனாலும் திருவாரூரில் சிறிய அளவுக்கு மும்மூர்த்திகள் விழா நடப்பதுண்டு. இரண்டாம் மற்றும் அறிமுக நிலை கர்நாடக சங்கீத கலைஞர்கள் மட்டுமே பங்கேற்கும் விழாவாக அது அமையும். பேப்பரிலும் தொலைக்காட்சியிலும் திருவையாறு விழாவைப் பற்றி மட்டுமே செய்திகள் வரும் போது திருவாரூரின் நிலையை நினைத்து வருத்தமாக இருக்கும்.

எனக்கோ எனது நண்பர்களுக்கோ கர்நாடக சங்கீதத்தின் ராகம், தாளம் பற்றியெல்லாம் ஆனா, ஆவன்னா கூட தெரியாது. ஆனால் எனது ஊரின் பெருமை என்ற அளவிலேயே விருப்பம் கொண்டிருந்தோம். திருவாரூர் பெரிய கோவிலிலும், மேல வடம்போக்கித் தெருவில் இருக்கும் அரங்கிலும் நடைபெறும் கச்சேரிகளுக்கு செல்வதுண்டு.

ஒரு வார்த்தைக்கும் அர்த்தம் புரியவில்லையென்றாலும் அங்கே பாடகர் சரிகம, மமகரிச, காஆஆஆஆல ஆஆஆஆஆ மமமமமா என்று ரொம்ப சிரத்தையாக பாடிக் கொண்டு இருப்பார். எனக்கு ஒன்றுமே புரியாது. என் அருகிலோ எதாவது ஒரு பிராமணர் சம்மணமிட்டுக் கொண்டு தொடையில் தாளம் போட்டவாறு ரசித்துக் கொண்டு இருப்பார்.

கொஞ்ச நேரத்திற்கு மேல் அங்கு அமர முடியாது. ஏதாவது புரிந்தால் தானே. ரசிக்க வந்தவர்கள் கூட பெரும்பான்மையோர் பிராமணர்களாகவும், கர்நாடக சங்கீதம் தெரிந்தவர்களாகவும் தான் இருப்பர. சொற்ப அளவிலே இருக்கும் அந்த கூட்டத்தை விட்டு வெளியேறினால் நானே எங்கள் ஊரை புறக்கணிப்பது போல் இருக்கும் என நினைத்துக் கொண்டு கச்சேரி முடியும் வரை பல்லைக் கடித்துக் கொண்டு அமர்ந்திருப்பேன்.

திருவாரூரில் என் வீட்டிலிருந்து மூவர் வாழ்ந்த வீடும் அருகிலேயே தான் இருக்கிறது. எங்கள் வீட்டிலிருந்து 100 மீட்டர் தொலைவுக்குள் புதுத்தெருவில் தியாகராஜ சுவாமிகள் பிறந்து வாழ்ந்த வீடு இருக்கிறது. 200 மீட்டர் தொலைவுக்குள் மேட்டுத் தெருவில் சியாமா சாஸ்திரிகள் பிறந்து வாழ்ந்த வீடு இருக்கிறது. 200 மீட்டருக்குள் முத்துசாமி தீட்ஷிதர் பிறந்து வாழ்ந்த வீடு இருக்கிறது.

இவற்றில் தியாகராஜ சுவாமிகள் வாழ்ந்த வீட்டை அரசு பராமரிக்கிறது அந்த இடத்தில் வீணை மற்றும் வாய்ப்பாட்டும் சொல்லிக் கொடுக்கப்படுகின்றன, சியாமா சாஸ்திரிகள் வாழ்ந்த வீட்டை காஞ்சி சங்கராச்சாரிகள் மடம் பராமரிக்கிறது. இன்றும் ஜெயந்திரர் என்னும் டுபாக்கூர் சாமியார் திருவாரூர் வந்தால் அங்கு தங்கி தான் செல்வார்.

முத்துசாமி தீட்ஷிதர் வீடு இருந்த இடத்தில் தற்போது கச்சேரிகள் நடைபெற்று வருகிறது. தியாகராஜ சுவாமிகள் வீட்டிற்கு மட்டும் அங்கு வாய்ப்பாட்டு கற்கும் அய்யராத்து பெண்களை சைட் அடிப்பதற்காக சென்றதுண்டு.

திருவையாறில் மிகப் பிரம்மாண்டமாக அனைத்து முன்னணி கர்நாடக கலைஞர்களும் பங்கேற்று பெருமை செய்வார்கள். அதனை பார்க்கும் போது எனக்குத்தான் பொறாமையாக இருக்கும். மும்மூர்த்திகள் மறைந்த ஊருக்கு வந்து இவ்வளவு பெருமை சேர்க்கும் இவர்கள் மும்மூர்த்திகள் பிறந்த ஊருக்கு ஏன் வருவதில்லை என்று.

சென்னையில் நடக்கும் டிசம்பர் விழாக்களுக்கு என் நண்பரின் சகவாசத்தால் செல்வதுண்டு. கர்நாடக சங்கீதத்தில் ஆர்வமுள்ள அவன் முடித்த வரை பெரும்பாலான கச்சேரிகளில் கலந்து கொள்வான். கம்பெனிக்கு என்னையும் கூட்டிச் செல்வான். நானோ கேண்டீனில் கிடைக்கும் பிரமாதமான சுவையுள்ள டிபனுக்காக மட்டுமே செல்வதுண்டு.

எனக்கு பத்து வயது இருக்கும் போது எங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் ஒரு அய்யராத்து வீட்டுக்கு பரதம் கற்றுக் கொள்ள என் அம்மாவினால் கட்டாயமாக அனுப்பி வைக்கப்பட்டேன். அதே தெருவில் சட்டை கூட போடாமல் கிட்டிப்புல்லும், கபடியும் ஆடிக் கொண்டு இருக்கும் நான் சுத்தபத்தமாக குளித்து விட்டு பைஜாமா அணிந்து செல்வது பயங்கர கடுப்பாக இருக்கும்.

மற்ற நண்பர்கள் பயங்கரமாக கிண்டல் செய்வார்கள். நான் மட்டுமே பையன் மற்றவர்கள் எல்லோரும் சிறுமிகள். அதுவும் அய்யராத்து சிறுமிகள். போனவுடன் நடனம் கற்றுக் கொடுக்காமல் அபிநயங்கள் மட்டுமே கற்றுக் கொடுத்தார்கள். பதாக்கம், திருப்பதாக்கம், அர்த்தப்பதாக்கம், கர்த்தரிமுகம் என ஒரு மாதத்திற்கு பாடாய் படுத்தினார்கள்.

ஒரு வருடம் முழுவதும் கற்றுக் கொண்டேன். மாலை வேளைகளில் 6லிருந்து 7 வரை பரதம் கற்றுக் கொள்ளும் நான் 7 மணியிலிருந்து தெருவில் புழுதியில் பொரண்டு விளையாடிக் கொண்டு இருப்பேன். தெரு விளையாட்டு, பரதம் இரண்டில் எதில் கவனம் செலுத்துவது என புரியாமல் தவித்துக் கொண்டு இருந்தேன்.

ஒரு டைபாய்டு ஜூரத்தால் பரதத்திற்கு ஒரு மாதம் விடுப்பு எடுத்த நான் அத்துடன் செல்வதை நிறுத்திக் கொண்டு விட்டேன். என் அம்மா தான் அங்கலாய்த்துக் கொண்டு இருந்தார். எனக்குத்தான் தெரியும் நான் விட்டதனால் பிழைத்துக் கொண்டது பரதம் தான் என்று.

ஆரூர் மூனா

No comments:

Post a Comment